பதிவுகள்

ஈழத் தமிழ் மக்களுக்கு, இதுவரையில் வழங்கப்படா  அரசியல் உரிமைகள் குறித்து, தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், பல்வேறு கருத்து நிலைகள் உள்ள நிலையில்,

அம் மண்ணில் வாழும் இளைய தலைமுறையின் சிந்தனையும் கருத்தும் எவ்வாறாக இருக்கிறது,இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுவதாக அமைகிறது தினக்குரல் பத்திரிகையில் புருஜோத்தமன் தங்கமயில் எழுதத் தொடங்கியுள்ள அரசில் தொடர். இத் தொடர்கட்டுரையை அவரது மேலான அனுமதியுடனும், தினக்குரல் பத்திரைக்கான நன்றிகளுடனும், 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இங்கே மீள்பதிவு செய்கின்றோம்.-4Tamilmedia Team

ஒரு சில நிமிடங்கள் பொறுங்கள், அடக்குமுறைக்கு எதிரான கனவுகளை கடமை எனக்கொண்டு எல்லா வழிப்போராட்டங்களிலும் உயிரிழந்துவிட்டவர்களை மனதிலேற்றி ‘அஞ்சலி’ செலுத்திக் கொண்டு பேசுவோம். வெற்றியும் தோல்வியும் அடக்கு முறைக்கு எதிரான கனவுகளை முடிவுக்கு கொண்டு வருவதில்லை. உலகின் எந்தவொரு மூலையிலாவது அடங்குமுறை என்கிற அஸ்திரத்தை அதிகாரத்திலுள்ளவர்கள் ஏவிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஒவ்வொரு கணத்திலும் போராளிகள் பிறக்கிறார்கள். போராடுகிறார்கள். அதற்காகவே மடிந்தும் போகின்றார்கள். தன்னலத்தை முன்னிறுத்தாமல் மற்றவனின் உரிமையிலும்- சுதந்திரத்திலும் அக்கறை கொள்கிற ஒவ்வொருவரும் போராளிதான். போராளிகளுக்கும்- போராடி மரணித்துவிட்டவர்களுக்கும்; சல்யூட்!

இளைஞர்களின் அரசியல்.

இளைஞர்களின் ஒருங்கிணைவு மிகப்பெரிய சக்தி. எந்த போராட்டமும் இளைஞர்கள் இல்லாமல் முன்னெடுக்கப்பட்டதில்லை. அதுபோல வெற்றிபெற்றதுமில்லை. போராட்டத்தின் ஆணிவேராக இளைஞர்களே இருக்கிறார்கள். அதுவே இப்போதும் எமக்கு அவசியமாகிறது. இளைஞர்கள் ஆர்வம் கொள்கிற அரசியல் போராட்டம் அல்லது இளைஞர்கள் முன்னிற்க வேண்டிய அரசியல் எப்படிப்பட்ட நிலையில் இப்போது இருக்கின்றது என்று பார்க்கலாம்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலத்திலேயே ‘தனி ஈழக்கனவு’ தமிழ் மக்களிடம் விதைக்கப்பட்டுவிட்டது. அதுவும், இளைஞர்களை நோக்கி அத்தியாவசிய கடமையாக முன்வைக்கப்பட்டது. இது கட்சி அரசியல், பேரணி அரசியல் என்கிற போராட்ட வரமுறைகளை கடந்து ஆயுத வழிக்கு திரும்பியது. 1970களுக்குப் பின்னர் முழுமூச்சாக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது. இங்கு எல்லா நேரங்களிலும் இளைஞர்களை வழி நடத்தி வந்தவர்கள் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் என்கிற தோரணையில் வயதிலும் அனுபவத்திலும் சிரேஷ்ட நிலையில் இருந்தவர்களே. அவர்களின் ஆசிர்வாதமும் ஆலோசனையுடனுமே தமிழ் இளைஞர்கள் 1970களில் ஆயுதம் தூக்கினர். அந்த ஆயுத வரலாறு 2009, மே 17 வரை பெருமளவிலான இளைஞர்களையும் மக்களையும் அதற்காக அர்ப்பணிக்க அல்லது காவு வாங்க வைத்தது. குறிப்பாக 1980களுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் பிறந்த எல்லோருக்குமே தனி ஈழத்துக்கான போராட்டம் என்பது கடமையை தாண்டி அதீத அத்தியாவசியமாக சொல்லப்பட்டது.

தமிழ் இளைஞர்களின் ஆயுத வழிப்போராட்டங்கள் (பல நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால்) முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் அதாவது 2010களுக்குப் பின்னரான இன்றைய நாட்களின் இளைஞர்களின் அரசியல் நோக்கு விரக்தி நிரம்பியதாக- நம்பிக்கையற்றதாகவே இருக்கின்றது. விஜய்-அஜித் படங்கள், கிரிக்கட், பேஸ்புக், 150சீசீ மோட்டார் சைக்கிள், வெளிநாடு என்கிற அளவில் பெரும்பான்னை இளைஞர்களின் இலக்கும்- கனவும் முடங்கிப்போய்விட்டது. தோல்வி மனநிலையிலிருந்து வெளியேறி மீண்டும் ஆரோக்கியமான போராட்ட மனநிலைக்கு வருவதற்கு இளைஞர்களுக்கு கால அவகாசம் தேவை. ஆனால், அது நீண்டு சென்று விட முடியாது. ஏனெனில் எம்மைச்சுற்றி இறுக்கப்படுகின்ற கயிறுகளை வெட்டியெறிய வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு இருக்கின்றது. இளைஞர்கள் வீரியம் மிக்க தீப்பொறி போன்றவர்கள். அவர்களை ஆக்கமுள்ள பக்கம் திரும்பி விட வேண்டிய அவசியம் இப்போது அத்தியவாசியமானது. மீண்டும் ஆயுதவழி என்கிற தற்காலத்துக்கு பொருத்தமற்ற பக்கம் திரும்பாமல் அது மக்கள் சார்ப்பு அரசியல் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.

தென்னாசிய அரசியலில் இளைஞர்களை வாக்குச் சேர்க்கின்றவர்களாக குறிப்பாக வீரியம்மிக்க தொண்டவர்களாகவே வைத்துக்கொள்ள அரசியற்கட்சிகள் விரும்புகின்றன. அவர்களை அழைத்துக்கொண்டு அதிகாரங்களை பகிர்ந்து பொறுப்புக்களை வழங்கி நிர்வகிக்கின்ற இடங்களை வழங்குவதேயில்லை. இது இனங்கள், குழுமங்கள், நாடுகள் தாண்டி சூழ்ந்திருக்கிற புற்று. இதுதான் எங்களூரிலும் நிகழ்த்தப்படுகிறது. எல்லா அரசியற்கட்சிகளும் இளைஞர்களை நோக்கி தம்முடைய அரசியல் பயணத்தில் இணையுமாறு கூவுகின்றன. ஆனால், அது வாக்கு சேர்க்கிற அளவில் மட்டுமே இருக்கவேண்டும் என்றும் மறைமுகமாக வரையறுக்கின்றன. கொள்கை, கோட்பாடு, போராட்ட இலக்குகள் பற்றி தீர்மானிக்கின்ற சக்திகளாக இளைஞர்கள் மாறுவதை விரும்பவில்லை. அப்படியானதொரு நிலையில் விரக்தியின் உச்சத்திலிருக்கிற இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வருவதென்பது இயலாத காரியம். ஒரு நிலை கடந்து தமிழ் அரசியற்கட்சிகள் அதை செய்வதும் இல்லை. போகிற போக்கில் இளைஞர்களுக்கான அறைகூவல் விடுக்கின்றன. மற்றப்படி தீர்மானங்களை மூத்த சிரேஷ்ட தலைவர்களே(?) எடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்து இயங்குகின்றனர்.

இளைஞர்களுக்கு முன்னால் பாரிய கடமைகள் இன்னும் நிறைந்திருக்கின்றன. அதற்கு முதலில் எம்மை தீர்மானிக்கின்ற ஜனநாயக அரசியலை முன்னெடுப்பது. அதனூடு சிதிலமடைந்திருக்கின்ற எம்முடைய பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி உள்ளிட்டவற்றை முன்னோக்கி கொண்டு சொல்வது. இவற்றுக்காக இளைஞர்கள் முதலில் விரக்தி மனநிலையிலிருந்து தாமாகவே வெளிவர வேண்டும். ஏனெனில் அந்த மனநிலையில் வைத்துக் கொள்ளவே எம்முடைய அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. அல்லது பேச்சளவில் மட்டும் இளைஞர்களை முன்னோக்கி செல்ல கோருகின்றன. இந்த நிலையில் தாமாகவே பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டியது மிகவும் அவசியமானது. அப்படியானதொரு அவசியத்தை எம்முடைய சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய அரசியல் போராட்டம் எம்மை கையாள்கிற அரசியல் கட்சிகளை நோக்கியும்- அதை வெற்றி கொண்டு அடுத்த நிலை நோக்கியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், எம்மை ஆசுவாசப்படுத்த எடுத்துக் கொண்ட காலம் போதுமானது.

அக்கிரமங்களைக் கண்டு பேஸ்புக்கில் மட்டும் பொங்கிவிட்டு ஒதுங்கிவிட முடியாது. அதைத்தாண்டி எங்களை தீர்மானிக்கின்ற அரசியலை எம்முடைய கிராமங்களிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். அது தெளிவான இலக்குகளை முன்வைத்ததாக இருக்க வேண்டும். எங்களுடைய அரசியலை இந்தியாவோ, இன்னொரு நாடோ அல்லது பெரும்பான்னை அரசோ தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க அல்லது மாற இடமளிக்க முடியாது. அப்படியான நிகழ்வுகளே அதிகம் நாம் சார்ந்திருக்கிற அல்லது எம்மை சார்ந்திருக்கிற அரசியற்கட்சிகளை வைத்து முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியோ, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளோ வேறு வேறு வடிவங்களில் உதவுகின்றன என்பதே பெருத்த உண்மை.

சமூக பொருளாதார அரசியலில் இருந்து தேர்தல் அரசியல் வரை அக்கறை கொண்டு தெளிவான அரசியலை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களிடத்தில் காலம் மீண்டும் வழங்கியிருக்கிறது. அதற்கு யதார்த்த கள நிலைகளை சரிவர புரிந்து கொள்கின்ற தன்மையை வளர்த்துக் கொண்டு இயங்க வேண்டியிருக்கிறது. தேர்தல் காலங்களில் மட்டுமே எங்களை நோக்கி வருகின்ற அரசியல்வாதிகளை அகற்றிவிட்டு, மக்களுக்குள் மக்களாக இருக்கின்ற அரசியலை உணர்ந்த தலைவர்களை இனங்காண வேண்டும். அப்படியானவர்களை இனங்காண முடியவில்லையென்றால் அப்படியானவர்களை உருவாக்க வேண்டும். அப்படியொதொரு தலைவர் மக்களுக்கு முன்னால் பொறுப்புக் கூற வேண்டியவராகவும் மக்களின் சக்தியாலும், எண்ணங்களாலும் ஆட்கொள்ளப்பட்டவராகவும் இருக்க வேண்டும். அது இப்போது மிகவும் அத்தியாவசியமானதாவும்- அவசரமானதாகவும் இருக்கின்றது.

‘இந்தப் போர் எங்களோடு ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை’ என்று பகத் சிங்கின் கூற்று எங்களுக்கானது. போர் என்று இங்கு சொல்லப்படுவது ஆயுதப்போராட்டம் மட்டுமில்லை. எமது உரிமைகளுக்கான அனைத்து வகை போராட்டத்தையும் குறிக்கும். அது எமக்கான அரசியலை தீர்க்கமாக தீர்மானிக்கின்ற இளைஞர்களின் சமூக அரசியலுக்கு இன்னும் பொருத்தமானதாக இருக்கும்!

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

அடுத்த பாகம்எமது அரசியல் எமது உரிமை : 03

முன்னைய பாகம் : எமது அரசியல் : எமது உரிமை : 01

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.