பதிவுகள்
Typography

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலிய மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன், அதற்காக தாம் முன்வைக்கும் நியாயமான காரணங்கள் என்ன என்பது பற்றியும், மனித உரிமை விடயங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இது நாள் வரை எப்படி செல்வாக்கு செலுத்தி வந்திருக்கிறது என்பது பற்றியும் தனது அனுபவங்களினால் விளக்குகிறார் ஆஸ்திரேலியாவின் விளையாட்டுத்துறைக்குரிய பிரபல எழுத்தாளர் ரோவர் கிராண்ட் (Trover Grant).

 

அவருடைய இக்கட்டுரையின் தமிழ் மொழிமாற்றப்பதிவை எமக்கு மீள்பிரசுரம் செய்ய அனுமதித்த தமிழ் லீடர் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்து இங்கு பகிந்து கொள்கிறோம் - 4தமிழ்மீடியா குழுமம்

மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலியா சர்வதேச அரங்கில் ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுகின்றபோதும்,  பாதுகாப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அல்லது அவர்களின் வேண்டுகோள்களை செவிமடுக்காத ஒரு தலைமையாகவே இருந்துவருகிறது.  

ஆனால் இதற்கு விதிவிலக்காக இந்தப் போக்கை கண்டிக்கும் வகையிலான ஒரு நிகழ்வு.  

ஒரு பரந்த நோக்குள்ள படசாலை மாணவனாக இருந்த நான்,  1950 களில் நான்காம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது அவுஸ்திரேலியா மற்றையவர்களை சிறப்பாக வரவேற்கும் ஒரு நாடாக இருந்தது என்றே நான் படித்துள்ளேன். 1948 இல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவ நாடாக இருந்து சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அங்கீகரித்தது என்னைக் கவர்ந்திருந்தது.

உண்மையான அவுஸ்திரேலியரான, டொக் இவற் (Doc Evat) ஐ.நா பொதுச்சபையின் தலைவராக இருந்து இவ்விடயத்தில் முக்கிய பங்கு வகித்தமையால் நாம் பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி நடந்தோம்.

அப்போது பாடசாலையில் மதிப்பீட்டிற்காக  அந்த சாசனத்தை தடித்த - கறுத்த பெரிய எழுத்துக்களில் கொடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஏனெனில் அந்த அளவிற்கு அது மிகவும் உன்னதமான ஒரு ஆவணம் எனக்குத் தெரிந்தது.

அது  யுத்த திகில், அடக்குமுறை, இன ஒழிப்பு என்பவற்றிலிருந்து இவ்வுலகைக் காக்கும் ஒரு சிறந்த ஆவணம்.

அப்பாவியான அந்தக் குழந்தைப் பருவத்தில் இருந்து நான் கண்டுகொண்ட உண்மை, நான் அடைந்த பெருமை எல்லாம் இன்று அதிச்சிக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது.  

தமது அடிப்படை மனித உரிமைகளை அடைவதற்காக எமது கரையோரத்தை நோக்கி ஓடி வருபவர்கள் விடயத்தில், அவுஸ்திரேலியாவின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் கடலளவு ஆழமானதும் அகலமானதுமான வேறுபாடு இருந்து வருவதை நான் இப்போது உணர்கிறேன்.

மற்றைய ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்களைப்போலவே எனக்கும்  கிலாட் அரசின், அகதிகள் தொடர்பான கொள்கை, ஆத்திரமூட்டுவதோடு வெட்கமாகவும்  சங்கடமாகவும் உள்ளது.

ஹவாட்டின் லிபரல் அரசில் இருந்து ஊளையிட்ட கெட்ட சக்திகளைப்போலன்றி,  தொழிற்கட்சியானது புகலிடம் தேடுவோர் விடயத்தில் போதிய மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் என நான் அப்பாவித்தனமாக நம்பினேன். (ஆம் நான் இன்னும் அப்பாவியே).  

ஆனால் உண்மை இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் அவர்களிலும் மோசமானவர்கள்.

மனித உரிமைகள் தொடர்பில் போருக்குப் பிந்திய அவுஸ்திரேலியாவின் கவலைதரும் பதிவிலிருந்து பாடம் படிக்க விரும்பினால் உள்ள ஒரே வழி என்னவெனில், கண்டன நிகழ்வுகளை ஏற்பாடுசெய்வதும் விளையாட்டுத்துறையை பகிஷ்கரிப்பதும்தான். கோடைகாலத்தில் போராட்டத்தை நடத்துவதற்கு சிறந்த இடம் விளையாட்டுத்துறையாகும்.

கிரிக்கட்  என்பது நடுநிலை, சமத்துவம் என்பவற்றுக்கு பெருமைசேர்க்கும் ஒரு விளையாட்டாகும். கிரிக்கட் என்ற சொல் இந்த இயல்புகளுடன் தொடர்புடைய, எமது மொழியின் பகுதியாக இருந்துவந்துள்ளது.

ஆனால் இந்த மார்கழி மாதத்திலிருந்து மாசி மாதம் வரை (December – February) மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி என்பவற்றில் கலந்துகொள்வதற்காக தனது அணியை அனுப்பும் சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அங்கு சமத்துவமோ நேர்மை அல்லது நடுநிலையும் இல்லை.

உள்நாட்டு யுத்தத்தின்போது குறைந்தது 50,000 அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று தற்போது தமிழின ஒழிப்பில் ஈடுபட்டுள்ள, பகையுணர்வு கொண்ட அரசாங்கத்தின் படைகளுடன் நெருக்கமானது இந்தக் கிரிக்கட் அணி.   

அண்மையில் இலங்கைக் கிரிக்கட் குழுவின் தலைமைப்பதயில் இருந்து விலகிய சனத் ஜயசூரிய தற்போதைய அரசின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டதுடன் தற்போது இந்த கொடிய ராஜ்யத்தின் நாடாளுமன்ற அங்கத்தவராகவும்  உள்ளார்.

புதிய வியத்தகு சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மென்டிஸ்இலங்கை இராணுவத்தில் 2வது   லெப்டினன்ட் ஆக உள்ளவர். அவர் ஆட்டிலறிப்படையில் சுடுநராக  சிறந்த சேவையாற்றியவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். அப்பாவித் தமிழ்ப் பொது மக்கள் வைத்தியசாலைகள், கட்டடங்கள் கப்பல்கள் என்பவற்றில் தஞ்சம் அடைந்திருந்த வேளை ஆட்டிலறிப்படைகளால் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது, பல சர்வதேச நாடுகளாலும் ஐ.நா நிறுவனங்களாலும் யுத்தக் குற்றம் எனத் தெரிவிக்கப்படும்  இச் செயற்பாட்டில்  அஜந்த மென்டிஸ் பங்கு கொண்டாரா என்பது தெரியவில்லை.

முன்னாள் நட்சத்திரக் கிரிக்கட் வீரரும், அணியின் தலைவருமான அர்ஜுனா ரணதுங்க நீண்டகாலமாக ராஜபக்ஷ அரசின் அரசியல்வாதியாக இருந்தவர். பின்னர் அதிலிருந்து  தாவி  மேலும் மோசமாக சென்று தமிழினப்படுகொலையின் போது இராணுவத்தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் சரத் பொன்சேகாவை  ஒரு சிறப்பான மனிதர் என்றும், இலங்கை அரசியலைக் காப்பாற்றக் கூடிய ஒருவுர் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தவர்.

இக்கிரிக்கட்குழு பெரும்பான்மை சிங்களவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு அமைச்சர்களிலிருந்து ஜனாதிபதிவரை அரசாங்கத்தினால் செல்வாக்கு செலுத்தப்படுவது. கடந்த வருடம் சிறிலங்கா கிரிக்கட் அணி லண்டனுக்கு விஜயம் செய்தபோது , நாடாளுமன்றம் செல்வதற்காக 2010 இல் ஓய்வுபெற்ற சனத்ஜயசூரியவை இரு சர்வதேசப்போட்டிகளில் மீண்டும் இணைத்துக்கொள்ளும்படி ராஜபக்ஷ ஆணைபிறப்பித்தார்.   

அவரது அரசியல் ஆலோசகர் வழிகாட்டி முன்னாள் கப்டனுக்கு தகுந்த பிரியாவிடைஅளிக்கவிரும்பினார்.  இதனால் அணியைத் தெரிவு செய்வதில் தெரிவுக்குழுவிற்கு பெரும் இடையூறு ஏற்பட்டதுடன் அணிக்கு உளப்பாதிப்பையும் ஏற்படுத்தியது. யாரும் ஜனாதிபதிக்கு மறுப்பு கூற முடியாது.  

சிறிலங்கா கிரிக்கட் குழுவில் இவ்வளவு காலமும் மிகக் குறைவான தமிழரே  இடம்பெற்றிருக்கிறார்கள். இது தெரிவுக்குழுவின் செயற்பாடல்ல. தமிழர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் ஒரு ஒடுக்கப்படும் இனமாக உள்ளனர். அவர்கள் விளையாட்டுத்துறையில் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் குறைவான சந்தர்ப்பத்தையே பெறுகிறார்கள் என்பது கண்கூடு.  “கிரிக்கட் பைத்தியம்” பிடித்த இந்த நாட்டில் கடந்த இருபது வருடங்களில் மிகப் பிரபல்யமான சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடன் சேர்த்து ஆறுபேர் வரையிலான தமிழர்களே இடம்பெற்றிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் கிரிக்கட் குழுவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையவே சந்தர்ப்பம் உள்ளது. யுத்த முடிவின் போது ஆயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகள் கொல்லப்பட்டதோடு அதிலிருந்து தப்பியவர்கள் விளையாட்டினால் கிடைக்கப்படும் சந்தோஷத்தைப் பெறமுடியாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இன ஒதுக்கல் கொள்கையை கொண்டிருந்த தென்னாபிரிக்காவின்  வெள்ளையர் மட்டும்கொண்ட அணி என்பதைவிட இது மோசமாக நோக்கப்படவேண்டியது.  ஒரு இனம் அல்லது வகுப்பே இதில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இது தெரிவுக்குழுவின் செயற்பாட்டால் ஏற்பட்டதல்ல. அரசாங்கம் தமிழ் சமூகத்தை அழிப்பதற்காக செய்வது.

கடந்த வருடம் பிரிட்டனின் சனல் -4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய  ஒரு விவரணபப்படத்தில் அங்கு புகலிடம் வழங்கப்பட்டிருக்கும் ஒரு தமிழர் இந்த அரச படைகளால்  தனக்கு ஏற்பட்ட அருவருக்கத்தக்க அநுபவம் தொடர்பாக தெரிவித்திருந்தார். அவர் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டு சில மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிலரால் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள தமிழ்ப்புலிகளுடன் முன்னர் இணைந்து செயற்பட்டவர்.

’என்னை இரும்புக் கேபிளால் அடித்தார்கள். அது  தோலை உரிக்கக்கூடியது. நோ தாங்க முடியாமல் இருந்தது, என்னைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டு தலையை நீருள் புதைத்தார்கள்.  பெற்றோலில்  தோய்த்த பொலித்தீன் பையினால் எனது தலையை மூடி கழுத்தில் இறுகக் கட்டியிருந்தர்கள். நான் மூச்செடுக்க முயன்றபோது நெருப்பை சுவாசிப்பது போல இருந்தது.’ பிரிட்டனில் புகலிடம் வழங்கப்பட்டுள்ள இன்னுமொருவர் தெரிவிக்கையில் ’எனது முக்தை மேசையில் அழுத்தி வைத்துக்கொண்டு கம்பி, தடி, பொல்லு என்பவற்றால் அடித்தார்கள். சிகரெட் துண்டுகளால் சுட்டார்கள். நான் தாகத்திற்கு நீர் கேட்டபோது பருகுவதற்கு சிறுநீரைத் தந்தார்கள்.” என்று தெரிவித்துள்ளார்கள்.  

இப்பொழுது உண்மை வெளிவரத்தொடங்கியுள்ளது, கடந்த வருடம் சிறிலங்கா கிரிக்கட் அணி இங்கிலாந்திற்கு விஜயம் செய்தபோது அது பாரிய எதிப்பை சந்தித்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. நாடு கடந்து வாழும் தமிழர்கள் அக்கறையுள்ள ஏனையவர்களுடன் இணைந்து பூரண பகிஷ்கரிப்பிற்கு  அழைப்பு விடுத்திருந்ததுடன் இருதரப்பு நிகழ்வுகள் அனைத்தையும் நிறுத்திவைக்கும்படியும்  கேட்டிருந்தனர்.

தென்னாபிரிக்க விளையாட்டுத்துறையை வெற்றிகரமாக பகிஷ்கரிக்கச் செய்தது போல இப்பொழுது அதே போன்ற பகிஷ்கரிப்பை மேற்கொள்ளும்படி தமது அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தருணம் அவுஸ்திரேலிய மக்களுக்கு வந்துள்ளது.

கொழும்பில் புதிய கிரிக்கட் ஸ்டேடியம் ஒன்றுக்கு தனது பெயரை வைத்திருக்கும் ராஜபக்ஷ ஒரு இரக்கமற்ற சர்வாதிகாரி. தனது நடவடிக்கைகளின் விளைவைத் தணிப்பதற்காக விளையாட்டுத்துறையை விசேடமாக கிரிக்கட்டை பாவிப்பபவர்.

அவுஸ்திரேலிய அரசும், அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையும் இலங்கை விடயங்களை கவனத்திற்கொள்ளாது இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாது. அதே நேரத்தில் சிறிலங்காவிற்கு எதிரான பகிஷ்கரிப்பு தொடர்பான கருத்து இந்தக் கோடைகாலத்திலும் தொடரும். அதன் மூலம் இலங்கைக் கிரிக்கட்குழு ஆனது,  இன ஒழிப்பிலீடுபட்டு; தமிழ் மக்களை புகலிடம் தேடி எமதுநாட்டுக்கும் வேறு நாடுகளுக்கும் ஓடவைக்கும் அரசின் பிரசாரப் பீரங்கி என்பதையும் தெரியவைக்கும்.   

அவுஸ்திரேலிய அரசு நீண்டகாலமாக வெட்கக்கேடான வகையில் தனது பழங்குடி மக்களதும், புகலிடம் தேடி வருபவர்களதும் மனித உரிமைகளை அடக்குவதற்கு பெரிய அளவில் செயற்பட்டுள்ளதுடன் தனது உதவியுடன் எழுதப்பட்ட ஐ.நா சாசனத்தையும் புறக்கணித்தது,

1957 இல் தென்னாபிரிக்க அரசாங்கத்தை தனது இன ஒதுக்கல் கொள்கையை பரிசீலனை செய்யுமாறு ஐ.நா வால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்தே ஐந்து நாடுகளில் அவுஸ்திரேலியாவின் Menzies  தலைமையிலான லிபரல் அரசாங்கமும் ஒன்று. ஏனைய 55 நாடுகள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் அவுஸ்திரேலியாவிற்கு அது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை.   

1970 களில் தென்னாபிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் மோசமான இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக வீதிகளில் போராடியது  அவுஸ்திரேலிய அரசாங்கமோ விளையாட்டுத்துறையோ அல்ல அவுஸ்திரேலிய மக்களே.

பசில் டி ஒலிவேரா என்ற கறுப்பினத்தவரை கிரிக்கட் அணியில் சேர்த்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை தென்னாபிரிக்க அரசு நிராகரித்ததால் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவிற்கான தனது விஜயத்தை ரத்துச்செய்திருந்த இருவருட காலத்தில் அவுஸ்திரேலிய அரசின் முழு ஆதரவுடன் 1970இல்  எமது தேசிய கிரிக்கட் அணி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்தது.  

1971 இல் இங்கிலாந்திற்கு விஜயம் செய்திருந்த தென்னாபிரிக்க றக்பி அணி, அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக  நாடு திரும்புமாறு வற்புறுத்தப்பட்டபோது Mc  Mahon  தலைமையிலான  சமஷ்டி லிபரல் அரசின் ஆசியுடனும் உதவியுடனும் அவ்வணி அவுஸ்திரேலியாவிற்கு வருகை தந்தது.

இங்கு எதிர்ப்புகளையும் தடைகளையும் தவிர்ப்பதற்காக அவுஸ்திரேலியாவின் விமானப்படை விமானங்களில் பறந்து திரிந்தனர். இந்த றக்பி குழுவின் பயணங்கள் தொடர்வதற்கு அவுஸ்திரேலியாவினால் எடுக்கப்பட்ட நேர்மையற்ற தீர்மானத்திற்கு எதிராக றக்பி போட்டிகள் நடைபெற்ற இடங்களிலும், வீதிகளிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழ்ச்சி முயற்சி தோல்வியடைந்தமைக்கு நன்றியாக உள்ளோம். இந்த சூழ்ச்சி முயற்சி தோல்வியடைந்தமைக்கு நன்றியாக உள்ளோம்.

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தடைகளின் விளைவாக 1971- 72 காலப்பகுதியில் தென்னாபிரிக்காவின் அவுஸ்திரேலியா விஜயம் சாத்தியமாகாது என்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆலோசனையை சேர் டொனால்ட் பிரட்மன் தலைமையினாலான  இன ஒதுக்கல் கொள்கைக்கு ஆதரவான கிரிக்கட் சபை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் அந்த விஜயம் ரத்து செய்யப்பட்டது, தொடர்ந்து போட்டிகளை நடத்துவதற்காக பிரட்மன் இரகசிய முயற்சிகளை எடுத்த போதிலும் தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை ஒழிக்கப்படும்வரை தென்னாபிரிக்காவுடன் பெரிய அளவிலான போட்டிகள் எதனையும் அவுஸ்திரேலியாவால் நடத்தமுடியவில்லை.

தென்னாபிரிக்காவை அது அதிகமாக விரும்பும் விளையாட்டுத்துறையிலிருந்து தனிமைப்படுத்தும் இச்செயற்பாடானது  இன ஒதுக்கல் கொள்கையை இல்லாதொழிப்பதில் முக்கிய பங்குவகித்தது. இன ஒழிப்பு கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவதில் ஏனைய நிர்ப்பந்தங்களுடன் விளையாட்டுத்துறைப் பகிஷ்கரிப்பும் முக்கிய பங்காற்றியது’ என அவுஸ்திரேலியாவின் பிரபல விளையாட்டுச் சரித்திரவியலாளரான  றிச்சர்ட் காஷ்மன் (Richard Cashman) தெரிவித்துள்ளார்.” இப் பகிஷ்கரிப்பினால் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டன. ஓன்று தென்னாபிரிக்க வெள்ளை இனத்தவரை மதிப்பிழக்கச் செய்தமை. மற்றையது இன ஒதுக்கல் விடயத்திற்கு சர்வதேச நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய இடத்தை அளித்தமை.”  எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய  கோடைகால  கிரிக்கட் இதனுடன் ஒப்பிடப்படுவதும் விநோதமாக நோக்கப்பட வேண்டியதும்  தவிர்க்கமுடியாதது.  இதில் பல்லின விளையாட்டு வீரர்களைக் கொண்ட தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளும் அதேவேளை  இன வாடை வீசும், அதிகாரவகுப்பினால் ஆதிக்கம் செலுத்தப்படும் இலங்கையணியும்  நத்தார் -புதுவருட காலத்தில் மெல்பேர்ன், சிட்னி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள போட்டிகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளது.

இன ஒதுக்கல் கொள்கையைக் கொண்டிருந்த தென்னாபிரிக்க அரசிற்கு தெரிவிக்கப்பட்ட அதே செய்தியே இந்த அணியின் மூலமாக இலங்கை அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்படுகிறது, ஒரு அசாதாரண சமூகத்தில் சாதாரண விளையாட்டு இருக்க முடியாது.

இதயத்தைப்  பிழியும் ஒரு விவரணப்படத்தை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர் ”கேட்கப்படாத குரல்கள்” (Silenced Voices) என்பதாகும் . இலங்கை அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் கொலை மற்றும் தமிழ் மக்கள் மீதான குண்டுத்தாக்குதல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.. இந்த நடவடிக்கைகளே இன்று ராஜபக்ஷ மீதும் அவரது இராணுவ அதிகாரி கள் மீதும் யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்தும்படியான சர்வதேச ரீதியான வற்புறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

இன்னுமொரு காட்சி , வீதியில் இறந்து கிடந்த தாய்க்கு மேலாக நின்று கொண்டு பிள்ளைகள் அவரை எழும்பும்படி கெஞ்சுகிறார்கள். ஏனெனில்; அநாதைகள் ஆவதை அவர்கள ; விரும்பவில்லை.

இன்னுமொரு மனிதர் கண்களும், கைகளும் கட்டப்பட்டு முழங்காலில் நிற்கவைக்கப்பட்டு தலையின் பின்பகுதியில் படையினர் ஒருவரால் சுடப்படுகிறார்.

நான் பார்த்த படங்களில் என்றுமில்லாதவாறு முரண்டாடானதாக அமைந்தது  இது.  இருந்தும் எந்த வன்முறையும் இடம்பெறாததுபோன்ற தோற்றம். அது  கொழும்பு வீதிகளில் விளம்பரத்திற்காக ஒட்டப்பட்டிருந்த பெரிய புகைப்படம் அதில் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா ஜிலாட் மிகுந்த சிரித்த முகத்துடன் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு கைலாகு கொடுக்கின்றார்.-றோவர் கிரான்ட (TREVOR GRANT is one of Australia’s premier sports writers.)

நன்றி : தமிழ் லீடர்
தமிழ் மொழிமாற்றம் : தேவா

BLOG COMMENTS POWERED BY DISQUS