பதிவுகள்
Typography

உலக சினிமாவில், சமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வரும் அழுத்தமான திரைப்படங்களை நேசிப்பவர்களுக்கு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்தை நிச்சயமாக தெரியாதிருக்காது. 

 ஆனால், இப்போதுதான் இவ்வாறான திரைப்படங்களை தேடிப்பிடித்து பார்க்க தொடங்கியிருக்கும் இளையவர்களுக்கு மஜித் மஜித்தை பற்றி சிலவேளைகளில் தெரியாதிருக்கலாம். இதோ அவர்களுக்கானது இப்பதிவு. இதனை மீள்பிரசுரம் செய்ய அனுமதித்த வலைப்பதிவாளர் கிருஷ்ணகுமாருக்கு நன்றி தெரிவுத்து இங்கு பகிர்ந்து கொள்கிறோம்

- 4தமிழ்மீடியா குழுமம்

மஜித் மஜிதி-யின் திரைப்படங்கள் உலகப்பட வரிசையில் அதிகம் கவனம் பெற்றவை. அவர் குழந்தைகளையும் அவர்களது  மென்மையான உணர்வுகளையும் திரைப்படங்களாக கொண்டுவந்தார். குழந்தைகளின் அகஉலகத்தின் காட்சிகளை அவர் திரைப்படங்களில் நேர்த்தியாக எடுத்திருப்பார். முக்கியமாக அவருடைய  திரைப்படங்களின் இறுதிக்காட்சிகள் பெரும்பாலும் இயற்கை குறியீடுகளுடனும், உயிரின் பிரதிபிம்பங்களுடனும் இருக்கும். இதுவே மற்ற இயக்குனர்களிடமிருந்து இவர் தனித்து இருக்கும் உலகவேறுபாடு. அழகியல் என்ற இயலில் இயங்கும் இவரது திரைப்படங்கள் விரசத்தையோ, இருண்மையின் முகத்தையோ வைத்து நாகரீகவாதிகளின் முகச்சுளிப்புகளுக்கு  உள்ளாகாமல் பெரும்பான்மை மட்டத்தில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தவிதத்தில் Baran முக்கியமானதொரு திரைப்படம்.

Majid Maid

ஆப்கானைச் சேர்ந்த நஜாப் ஈரானில் கட்டிட வேலை செய்பவர். லத்தீப் அங்கு வேலை செய்பவர்களுக்கு தேநீர் செய்து கொடுக்கும் வாலிபன். மெமர் கட்டிட கான்ட்ராக்டர். ஒருநாள் நஜாப் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது மேலிருந்து காலிடறி கீழே விழுந்து பலத்த காயம்பட்டுவிடுகிறது. குடும்பமே அவரை நம்பியுள்ளவேளையில் அவர் மீண்டும் வேலைக்கு திரும்ப இயலாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. நஜாபின் நண்பர் சுல்தான் என்பவர் ரஹ்மத் என்ற பதினான்கு வயது சிறுவனை மெமரிடம் அழைத்து வருகிறார். ரஹ்மத் நஜாபின் மகன் என அறிமுகப்படுத்தி நஜாபிற்கு பதிலாக ரஹ்மத்தை வேலையில் வைத்துக்கொள்ளுமாறு மெமரிடம் சொல்கிறார். மெமரும் ரஹ்மத்தை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறார்.

சிமிண்டு  மூட்டை சுமப்பது, கலவை அள்ளுவது என நஜாப் செய்த வேலையை ரஹ்மத்தால் செய்ய இயலவில்லை. வெள்ளை சிமிண்டு மூட்டையை தூக்க இயலாமல் ரஹ்மத் மேல்படி ஏறும்போது கொட்டிவிட மெமருக்கு  எரிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.  ரஹ்மத்தை வேலையிலிருந்து  வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். அச்சமயத்தில் சுல்தான் குறுக்கிட்டு அவனது சூழ்நிலையை விலக்கி  அவனுக்கு சுலபமான வேலை ஏதாவது தருமாறு மெமரிடம் கேட்டுக்கொள்கிறார். அதுவரையில்  தேநீர்  தயாரித்து  தொழிலாளர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த லத்தீப்பின் வேலை ரஹ்மத்திற்கு செல்கிறது. ரஹ்மத் லத்தீப்பை விட சிறுவன் என்பதாலும் அவன் தயாரிக்கும் தேநீர் சரியில்லை என்று தொழிலாளர்கள் பலநாட்களாக குறைகூறிவந்ததாலும் மெமர் இந்த முடிவை எடுத்தார்.

சுலபமான  வேலையிலிருந்து  கரடுமுரடான வேலையைச் செய்ய ஆரம்பித்ததிலிருந்து  லத்தீப் அனைவரிடத்திலும் கடுப்படைந்தான். இதற்கு முதல் காரணமான ரஹ்மத்தை முற்றிலுமாக வெறுத்தான். ஆனால், ரஹ்மத் தயாரிக்கும் தேநீர் மிகுந்த சுவையாகயிருப்பதாக தொழிலாளர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். மெமரும் அந்த சிறுவனை தன்பங்குக்குப் பாராட்டுகிறார். சில நாட்களில் ரஹ்மத் அனைவருக்கும் பிடித்தவனாக ஆகிவிடுகிறான். அவனை அழைத்துவந்த சுல்தான் உட்பட முழு தொழிலாளர் அரங்கமே அவனைப் பாராட்ட ஆரம்பிக்கிறது. அங்கு ரஹ்மத்தின் மீது வெறுப்பு கொண்ட பிடிக்காத ஒருவனாக லத்தீப் மட்டுமே இருந்தான். ரஹ்மத் தங்கியிருக்கும் அறையின் புறச்சுவரில் கல்லெறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான். ஒருநாள் அவன் ரஹ்மத்தின் அறைக்கு அருகில் இருக்கையில் ரஹ்மத்தின் அறைக்குள் ஒரு உருவம் நீண்ட கூந்தலை கோதுவதுபோல் தெரிந்தது. பின் மெல்ல முன்சென்று சுவர்மறைவில் இருந்துகொண்டு பார்கிறான். கோதிய கூந்தலை வாரிச்சுருட்டி ஒரு பாகையில் பொருத்தி அதை தலையின் மேல் ரஹ்மத் அணிவதைப் பார்த்தவுடன் லத்தீப் சிலிர்த்து நிற்கிறான். ரஹ்மத் ஆணல்ல, ஒரு பெண் என்று அவனுக்குத் தெரியவருகிறது. இதற்குப்பிறகு மஜித் மஜிதி தனது திரைக்கதை என்ற தூரிகையால் வரைந்திருக்கும் அழகான ஓவியமே மீதப்படம்.

தாலிபான் அரசின் ஆளுகைக்குட்பட்ட ஆப்கான் மக்களின் வாழ்வினை மையப்படுத்தி  ஒசாமா என்றொரு திரைப்படம் வெளிவந்தது. ஒரு வீட்டில் ஆண் இல்லையென்றால் தாலிபான்காரார்கள்  அந்த வீட்டிலிருக்கும் பெண்களை சிறைப்படுத்துவார்கள். அவ்வாறு ஆண் துணையற்ற பெண்ணொருத்தி வயிற்றுப்பிழைப்புக்காக தனது மகளுக்கு ஆண்வேடமிட்டு தனது கணவனின் நண்பருடைய கடையில் வேலைக்கு சேர்க்கிறார். இறுதியில் அவள் ஆணென அனைவராலும் அறியப்பட்டு சிறைக்குச்சென்று தண்டனையாக ஒரு முதிர்கிழவனை மணம்  செய்துகொள்வதோடு படம் முடிகிறது. ஒசாமா கருத்தியல் அளவில் மிகச்சிறந்த திரைப்படம். பெண்களின்மேல் வீசப்படும் கூர்மையான பாலின வேறுபாட்டின் கொடுவாள்களை அத்திரைப்படத்தில் காட்டியிருப்பார்கள். பெண்மை கேவலப்படுவதும், சிதைக்கப்படுவதுமாக ஒசாமா பெண்ணின ஆதரவாளர்களின் வரிசையில் முன்னின்று குரல்எழுப்பும் திரைப்படம். Baran அந்த திரைப்படத்தின் கருவைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் இதில் காதலையும் அதன் வித்தியாச உணர்வுகளையும் கொண்டுள்ளதால் ஒசாமாவிலிருந்து இது வேறுபடுகிறது.

இறுதிவரை ரஹ்மத் ஒரு பெண் என்ற விஷயத்தை லத்தீப் தன் மனதுக்குள் மறைத்துவைத்திருப்பதை இந்த படத்தின் வலிமையாகக் கருதுகிறேன். ரஹ்மத் பெண் என்று தெரிந்த சிலநாட்களில் லத்தீப்பின் உடல் மற்றும் மனதில் உண்டாகும்  மாற்றத்தையும், ஆப்கானியர்களைத் தேடிவரும் ஈரானிய அரசு ஊழியர்களிடமிருந்து ரஹ்மத்தைக் காப்பாற்றும்  இடத்தையும், தான் சம்பாத்தியம் செய்த மொத்தப் பணத்தையும் மெமரிடமிருந்து பெற்று ரஹ்மத்தின் குடும்பத்திற்கான செலவுக்காகவும் அவன் அப்பாவிற்கு ஒருஜோடி ஊன்றுகோலும் வாங்கித்தருவதும் இதற்குமுந்தைய மஜித் மஜிதியின் திரைப்படங்களில் பார்த்த எழில்மிக்க காட்சிவர்ணனைகள்.

கட்டிட காண்டிராக்டராக  நடித்திருக்கும்  Mohammed Amir Nazi  மஜித்  மஜிதியின் இதற்கு முந்தைய சில திரைப்படங்களில் வந்திருக்கிறார். எளிமையான நடிகர். சாமானிய கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்துகிறவர். Baran-லும் அப்படியே இருக்கிறார். தனக்குக் கீழ் வேலைசெய்பவர்களுடனான அதிகாரமில்லாத அதேநேரத்தில் கவனித்து வேலைவாங்கிவிடும் சாமர்த்தியத்திலும், ஆப்கான் ஊழியர்களைக் காப்பாற்ற ஈரானிய அரசு ஊழியர்களிடம் பதில் சொல்லும்போது ஏற்படும் பதட்டத்திலும் இன்னுமொருமுறை The song of sparrows-ல்  வரும் கரீம்-ஐ நினைவூட்டுகிறார். எப்பொழுதுமே நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் வாழ்வதை Mohammed Amir Nazi மூலமாக மஜித்  மஜிதி சொல்லிவிடுகிறார்.

ஈரானிய அரசு ஊழியர்களிடம் சிக்கும் நிலைக்குச் சென்ற பிறகு ரஹ்மத்தை வேலையிலிருந்து மெமர் நிறுத்துவதினாலேயே லத்தீப் தனது சொந்த ஊருக்கு சிலநாட்கள் சென்றுவருவதாக பொய் சொல்லி சம்பளத்தை மெமரிடமிருந்து பெற்றுக்கொண்டு ரஹ்மத்தின் வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு உதவ ஆரம்பிக்கிறான். இறுதியில் நஜாபின் குடும்பம் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்வதோடு கதை முடிகிறது.  அங்கு பலநாட்களுக்குப்பிறகு  ரஹ்மத்தை லத்தீப் காண்கிறான். இறுதியில் இதன் தொடர்ச்சியை விவரிக்கிறேன்.

மஜிதி முக்கியமாக கவனிப்பது  மனிதர்கள்  பேசும் வார்த்தைகளைவிட அவர்களது உடல்மொழிகளை மட்டுமே. தயக்கத்துக்கும், வெட்கத்துக்கும், கோபத்திற்கும், நாணத்திற்கும், திருட்டுதனத்திற்கும் அதிலிருந்து வெளிப்பட்டு தெரிந்தமைக்கும் என பல "க்கும்"-களுக்கு மனிதன் தன் உடலைப் பழகி வைத்துள்ளான். இதுபோன்ற இல்லாத கதாபாத்திரங்களை  மஜிதி தனது திரைப்படங்களில் துல்லியமாக வைத்திருப்பார். தங்கையின் சப்பாத்தைத் திரும்பத் தரவியலாத அண்ணனின் இயலாமை குறித்த உருவவெளிப்பாடும் அதற்கு தங்கையின் சலிப்புத்தன்மை குறித்த உருவவெளிப்பாடும் ஒன்றுகூடுமிடத்தில் பார்வையாளனின் மனதில் அவை உடல்களின் ஓவியமாக உருவாகி அவர்களது அன்பின் குழந்தையை நோய்மையிலிருந்து எழுப்பிவிடுகிறது. அதேபோன்று அவரது சில திரைப்படங்களில் வரும் தங்க மீன்கள் ஒரு சிறந்த குறியீடு


பார்வையற்ற  குழந்தையின்  மூலம் உலகை அணுகுதலில் அவன்  அப்பாவின் வரவிற்கான காத்திருத்தலில் இருக்கும் தவிப்பில், அவனை அழைத்துச்சென்று  மகிழ்ச்சியில் திளைக்கவைப்பதென மஜிதி குழந்தைகளையும் அவர்களைப் பார்க்கும்போது பெரியவர்கள் கொள்ளும் பரவசத்தையும்  மட்டுமின்றி  மனம்  சம்பந்தப்பட்ட முக்கிய காரணிகளை அவரது திரைப்படங்களில் காணலாம். மஜிதியின் படங்களைப்பற்றி இந்த ஒரு கட்டுரையில் முழுமையாக அடுக்கவியலாது என்பதால் சுருக்கமாக குடும்பத்துடன் உலகத்திரைப்படம் காண விரும்புபவர்கள் தைர்யமாக அமர்ந்து பார்க்கலாம் என்று முடிக்கிறேன்.

லத்தீப் அனைத்துப் பணத்தையும் நஜாப் குடும்பத்திற்காக தந்த பிறகு, ரஹ்மத்திடம்  சென்று  தனது காதலை சொல்லவில்லை. மாறாக அவள் சென்றதன் கால் தடம் சேற்றுக்குள் உருவாகியிருக்கும். அதை மட்டும் உற்றுப் பார்த்தபடி நின்றிருப்பான். ஆழப்பதிந்த தடத்தில் மழை நீர் பெய்து நிரப்ப ஆரம்பிக்கும். இதோடு திரைப்படம் முடிகின்றது.

பார்வையாளனால் இந்த முரண்காட்சியை ஒப்புக்கொள்ள இயலாமல் இருக்கலாம். ஆனால், மஜிதி எல்லாவற்றையும் ஒரு நவீனகவிதைக்குரிய தன்மையில் காட்சிப்படுத்தியிருப்பார். அதாவது பார்வையாளனின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் செயல். அது பல அர்த்தங்களைத் தன்னுள் வைத்திருக்கலாம் என்ற சாகசம். நடைமுறை சாத்தியமின்மை, ஒருவேளை அவளுக்குத் தன்னைப் பிடிக்காவிட்டால் என்ன செய்வது?, அவள் பெற்றோருடைய எதிர்ப்பு, உலகத்தின் எதிர்ப்பு, இத்தனையும் மீறி நம்மால் அவளை வாழவைக்க இயலுமா என்ற கேள்விகள் அந்த பாதசுவடைக் காணும்போது லத்தீப்பின் மனதில் பிறந்ததாக வைத்துக்கொண்டு, இவையெல்லாம் எதற்கு? இந்த காலடித்தடம் போதும் எனக்கு என்று நினைத்து லத்தீப் விலகியிருக்கலாம் போன்ற அவதானிப்புகளை பார்வையாளன் உருவாக்குவதற்கான வெளியையும் சாத்தியங்களையும் படைப்பாளியாக மஜிதி செய்துள்ளார். இதுவே உலகப்படங்களின் முக்கியப்பணியாகும்.  Baran-னின் இறுதிக்காட்சியைப் பார்த்தபோது எனது நண்பனொருவன்  "வட போச்சே" என்றான். என்னைப் பொறுத்தவரை அது "விலகிவாழ்தலும் காதலே!" என்றேன். உங்களுக்கு எப்படியோ நீங்களும் படம் பார்த்தால் தெரியும்!

பதிவின் மூலம் : ஆலிலை
வலைப்பதிவாளர் : கிருஷ்ணகுமார்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்