பதிவுகள்
Typography

டிசம்பர் ஏழு, 2012 அதிகாலை 5.30 மணிக்கு இந்த தொடர்கட்டுரையின் பகுதி எழுதப்படும் போது

‘மருத்துவபீட மாணவர்கள் ஐவர் உள்ளிட்ட யாழ் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் ஆறு பேர் விசாரணைகளுக்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.’ குறித்த செய்தியை, இலங்கை பொலிஸ் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் மேற்கொள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையின் ஊடகங்களும் குறித்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கின்றன.

நவம்பர் 27, மாவீரர் தினத்துக்குப் பின்னரான நாட்களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் தர்ஷாந்த் உள்ளிட்ட மாணவர்கள் நால்வர் பொலிஸாரினால் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அதில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுமிருக்கிறார்.

கோபம்

‘கோபம்’ மனிதனின் அடிப்படைக் குணம். அது அவசியமானது. அதுபோல ஆபத்தானது. மனித வாழ்க்கை அர்த்தங்களினாலும், அபத்தங்களினாலும் நிரம்பியது. கோபத்துக்கு இருக்கிற விசேட இயல்பு அர்த்தங்களுக்குள்ளும் - அபத்தங்களுக்குள்ளும் ஒரே நேரத்தில் இருக்க முடிவது. கோபம் கொள்ளாத மனிதர்களை நான் இன்னும் சந்திக்கவில்லை. எதிர்காலத்திலும் சந்திக்கமாட்டேன். ஏனெனில், இளவரசன் சித்தார்த்தன் ‘புத்தனான’ காலத்துக்கு 2600 ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆக, புத்தனை எதிர்காலத்தில் நான் சந்திக்கும் வாய்ப்புக்களே இல்லை. (சரியாக கவனியுங்கள், புத்த தர்மத்தை காப்பவர்கள் - போதிப்பவர்களை சந்திப்பது பற்றியது அல்ல. புத்தனை சந்திப்பது பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன்) சாந்தியையும் - சமாதானத்தையும் தன்னுடைய தர்மமாக இறுதிவரை புத்தன் போதித்தாக ‘புத்த தர்மம்’ சொல்கிறது. ஆனால், நாங்கள் யாரும் புத்தன் கிடையாது. ஆக கோபம் கொள்வது இயல்பு. கோபம் எம்மை சுற்றிக்கொண்டிருக்கிறது. கோபத்துக்குள் நாம் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

கட்டுரையொன்றை எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அதுவும், விமர்சன கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளை ஆரம்பிக்கிற போது அது அதிகமாகவே ஏற்படுவதுண்டு. ஏனெனில், வரம்புமீறுதல் என்ற வடிவம் வருகிற போது விமர்சனமும் கூட அவதூறாக திரிவுபட்டு நிற்கும். அதுவும், தமிழ்ச்சூழலில் அதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கிறது. அல்லது விமர்சனத்தை பலரும் வரம்புமீறிய தனிமனித தாக்குதலாகவே கருதி விடுகிறார்கள். ஆக, நிரம்பிய அவதானம் இங்கு தேவையாக இருக்கிறது. அது, ‘தார்மீக கோபம்’ கொள்கிற போதும் இன்னும் அவசியமாகிறது. விடயம் அவ்வளவொன்றும் சிக்கலானது அல்ல. ‘யாழ் பல்கலைக்கழக மாவீரர் தின அனுஷ்டிப்பு - பல்கலை மாணவ விடுதிக்குள் இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய நுழைவை’ அடுத்து ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் பற்றியது. அதுவும் அதை, தமிழ் ஊடகங்கள் சிலவும், சமூக வலைத்தள கருத்தியலாளர்களில்(?) குறிப்பிட்டளவானவர்கள் முன்னெடுத்த விதம் பற்றியது.

சிங்கள மாணவி

யாழ் பல்கலையில் கல்வி பயிலும் ஒரு சிங்கள மாணவியின் ருவிற்றர் மொழிபெயர்புக்கள்: “ நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கிவிட்டிருக்கிறோம். 26ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது. மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள். தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள். அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள். மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்படமுடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்! - யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி ”

இப்படியான நிலைத்தகவலொன்று கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 3ஆம் திகதி) முதல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு பலரினால் மிக வேகமாகவும் - ஆர்வத்துடனும் மீள் பகிர்வு செய்யப்பட்டது. குறித்த நிலைத்தகவலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் செய்தி இணையத்தளங்கள் சிலவும் செய்திகளை வெளியிட்டிருந்தன. குறித்த நிலைத்தகவலின் உண்மைத்தன்மை பற்றி ‘கேள்விகள்’ அனைத்தும் மிக இலகுவாக அலைக்கழிக்கப்பட்டன. அல்லது புறந்தள்ளப்பட்டன. இந்த கட்டுரை எழுதப்படும் வரை ‘சிங்கள மாணவியின் ருவிற்றர் மொழிபெயர்ப்புக்கள்’ என்கிற பெயரில் பேஸ்புக்கில் குறித்த நிலைத்தகவல்களை எழுதியவர்களோ அல்லது பகிர்ந்தவர்களோ ஆதாரங்களை முன்வைக்கவில்லை. அல்லது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

‘சிங்கள மாணவி’ என்கிற பெயரில் தமிழர் ஒருவர் மேற்குறித்த கருத்துக்களை எழுதுவதற்கும், உண்மையிலேயே சிங்கள மாணவி அதனை எழுதுவதற்குமிடையில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. அது, ‘இனங்களுக்கிடையிலிருக்கிற அடிப்படை மனநிலையில் ஆரம்பித்து, அரசியலை தீர்மானிக்கின்ற கருத்தியல்கள் வரை’ செல்கிறது. தமிழ் மாணவர்களுடன் நெருங்கிக் பழகும் சிங்கள மாணவியொருத்தி மேற்கூறிய கருத்துக்களை கூறியிருப்பாரானால், அது சிங்கள இளைய சமூகத்திடம் தோன்றியிருக்கிற கருத்தியல் மாற்றமாகவும் கொள்ள முடியும். அது, ஒரு மாணவியில் ஆரம்பித்திருக்கிற ஆரோக்கிய மனநிலை. அது வெளிப்படுத்தப்பட்ட வடிவத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த ஆரோக்கிய மனநிலை இலங்கையின் எதிர்கால இன ஐக்கியத்துக்கு அல்லது அரசியல் பிணக்குகளை தீர்ப்பதற்கான சிறிய பொறியாகவும் அமையலாம்.

அதுவே, சிங்கள மாணவியின் பெயரில் ‘தமிழர் ஒருவர்’ உணர்ச்சிகளுக்கு சாயம் பூசி குறித்த கருத்துக்களை எழுதியிருப்பாரானால் அது மிகவும் மோசடித்தனமானது. இது, இன்னுமின்னும் தமிழ் இளைஞர்களை வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்வதற்கான தூண்டல்களை செய்வதற்கான ஏற்பாடாகவே பார்க்க முடியும். அதுபோக, ஆரோக்கியமான போராட்டத்தையோ அரசியலையோ பேசுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கின்ற அப்பட்டமான அயோக்கியத்தனம் இது. ஏனெனில், இறுதிவரை நாம் சில விடயங்களுக்குள் இருந்து ஆரோக்கியமான முறையில் வெளிவந்து அடுத்த கட்டத்துக்கு செல்வதை தடுப்பதற்கான வழிகளாகவே கொள்ள முடியும். அதீத உணர்ச்சி உந்துதல்களின் வழி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எண்ணுகிற மனநிலை நல்லதல்ல. அப்படிப்பட்ட மனநிலை மீதே ‘தர்மீக கோபம்’ வந்து தொலைக்கிறது.

பல நேரங்களில் மக்களையும் சேர்த்தே கோபித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘உணர்ச்சிகளை விற்பனை செய்கின்றார்கள்’ என்று தெரிந்தும் அதிக தருணங்களில் கேள்விகள் ஏதுமின்றி திரும்பத்திரும்ப அந்த ஊடகங்களிடம் செல்கின்றார்கள். செய்தியொன்றோ - தகவலொன்றோ சொல்லப்படுகின்ற போது குறைந்த பட்சம் அதன் உண்மைத்தன்மை பற்றியாவது யோசிக்காமல் இருப்பது ஏன்?, இப்படியான மனநிலையை மக்களின் பலரும் அப்படியே வைத்துக்கொண்டிருப்பது எப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும்?, இதில் ‘மக்களுக்கான பொறுப்புணர்வு’ என்ற அடிப்படையை அவர்கள் ஏன் மறந்து போகிறார்கள்?. ஆதாரங்கள் அற்ற செய்திகளை அதுவும், இப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகிற செய்திகளை நம்புவது எந்தவித நல்லதையும் செய்துவிடாது என்று ஏன் நம்ப மறுக்கிறார்கள். அல்லது, அவர்களின் ஆற்றாமையினை இவ்வாறான செய்திகளைப் படிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்களா…? (ஒட்டுமொத்த மக்களையும் நோக்கியதல்ல இந்தக் கேள்விகள். ஆனாலும், பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை முகத்தில் ஓங்கி அறைகிறது.)

இறுதிவரை சிங்கள மாணவியின் பெயரில் தங்களது கருத்துக்களை எழுதியவர்கள் தங்களிடமுள்ள குறைபாடுகள் பற்றி சிந்திக்கவேயில்லை. ‘உண்மைத்தன்மை’ குறித்து கேள்வி எழுப்பியவர்களை நோக்கி ‘துரோகி’ என்கிற அடையாளத்தை வெற்றிகரமாக கொடுத்ததைத் தவிர. இது எங்களுடைய மனநிலையின் சிறு வெளிப்பாடு.

தமிழ்த் தேசியம்

ஊடகங்களும் சில - அரசியற்கட்சிகளும் போதித்து வைத்திருக்கிற ‘தமிழ்த் தேசியம்’ என்கிற அடையாளம் மிகவும் தவறாகவே இருக்கிறது. அதுவும், இளைஞர்களை நோக்கி அவை செலுத்தியிருக்கிற தாக்கம் மிகவும் மோசமானது. ‘விடுதலைப் புலி எதிர்ப்பு’ என்பது ‘தமிழ்த் தேசிய எதிர்பாக’ பெருவாரியான தமிழ் ஊடகங்களினாலும், கருத்தியலாளர்களாவும்;(?) முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. புலி எதிர்ப்பு என்பது தமிழ் தேசிய எதிர்ப்பாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இறுதிவரை இதை முன்னெடுத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் பின்நிற்கின்றன. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி விடுதலைப் புலிகள் போரிட்டார்கள். அதுபோல இன்னபிற இயங்கங்களும் ஒரு காலம் வரை போராடின. அந்த இயக்கங்கள் புலிகளை எதிர்த்தார்கள் என்பதற்காக தமிழ்த் தேசியத்தை எதிர்க்கின்றார்கள் என்ற கருத்து எவ்வளவு மோசடியானது. அது, ‘துரோகி’ என்கிற அடைமொழியை வழங்குவதிலிருந்து ஆரம்பித்தது. அது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விடுதலைப் புலிகளை எதிர்க்கின்ற - எதிர்த்தவர்களில் குறிப்பிட்டளவானவர்கள், இறுதிவரை தமிழ்த் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான். இவற்றை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அல்லது மக்களில் அதிகளவானவர்கள் அப்படி உணர மறுக்கிறார்கள். இதுதான், இன்னுமின்னும் ஊடகங்களை ‘ஆதாரங்கள்’ அற்ற செய்திகளை உணர்ச்சிகளின் வடிவில் வழங்க தூண்டுகின்றது.

கைதுகள்

மீண்டும் ‘பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை’ என்கிற பெயரில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் (சுமார் 25 பேர்) கடந்த சில நாட்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளும், கைதுகளும் சட்டத்தின் ஆட்சியில்(?) இயல்பானது. ஆனால், அது, நவம்பர் 27க்குப் பின்னரான சில சம்பவங்களின் பின்னர் அதிகரித்திருப்பது ஆரோக்கியமானது இல்லை. அது, இன்னுமின்னும் தமிழ் இளைஞர்களுக்கிடையில் தீவிர எண்ணங்களை தோற்றுவிக்கவும், அடுத்த தலைமுறைக்கும் ஊடுகடத்தவுமே உதவும். ‘நான் பழிவாங்கும் மனிதர் அல்ல: ஜனாதிபதி’ இப்படியொரு செய்தித் தலைப்பு இந்த பகுதி எழுதி முடிக்கிற தருணத்தில் கண்ணில் பட்டது. ‘பழிவாங்கும் அல்லது காழ்ப்புணர்ச்சி கொள்ளதாக மனநிலை மிகவும் சிறந்தது’ அது ‘உண்மையாக’ இருக்குமானால் எல்லோருக்குமே நல்லது!

புதிய பாகம் : எமது அரசியல் : எமது உரிமை 05

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

முன்னைய பாகங்கள் :  எமது அரசியல் எமது உரிமை : 01 உரிமை : 02   உரிமை: 03

BLOG COMMENTS POWERED BY DISQUS