பதிவுகள்
Typography

சிறிலங்கா இராணுவத்தின் மீதான குற்றப்பட்டியல் தமிழர்கள் மீதான வன்முறை என்பதோடு மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது.

சிறிலங்காவிற்கு வெளியே, ஐ.நா.அமைதிப்படையில் அங்கம் வகித்துக் கெயிட்டி சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் அங்கே பாலியற் குற்றங்கள் செய்ததான முறைப்பாடுகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் அரசை விமர்சித்த சிங்கள ஊடகவியலாளர்கள் மீது, இராணுவ வன்முறை பாய்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், 1989ல் ஜேவிபி தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் மற்றுமொரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அக் கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியமாக இருக்கக் கூடிய இராணுவப் புகைப்படப்பிடிப்பாளர் ஒருவர்  இதனை வெளிப்படுத்தியிருப்பதாக இச் செய்தியினை வெளியிட்டுள்ள The Nation எனும் இணையத்தளம் தெரிவிக்கிறது.

குற்றமற்ற சிறந்த இராணுவம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புகழாரம் சூட்டும் அதே இராணுவத்தின் மீதே, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளை, போராளிகளை, பிரபாகரனின் இளவயது மகனைக் கொலை செய்த குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, இராணுவத்தினரைக் காத்து நிற்பேன் என்கிறார் தற்போதைய அரச தலைவர்.

அவ்வாறான ஒரு காப்பாற்றுதலையே அன்றைய அரச தலைவராகவும், அப் படுகொலை குறித்து அறிந்தவராகவும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அப்போதைய தலைவர் பிரேமதாசாவும் செய்திருப்பதை நிரூபிக்கிறது வெளியாகியுள்ள செய்தித் தகவல்.

புத்தனின் கொள்கையைத்  தூர எறிந்து விட்டு, பௌத்தத்தின் காவலனாக பிரச்சாரம் செய்து கொள்ளும் அரச அதிகாரத்தின் காவலர்களாகவும், கைக்கூலிகளாகவும், கொலையாளிகளாகவும், மாறியுள்ள சிறிலங்கா இராணுவம், தன் தலைமை அதிகாரத்துக்கு விசுவாமாக, தேவையெனில் சிங்களவரையும் சுட்டு எரிக்கும் என்பதை இன்னொரு முறை அடித்துச் சொல்கிறது இச்செய்தி.

செய்திமூலத்திற்குரிய The Nation இணையத்தளத்திற்கும், செய்தியாளர்களுக்குமான நன்றிகளுடன், தமிழில் மொழி மாற்றம் செய்து இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

ஆங்கில மொழியில் வெளியான அச் செய்திக்கான இணைப்பும் அதன் தமிழாக்கமும் கீழே:

கறுப்பு யூலைக்குப் பின்பு யுஎன்பி அரசினால் ஜனதா விமுக்திப் பெரமுன தடை செய்யப்பட்டது. தெற்கில் வசித்த தமிழ்மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்செயல்களுக்கு யுஎன்பி தானே காரணமாக இருந்து கொண்டு இந்த பழியை ஜேவிபி மீது சுமத்தியது. இது நெறிமுறை சாரா அரசியல் நோக்கத்திற்கு மரபார்ந்த உதாரணங்களில் ஒன்றாகும்.

ஜேவிபியின் ஸ்தாபகரும் தலைவருமான ரோகண விஜயவீராவும் ஏனைய அங்கத்தவர்களும் தலைவமறைவானர்கள். முன்னெப்போதும் கண்டிராத வன்செயல்கள் 1988- 89 காலப்பகுதியில் தொடர்ந்தன. இவைகளுக்கு பொறுப்புக் கூறும் கடமையை ஜேவிபியும், பிரேமதாசவும், அந்த காலகட்டத்தின் யுன்என்பி அரசும் கொண்டுள்ளன.

ரோகண விஜயவீர சில வருடங்கள் அத்தநாயக்க என்ற பெயரில் ஹம்பொலாவிற்கு அண்மையிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் வசித்து வந்தார். ஒரு காட்டிக் கொடுப்பு நடவடிக்கையின் விளைவாக முன்னாள் ஜேவிபி அங்கத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இது 13 ஆம் திகதி பிற்பகல் 1989 கார்த்திகையில் நிகழ்ந்தது. ஊடகங்கள் எதுவும் அறிந்து கொள்ளாதவகையில் இது நடைபெற்றது. இந்த இரகசிய நடவடிக்கையானது பதில் பாதுகாப்பு மந்திரியான ரஞ்சன் விஜயராட்ணாவிற்கும் ஒரு சில இராணுவ அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்ததுடன் அநேகமாக அன்றைய அரச தலைவரான ஆர். பிரேமதாசவிற்கும் தெரிந்திருந்தது.

விஜயவீர கைது செய்யப்பட்டு சுட்டப்பட்டுக் குற்றுயிராக இருக்கும் போதே தகன அடுப்பில் வீசப்பட்டு உயிருடன் தீயிட்டப்பட்டார். தேர்ச்சி பெற்ற மற்றும் புதிய இராணுவ அதிகாரிகளும் அறிந்திராத வகையில் ஒரு ஜேவிபி அங்கத்தவரான பொலனறுவையைச் சேர்ந்த இந்திரானந்தா சில்வா என்பவர் இந்த சம்பத்திற்கு சாட்சியாக இருந்திருக்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பின்பு இப்போது ஊடகம் ஒன்றுக்கு அதனைத் தெரிவித்துள்ளார்.

1980 இன் இறுதிப்பகுதியில் நான் இராணுவப் பொலிஸ் இணைந்து கொண்டேன். நான் ஜேவிபியின் கொள்கையினால் கவரப்பட்டேன். அந்நேரம் நான் க.பொத பரீட்சைக்குத் தோற்றியிருந்த வேலையற்ற இளைஞனாக இருந்தேன். எனது மூத்த சகோதரர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தார். அவர் தனது கல்வியைத் தொடருவதற்கு நிதி தேவைப்பட்டது. நான் இராணுவத்தில் இணைந்தேன். இராணுவ பொலிஸில் ஒரு படப்பிடிப்பாளராக வருவதற்கு எனக்கு அதிஷ்டம் கிடைத்தது. நான் இராணுவப் பொலிஸ் தலைமையகத்தின் நரேன்பிட்டிய முகாமுடன் இணைக்கப்பட்டிருந்தேன்.

1989 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி எனது வாழ்வில் துரதிஸ்டம்மிக்க நாள். பணியாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நான் விழித்தபோதுஇ யாரோ ஒருவர் எனது முகத்தில் ரோச் லைற்றைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த ரோச்லைற்றின் முகப்பகுதி ஒரு ரிசுவினால் மூடப்பட்டு அதன் பிரகாசமான வெளிச்சம் மட்டுப்படுத்தப்பட்டு அங்கு படுத்திருந்த மற்றவர்களைக் குழப்பாதவாறு அமைந்திருந்தது.

இந்த மங்கிய ஒளியில் ரோச் லைற்றை பிடித்தவர் சீருடையில் காணப்பட்டதுடன் அவருடையில் மூன்று குழாய் சின்னங்கள் காணப்பட்டன. அவர் என்னை வெளியே வரும்படி இரகசியமான குரலில் கூறியபடிஇ தனது உதடுகளில் விரலை வைத்து என்னை சத்தமிடாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பணியாளர்கள் தங்குமிடம் கப்டன் அபயநாயக்கவினது கட்டுப்பாட்டுக்குப் அப்பாற்பட்டதாக இருந்த போதும் அவர் என்னிடம் ஒரு மிக முக்கியமான விடயம் ஒன்றுக்குச் செல்வதற்காக கமராவையும் அதற்குரிய உபகரணங்களையும் எடுத்துவரும்படி கூறினார்.

இந்தக் காலப்பகுதியில் கொழும்பைச் சூழவுள்ள பகுதியில் சித்திரவதைக் கூடங்கள் அமைந்திருந்தன. இளவயதினர் இங்கு அழைத்து வரப்பட்டு சித்திரவதைக்குள்ளாகப்பட்டு பின் கொல்லப்பட்டனர். இவ்வாறான நிகழ்வாக இருக்குமோ என நான் பயந்தேன். என்னுடைய கடமைகளுள் துரதிஸ்டம் மிக்க இளைஞர்கள் கொல்லப்பட முன்பு படம் பிடிப்பதும் அடங்கியிருந்தது.

முன்பு ஒரு விசாரணையின் போது நான் எடுத்திருந்த புகைப்படம் ஒன்று, கைதாகிய ஜேவிபி அங்கத்தவர் ஒருவரிடம் காணப்பட்டதாக கூறி என் மீது விசாரணை நடத்தப்பட்டது. நான் ஜேவிபி ஆதரவாளர் என்ற சந்தேகம் ஏற்படுவதிலிருந்து விலகிக் கொள்வதற்காக புகைப்படங்களுக்குரிய அறையில் பூட்டு உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டிருந்ததாக கூறினேன்.

இரவு கடந்து சிலமணித்தியாலங்களில் நான் நித்திரையால் எழுப்பப்பட்டு கடமைக்காக அழைக்கப்பட்டு காத்திருந்த காரில் ஏறும்படி கேட்கப்பட்டேன். நான் கமரா பையையும் அதற்குரிய உபகரணங்களையும் எடுத்துக் கொண்டேன். என்னிடம் ஒரு பிஸ்டலும் இருந்தது, ஆனால் அதை எடுத்துச் செல்வதில்லை என முடிவு செய்தேன். இந்த பிஸ்டல் நான் ஜேவிபியில் போராளியாக இருந்த காலத்திற்குரியது. அதனை நான் எனக்குரிய பொருட்களுடன் இராணுவப் பொலிசில் இணைந்த பின்பும் மறைத்து வைத்துப் பாதுகாத்தேன்.

கார் திம்பிரிஹஸய திசையை நோக்கி ஓடத் தொடங்கியது. அங்கே வர்ண விளக்குகளுக்கு அருகே Operation Combine office இருந்தது எனக்குத் தெரியும். இரு மாடிகளைக் கொண்ட கட்டிடம் இதில் அனைத்து இராணுவ நடவடிக்கைகள் பற்றி ஆராயப்படும் அறைகளும் அமைந்திருந்தன. கப்டன் அபயநாயக்க என்னிடம் சிநேகிதி இருக்கிறாரா என வினவினார். நான் இருந்தும் இல்லை எனப் பதிலளித்தேன். எனது பதிலை தான் நம்பவில்லை என அவர் கூறியதுடன் குறிப்பாக நாங்கள் போய்க் கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை தொடர்பாக எதையும் பற்றி சிநேகிதிக்குக் கூட கூறவேண்டாம் எனக் கூறினார்.

நாங்கள் அந்த அலுவலகத்தை வந்தடைந்ததும் கப்டனுடன் நான் மேல்மாடிக்குச் சென்றேன். அங்கே மேலதிகாரி ஒருவர் எனக்குத் தெரியாத ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். எனக்கு அந்த நபரை தெரியாத படியால் யார் என ஹொல் முதலிப்பிடம் கேட்டேன். இவர் ஜேவிபியின் தலைவர் ரோஹண விஜயவீர என அவர் கூறினார். அவரை இனங்காண்பது கஸ்டமாக இருந்தது. 1982 இல் ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்றபோது எடுத்த படத்தினை மட்டுமே பார்த்த எனக்கு இவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. அப்போது அவர் தாடி மீசையற்ற முகத்துடன் சற்று பருமனாகவும் கருமையாகவும் காணப்பட்டார்.

நான் படம் எடுப்பதற்காக அவரை அருகே கூப்பிட வேண்டியிருந்தது. அவரை அறையின் ஒரு பக்கத்திற்கு வரும்படி அழைத்தேன் எட்டுப் படங்களை எடுத்தேன். நான் படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் யார் எனக் கேட்டேன். அவர் தான் ரோஹன விஜயவீர என்று கூறினார். அதநாயக்க என்பது யார் எனவும் வினவினேன். தான் அந்தப்பெயரைப் பயன்படுத்தியதாகவும் எனக்கு விளக்கமளித்தார். அவர் பயந்தவராக தோற்றமளிக்கவில்லை அதிகாரிகளுடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தார். விஜயவீர மூத்த இராணுவஅதிகாரிக்களுக்கு பிரேமதாஸா அரசு எல்ரிரியிற்கு எவ்வாறு ஆயுதம் வழங்கியது பற்றி விபரித்துக் கொண்டிருந்தார். அவர் மிக தர்க்க ரீதியாக விளக்கிக் கொண்டிருந்தார். அந்த அதிகாரிகள் பயங்கரவாதக்குழுவிற்கு ஆயுதம் விநியோகித்தமை குறித்த விளக்கத்தினால் சங்கடமடைந்தவர்கள் போல காணப்பட்டனர்.

அப்போது ஹொல் முதலிப் கீழ் மாடியில் ஜேவிபியின் உதவி தலைவர் இருப்பதாகவும் அவரையும் படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். நான் கீழே படம் எடுப்பதற்காகச் சென்றேன். அங்கே மிக மோசமாக சித்ரவதைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எச்.டீ.ஹெரத் காணப்பட்டார், அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை நான் மிகவும் பிரயதனப்பட்டு படங்களை எடுத்துக் கொண்டேன்.

பின்பு நாங்கள் மீண்டும் மேல்மாடிக்கு வந்து விட்டோம். தொலைபேசி அழைப்புக் கேட்டது. ஜனாதிபதி பிரேமதாஸா என யாரோ கூறினார்கள். மேஜர் ஜெனரல் வைத்தியரட்ண அழைப்பிற்குப் பதிலளித்தார். அவர் சுமார் பத்து நிமிடங்கள் வரை ஜனாதிபதியுடன் உரையாடினார். மற்றைய அதிகாரிகள் விஜயவீரவுடன் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின்பு விஜயவீரவை கீழே அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அவரை கீழே வரும் படி கூறினர். அவர் கீழே வந்ததும் ஒருவர் விஜயவீரவினது கண்களைக் கட்டினார். இவர் கொல்லப்படப்போகிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதிகாரிகளில் ஒருவர் விஜயவீரவினது கண்ணாடிகளைக் கழற்றி அவருடை பொக்கற்றில் போட்டபடி" விஜயவீர மாத்யா உங்களுடைய பொக்கற்றில் கண்ணாடிகளை வைத்துள்ளேன்" என்று கூறினார்.

ரோஹண விஜவீரவிற்கு தான் கொல்லப்படப்போவது தெரிந்திருக்கலாம், அவர் ஏன் கண்ணைக் கட்டுகிறீர்கள் எனக் கேட்டார். எனக்கு என்ன செய்தாலும் பிள்ளைகளையும் குடும்பத்திற்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். பொலிஸ் அதிகாரி ரொணி குணசிங்க குழம்பமடைந்தவராக காணப்பட்டார். விஜயவீராவின் உள்ளங்கைகளைப் பார்க்க தொடங்கினார். “குணசிங்க கைகளில் சாவு பற்றி எழுதியிருக்கிறதா என்பதைக் அறிவதற்காகப் பார்க்கிறீர்களா..?” என விஜயவீரா வினவினார். இரண்டு ஜீப்புக்கள் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விஜயவீர கொல்லப்படப்போகிறார் என்று எனது உள்ளுணர்வு கூறியது

இந்த நிலையில் என்னை எனது கட்டளை அதிகாரியான மேஜர் தசநாயக்கவினால் மேலே போகும்படி கூறப்பட்டது. ஏனைய அதிகாரிகளுடன் செல்வதில்லையா என நான் அவரிடம் கேட்ட போது நாங்கள் எங்கள் முகாமிற்கு திரும்பி செல்ல வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட மேஜர் ஜேன் வைத்யரட்ண மேஜர் திசயநாயக்கவை கீழ்தரமாக ஏசத் தொடங்கினார் "நீங்கள் வரவிட்டால் நாயைப் போல கொல்லப்படுவீர்கள் " என்று கூறினார்.

முடிவில் நாங்கள் தரித்து நின்ற வாகனத்தில் ஏறிக்கொண்டோம் வாகனம் சுமார் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் அங்கிருந்து புறப்பட்டது. நாங்கள் கனத்தையிலுள்ள போறல்ல மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததும் விஜயவீர தகன அறைக்கு அருகில் கிடப்பதைப் பார்த்தேன். அவருக்கு மார்பில் சுடப்பட்டிருந்தது சித்திரவதைக்குட்டபடுத்தப்பட்டவர் போல் தோற்றமளித்தார். கண்களைச் சுற்றிய கட்டு அகற்றப்பட்டிருந்தது. மேஜர் ஹாமினி ஹெட்டியராச்சி விஜயவீரவைப் படங்கள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

விமேஜர் ஜீன் ஜயசுந்தரவும் அதிகாரிகளும் விஜயவீரவை தகனஅடுப்பில் போடுவது பற்றி விவாதிக் கொண்டிருந்தனர். விஜயவீர அப்போதும் உயிருடன் முணங்கிக் கொண்டிருந்தார்.

தகனசாலைக்குப் பொறுப்பானவரிடம் தகனசாலைக்கான சாவியைத் தரும்படி அதிகாரி ஒருவர் கேட்டார். தகனச்சாலைக்குப் பொறுப்பானவர் கொடுக்க மறுத்துவிட்டார். அந்த மனிதனின் நெற்றியில் ரிவோல்வரை குறிவைத்த ஒரு இராணுவஅதிகாரி சாவியைக் கொடுக்காவிட்டால் சுட்டு விடுவேன் என்று கூறினார். அந்த மனிதர் சாவியைக் கையளித்தார் தகனஅடுப்பின் மின்விசை இயக்கி இருக்கும் இடத்திற்கான வழியைக் கேட்டனர். அடுத்து அங்கிருந்த சிப்பாய்களிடம் விஜவீரவை தகன அடுப்பில் எறியும் படி கூறினார்கள். இரு இராணுவச் சிப்பாய்கள் விஜயவீரவினது கால்களையும் கைகளையும் பிடித்து தூக்கி தகன அறையில் எறிந்தார்கள் ஆனால் அவர்களது இலக்கு சரிந்து அவர் ஒரு பக்கம் விழுந்தார். அவர்கள் திரும்பவும் கால்களையும் கைகளையும் பிடித்து தூக்கி அவரை தகனஅடுப்பில் எறிந்தனர். இரண்டாம் தடவையாக அவர்கள் தூக்கிய போதும் அவர் முணங்கிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அவரை எரிப்பதற்காக தகனஅடுப்பில் எறிந்த போது அவர் உயிருடன் இருந்தார். இப்படித்தான் ஜேவிபியின் தலைவர் கொல்லப்பட்டார் - என்கிறது அச் சாட்சியம்.

இச் செய்திக்கான ஆங்கில மொழி மூல இணைப்பு: The Nation Sunday, 02 December 2012

http://www.nation.lk/edition/news-features/item/13033-rohana-wijeweera-cremated-alive.html

ஆங்கிலத்தில் : Chandana Kariyawasam and Wijitha Nakkawita

4தமிழ்மீடியாவிற்காக தமிழில்: மாயா

BLOG COMMENTS POWERED BY DISQUS