பதிவுகள்
Typography

‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று சமூகத்தின் மீதான கோபத்தை பாரதி பாடியிருப்பான். புரட்சிக்கவ, புதுக்கவி என்ற அடையாளங்களுக்கு

பாரதி எவ்வளவுக்கு பொருத்தமானவரோ, அவ்வளவுக்கு சராசரி மனிதனின் எண்ணங்களை சுயாதீனத்தின் வழி வெளிப்படுத்தியவனாகவும் கொள்ள முடியும். ‘கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்’ பாரதியின் இந்த வரிகளும் அடிக்கடி மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.

கருத்தியலின் - மொழியின் வழி வெற்றி பெற்று தனிப்பட்ட வாழ்க்கையில் வறுமைக்குள் தோற்றுப்போன கொள்கை பிடிப்பாளன் பாரதி. அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்பாளர்கள் எமக்கிடையே எப்போதாவதுதான் தோன்றுவார்கள். ஏனெனில், கொள்கை - கோட்பாடு என்பது அப்படியானவர்களுக்கு வயிற்றுப்பசியை விட மேலானது. உயிர் மூச்சுப் போன்றது. அப்படியான கொள்கைப் பிடிப்பானவர்களை இன்றைய நாட்களில் தேடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், காணுவதற்கான வாய்ப்புக்கள் அண்மையில் வாய்க்கவில்லை.

பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11 வந்து போனது. சமூக கோபத்தையும் சுதந்திரத்தின் மீதான வேட்கையையும் தன்னுடைய மொழியின் வழி அரசியலாகவும் ஆளுமையாகவும் பாடியவனை நினைவு கூர்வது அவசியமானது. அது அவருக்கான அஞ்சலியாகவும் இருக்கும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!

இப்போது மீண்டும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே…’ என்று ஆரம்பித்து கடந்து போன, குறிப்பாக நாம் மறந்து போனவை பற்றி கொஞ்சம் பேசலாம். அது இப்படியிருக்கும் ‘பெரும்புயலுக்கு எதிராக பழுத்துவிழுந்த இலையொன்றை முன்னிறுத்திய அரசியல் பற்றி. அல்லது கொதித்துக் கொண்டிருக்கிற பானைக்குள் அந்த கொதிநிலையை அடக்க பனிக்கட்டிகளைப் போடுவது போன்ற சமூக முடிவை ஒத்தது.’ எல்லோருக்குமே தெரியும் சில கணங்களுக்குள்ளேயே கொதிக்கும் பானைக்குள் விழும் பனிக்கட்டிகளும் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்துவிடும் என்று. ஆனாலும், சில கணங்கள் கொதிநிலை கொஞ்சம் அடங்கும். அப்படியான அடங்கு நிலை அவசியமே இல்லாதது. அப்படியான மன அடங்குநிலை அரசியலையே தொடர்ந்து நாம் கடந்து வருகிறோம். அப்படியான அரசியலை பேசுவதற்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் செல்லவேண்டியிருக்கிறது. எல்லோரும் பேசிவிட்ட விடயமொன்றை தேவையேற்படுகிற போது மீண்டும் தூசிதட்டி பேச வேண்டியேற்படுகிறது. அது தப்புமில்லை.

முன்னாள் இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகா, தோற்றுப்போன அரசியலின் அண்மைய அடையாளம். அதுபோல, அதிகாரத்தின் மீதான ஆசையினால் அந்த அதிகாரத்தினாலேயே கசக்கி வீசப்பட்ட காதிதம் போன்றவர். மிகவும் மூர்க்கமான இராணுவ வீரனாக இருந்து தளபதியாக மாறியவர் சரத் பொன்சேகா. இறுதிவரை மூர்க்கமான இராணுவ மனநிலையுடனேயே இருக்கின்றவர். அந்த இராணுவ மனநிலை எதையுமே கண்டுகொள்ளாதது. பல தருணங்களில் ஹிட்லர் மனநிலையை ஒத்தது. அப்படியான மனநிலையை சில நாட்களுக்குள்ளேயே ஒட்டுமொத்தமாக ஆதரித்த அரசியல் என்பது மிகவும் வெட்கப்பட வைக்கிற விடயம். அதுவும் இலங்கையின் ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் வந்தேறு குடிகள் போலவும் - இரண்டாம் தர பிரசைகளாகவும் கருதிக்கொண்டிருக்கிற இராணுவ மனநிலை மனிதரை ஆதரித்த அறிவுஜீவித்தனமாக அரசியல் முடிவுகளை அதிகம் கேள்வியெழுப்பாமல் ஏற்றுக்கொண்ட மக்களின் மனநிலை விசித்திரமானது. அது 2009 மே 17க்கு பின்னர், சரத் பொன்சேகாவை முன்வைத்து பெரும்பான்மைத் தமிழ்க் கட்சிகள் செய்த அரசியலை ஆதரித்தமை தொடர்பானது.

தமிழ் மக்களின் அரசியல், குறிப்பாக வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் மீண்டும் மீண்டும் ஒரேயிடத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. காலத்துக்குக்கேற்ப வடிவங்களை மாற்றிக் கொண்டதேயன்றி இலக்குகளை அவ்வளவாக மாற்றிக்கொண்டதில்லை. இன்றைக்கும் தனி நாடு பற்றிய கனவுடன் இருப்பவர்கள் அதிகம். அவர்களின் பலருக்கு தனிநாடொன்று கிடைத்துவிட்டால் எப்படியிருக்குமென்ற அடிப்படை எண்ணமே இருப்பதில்லை. (என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது) யதார்த்த கள நிலைகளை புரிய மறுக்கிற அரசியலும் - போராட்டமும் கூட மக்களை இன்னுமின்றும் சங்கடங்களுக்குள்ளேயே தள்ளிவிடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். கடந்து வந்திருக்கிறோம்.

மறதி

மறதி மனிதனிடம் இருக்கின்ற அற்புதமான அதேவேளை அபத்தமான இயல்பு. அப்படியான மறதியை தமிழர்கள் அதிகமாக நம்புகிறார்கள். அப்படியான மறதியையும் ‘அந்த’ மறதிக்கு இராஜதந்திர அரசியல் அடையாளம் பூசியதையும் இன்றைக்கு அவர்கள் ஏதோவொரு சாதனை போல நம்புகிறார்கள். 2009இன் இறுதி மோதல்களுக்குப் பின்னராக காலம் தமிழ் மக்களுக்கு பலத்த காயங்களும் வலிகளும் நிரம்பியிருந்தது. தோற்கடிக்க மனநிலையிலிருந்து வெளிவருவது எப்படியென்று சிந்தித்துக் கொண்டிருந்த காலம். அப்போதுதான் ஜனாதிபதித் தேர்தல் என்கிற வடிவத்தில் அவர்களை போலியாகவேனும் ஆற்றுப்படுத்தக்கூடிய விடயமொன்று 2010ல் வந்தது.

அதுவும் இறுதி மோதல் காலங்களில் இராணுவத்தளபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புக்களின் கீழ் செயற்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளாராக அப்போதைய- தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து களமிறங்க தயாரானார்.

இறுதி மோதல்களின் வெற்றியும் - அது சிங்கள பெரும்பான்மை மக்களிடம் பெற்ற நினைத்துப்பார்க்க முடியாத அலையும் தான் ‘நிறைவேற்று அதிகாரக்கனவு’ என்கிற ஒன்றை சரத் பொன்சேகாவிடம் அதிகளவில் ஊட்டியது. அதுபோல அந்தக் கனவு தோற்றம் பெற்ற கணத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சியுள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரத்தை எதிர்காலத்தின் ஜனாதிபதி ‘நீங்கள் தான்’ என்று நம்பவைத்ததும் தான். அதுதான் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்தே களமிறங்க வைத்தது. இப்படியானதொரு நிலையில் வடக்கு - கிழக்கின் தமிழ் பெரும்பான்மை கட்சிகளும் அவர்களை வழிநடத்துபவர்களும் எடுத்த முடிவு சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தது. இதுவே நிகழ்த்தியும் காட்டப்பட்டது.

இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த சில நாட்களில் இலங்கை இராணுவ - ஊடக தளங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள். இலங்கையின் அரச ஊடகங்கள் உள்ளிட்ட பெரும்பான்மை ஊடகங்களில் ‘வெற்றியின் வீரர்கள்’ என்கிற துதிபாடுதல்களுடன் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அளவுக்கு இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தளபதிகளும் - மோதல்களை முன்னெடுத்த படையணிகளின் தளபதிகளும் போற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் அளவுக்கு அப்போதைய இராணுவத்தளபதி ஊடகங்களிடமும் - சிங்கள மக்களிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தர். இப்படியான போக்கை உணர்ந்த மஹிந்த அண்ட் கோ.

1. இராணுவத்தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தளபதிகளோ அவர்களுக்கு கீழான படையணிகளின் தளபதிகளோ பாதுகாப்பு செயலாளர்களின் அனுமதியின்றி ஊடகங்களுடன் பேச முடியாது என்கிற வரையறையை அரசாங்கம் கொண்டு வருகின்றது.

2. கட்டளையிடுவதன் அடிப்படையில் இராணுவத்தின் பலத்தை கையில் கொண்டிருந்த இராணுவத்தளபதிக்கு உடனடியாக பதவியுயர்வு வழங்கப்பட்டு கூட்டுப்படைகளின் தளபதி என்கிற கட்டளையிடும் அதிகாரங்கள் மிகவும் குறைந்த பதிவி வழங்கப்பட்டது. இதனை சரத் பொன்சேகா விரும்பியிருக்கவில்லை. ஆனாபோதிலும் வழங்கப்பட்டது.

3. இதற்குப் பின்னராக நாட்களில் ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு செயலாளருடனும் ஒத்தியங்க முடியாத நிலைக்கு சரத்பொன்சேகா வந்தார். அல்லது வர வைக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் அழைப்புக்களுக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சரத் பொன்சேகா தீர்மானித்தார். இது எல்லோருமே அறிந்தது. இந்த நிலையில் ஏன் தமிழ்க் கட்சிகள் அவரை ஆதரித்தன என்ற சந்தேகம் எனக்கு இன்றைக்கு வரைக்கும் தீர்ந்தபாடில்லை.

தமிழர்களை வெற்றிகொண்ட மனநிலையின் உச்சத்திலிருந்து கொண்டு சிங்கள மக்களிடம் அதிகாரத்தை கோரி நின்றவரை எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்கின்ற கட்சிகள் ஆதரித்தன…? ஏன் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்கள் என்பதற்கு மிகவும் பரிதாபமான காரணங்களே எஞ்சியிருக்கின்றன. அது  நிச்சயமாக இராஜதந்திர அரசியலுக்கும் - அதற்கும் சம்பந்ததேமயில்லாதது.

சரத் பொன்சேகாவை ஆதரித்த தமிழ்க்கட்சிகளில் அதிகமானவை இந்திய உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆலோசனையின் (கட்டளையின்) பேரியேலே ஆதரித்தன. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அடிப்படையில் ஆதரிப்பதாக காட்டிக்கொண்டன. அதை மக்களிடம் ‘பழிவாங்கும் அரசியல்’ என்ற தோரணையில் கொண்டு சேர்த்தன. அதிலும், சிலர் ‘தேர்தல்’ என்கிற கணக்கை வைத்து சரத் பொன்சேகாவை ஆதரித்த அரசியல் ஆட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் கூறினர்.

தேர்தல் கணக்கின் படி பார்த்தாலும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் என்கிற நிலைக்கு வந்த கணத்திலேயே சரத்பொன்சேகாவுக்கு சிங்கள மக்களிடம் இருந்த ஆதரவு குறிப்பிட்டளவில் குறைந்துவிட்டது. அதுவும், மஹிந்த அன்ட் கோவின் அதிகாரம், ஊடக பலம். ஒட்டுமொத்த வெற்றி மமதையின் முன்னால் சரத் பொன்சேகாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அடுத்து, தமிழ்க்கட்சிகள் அடையாளப்படுத்த முனைந்த ‘பேரினவாத அதிகாரத்தைப் பிரிப்பது’ என்கிற வடிவத்துக்குள் வருகிறது. எவ்வளவு அடித்துக்கொண்டாலும் இன - மத ரீதியிலான அரசியலையே இங்கு முன்னிலைப்படுத்துகிறார்கள். அதுதான் இங்கு வழக்கம். அப்படியிருக்கிற போது சரத்பொன்சேகாவை தமிழர்களின் பெரும்பான்மையினர் ஆதரிக்கும்(?) கட்சிகள் ஆதரிக்கும் போது எப்படி சிங்கள மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள்? இது எவ்வளவுக்கு சாத்தியம். மஹிந்தவின் வெற்றிவாய்ப்பை இது அதிகரிக்குமா இல்லையா?

சரத் பொன்சேகாவை தமிழ்க் கட்சிகள் ஆதரித்தாலும் - ஆதரிக்காவிட்டாலும் மஹிந்தவும் - சரத் பொன்சேகாவும் (சரத்துக்கு ஜனாதிபதி ஆசை வந்த நேரத்திலேயே) பிரிந்து விட்டார்கள். அவர்களின் பிரிவில் தமிழ்க் கட்சிகள் பெரிய தாக்கமொன்றையும் செலுத்தவில்லை. இதுதானே உண்மை.

பழிவாங்கும் அரசியல், பேரினவாத பிரிப்பு அடிப்படை என்கிற எல்லா வாதங்களும் சரத் பொன்சேகாவை தமிழ்க்கட்சிகள் ஆதரித்ததில் அடிபட்டுப் போகின்றன. அப்படி அடிபட்டுப்போகும் என்று உணர்ந்த பின்னும் அப்படியொரு அரசியல் முடிவை எடுத்து அதற்கு இராஜதந்திர அரசியல் அடையாளம் பூசி மக்களிடம் சேர்ப்பிக்க நினைத்தது எவ்வளவு போலியானது. எம்முடை குறுகிய கணநேர மன கொந்தளிப்புக்களை அடக்குவதற்கான அரசியலை முன்னெடுப்பதோ, அதற்காக வாதாடுவதோ என்றைக்கும் நல்லதல்ல. ஏனெனில். அவை எம்மை முற்றுமுழுதாக தோற்றுப்போனவர்களாகவே வைத்துக்கொண்டிருக்க உதவும்.

இறுதியாக அரசியல் கணக்கு வழக்கின் படி மாத்திரமே இங்கு அரசியல் செய்யப்படுவதுதான் இன்னுமின்னும் பிரச்சினை நீண்டுகொண்டிருப்பதற்கான காரணம். அந்தக் கணக்கு வழக்கைத் தாண்டி உண்மையான மனதுடன் மக்களை அணுகும் தலைவர்களும், அரசியலும் வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு இப்போது அவசியமானது. அப்போது பிரச்சினைகளின் அளவு மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். அதற்கு மக்களும் தயாராக வேண்டும்.

புதிய பாகம் : எமது அரசியல் : எமது உரிமை 06

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

முன்னைய பாகங்கள் :  எமது அரசியல் எமது உரிமை : 01 உரிமை : 02   உரிமை: 03  உரிமை: 04

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்