பதிவுகள்
Typography

கமராக்களுக்கு தன்னுள் எதை உள்வாங்கி காட்சிப்படுத்த வேண்டும். எதை விலக்க வேண்டும் என்கிற அறிவெல்லாம் கிடையாது. அது, கமராவை இயக்குபவனின் தேவை, மனநிலை, நோக்கம் உள்ளிட்ட

அடிப்படைக்காரணிகளால் தீர்மானிக்கப்படுவது. இது எல்லா வகை கமராக்களுக்கும் பொருந்தும்.

குறிப்பாக வீதிகளிலோ, பெரிய கடைகளிலோ, அலுவலகங்களிலோ பொருத்தப்பட்டிருக்கிற கமராக்களுக்கு ‘கண்காணிப்பு’ என்கிற தேவையை நிவர்த்தி செய்வதற்கு வேண்டிய காட்சிகளை பதிவு செய்யவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதாவது, அந்தக்கமராக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற அறிவுறுத்தல்கள் அங்கு நடக்கிற சம்பவங்களை மேலிருந்து கண்காணிப்பதற்கு தேவையான காட்சிகளை பதிவு செய்யவேண்டியது மட்டுமே. இவ்வாறான கமரா காட்சிகளினூடு மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துவிட முடியாது.

மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்கிற கமராவை, அந்த கமராவை இயக்குபவன் மக்களுக்குள்ளேயே கொண்டு செல்ல வேண்டும். அதுவும், சக மனிதனுக்கு சமாந்தரமான முறையில் பயணிக்கச் செய்ய வேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் தான் மக்களின் வாழ்க்கையை அல்லது சமூகமொன்று பெற்றுக்கொள்கிற (கொண்டிருக்கிற) அனுவத்தினை கமராக்களுக்குள்ளும் நேர்மையாக பதிய முடியும். அப்படியான பார்வையாளனே நேர்மையான படைப்பொன்றை தர முடியும்.

அது, சினிமாவாகவோ- எழுத்தாகவோ இருக்கலாம். ஆனால், மக்களுக்குள்ளேயே மக்களாக இருக்கின்ற பார்வையை மட்டும் மாற்றிக்கொள்ளவே கூடாது. ‘இல்லை, எனக்கு இதுதான் வேண்டும். இதைத்தான் காட்சிப்படுத்த வேண்டும். இந்த அரசியலைத்தான் பேச வேண்டும். அதற்கு தேவையானதை மட்டுமே என்னுடைய படைப்புக்களில் உள்வாங்குவேன்’ என்கிற போது படைப்பாளியின் (படைப்பொன்றின்) நேர்மைத்தன்மை முற்றுமுழுதாக அடிபட்டுப்போகும். கிட்டத்தட்ட முன்னேற்பாடுகளுடன் ஒரு சமூகத்தை தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ப காட்சிப்படுத்தியோ படைப்பாகவோ முன்னிறுத்திக்கொள்கிற குறிப்பிட்டளவான அயோக்கியமனநிலை. இது, என்றைக்கும் சரியானதாக இருக்காது.

ஒரு சமூகம் குறித்த தப்பான பார்வையை மட்டும் வழங்குவதற்கான தேவையை வேண்டுமானால் நிவர்த்திக்கலாம். படைப்பொன்றை தன்னுடைய அரசியல் பார்வை- கருத்தியலின் வழி படைக்கிற உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அந்த அரசியலும்- கருத்தியலும் என்னை(எம்மை) முன்வைத்ததாக இருக்கிற போது எதிர்வினையாற்றுகிற உரிமையும் அதிகமாக இருக்கிறது.

அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’

இலங்கையின் தமிழ்த்திரைப்படத்துறை மிகவும் நலிந்தது. அதுவும், 1970களில் அவை முன்னோக்கி செல்ல குறிப்பிட்டளவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும், 1980களுக்கு பின்னராக இலங்கை இனமுறுகல்கள் அதனை ஒட்டுமொத்தமாக வழிந்து துடைத்து எறிந்தது. அதற்குப் பின்னராக இலங்கையின் தமிழ்திரைப்படங்கள்   - அதன் சார்ப்பு தொழில் என்பது எப்போதாவது சிலரால் தங்களது விருப்பங்களுக்கு அமைய நிகழ்த்திக்காட்டப்பட்ட வித்தைகள் மாத்திரமே. அவை, வித்தைகள் என்கிற அளவிலேயே இருந்தன. பெரிய படைப்பென்ற அடையாளத்தையோ வெற்றியையோ கொடுக்கவில்லை. ஆனால், போர் மேகங்கள் இலங்கையை சூழ்ந்து கொண்டிருந்த காலத்திலும் கூட தென்னிந்திய தமிழ் படங்கள் சில இலங்கையில் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பாடல் காட்சிகள்.

2006ல், ‘மண்’ என்கிற பெயரில் இலங்கை தமிழ் திரைப்படமொன்று வெளியானது. அதன் சுவடே இப்போது இல்லை. அப்படியொரு படம் வந்தது எத்தனை பேருக்கு தெரியுமோ, இல்லையோ? அதையும் குறை சொல்லிவிட முடியாது. அதிநவீன தொழிநுட்பங்களுடன் பெரும் முதலீடுகளை செய்து தயாரிக்கப்படுகின்ற இந்திய படங்களுக்கு முன்னால் இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற படங்களால் நிற்க முடிவதில்லை. மக்களும் இந்திய படங்களுடன் அவற்றை ஒப்பிடுவதை தவிர்ப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் திரைப்படத்துறை மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஆனால், தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தால் குறிப்பிட்டளவு வெற்றி காணலாம்.

இப்போது அசோக ஹந்தகமவின் ‘இனி அவனு’க்குள் நேரடியாக செல்லலாம். இலங்கையின் முக்கியமான இயக்குனர் அசோக ஹந்தகம. அதுவும், வெளிநாட்டு சினிமா - கருத்தியல் தளத்தில் குறிப்பிட்டளவு தாக்கம் செலுத்துபவர். அப்படிப்பட்ட ஒருவர் தமிழர்களை முன்னிறுத்திய படமொன்றை தமிழ் நடிகர்களை வைத்து தமிழிலேயே முற்றுமுழுதாக எடுக்கிறார் என்கிற அறிவித்தல் வரும் போதே கவனிப்பை பெறத்தொடங்கிவிட்டது. அதுவும், வடக்கு பகுதிகளிலேயே 90 வீதத்துக்கும் அதிகமான காட்சிகளை படமாக்கிய செய்தியும் முக்கியமானதாக உணரப்பட்டது. அந்தப்படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவர் என்னுடைய நண்பர். அவரிடம் அந்தப் படம் குறித்து அடிக்கடி பேசிக்கொள்ள முடிந்தது. அதுவும், ஹந்தகமவின் படங்களில் காட்சிகளுக்குள் இருக்கிற அழகியல் மிகவும் லாவகமானது. மெதுவான காட்சி நகர்வுகளினூடே, வேகமான உணர்வுகளை மனநிலை மாற்றங்களை பார்வையாளர்களுக்குள் விதைக்கக்கூடியவர். அப்படிப்பட்ட படைப்பாளியொருவரின் தமிழ் படைப்பு என்பது கருத்தியல் ரீதியில் தாக்கம் செலுத்தக்கூடியது. அப்படியான சந்தர்ப்பத்தில் அந்தப்படத்தை எதிர்பார்ப்பது இயல்பானது.

2009 மே இறுதி மோதல்களுக்குப் பின்னர் இலங்கை அரச புனர்வாழ்வு முகாமொன்றில் புனர்வாழ்வு(?) பெற்று பேரூந்தில் வீடுதிரும்பும் முன்னாள் போராளியினூடு படம் ஆரம்பிக்கிறது. முன்னாள் போராளியினூடு தமிழ் சமூகத்தை படம் பிடிக்கிறார் ஹந்தகம. அவன் எதிர்நோக்கும் புதிய வாழ்க்கைக்கான சிக்கல்கள், வாழ்வாதரத்துக்கான அலைச்சல், சமூகமொன்று முன்னாள் போராளியை பார்க்கும் பார்வை என்று படத்தை அடிப்படையில் கட்டமைப்பதற்கான எல்லாவற்றையும் தன்னுடைய தேவைக்கு ஏற்றமாதிரி செய்கிறார் இயக்குனர். அதுவும், அவர் படத்தினூடு முன்னிறுத்தப்போகிற அரசியலையும் - கருத்தியலையும் மிகவும் திட்டமிட்டு உருவாக்குகிறார். அல்லது, தன்னுடைய நேர்மைத்தன்மையின் மீது கேள்விகள் முன்வைக்கப்படக்கூடாது என்கிற விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனாலும், அது அடிபட்டுப்போகிறது.

படத்தின் கதை என்ன? என்று தொடங்கி இணையத்தில் எழுதப்படும் விமர்சனங்கள் போல படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சொற்களினால் கதையை என்னால் நிரம்ப முடியாது. அது, இங்கு அவ்வளவுக்கு அவசியமும் இல்லை. எனக்குத் தெரிந்து இலங்கையின் திரைப்படைப்பொன்று நாடு முழுவதிலும் திரையிடப்பட்டிருக்கிற அண்மைக்கால சந்தர்ப்பம்   "இனி அவன்"  மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

மோதல்களுக்கு பின் தமிழர்கள்!

‘இனி அவன்’ போதிக்கின்ற அரசியல் வீரியமானது. அதேவேளை பாரதூரமானது. இறுதி மோதல்களுக்குப் பின்னராக தமிழ் மக்களின் வாழ்க்கை என்பது ஒட்டுமொத்தமாக தமிழர்களினாலேயே தீர்மானிக்கப்பட்டது அல்ல. ஆனால், அசோக ஹந்தகம வடிவமைக்கிற அரசியல் அல்லது உலக திரைப்பட விழாக்களில் போதிக்கின்ற கருத்தியல் ‘தமிழர்களின் இன்றைய நிலைக்கு தமிழர்களே காரணமென்கிற’ நுட்பமான பிரச்சார படைப்பியல்.

என்றைக்குமே தமிழர்களின் வாழ்வோ - அரசியலோ முற்றுமுழுதாக தமிழர்களால் தீர்மானிக்கப்பட்டது அல்ல. அதற்குப் பின்னால், இலங்கை பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் பிரதிநிதிகள் போல காட்டிக்கொள்கிற இலங்கை அரசு என்கிற பாரிய இயந்திரம் உண்டு. அதுபோக, பிராந்திய அரசியலை செய்கிற இந்தியா - சீனா என்கிற ஆசியாவின் வல்லரசுக்கான சாத்தான்களும் - உலக சாத்தான் அமெரிக்காவும் உண்டு. அப்படியிருக்கிற நிலையில் முக்கியமாக தாக்கம் செலுத்துகிற இலங்கை அரசு இயந்திரத்தையும் - வல்லரசு சாத்தான்களையும் தன்னுடைய வசதிக்கேற்ப இலகுவாக மறந்துவிட்டு தமிழர்களின் நிலைக்கு தமிழர்களே காரணம் என்று போதிக்க முயல்கிற அரசியல் மோசமானது. அதுவும், தன்னை நேர்மையான படைப்பாளியாக கட்டமைத்து வைத்துக் கொண்டிருக்கிறவருக்கு நல்லதல்ல.

இலங்கையின் அரசியல் - இன முறுகல்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து மீண்டும் மீண்டும் பேசப்பட்டுவிட்ட விடயமொன்றை வெற்றி கொள்ளப்பட்ட மோதல் மனநிலையிலிருந்து (அதை காட்டிக்கொள்ளாமல்) அணுகுவது எப்படி நேர்மையான படைப்பாக இருக்க முடியும். அதுவும், ‘பிழைத்தாலுக்காக எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போவார்கள்’ என்கிற கருத்து எப்படிப்பட்டது? அதுபோக, ஆட்டு மந்தைக் கூட்டங்கள் போல கட்டளைக்கு அடி பணிபவர்கள் - கேள்விகளை என்றைக்கும் முன்வைக்காதவர்கள் என்கிற தோற்றப்பாட்டை விதைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதற்காக மட்டும் போராட்டமொன்று கொண்டிருந்த தேவைகள் - அடிப்படைக்காரணிகள் இல்லாமல் போய்விடுமா? வெற்றி மட்டுமே போராட்டங்களின் நீதியைப் போதிப்பதாக அமையுமா? தமிழர்களின் வாழ்க்கையை அவர்களுக்குள்ளேயே இருந்துகொண்டு பதிகிறேன் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு கேள்விகளையும் இலகுவாக மறப்பது எப்படி நியாயமாகும்.

இவ்வளவையும் - இதற்கு மேலும் ‘இனி அவனுக்குள்’ ஹந்தகம செய்திருக்கிறார். அதுவும், கடைசி காட்சி பாவப்பட்டுப்போயிருக்கிறவர்களுக்கு வலிய வந்து சிங்களத்தில் ‘உதவி வேணுமா’ என்று கேட்கிற பாத்திரம் போதிக்கிற அரசியல் எவ்வளவு போலியானது...? அந்தப்பாத்திரத்தினூடு ‘இலங்கை அரசு இயந்திரம்’ எவ்வளவு உன்னத(?) நிலையில் இருக்கிறது. அது தமிழர்களில் எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை கற்பிக்க ஹந்தகம முயலவில்லையா..? தமிழர்கள் அழிந்து போனதற்கும் - அடிபட்டுக்கொண்டதற்கும் அவர்களே - ‘அவர்கள் மட்டுமே’ காரணமென்கிற அப்பட்டமான கருத்தியலை படம் நெடுகிலும் சொல்லிவிட்டு அல்லது அதற்கு தேவையானதை மட்டுமே படங்களுக்குள் காட்சிப்படுத்தி விட்டு நேர்மையான படைப்பொன்றை வழங்கிய திருப்தியை எப்படி அவரால் கொள்ள முடிகிறது.

இது நேர்மையான படைப்பாளியின் சிறந்த குணவியல்பு அல்லவே. மேம்போக்காக அணுகுபவர்களினால் வேண்டுமானால் ‘இனி அவன்’ போதிக்கின்ற அரசியலை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், அப்படி புரிந்து கொள்ள மறுக்கிற மனநிலையும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதே.

உலக திரைப்பட விழாக்கள்!

வர்த்தக நோக்கங்களுக்காக எடுக்கப்படுகின்ற மசாலா படங்கள் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக செலுத்தும் தாக்கத்தை விட உலக திரைப்பட விழாக்களை நோக்கி எடுக்கப்படுகின்ற படங்கள் செலுத்தும் தாக்கம் அதிகமானது. ஏனெனில், வர்த்தக மசாலா படங்களை எதிர்பார்த்து வருகின்ற ரசிகர்கள் அவற்றை காலத்துக்கும் மனதோடு கொண்டு செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் அவற்றை பொழுதுபோக்கு என்கிற அடிப்படையிலேயே வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உலக திரைப்பட விழாக்களை நோக்கி எடுக்கப்படுகின்ற படங்கள் ‘பிராந்திய அரசியல், நாடுகளின் கலாசாரம் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்கிறவர்கள், இராஜதந்திரிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள், மாற்றுகருத்தியலாளர்கள், உலகின் போக்கு குறித்து அறிந்து கொள்ள ஆர்வப்படுகின்ற மாணவர்கள் உள்ளிட்ட சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களை’ இலக்கு வைப்பவை. அப்படியான படங்கள் ஒரு சமூகம் குறித்த பார்வையை அப்பட்டமாக மாற்றியமைக்கக் கூடியன. அதுவும், சம்பந்தப்பட்ட சமூகத்துக்குள்ளேயே இருந்து பேசப்பட்டிருக்கின்றது என்ற அடையாளம் இன்னுமின்னும் தாக்கம் செலுத்தக் கூடியது. அப்படி தாக்கம் செலுத்தக் கூடிய படமே ‘இனி அவன்’.

உண்மையிலேயே இனிஅவனை ஹந்தகம சராசரி சினிமா ரசிகர்களை நோக்கி எடுக்கவில்லை. அது, உலக திரைப்பட விழாக்களை இலக்காக்கி எடுக்கப்பட்டிருக்கிறது. பிரான்ஷின் கேன்ஸ் திரைப்பட விழா, ரொண்டோ திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய உலக திரைப்பட விழாக்களிலும் - கலாசார நிகழ்வுகளிலும் சில மாதங்களுக்கு முன்னரே திரையிடப்பட்டு விட்டது. இப்போதுதான் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. விருதுகளை நோக்கி படங்களை எடுப்பதோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோ அவரவர் விரும்பம். ஆனால், ஒரு சமூகமொன்று குறித்து ஒட்டுமொத்தமாக தான் ‘வரையறுத்து’ வைத்திருக்கின்ற கருத்தை முன்வைப்பது சரியாக அமையாது.

எப்போதுமே இலங்கை தமிழர்கள் சார் ஊடகங்கள் குறிப்பாக புலம்பெயர் ஊடகங்கள் புலிகளை, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய விடயங்களையே மக்களை நோக்கி கொண்டு சேர்க்கின்றன. அவை, சர்வதேச ரீதியில் - உலக மக்களிடம் தாக்கம் செலுத்தக்கூடிய வகையில் செயற்படுவது கிடையாது. அல்லது, இலங்கை தமிழர்கள் குறித்து முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்தியலை தக்க ஆதாரங்களுடன் - முறையாக எதிர்ப்பதில்லை. தொடர்ச்சியாக எதிர்வினையாற்றுவதில்லை. அதிகம் உணர்ச்சிகளை முன்வைத்து வார்த்தைகளினூடு தமக்குள் ஏதாவது பேசிக்கொள்வதோடு சரி.

‘இனி அவன்’ சர்வதேச ரீதியில் செலுத்திய தாக்கம் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது. அதுவும், தமிழர்கள் குறித்த ஒரு பக்க பார்வையோடு, இலங்கை அரசுக்கு இருக்கின்ற பொறுப்பு கூறவேண்டிய கடமையை மறந்துவிட்ட அரசியலை பேசியிருக்கிறது. இவ்வாறான படைப்புக்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறது தமிழர்களின் சார்ப்பு ஊடகங்கள் அல்லது தமிழின் படைப்பாளர்கள் சமூகம்? எங்களுடைய அரசியலை மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கின்ற அசண்டைத்தனமென்பது கூட மிகப்பெரிய அயோக்கியத்தனமே. அதை மக்களும், மக்களை பிரதிபலிக்கிற படைப்பாளர்களும்- ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், எம்முடைய உரிமைகளை நாமே போராடி பெற வேண்டியிருக்கிறது. அதுதானே சரியானதாகவும் இருக்க முடியும்.

புதிய பாகம் : எமது அரசியல்: எமது உரிமை 07

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

முன்னைய பாகங்கள் :  எமது அரசியல் எமது உரிமை : 01 உரிமை : 02   உரிமை: 03  உரிமை: 04  உரிமை: 05

BLOG COMMENTS POWERED BY DISQUS