பதிவுகள்

மீண்டும் மிகமோசமான விளைவுகளை தோற்றுவிக்கக்கூடிய நிகழ்வுகளுடன் ஆண்டொன்று நிறைவுக்கு வருகிறது. 'பயங்கரவாதத்தின் மீள் தோற்றுகைக்கான' சாத்தியங்கள் என்கிற பெயரில் கைதுகளும்- விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்ற காலமிது.

அதுவும், வடக்கின் முக்கிய பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பின் உச்சத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அரச நிர்வாகம் என்பது மாவட்ட செயலாளர்களை தாண்டி பாதுகாப்பு தரப்பினரால் அதிக அதிகாரத்துடன் கையாளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி கண்டிப்பான உத்தரவுகளை வழங்கும் அதிகாரத்தை இராணுவத்தரப்பு கொண்டிருக்கின்றது. சட்டமும்- ஒழுங்கும் ஒழுங்கற்று கலைந்து கிடக்கின்றன. நீதித்துறைக்கும்- சட்டவாக்கதுறைக்குமிடையிலான போர்க்காட்சிகள் கொழும்பில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதை நிர்வாகத்துறை ஒருபக்கம் சார்ந்து நின்று அவதானித்துக் கொண்டிருக்கிற நாட்கள் இவை. இந்த கட்டுரைப்பகுதியை கொஞ்சம் விரிவாக அணுகுவதற்காக செப்டம்பர் 11, 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்கள் பற்றி பார்க்க வேண்டியிருக்கிறது. அது, அரசுகளின் மக்கள் மீதான அணுகுமுறை- கைதுகளின் வடிவங்கள் பற்றி கொஞ்சம் விளங்கிக்கொள்ள உதவலாம்.

9/11க்கு பின்னரான கடத்தல்கள்


அமெரிக்காவின் (நியூயோர்க் நகரத்தின்) மீதான பயங்கரவாத தாக்குதலாக கொள்ளப்படுகின்ற செப்டம்பர் 11, 2001 இரட்டைகோபுரங்கள் (வர்த்தக தொடர்மாடி தொகுதி) மீது இரு விமானங்கள் மோதி ஆயிரக்கணத்தில் உயிரிழப்புக்கள் நிகழ்ந்தப்பட்டன. அத்துடன் உலகின் அரசியல்- யுத்த முன்னெடுப்புக்களுக்கு புதிய வடிவம் புகுத்தப்பட்டது. அதுவும், ஒரு மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள் உலகம் பூராவும் தீவிரவாதிகளாக அணுகப்பட்டனர். அதன் நீட்சி பெரும்பான்மையான நாடுகளுக்கு ஊடுகடத்தப்பட்டது. உலகிலுள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அணுகும் மனநிலையை தன்னுடைய பிரசார- அரசியல் உத்தியால் அமெரிக்கா நிகழ்த்திக்காட்டியது. சக மனிதனை மனிதனாக அணுக முடியாமல் தாடியும்- குல்லாவும்- அவனுடைய பெயரும் ஒரு மனிதனை பயங்கரவாதி- தீவிரவாதி என்று அணுகப்போதுமானது என்று அமெரிக்க போலியாக நிறுவிக்காட்டியது. இன்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல அவற்றின் கைகளுக்குள் சென்று விட்ட தெற்காசிய நாடுகளிலும் கூட முஸ்லிம்கள் என்றால் மற்ற சமூகத்தினரால் ஒரு அச்சப்பார்வையுடன் அணுகப்படுகின்ற சூழலே அதிகரித்து காணப்படுகின்றது. (இலங்கையின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும்- அந்த மார்க்கத்துக்கு எதிராகவும் அவ்வப்போது ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகளும்- விநியோகிக்கப்படுகின்ற துண்டுப்பிரசுரங்களும் கூட அந்த மனநிலையின் ஒருவடிவமே.)

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவில் குடியேற்றவாசிகள் மீது அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. குறிப்பாக ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமானவர்கள் காணாமல்போயினர். அல்லது கடத்தப்பட்டனர். காணாமல்போகச்செய்யப்படுதலும்- கடத்தலும் ஆட்சியாளர்களாலும் அவற்றின் பாதுகாப்பு தரப்பினராலும் இரகசிய விசாரணைகள் என்கிற பெயரிலும் உலகம் பூராவும் நிகழ்த்தப்படுவன. அப்படித்தான் அமெரிக்காவும் அதிகப்பிரசங்கித்தனத்துடன் கடத்தல்களையும்- காணாமல்போகச்செய்யப்படுதல்களையும் செய்தது. அப்படி கடத்தப்பட்டவர்களில் பலரின் நிலை என்னவென்று இன்று வரை தெரியாது. ஆனாலும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இறுதிக்காலத்தில் கடத்தல்கள் குறித்து ஓரளவுக்கு தகவல்கள் வெளிவந்தன. அப்படியான தகவல்களினால் கடத்தப்பட்ட சிலர் பயங்கர சித்திரவதைகள்- விசாரணைகளுக்குப் பின்னர் எந்தவித குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாமல் வெளியில் வந்தனர். ஆனாலும், குவண்டமானாவிலும் அமெரிக்காவின் இருள் சூழ்ந்த விசாரணைக் கூடங்களிலும் இன்றும் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்டவர்கள் அதிகமாக விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீவிரவாத தொடர்பு என்ற எழுந்தமானமான குற்றச்சாட்டுக்களுடன். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை இவர்கள் இறுதிவரை அவ்வளவாக சமர்ப்பிப்பதேயில்லை. சரி, இனி அவரிடம் ஒன்றுமேயில்லை என்கிற கணத்தில் அவரின் அதிஸ்டம் இருந்தால் அவர் நடைப்பிணமான வெளியில் தள்ளப்படுவார். அதுவரை அவரின் நிலை என்னவென்று யாருக்குமே தெரியாது. (குறித்த விடயத்தை 2009களில் வெளிவந்த கபீர்கானின் 'நியூயோர்க்' ஹிந்தி திரைப்படம் ஓரளவுக்கு சொல்லியிருக்கும். அதன் அரசியல் சார்பு என்பது அமெரிக்காவின் பக்கமிருந்து பேசப்பட்டாலும் ஓரளவுக்கு அமெரிக்க விசாரணைகள்- முஸ்லிம்கள் குறித்த மனநிலையை அது பிரதிபலித்தது)

மார்டீன் லூதர் கிங் ஜூனியர்

மனித உரிமைகளுக்காக போராடுகிறவர்கள் மீது எல்லா அரசுகளும் ஒரே மாதிரியான அணுகுமுறையையே கைக்கொள்கின்றன. அதாவது, 'அரசுக்கு எதிரானவர்கள் இவர்கள்' என்கிற அணுகுமுறை. சிலவேளை அது, இப்படியும் இருக்கிறது, 'சிறுபான்மையினருக்கு ஆதாரவாக பேசுகிறார்கள் என்ற தொனியில் தேசத்துரோகம் செய்கிறார்கள். நாட்டை காட்டிக்கொடுக்கிறார்கள்' என்று. இப்படியான அணுகுமுறையே உலகம் பூராகவும் மனித உரிமையை (உண்மையாக- நேர்மையாக) பேசுகிறவர்கள் எதிர்கொள்வது.

அப்படியானதொரு நிலையை அமெரிக்காவின் மனித உரிமை செயற்பாட்டாளரும்- ஆய்வாளருமான மார்டீன் லூதர் கிங் ஜூனியர் உள்ளிட்டவர்களும் எதிர்கொண்டனர். அதுவும், செப்டம்பர் 11 சம்பவங்களுக்கு பின்னர் அதிகரித்த முறையற்ற கைதுகள்- கடத்தல்களுக்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களை தொடர்ந்து. அமெரிக்க அரசும்- அதன் அப்போதைய ஜனாதிபதி புஷ்சும், அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர்களை நோக்கி தேசத்துரோகிகள் என்ற தொனியில் பேசினர். அது இப்படியிருந்தது, "ஒன்றில் எங்கள் பக்கம் இருங்கள். அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) பக்கம் இருங்கள்" என்ற ரீதியில்.

மக்களை சிந்திக்க தூண்டுவதை எந்த அரசும்- ஆட்சியாளர்களும் விரும்புவதில்லை. இதை, செப்டம்பர் 11 என்ற தாக்குதல்களை முன்வைத்து உணர்ச்சிகளைத் தூண்டி உலக வல்லாதிக்கத்தை நிறுவுவதற்காக அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது. அதை, அமெரிக்கா ஓரளவுக்கு வெற்றிகரமாக செய்தும் காட்டியது. மக்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்திருக்கிற போது அமெரிக்கா ஈராக்- ஆப்கானிஸ்தான் என்று நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. பல நாடுகளை கூறுபோடுவதற்கான முயற்சிகளையும் செய்துவிட்டிருந்தது. அதற்குப் பின்னர் விளித்த அமெரிக்க மக்கள் தம்முடைய படைகளை மீளபெற கோரியது மாத்திரமே நிகழ்ந்தது. அது, ஓபாமாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் சின்னதாக நடந்தது. மற்றப்படி அமெரிக்காவை இயக்கும் கொள்கை- கோட்பாடுகளில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. முஸ்லிம் அடையாளத்தில் யார் அமெரிக்காவுக்குள் போனாலும் அருவருப்புடன் அணுகப்பட்டார்கள். அது இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமாக இருந்தால் என்ன, இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கானாக இருந்தால் என்ன? முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள்- தீவிரவாதிகள் என்ற எண்ணத்தில் அமெரிக்கா மாற்றத்தை கொண்டுவரவில்லை. (உலகம் பூராவும் கைதுகளும் கடத்தல்களும் எப்படி அதிகம் நிகழ்த்தப்படுகின்றன என்ற தோற்றப்பாடு இப்போது உங்களுக்கு ஓரளவுக்கு கிடைத்திருக்கலாம்)

இப்போது இலங்கை


இலங்கையில் தமிழர்கள் என்றால் புலிகள் என்கிற அணுகுமுறை இன்னும் தொடர்கிறது. அதில் மாற்றமேற்பட்டிருந்தால் குறிப்பிட்டளவு முன்னேற்றம் எல்லா பக்கங்களிலிருந்தும் ஏற்பட்டிருக்கும். அது, அரசியல் இணக்கப்பாடு என்கிற ரீதியிலும் நிகழ்ந்திருக்கும். புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வெற்றிவிழாக்களை வருடந்தோறும் கொண்டாடினாலும் இலங்கை அரசு தமிழர்களை இன்னும் புலிகளாக அணுகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. அதுதான் இன்னுமின்னும் பிரச்சினைகளை தொடரச் செய்கின்றன. இனநல்லிணக்கம் போதிக்கின்ற அரசியலை இங்கு யாருமே செய்வதில்லை. வாய்ப்பேச்சுக்களுடன் அதை முடித்துக் கொள்கின்றனர். அப்படியானதொரு சூழ்நிலையினாலேயே மீண்டும் அச்சமூட்டல்களும்- பதற்றநிலையும் தோற்றுவிக்கப்பட்டு கைதுகளும்- விசாரணைகளும் தொடர்கின்றன. மாவீரர் தினத்தை கொண்டாடினார்கள்- பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்கிற வகையில் கைது செய்யப்பட்டிருந்த மாணவர்களிடம் பிரபாகரனின் படம் இருந்தது என்ற கூற்றுக்குப்பின்னால் இருப்பது எவ்வாறான மனநிலை? அந்த கூற்றை மாணவர்கள் மறுக்கின்றனர். புலிகளின் மீள் உருவாக்கம் என்பது பிரபாகரனின் படத்தை வைத்திருப்பதுடன் ஆரம்பிக்கும் என்று முன்னிறுத்த முயல்வது எப்படியான அரசியல்?

அமெரிக்கா எப்படி முஸ்லிம்கள் மீதான மனநிலையை மாற்றிக்கொள்ளவில்லையோ- அதுபோலத்தான் இலங்கை அரசும் தமிழர்கள் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்படியான சந்தர்ப்பமொன்றில் 'ஒரே நாடு ஒரே மக்கள்' என்கிற வாய்ஜாலங்களை யாருமே மனப்பூர்வமாக உணர மாட்டார்கள். அதற்கான மனநிலையை முதலில் அரசும்- ஆட்சியாளர்களும் முன்னெடுக்க வேண்டும். அதனை பின்தொடர்ந்து வருவதற்கு மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதைவிடுத்து சிறுபான்மை மக்களை நோக்கி 'இறுதிவரை நீங்கள் சிறுபான்மையினர்' என்கிற தோற்றப்பாட்டை மீண்டும் மீண்டும் தூண்டிக்கொண்டு 'இனநல்லிணக்கத்தையோ- - ஒருங்கிணைவையோ' கோருவது அவ்வளவு சரியாக இருக்காது. புதிய நம்பிக்கைகளுடன் ஆரம்பித்த 2012 பதற்றமான மனநிலையை வடக்கு- கிழக்கில் குறிப்பாக சிறுபான்மையினர் மீது பிரயோகித்துவிட்டு விடைபெறுகிறது. இது என்றைக்கும் நல்லதல்ல. அதுவும், மாணவர்களை நோக்கிய அழுத்தங்கள் என்றைக்குமே நன்மை விளைவிக்காது. திறந்த மனதுடன் அணுகும் ஆட்சியாளர்களே இலங்கையின் இன நல்லிணக்கத்தை தோற்றுவிப்பார்கள். அதைவிடுத்து குழாயடிச் சண்டைகளைப் பெருப்பித்து தெருச்சண்டைகளாக மாற்றுபவர்கள் என்றைக்குமே அமைதியையும்- சமாதானத்தையும் தோற்றுவிக்கமாட்டார்கள். புரிந்து கொள்கிற அரசியலே இப்போது அவசியமானது. பிறக்கும் 2013வது புதிய நம்பிக்கைகளையும்- மனங்களில் சமாதானத்தையும் எல்லோருக்கும் விதைக்கட்டும். புதுவருட வாழ்த்துக்கள்!!

புதிய தொடர் : எமது அரசியல் : எமது உரிமை 08

நன்றி: கட்டுரையாளர் - புருஜோத்தமன் தங்கமயில்

தினக்குரல்

முன்னைய பாகங்கள் :  எமது அரசியல் எமது உரிமை : 01 உரிமை : 02   உரிமை: 03  உரிமை: 04 உரிமை: 05, உரிமை 06

 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.