பதிவுகள்

 

இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் 115 பேர் இணைத்துக் கொள்ளபட்டது பற்றி ஆழமாய் ஊடுருவிய பார்வையில் இனியொரு இணைய இதழிலில் வெளியான இக் கட்டுரையினை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவிடுகிறோம்.

 காணாத தேசத்திற்கு இல்லாத வழி!

வன்னிப்பகுதியிலிருந்து 109 பெண்கள் இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி பற்றி சிதறுசமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை ஊடகங்களில் இச்செய்தியை விமர்சிக்க முடியாத சூழலில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் புலம்பெயர் ஊடகங்களில் நடைபெறுவது ஒருவகையில் ஆரோக்கியமானதே.

தெற்காசிய நாடுகளையொத்த நிலையில் இலங்கையிலும் தந்தைவழிப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூக அமைப்பே காணப்படுவதாக நாம் இன்றும் கொள்ளவேண்டும். இச்சமூக அமைப்பில் பெண்கள் பத்னிகளாக, வீராங்கனைகளாக இன்னபிற புனைவுகளைக்குட்பட்டவர்களாகவோ அல்லது பரத்தையாகவோ, விபச்சாரிகள் போன்ற புனைவுகளுக்குட்பட்டவர்களாகவோ இருக்க வேண்டும் எனும் துருவநிலை நிலைப்பாடுகள் தவிர இடைநிலை நிலைப்பாடுகள் எதுவுமே இல்லையா என்ற கேள்வி எப்போதும் எழுந்த வண்ணமே இருக்கின்றது. இது தொடர்பாக எழுத முற்படுவது கூட பேசுபொருளை விடுத்து தனிநபர் தாக்குதலாக உருவெடுக்கலாம் என்ற பேராபாயம் இருப்பதை உணர்ந்தும் கூட மேற்குறிப்பிட்ட செய்தி தொடர்பான விவாதங்கள் ஏற்படுத்திய நமைச்சல் காரணமாக இக்குறிப்பை எழுத முனைகிறேன்.

தமிழ்மக்கள் படுமோசமாக வஞ்சிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முற்றாக முடிந்துவிட்டன. வறுமை, நம்பிக்கையீனம், வஞ்சிக்கப்பட்டமையால் ஏற்பட்ட ஏமாற்றம், வேலையில்லாத்திண்டாட்டம், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசு காட்டும் அசட்டையான போக்கு, வளங்களுக்கான பற்றாக்குறை, சிறுகுழந்தைகளையும் வயதான பெற்றோர்களையும் கொண்ட மிகக் குறைந்த நாளாந்த ஊதியத்தில் சீவனத்தை நடத்தும் குடும்பங்களின் அதிகரிப்பு எனப் பல விடயங்களை நாம் பட்டியல் இடலாம். இவைகள் எல்லாம் போருக்குப்பின்னான சமூகங்களில் காணப்படும் அறிகுறிகள் என நாம் எடுத்துக் கொண்டாலும் இவற்றிலிருந்து இந்த சமூகம் விடுபடுவதற்கு உரிய செயல்திட்டங்களை அமுல் நடத்துவது தொடர்பாக ‘பயங்கரவாதத்தில்’ இருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்த இலங்கை அரசு கையாளும் நடவடிக்கைகள் காணாத தேசத்திற்கு இல்லாத வழியைக் காட்டுவது போல அமைந்துள்ளன.

2009 இல் நடந்து முடிந்த யுத்தம் ஒன்றும் தற்செயலான இராணுநடவடிக்கையல்ல என்பதும் பல ஆண்டுகளாக பல வல்லரசுகளுடன் கூட்டான ஆலோசனை மற்றும் செயற்பாடுகளுடனேயே நடத்தப்பட்டதும் என்பதும் எமக்குத் தெரியும். இந்தப் போராட்டத்தை முடக்க பயன்படுத்திய வளங்கள் மற்றும் சக்தியின் ஒரு சிறிதளவைப் பயன்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வளப்படுத்தவும் முன்னேற்றவும் முடியும் என்பதும் இலங்கை அரசிற்கு நன்கு தெரியும் இருந்தபோதிலும் இவற்றில் கவனத்தைச் செலுத்தாது சர்வதேச அரங்கில் இனங்களுக்கிடையே சமஉரிமை பேணப்படுகிறது எனக்காட்டுவதற்காக பல நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுகிறது என்பதும் எமக்குத் தெட்டத்தெளிவாக தெரியும். இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இலங்கை இராணுவத்தில் தமிழ் பெண்கள் சேர்க்கப்பட்டதை நாம் பார்க்கலாம்.

இலங்கை இராணுவம் முப்படைகளைக் கொண்டதாக அமைந்துள்ளதுடன் இலங்கை சுதந்திரம் அடைந்த போது பாதுகாப்புபடைகளில் 70 வீதமானவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் எனவும் தற்போது 2 வீதமான சிறுபான்மையினத்தவர் இருப்பதாக கூறப்படுகிறது(விக்கிப்பீடியா).இலங்கையில் பத்து பயிற்சி முகாம்களின் கீழ் 24 படையணித்துறைகளின் கீழ் இராணுவத்தினர் பயிற்றுவிக்கப்படுகின்றனர், இவற்றில் சிறிலங்கன் ஆமி மெடிக்கல் கோர்ப்ஸ் (எஸ் எல் ஏஎம்சி) மற்றும் சிறிலங்கன் ஆமி வுமன்ஸ் கோர்பஸ்(எஸ் எல் ஏ டபிள்யூசி) என்ற படைப்பிரிவும் அடங்கும். எஸ் எல் ஏ டபிள்யூசி 1979 இல் அமைக்கப்பட்டதாகவும் இப்படையணியில் இணைந்து கொள்வதற்கு 18 வயதைப் பூர்த்தி செய்தவராகவும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடைந்தவராக இருக்கவேண்டும். முதல்கட்ட பயிற்சி 16 வாரங்களைக் கொண்டது எனவும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் ஆண் மற்றும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி வழங்கப்படும் எனவும் ஆனால் ஆயுத மற்றும் போர்முனைப் பயிற்சி பெண்களுக்கு வழங்கப்படமாட்டது, பெண் சிப்பாய்கள் nursing, communication , clerical work இல் ஈடுபடுத்தப்படுவார்கள் என (இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

World Development Indicators data base இன் விபரங்களின் படி இராணுவரீதியான வளர்ச்சி கண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ரூவண்டா, புரின்டிக்கு அடுத்த இலங்கை இருக்கிறது அதாவது 132 நாடுகளைக் கொண்ட பட்டியலில் மூன்றாவது இடத்தை வெற்றிகரமாக இலங்கை பிடித்துக் கொண்டுள்ளது. இவர்களின் கருத்துப்படி இலங்கையின் காலாட்படை இராணுவத்தில் 115 000 பணிபுரிகின்றனர்.

இலங்கை வாழ் மக்களுக்கு இராணுவம் என்ற பதம் எப்போதும் அவலத்தையும் அழிவையும் நினைவூட்டும் சின்னமாக இருந்து வந்துள்ளது. சேகுவரா கலவரம் எனக் கூறப்பட்ட கலவரத்தை அடங்குவதற்கு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசு சொந்தப்படையை நம்பாது அடுத்த நாட்டுப் படையைக் கொண்டு தனது சொந்த இனத்தையே அழித்தது,
அதை அடுத்து இலங்கை இராணுவம் இனக்கலவரகாலங்களில் நடந்து கொண்ட முறைகள் மனதை விட்டு அகலவில்லை, இதைத் தொடர்ந்து சமாதானத்தின் பேரில் வரவழைக்கப்பட்ட படைகள் எவ்வாறு ‘சமானத்தை’ நிலைநாட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதை நாம் மறந்து விடவில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்காலில் நடந்த பேரவலங்களை மறந்து மக்கள் சுயவிருப்பத்தின் பேரில் இலங்கை இராணுவத்தில் இணைவதாக நாம் கருதுவோமானால் மக்களுக்கு அம்நேசியா (ஞாபக மறதி நோய்) ஏற்பட்டிருக்க வேண்டும் என நாம் கருத வேண்டும். இலங்கை இராணுவம் மட்டுமல்லாத ஈழவிடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட ஆயுதகுழுக்கள் பலவற்றில் கூட பெண்களும் சிறார்களும் பெற்றோரின் அவலக்குரல்களுக்கு மத்தியில் தான் சேர்க்கப்பட்டார்கள். இவ்வாறான அடிமேல் அடிபட்டு வடுக்களைத் தாங்கிய மக்கள் சுயவிருப்பத்தின் பேரில் இராணுவத்தில் இணைகிறார்கள், இராணுவம் இனங்களுக்கிடையே சமத்துவத்தைப் பேணுவதற்கு கடுமையாக உழைக்கிறது என்று யாரவது நற்சான்றிதழ் வழங்க முன் வருவார்களானால் அவர்களுக்கு இலங்கை அரசும் அவர்களது முகவர்களும் நன்றாக வாரியிறைத்துள்ளார்கள் என்றே நாம் எண்ண வேண்டும்.

2012 பெப்பிரவரியில் Peace and Conflict Monitor இனுக்கான குகதாசன் ஐங்கரன் என்பவரின் அறிக்கை ஒன்றின் படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமை மிக அதிகளவு காணப்படுவதாகவும், வடக்கு கிழக்கின் சனத்தொகையின் 8 வீதமான மக்கள் முகாம்களிலும் கொடுப்பனவுகளிலும் தங்கியிருக்க வேண்டியிருந்தது எனவும் குறிப்பிடுகிறது. இலங்கை அரச புள்ளிவிபரத்திணைக்களத்தின் அறிக்கையின் படி 650,000 மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர் எனவும் இது வடக்கு கிழக்கிலுள்ள சனத்தொகையின் சுமார் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கிறது. 2012 பெப்பிரவரி மார்ச்சில் நடத்தப்பட்ட குடிசனமதிப்பீட்டின் படி ஒரு இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களாக மன்னாரும் முல்லைத்தீவும் அமைந்துள்ளன.


வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பாரம்பரிய தொழில் துறைகளான விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடித்தொழில் என்பவற்றில் யுத்த நடவடிக்கையின் ஒவ்வொரு படிநிலையும் கடுமையைன பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் உள்ளூர் பொருளாதார கட்டமைப்புக்கள் சீர் குலைக்கப்பட்டன. யுத்தநடவடிக்கைகளான குண்டுமழை பொழிதல், பீரங்கித்தாக்குதல், ஏனைய பிற கனரக ஆயுத தாக்குதல்கள் மூலம் மருத்துவமனைகள்,பாடசாலைகள், கோவில்கள், தேவாலயங்கள், குடிமனைகள், போக்குவரத்துப்பாதைகள் மின்சாரக்கட்டமைப்பு, நீர்பாசன, வடிகால் அமைப்புக்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டன. இவ்வாறான நிர்மூலங்களுடன் தான் எமது வடக்கு கிழக்கு சமூகம் காணப்படுகிறது. இங்கு வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, சிறுகுழந்தைகள் மற்றும் வயதானபெற்றோர்களைக் கொண்ட மிக குறைந்த ஊதியத்தை நாளாந்த வருமானமாக கொண்ட குடும்பங்களின் அதிகரிப்பு போன்றவைதான் இன்றைய யதார்த்தம்.

இலங்கையில் வேலையில்லாத்திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சனையாக இருக்கிறது. 2004 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களின் படி 32 வீதமான பெண்கள் வடக்கிலும் (இது வேலையில்லாத ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது ஐந்து மடங்கு அதிகமாகவும்,) கிழக்கில் வேலையில்லாத பெண்கள் 38 வீதமாகவும் இது ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது ஒன்பது வீதம் அதிகமாகவும் காணப்படுகிறது). 20- 29 வயதுடைய இளம்பருவத்தினரே இவ்வாறான நிலைமையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதுடன் இதிலும் கல்வித் பொதுத் தராதர மற்றும் உயர்கல்வியைப் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இருந்து மக்கள் மீள்வதற்கு உரிய நடவடிக்கைகளில் ஈடுபடாத இலங்கை அரசு வறுமையிலும் இழப்புக்களுக்கு மத்தியிலும் அன்றாட சீவனத்திற்கு வழியைக் காணமால் திகைத்துப் போயிருக்கும் மக்களை இனங்களுக்கு இடையேயான சமத்துவத்தை கடைப்பிடிக்க முயல்வதாக உலகஅரங்கில் காட்டுவதற்கு பெண்களை இராணுவத்தில் சேர்ப்பது மிகவும் மோசமான நடவடிக்கையாகும்.

இலங்கையில் காணப்படும் ஏனைய தொழில் துறைகளில் பெண்கள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் வசதிகள் பெண்களுக்கு ஏற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை இங்கு எழுப்புவது தவிர்க்க இயலாததாகிறது. குடிபெயர்ந்துள்ள மக்களை அவர்தம் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற அனுமதிப்பதன் மூலம் மக்கள் தமது சொந்த இடங்களில் தமது வாழ்வை மீளஅமைப்பதற்கும் வழி வகுப்பது முக்கியமானதுடன், யுத்தப்பேரழிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் கொடுப்பனவுகளையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசிற்கு உண்டு. இது தொடர்பாக பேச மறுக்கும் இலங்கை அரசு காவல்படைக்கும் இராணுவத்திற்கும் ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக காட்டுகிறது. காவல்படையிலும் இராணுவத்திலும் நிறைவேற்று அதிகாரம் எதுவும் அற்றநிலையில் தமிழர்கள் இருப்பதனால் இனங்களுக்கு இடையே சமத்துவம்தான் ஏற்படுமா என்ன?

புலம்பெயர்ந்த நாடுகளில் இணைத்தளங்களின் வாதங்களைப் பார்க்கும் போது இலங்கை இராணுவத்தை விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாம் இராணுவத்தில் பலவந்தமாகவும், ஏமாற்று வேலை காரணமாகவும்,மிக மோசமான வறுமை காரணமாகவும் இணைந்த, இணைக்கப்பட்டுள்ள பெண்கள் மீது மோசமான கருத்துக்களைத் திணிக்கிறோமா எனவும் எண்ணத்தோன்றுகிறது. இலங்கை இராணுவம் மிகவும் மோசமானது, மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டது இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்து இருக்க முடியாது, ஆனால் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்தகாரப்படுத்தப்பட்டுள்ளார்கள் போன்ற விடயங்களை நாம் ஆதராமின்றி முன்வைப்பது என்பது அங்கு பெண்கள் மீது நாம் திணிக்கும் சுமையாகிவிடாதா?.

ஈழப்போராட்ட காலத்தில் இயக்கங்களில் இணைந்து கொண்ட பெண்கள் தொடர்பாக சமூகத்தில் பெரும்பாலானவர்கள் மத்தியில் வெவ்வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவி வந்தன, இவர்கள் திருமணச் சந்தையில் பல்வேறு குறைபாடுகளுடன் ஒதுக்கி வைக்கப்பட்டனர் அல்லது இவர்களுக்கு ‘வாழ்வு கொடுப்பவர்களாக’ சிலர் ஒன்றில் வெளிநாடுகளில் இருந்தோ அல்லது உள்நாட்டில் இருந்தோ வந்தார்கள்.

இலங்கை இராணுவம் உண்மையிலே இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை தமிழ் பேசும் பெண்களை இராணுவத்தில் இணைப்பதன் மூலம் தான் ஏற்படுத்தலாம் எனப் பகல் கனவு காணவதாயின் அதைக் கூட நேர்மையான முறையில் செய்திருக்க வேண்டும், வர்த்தமானி அறிவித்தல், நேர்முகப் பரீட்சை, பெற்றோர் பாதுகாவலருக்கு விடயம் தொடர்பான தகவல்கள் வழங்கியிருக்க வேண்டும்,’பயங்கரவாதம்’ அழிக்கப்பட்டு ஒற்றையாட்சிக்குள் இயங்கும் இராணுவத்தில் பணிபுரிய பெண்களை இணைக்கும் போது பெற்றோருக்கு வீரத்தாய், தந்தை பட்டம் கொடுக்கும் போக்குகள் எதற்கு, இவ்வாறான பட்டமளிப்பு விழாக்கள் பெரும்பான்மை இனப் பெற்றோருக்கு வழங்கப்படுகிறதா?

இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் மிகவும் பெருமளவு தொகை நீண்டகாலமாக இராணுவத்தளபாடங்களுக்கும், இராணுவத்தைப் பராமரிப்பதற்கும், போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகளில் செலவிடப்படுகிறது. இந்நிலையில் மேலும் இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்ப்பது என்பது நாடு இன்னொரு யுத்தத்திற்கு தயாராகிறதா அல்லது இவர்களை வேறு நாட்டில் போராட இரவல் சிப்பாய்களாக அனுப்ப போகிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இராணுவத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்களில் குறிப்பிட்ட தொகையான பெண்கள் போதனா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டமை பெண்களில் பலர் தமது சுயத்துடன் இயங்குகின்றனர் என்பதை எமக்கு காட்டுகிறது. தமக்கு உடன்பாடு ஏற்படாத ஏதோ ஒரு விடயத்திற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுத்துள்ளார்கள் என்பதும் அதன் விளைவாகவே அவர்கள் இராணுவமருத்துவரையும் மீறி போதனா வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்து வர வேண்டியும் ஏற்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வை நாம் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுகிறார்கள் தமது சுயத்தை இழக்காமல் இருப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றே நாம் கொள்ள வேண்டும். இராணுவத்தில் பெண்கள் இணைக்கப்பட்டதை விமர்சிக்க முற்படும் போது முன்வைக்கப்படும் கருத்துக்கள் எமது சமூகத்தில் நிலவும் பாலின அசமத்துவத்தை வெளிக்காட்டுவதாகவும் சமூகத்தில் பெண்களின் பாத்திரம் தொடர்பாக எம்மில் பலரிடம் காணப்படும் விம்பங்களின் வெளிப்பாடுகளாக எனவும் எண்ணத் தோன்றுகிறது.

யுத்தம் முடிந்து விட்டது, இன்னமும் இராணுவம் ஏன் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் நிலை கொண்டிருக்கின்றன, என்பது தொடர்பாகவும், இராஜபக்ஷ குறிப்பிடும் இறுதி யுத்தமும் முடிந்த விட்ட நிலையில் இலங்கை இராணுவத்திற்கு இன்னமும் ஆட்சேர்ப்பு நடைபெறுவதற்கான காரணம் என்ன என்பதை நாம் கடுமையாக கேள்விக்குட்படுத்த வேண்டும், கிளறிக்கல் வேலையிலும், பாரமரிப்பு வேலைகளிலும் தான் பெண்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றால் அதற்கு அவர்களுக்கு இராணுவப்பயிற்சி அவசியமானதா என்ற கேள்வி இங்கு எழப்பப்பட வேண்டும். இதையெல்லாம் விடுத்து சிதைக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பெண்களைப் பண்டமாக பார்க்க முற்படும் எமது சமூகத்தின் போக்கோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

தேசியவிடுதலைப்போராட்டத்தில் இராணுவரீதியாகவும் ஏனைய பணிகளிலும் பெண்கள் வழங்கிய பங்களிப்புக்களை நாம் மறக்கமுடியாது. இவர்கள் இந்த இனவாத அரசின் நீண்ட கரங்களான இராணுவத்தை நகரவிடாது கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். நாம் ஒட்டு மொத்தமாக ஒரே குரலில் இலங்கையில் இராணுவ விஸ்தரிப்பதற்கு எதிராக குரல் கொடுப்போம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், கணவனை, சகோதரனை, சகோதரியை, பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு உரிய கொடுப்பனவுகளைக் கொடுக்கும்படி கோருவோம், மக்களை அவர் தம் சொந்த இடங்களில் குடியேற ஆவன செய்யும் படி இலங்கை அரசின் மீது அழுத்தங்களை ஏற்படுத்துவோம். போர்கால குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தினை சர்வதேசத்தின் கண்டிப்புக்குள்ளாக்குவோம். இவைகளை விடுத்து பெண்களை சுயமற்றவர்களாக சித்தரிப்பதை நிறுத்திக் கொள்வோம்.

நன்றி : கட்டுரையாளர்  தங்கம்
பதிவு மூலம் : இனியொரு