பதிவுகள்
Typography

இணைந்த வடக்கு- கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக இரா.சம்பந்தன் மீண்டும் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்புவது தொடர்பில் மூத்த அரசியல் தலைவராக சம்பந்தன், கடந்த காலங்களிலும் அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். குறிப்பாக, கடந்த (2012) கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர், எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 11 ஆசனங்களை வெற்றி கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 6 ஆசனங்களை வெற்றி கொண்ட முஸ்லிம் காங்கிரஸை இணைந்து ஆட்சி அமைக்க அழைத்தது. அதுவும், முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதாகவும் அறிவித்தது.

அப்போது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ், கூட்டமைப்போடு பேச்சுக்களை நடத்திக் கொண்டே இன்னொரு பக்கத்தில் ராஜபக்ஷக்களின் ஆணைக்குப் பணிந்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சி அமைத்தது. நல்லெண்ண நோக்கில் பேச்சு நடத்திய கூட்டமைப்புக்கோ, அதன் தலைவர் சம்பந்தனுக்கோ முஸ்லிம் காங்கிரஸோ, அதன் தலைவர் ரவூப் ஹக்கீமே பதில்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை. அந்த விடயம் கூட்டமைப்பினை அதிகமாக ஏமாற்றமடைய வைத்திருந்தது. தங்களின் நல்லெண்ண சமிஞ்ஞை முஸ்லிம் காங்கிரஸினால் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் சம்பந்தன் அப்போது ஆதங்கப்பட்டிருந்தார்.

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி வந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோரியது. அப்போதும், கிழக்கு மாகாண தமிழ் மக்களினதும், சிவில் சமூக அமைப்புக்களின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, முஸ்லிம் காங்கிரஸூக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி ஆட்சி அமைப்பதை சம்பந்தன் உறுதி செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியெல்லாம் எடுத்துரைக்கப்பட்ட போதும், முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தருவதாக கூறி கூட்டமைப்பினை ஆட்சி அமைக்க அழைத்த போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி மீண்டும் நல்லெண்ண நடவடிக்கைகளின் போக்கில் நடந்து கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸை முன்னிறுத்தி ஆட்சி அமைக்க சம்பந்தன் இணங்கினார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது தமிழ்த் தேசியப் போராட்டத்தின் போக்கில், பாரம்பரிய பிரதேசத்தின் இணைப்பாகக் கொள்ளப்படுகின்றது. இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 13வது திருத்தச் சட்டத்தினூடு அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண முறைமைக்கு அமைய தற்காலிகமா வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்ட போது, அது தொடர்பில் தமிழ்த் தேசியப் போராட்டத்தளம் அப்போது அதிக கரிசனை கொள்ளவில்லை. அதுபோல, 2006ஆம் ஆண்டில், உயர்நீதிமன்றத்தினால் வடக்கு- கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட போதும், அது அவ்வளவு கவனத்தில் எடுக்கப்படவில்லை. அப்போது, தமிழ்த் தேசிய அரசியலின் முடிவெடுக்கும் தலைமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகள் அரங்கிலிருந்து அகற்றம் செய்யப்பட்ட பின்னர், அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் வடக்கு- கிழக்கு இணைப்பினை தமது அரசியல் கோரிக்கைகளில் ஒன்றாக்கியது. அதை, தமிழ் மக்களும் வழிமொழிந்தார்கள். சட்ட வலுவோடும், தமிழ்- முஸ்லிம் சமூக இணைப்போடும் என்றும் பிரிக்கப்பட முடியாத நிலையில், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதன்போக்கிலேயே, இணைந்த வடக்கு- கிழக்கில் படித்த பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக சம்பந்தன் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கின்றார்.

எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பிலான நல்லெண்ண விடயத்தை மாத்திரம் கூறவில்லை. மாறாக, முதல் முறையாக, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தொடர்பில் ஏமாற்றமான கருத்துக்களையும் சம்பந்தன் வெளியிட்டிருக்கின்றார்.

அதாவது, “இணைந்த வடக்கு- கிழக்கில் படித்த, பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்குத் தயார். நாம் அதற்கும் பின்னிற்கப்போவதில்லை. ஆனால், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் சிலர் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் கூறிய விடயங்களைக் கேட்டால் நீங்கள் வெட்கமடைவீர்கள். அவர்கள், அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது, அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கவேண்டும். குறிப்பாக, காணி அதிகாரத்தினை மத்திய அரசாங்கமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.” என்றுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கின்ற நிலையிலும், கிழக்கு மாகாண சபை கடந்த வெள்ளிக்கிழமையோடு தன்னுடைய ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து இன்னொரு தேர்தலுக்கு தயாராகியிருக்கின்ற நிலையிலும், சம்பந்தனின் மேற்கண்ட கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், புதிய அரசியலமைப்பில் தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் அரசியல் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளுக்கிடையில் பல சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போதெல்லாம், இணைக்கம் காணப்பட்ட விடயங்கள் சார்ந்து, முஸ்லிம் தலைவர்கள், வழிநடத்தல் குழு கூட்டங்களின் போது அவ்வளவு அழுத்தங்களோடு உரையாடவில்லை என்பது சம்பந்தனுக்கு பெருத்த ஏமாற்றம். ஆனால், சம்பந்தனும், சுமந்திரனும் கூட பல விடயங்களில் அழுத்தமான உரையாடல்களை நிகழ்த்தவில்லை என்பது தமிழ் மக்களின் குற்றச்சாட்டு. அதனை இந்தப் பத்தியாளர் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து முன்வைத்து வருகின்றார்.

ரவூப் ஹக்கீமோடு மிகமிக இணக்கமான நிலையொன்றைப் பேணுவது தொடர்பில் சம்பந்தன் என்றைக்கும் கரிசனையோடு இருந்து வந்திருக்கின்றார். ஆனால், வழிநடத்தல் குழுவுக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய பங்கினை சரியாகச் செய்யவில்லை என்பது தொடர்பில் சம்பந்தனுக்கு பெருத்த ஏமாற்றம் இருப்பதாக கூறப்படுகின்றது. அதன்போக்கிலேயே, வடக்கு- கிழக்கு இணைப்பு பற்றிய கேள்விக்கு தன்னுடைய ஏமாற்றங்களையும் பதிலாக அவர் வெளிப்படுத்த வேண்டி வந்திருக்கின்றது.

இன்னொரு பக்கம், சம்பந்தனின் அந்தக் கூற்று, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டது என்றும் கொள்ள முடியும். ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸ்- கூட்டமைப்பின் கடந்த இரண்டு வருடகால கிழக்கு மாகாண ஆட்சி தொடர்பில் தமிழ் மக்கள் அதிகம் ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். குறிப்பாக, கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் செயற்திறனற்ற தன்மை என்பது தங்களை வெகுவாக பாதித்திருப்பாதாக தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். இதனால், கூட்டமைப்புக்கு புதிய தேர்தலொன்றை சரியாக எதிர்கொள்வது சார்ந்து புதிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. அது, மீண்டும் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சி அமைப்பது சார்ந்த விடயத்தினை முன்வைக்க முடியாமல் செய்கின்றது.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எந்த வகையிலும் சிதறாமல், அதிக வாக்களிப்பு வீதம் காணப்படுமிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அத்தோடு, 2 போனஸ் ஆசனங்களையும் வெற்றி கொள்ள முடியும். ஆனால், அந்த வாய்ப்புக்களை கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. காணி அபகரிப்பு விடயத்தில் தீர்வு காணப்படாமை மற்றும் அரச வேலை வாய்ப்பு உள்ளிட்ட விடயங்களில் தாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்களிடமும், இளைஞர்களிடமும் பெரும் கோபம் உண்டு. அப்படிப்பட்ட நிலையில், அவர்களை நோக்கி, புதிய நம்பிக்கைகளை விதைத்து அதனூடு வெற்றியை அறுவடை செய்வது என்பது கூட்டமைப்புக்கு முன்னால் பெரும் குதிரைக் கொப்பாக காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பினால் அறுதித் பெரும்பான்மையுள்ள ஆட்சியை அமைக்க முடியாது என்பது உண்மையானது. ஆனால், பிரியாத வாக்களிப்பின் மூலம் ஆட்சியமைப்பதற்கான ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அண்மித்த நிலையை அடைய முடியும். அதன்மூலம் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புக்களை வெகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் சம்பந்தன் கருதுகின்றார். ஏனெனில், மீண்டுமொரு முறை முஸ்லிம் காங்கிரஸூக்கு எந்தவித நிபந்தனைகளுமின்றி ஆதரவினையோ, முதலமைச்சர் பதவினையோ வழங்க அவர் தயாராக இல்லை. அவர் அவ்வாறான முடிவுகள் எதையாவது எடுத்தால், தமிழ் மக்கள் வேறுபாதைகளை தேர்வு செய்ய வேண்டி ஏற்படலாம். அதனால், பெரும் வெற்றியைப் பெறுவதனூடு, ஆட்சியமைப்பதற்கான அண்மித்த நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில், முஸ்லிம் பிரதிநிதிகள், தலைவர்கள் தொடர்பிலான தன்னுடைய ஏமாற்றமான மனநிலையை சம்பந்தன் வெளியிட வேண்டிய வந்திருக்கின்றது.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கான பரிந்துரைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட போதும், அதற்கான வாய்ப்புக்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுவதற்கான சிறிய வாய்ப்பும் இல்லை என்று தெரிகின்றது. அந்த நிலையில், கிழக்கு மாகாண சபையை வெற்றி கொள்வது சார்ந்த நிலைப்பாட்டில், விட்டுக்கொடுப்புக்களின்றி கூட்டமைப்பு செயற்பட முனைவதையே, சம்பந்தனின் தற்போதையை நிலைப்பாடு எடுத்துக்காட்டுகின்றது.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஒக்டோபர் 04, 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்