பதிவுகள்

…நீங்களும் உங்களது குழந்தைகளும் நிம்மதியான சூழலில் வாழ்வதற்காக பெரும் தியாகம் செய்த பத்தாயிரம் இளைஞர்கள் (படை வீரர்கள்) இப்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நினைவு கூருங்கள். அவர்களது தியாகத்தை மனதில் நிறுத்திக்கொண்டு விகாரைகளுக்கு செல்லுங்கள். உங்களது ஊரிலுள்ள முக்கிய நபர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள், அழுத்தம் வழங்குங்கள், புதிய அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கக்கூடிய நபர்களிடம் அதனை எதிர்க்குமாறு கூறுங்கள். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்கும் யாராவது இருந்தால், அவர்களுக்கு ‘பிரித்நூல்’ கட்டவேண்டாம், ஆசீர்வாதம் அளிக்கவேண்டாம், அவர்களது வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று பிக்குகளிடம் சொல்லுங்கள்.

நான் என்னுடைய இதயத்திலிருந்தே பேசுகிறேன். எனக்கு எந்த அரசியல் ஆர்வமும் இல்லை. நான் என்னுடைய நாட்டை நேசிக்கின்றேன். இந்த தேசத்தில் பிறந்து, இந்த தேசத்தை இப்போது அழிக்க நினைப்போர் துரோகிகள். 1987, 1988, 1989 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ‘துரோகிகளுக்கு சாவு’ என்று சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. துரோகிகளுக்கான தண்டனை மரணமேயாகும். நாட்டை விற்பவர்கள், நாட்டை உடைப்பவர்கள், இப்படியான துரோகிகள் இருந்தால், அவர்கள் மரணத்துக்கு தகுதியானவர்கள்…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில், முன்னாள் இராணுவத் தளபதியும், இறுதி மோதலில் படைகளை வழிநடத்திய களமுனைத் தளபதிகளில் ஒருவருமான கமால் குணரட்ன ஆற்றிய, 26 நிமிடங்கள் நீண்ட உரையின் சில பகுதிகளே மேலுள்ளவை.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில், முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவனமொன்றின் அரங்கில் அதிக கூட்டம். குறிப்பாக, இளைஞர்கள் யுவதிகளின் கூட்டம். ஒரு உயரமான நபரைச் சூழ்ந்து கொண்டு அவரோடு படம் எடுப்பதற்காகவும், அவரிடம் கையெழுத்து வாக்குவதற்காகவும் அந்தக் கூட்டம் காத்திருந்தது. படம் எடுத்தவர்கள், கையெழுத்துப் பெற்றவர்களின் முகத்தில் பெரும் பெருமிதம். புத்தக கண்காட்சியொன்றில், அதுவும் இலங்கையில் இவ்வளவு பிரபலமான எழுத்தாளர் இருக்கின்றாரா?, என்று கேள்வியெழுப்பியது. கிட்ட நெருங்கிப் பார்த்தேன். கமால் குணரட்ன, பெரும் நாயக பிரகாசத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவர் எழுதிய, ‘Road to Nandikadal (நந்திக்கடலுக்கான பாதை)’ இரண்டாவது வருடமாகவும் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. கடந்த வருடம் வெளியான குறித்த புத்தகம், இலங்கை வரலாற்றில் அதிகமாக விற்பனையான புத்தகமென்று சொல்லப்படுகின்றது.

ஆரம்பம் முதலே, இலங்கையை சிங்கள பௌத்த நாடென்று வரையறுக்கும் ‘Road to Nandikadal (நந்திக்கடலுக்கான பாதை)’, அந்தக் கருத்தியலை ஒவ்வொரு சிங்களக் குழந்தைக்கும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. நாட்டை காப்பாற்றுவதற்காக, எதிரிகள் என்று கருதப்படுகின்ற யாரையும், எவ்வாறு வேண்டுமானாலும் அழிக்கலாம் என்றும் அந்தப் புத்தகம் பல இடங்களில் அழுத்தமாக பதிவு செய்கின்றது. குறிப்பாக, தமிழ், முஸ்லிம் மக்களை குறித்த புத்தகத்தினூடு இலங்கையின் இரண்டாம் பட்சக்குடிகள் என்றே கமால் குணரட்ன சொல்கின்றார். அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கங்கள் பல ஆழமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டிவைதான். அது வெளிப்படுத்தும் மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்கள், ஏதேச்சதிகாரத்துக்கான உந்துதல், இனரீதியான மேலாதிக்கத்துக்கான விதைப்புப் பற்றியெல்லாம் கவனமாக ஆராயப்பட வேண்டும். குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், ‘போர் வெற்றி வாதம்’ ஏன் முக்கியமானது?, அதனை ஏன் தக்க வைக்க வேண்டும்?, என்றெல்லாம் கமால் குணரட்ன அந்தப் புத்தகத்தினூடு தென்னிலங்கைக்கு வகுப்பெடுத்திருக்கின்றார்.

‘கோத்தபாய ராஜபக்ஷவை 2020இல் ஜனாதிபதியாக்குவோம்’ என்கிற முனைப்பில் இயங்கும் செயலணியில், கமால் குணரட்னவும் முக்கியமானவர். இந்த அணியோடு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அவ்வளவு ஆரோக்கியமான உறவைக் கொண்டிருக்காத போதிலும், தேவைகளின் போக்கில் ஒன்றுக்கொன்று ஒத்தாசை வழங்குவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்து வருகின்றன. கூட்டு எதிரணியிலுள்ள பலரும், கூட்டு அரசாங்கத்தில் தமக்கு பதவிகள் வழங்கப்படவில்லை என்கிற காரணத்துக்கான ஒட்டிக்கொண்டிருப்பவர்கள். பதவிகளுக்காக பல தடவைகள் பின் வாசல் வழியும் முயற்சித்தும் தோற்றவர்கள். ஆக, வேறு வழியின்றி கூட்டு எதிரணியில் இருப்பவர்கள் அதிகம். அப்படியானவர்களுக்கு, மஹிந்த ராஜக்ஷ ஆட்சிக்காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷ என்கிற பெயர் எவ்வளவு அச்சுறுத்தலானது, அது எவ்வளவு அதிகாரத்தோடு இருந்தது என்பதை அறிவார்கள். அவர்கள், கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவது தொடர்பில் சிறிய ஆர்வத்தையும் வெளிப்படுத்த மாட்டார்கள். அத்தோடு, மஹிந்த ராஜபக்ஷவும் தன்னுடைய அரியாசனம் தனக்குப் பின்னால் தன்னுடைய மகனிடமே செல்ல வேண்டும் என்று விரும்பியவர். இப்போதும், தன்னுடைய மகனை அரியணை ஏற்றும் நோக்குக்காகவே பெரும் தோல்வியின் பின்னும் இவ்வளவுக்கு முனைப்பான அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார். அப்படியான நிலையில், அவரும், கோத்தபாய ராஜபக்ஷவை 2020இல் ஜனாதிபதியாக்குவோம் என்கிற அணியை அதிகம் முன்னோக்கிக் கொண்டு வருவதை விரும்பவில்லை.

ஆனால், கூட்டு அரசாங்கத்தை உடைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைக்குள் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக பல்வேறு அணிகளையும் தன்னோடு இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துகின்றார். குறிப்பாக, புதிய அரசியலமைப்பினை நாட்டுக்கான பெரும் சபம் என்று வரையறுப்பதனூடு மீண்டும் தென்னிலங்கையை தன்னை நோக்கித் திரள வைக்க முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கருதுகின்றார்.

அப்பிடியான சூழலில், குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், கமால் குணரட்னவின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கின்றது. ஏனெனில், அவர் புதிய அரசியலமைப்புக்கு எதிரான அழுத்தத்தை ஒவ்வொரு விகாரைக்குள்ளும் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறார். ஆசிர்வாதம் வழங்கும் பிக்குகளை பெரும் அழுத்தக்கருவியாக முன்னிறுத்துமாறு மக்களைக் கோருகின்றார். பிக்குகளை அழுத்தக்கருவியாக மாற்றும் போது, பாராளுமன்ற உறுப்பினர்களை இலகுவாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் கூறுகின்றார்.

தென்னிலங்கை அரசியலில் பௌத்த பீடங்களையும், பிக்குகளையும் தவிர்த்துவிட்டு அதிமுக்கிய முடிவுகள் எவையும் பெரிதாக எடுக்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம். இப்போதும், புதிய அரசியலமைப்புக்கு எதிரான தரப்புக்கள் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள விகாரைகளுக்குள்ளிருந்தும் எதிர்ப்பினை உருவாக்கி, பௌத்த பீடங்களின் பெரும் எதிர்ப்பாக மாற்றுவதற்கு திட்டமிடுகின்றன. குறிப்பாக, இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பிக்கும் நாளில், பௌத்த பிக்குகளை முன்னிறுத்திக் கொண்டு தொடர் போராட்டத்தை முன்னெடுக்க கூட்டு எதிரணி (மஹிந்த அணி) திட்டமிட்டிருக்கின்றது. அதன்மூலம், ஏற்கனவே புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள அஸ்கிரிய, மல்வத்தை மற்றும் கோட்டை பீடங்களுடன், ஏனைய பௌத்த பீடங்களையும் இணைத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகின்றது.

கடந்த வாரம் முழுவதும் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் இணைப்புச் செயற்குழுவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வந்தன. அதாவது, புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு சீர்திருத்தமோ அவசியமில்லை என்று அஸ்கிரிய- மல்வத்தை பீடங்களின் இணைப்புச் செயற்குழு அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது, அந்த அறிவிப்போடு, மகாநாயக்கர்கள் சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் காட்டமாகவே அறிவித்தார். இந்த நிலையில், ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைத்து புதிய அரசியலமைப்புக்கான எதிர்ப்பினை வெளியிடுவதற்கு அஸ்கிரிய- மல்வத்தை பீடங்கள் தீர்மானித்துள்ள தெரிகின்றது. இது இவ்வாறிருக்க கோட்டை பீடமும் புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்று அறிவித்து விட்டது.

தென்னிலங்கையில் அரசியல் அழுத்தங்களுக்கான கட்டங்கள் இன்னமும் விகாரைகளை முன்னிறுத்தியே தொடர்கின்றன. அதுதான், எந்த விடயமாக இருந்தாலும், மேலிருந்து கீழ் நோக்கியும், கீழிருந்து மேல் நோக்கியும் விகாரைகளை பிரதானமாகக் கொள்ள வைக்கின்றன. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் சூழல் என்பது, ஆயுதப் போராட்டங்களின் நிறைவுக்குப் பின்னர், தன்னுடைய கட்டங்களை எங்கிருந்து ஆரம்பிப்பது, கட்டமைப்பது என்று தெரியாமல் அல்லாடுகின்றது. வாக்கு அரசியல் மட்டுமே அடுத்த கட்ட அரசியல் என்கிற நினைப்பு மெல்ல மெல்ல, தமிழ் மக்களிடம் இறக்கி வைக்கப்படுகின்றது. அதனை, அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, செயற்பாட்டாளர்களும், புத்திஜீவிகளும், ஏன் ஊடகங்களும் இணைந்தே செய்து கொண்டிருக்கின்றன. வாக்கு அரசியல் பிரதானமானது. ஆனால், அது மட்டுமே என்று நிலைமை மாறும் போது, அடிப்படை வரையறைகள் அடிபடும் சூழல் உருவாகின்றது. அது, வாக்கு அரசியலுக்கு சமாந்தரமாக அழுத்த அரசியலை உருவாக்கும் முனைப்புக்களுக்கு பின்னடைவாகும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தென்னிலங்கை விகாரைகளுக்குள் இன்னமும் தமது அரசியலின் ஒரு பகுதியை (அழுத்தத்துக்கான பெருமளவை) வைத்துக் கொண்டிருக்கின்றது. அதுபோல, தமிழ்த் தேசிய அரசியலும் தனக்குள் அழுத்தமான அரசியல் தரப்பொன்றை உருவாக்க வேண்டும். அது, வாக்கு அரசியல் சாராததாக ஆனால், தாக்கம் செலுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஒக்டோபர் 25, 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.