பதிவுகள்
Typography

குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தர்மஅடி கொடுக்க அவசரம் காட்டும் பொதுப்புத்தி நிறைந்து போன நம் சமூகத்தில், நிதானித்து யோசிக்கும் பதிவாக அமைந்துள்ள இக் கட்டுரையை, கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

தருண் தேஜ்பால்

இந்தியப் பத்திரிகையுலகில் பணிபுரியும் இளம் பத்திரிகையாளர்களின் Idol Journalistகளில் ஒருவரான தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். செய்தியை வாசித்தவுடனேயே ஆத்திரம்தான் வந்தது. ஆத்திரம் அறிவிழக்கச் செய்யும். என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிக இழிவான மொழியில் ஒரு நிலைத்தகவல் இட்டிருந்தேன். அதை வாசித்த என்னுடைய நலம் விரும்பியான, தமிழ் இதழியல் துறையில் மரியாதையாக மதிக்கப்படும் மூத்தப் பத்திரிகையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை கடுமையாக கண்டித்தார். தன் துறையின் இளையவர்கள் தடம் மாறிச் செல்லும்போது ஒரு ஆசான் எதை செய்யவேண்டுமோ அதைதான் அவர் செய்தார். ஏன் அவ்வளவு கேவலமான மொழியை பயன்படுத்தினேன் என்று கொஞ்சம் விரிவாக சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு மனிதனையோ, இயக்கத்தையோ, லட்சியத்தையோ, கொள்கையையோ வீழ்ச்சி அடைய செய்யவேண்டுமானால் ஓர் ஆதிகாலத்து தந்திரம் இருக்கிறது. மண், பொன், பெண். நாகரிக உலகில் மண்ணைக் காட்டி மயக்குவது இன்று கடினம். அப்படி மயங்கியவர்கள் நில அபகரிப்பு வழக்குகளில் உள்ளே இருக்கிறார்கள். பொன்னுக்கு மயங்கியவர்கள் ஊழல் வழக்கில் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டைக் காட்டிலும் மூன்றாவதான ‘பெண்’தான் ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக வீழச்செய்கிறது. இதுதான் என்றுமே வெல்லக்கூடிய பிரம்மாஸ்திரமாகவும் இருக்கிறது.

உலகம் தோன்றியதிலிருந்தே ஆண்கள் இந்த விஷயத்தில் அயோக்கியர்கள் என்பதால் மிகச்சுலபமாக அவர்களை வீழ்த்த முடிகிறது. சபலத்துக்கு ஆட்பட்டவன் எவ்வளவுதான் திறமைசாலியாகவோ, நல்லவனாகவோ இருந்துத் தொலைத்தாலும்.. பல்லாண்டுகள் கடினப்பட்டு அவன் உருவாக்கிய உழைப்புக் கோட்டை ஒரே புகாரில் சுக்குநூறாக உடைகிறது.

நிறைய உதாரணங்களை பட்டியலிட முடியும். கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த அற்புதமான திராவிட இயக்கம் எந்தெந்த சந்தர்ப்பங்களில் பிளவுப்பட்டது என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்தால், ‘பெண்ணுடல்’ அரசியல் ஆயுதமாகவும் பயன்பட்டதை உணர்ந்துகொள்ளலாம். உலகளவில் பார்த்தோமானால் சமகால உதாரணங்களாக ஆனானப்பட்ட கிளிண்டனும், ஜூலியன் அசாஞ்சேவுமே கூட இந்த தாக்குதலுக்கு தப்பவில்லை.

குறிப்பாக அரசியல், சினிமா, ஊடகம் மூன்று துறைகளிலும் ஒருவரை முற்றிலுமாக அழித்தொழிக்க பெண் புகார் குற்றச்சாட்டு போதுமானது. நம்மூரில் கூட சமீபத்தில் இரு ஊடக குழுமங்களுக்கு இடையே நடந்த பனிப்போரில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு என்னவென்பது நமக்கே தெரியும்தானே.. இணையத்திலும்கூட சில இலக்கியவாதிகள் இதனால்தானே ‘டவுசர்’ கழட்டப்பட்டார்கள்? தன் நிழலைக்கூட நம்பாதவர்கள் மட்டுமே தங்கள் இமேஜை நல்லபடியாக வரலாற்றில் பதியவைக்க முடியும்.

உறுதிப்படுத்தப்பட்ட சில அரண்மனை ரகசியங்களை இதுமாதிரி பொதுவிடங்களில் பகிர்ந்துக்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக சொல்ல முடியும். உறுதியானவர்களை உடையவைக்க காலம் காலமாக ‘காமம்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயக்குனர் மதுர்பண்டார்க்கரின் திரைப்படங்கள் சில இப்பிரச்சினையை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது.

தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு வருவதற்கு சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக, ஓர் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசினார். பவா செல்லத்துரையின் பதினைந்து வயது மகனுக்கு சொல்வதைப்போல, எல்லாருக்குமாக ‘அட்வைஸ்’ செய்தார். குறிப்பாக இலக்கியம், சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் பிரபலம் அடைபவர்களுக்காக அவருடைய பேச்சு அமைந்தது. “வளர்ந்து வருபவர்கள் ‘பெண்’ விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையாக இருங்கள். மொத்த உழைப்பும் வீணாகிவிடும். இது என் தனிப்பட்ட அனுபவத்தில் உணர்ந்த உண்மை” என்றார். பாலுமகேந்திரா சொன்னதுமே நிறைய பேர் சிரித்தார்கள். அவரும் புன்முறுவலோடு சொன்னாலும், அதற்குப் பின்னான அவரது நிரந்தர வேதனையை உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஏனெனில் அவருக்கு சமூகத்தில் இருக்கும் இமேஜ் அதுமாதிரியானது. ஏதாவது பழைய பாலுமகேந்திரா படங்களின் பாடல்களை டிவியில் போடும்போது, அவரை சிலாகித்துப் பேசுவேன். அம்மாவுக்கு கோபம் வரும். “அந்தாளு ஒரு அயோக்கியன்” என்பார்கள். அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. ஷோபா தலைமுறை ஆட்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது மூத்தப் பத்திரிகையாளர்களும் பாலுமகேந்திரா சொன்ன அட்வைஸைதான் எனக்கும் சொல்வார்கள். “இந்த துறையிலே ரொம்ப ஈஸியா கிடைக்கும் தம்பி. இந்த வேலையோட தன்மை அப்படி. சோத்து மூட்டைக்குள்ளே பெருச்சாளி பாய்ஞ்சா மாதிரி பாய்ஞ்சிடாதே. லைஃபே ஸ்பாயில் ஆயிடும்” என்பார்கள். சொன்னவர்கள் பெரும்பாலும் அவர்கள் லைஃபை ஏதோ ஒரு கட்டத்தில் ‘ஸ்பாயில்’ செய்துக்கொண்டவர்கள்தான். அனுபவம்தான் பெரிய ஆசான். தற்காலிக மகிழ்ச்சியையும், அதன் பிறகான முடிவேயில்லாத துயரத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சொன்னால் சரியாகதானிருக்கும். கொஞ்சம் அதீதமாக இருந்தாலும், ‘ஆணாகப் பிறப்பதே பாவம்’ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பொதுவில் அவமானப்படுகிறார்கள் என்பதோடு பிரச்சினை முடிந்துவிடுவதில்லையே. காலத்துக்கும் குடும்பத்தில் இருப்பவர்களின் முகத்தில் எப்படி விழிப்பார்கள்?

தருண் மீது புகார் கொடுத்த பெண், தருணின் மகளுக்கு தோழர் என்கிறார்கள். எப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறார் .

தருண் தேஜ்பாலின் தற்போதைய வீழ்ச்சி, கிளிண்டனுக்கு விரிக்கப்பட்ட ‘கண்ணி’ மாதிரி இருக்கக்கூடுமோ என்று எனக்கு உறுதியான சந்தேகம் இருக்கிறது. இதற்காக புகார் கொடுத்த பெண்ணை நான் கொச்சைப்படுத்துவதாக அர்த்தமில்லை. புகார் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இப்படியொரு ‘நிகழ்தகவு’க்கும் வாய்ப்பிருப்பதை நாம் பரிசீலித்தாக வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ‘Sting operation’க்கு பேர்போன தெஹல்காவும், அதனுடைய ஆசிரியரும் என்னென்ன பூதங்களை, விளக்கைத் தேய்த்து வெளிவரச் செய்வார்களோ என்கிற அச்சம் ஏராளமானோருக்கு இருக்கக்கூடும். இந்த குற்றச்சாட்டு தெஹல்காவை முடக்கச் செய்யும் முயற்சியாக கூட இருக்கலாம். முறையாக புகார் தெரிவிக்கப்படாத நிலையில் அவசரம் அவசரமாக கோவா முதல்வர் இப்பிரச்சினையில் காட்டும் கூடுதல் ஆர்வத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் தெஹல்காவை காக்க தன்னை தற்காலிகமாக தியாகம் செய்துக் கொண்டிருக்கிறார் தருண் தேஜ்பால்.

மீண்டும் பாலுமகேந்திராவுக்கே வருகிறேன். பல நிகழ்ச்சிகளில் அவர் ஒரு படத்தின் காட்சியை விவரித்துச் சொல்வார். ஒரு கலைஞன் தன் எதிரியிடம் சொல்வானாம். “என்னை என்ன வேண்டுமானாலும் அவதூறாக திட்டிக்கொள். அதில் உண்மை இருக்கலாம். ஆனால் என் உழைப்பை மட்டும் பழிக்காதே. நான் அதற்கு விசுவாசமாக இருக்கிறேன்”

தருண் தேஜ்பால் மீது எனக்கு இன்னமும் மரியாதை இருக்கிறது.

நன்றி: யுவகிருஷ்ணா

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்