பதிவுகள்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது (நிகழ்த்தப்படுகின்றது) என்பது பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும் என்று எழுத்தாளரும், நடிகருமான ஷோபாசக்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

எழுத்தாளர் ஜெயமோகன் ‘தடம்’ இதழுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்ப்படவில்லை என்கிற தோரணையில் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், எழுந்த எதிர்வினைகளை அடுத்து இன்னொரு பதிவிலும் சில தவறான தரவுகளுடன் தன்னுடைய விளக்கங்களை எழுதியிருந்தார். 

இந்த நிலையில், ஷோபாசக்தி ஜெயமோகனிடம் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதனை அவரின் அனுமதியோடு மீள்பிரசுரம் செய்கின்றோம்.

அன்புள்ள ஜெயமோகன்,

‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள்,  ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக,  அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில் நீங்கள் எழுதிய இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி… என்ற கட்டுரை தொடர்பாகவே இந்த மின்னஞ்சலை உங்களிற்கு அனுப்புகின்றேன்.

‘இலங்கையில் இனப்படுகொலை நிகழவில்லை’ என்று கூறியதற்காக உங்களை இந்திய அரசின் கைக்கூலி என்றோ தமிழின விரோதி என்றோ நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. அதேபோன்று ‘இலங்கையில் நிகழ்ந்தது இனப் படுகொலையே’ என்று ஆணித்தரமாகக் கூறுபவர்கள் எல்லோரையுமே ‘சுத்தமான சூசைப்பிள்ளைகள்’ என்றும் நான் கூறமாட்டேன். நீங்கள் மிகச் சரியாகவே சுட்டிக்காட்டுவது போல புலிகள் இழைத்த யுத்தக் குற்றங்களையும், புலிகள் நடத்திய முஸ்லீம் இனச் சுத்திகரிப்பையும் நியாயப்படுத்துபவர்களும் அவர்களிற்குள் உள்ளார்கள்.

இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என்பது என் தரப்பு. இதை நீண்டநாட்களாகவே நான் சொல்லிவருகிறேன். மாறாக அங்கு நிகழ்ந்தது இனப்படுகொலை அல்ல என்பது உங்களது தரப்பு. எனினும் இந்த விசயத்தில் உங்களோடு வாதிட்டு நிற்பது எனது நோக்கமில்லை. ஏனெனில், நடந்தது இனப்படுகொலையே அல்ல என உங்களைப் போலவே பலமாக வாதிடும் பல ஈழத் தமிழர்களும் இருக்கிறார்கள். அதேபோன்று நடந்தது இனப்படுகொலையே எனச் செல்லும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திலும் இனப்படுகொலையே எனச் சொல்லும் தரப்பும் அதை மறுக்கும் தரப்புமிருக்கிறார்கள். நீங்கள் தடம் நேர்காணலில் சொல்லியது போலவே இது பெரும் உரையாடலாகத் தொடரப்பட வேண்டிய விசயம்.

எனவே இந்த விடயத்தில் உங்களோடு வாதிடுவதை விடுத்து உங்களது கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் குறித்த எனது சில அய்யப்பாடுகளைக் கீழே கேள்விகளாக எழுதுகின்றேன்:

1. இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால், இன அழித்தொழிப்புக்கான ஐக்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது. ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே ஐ.நா. வரையறை சொல்கிறது. இவ்வளவற்றையும் இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தியிருக்கிறது. இவைகுறித்து ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் நூல்களுமுண்டு ( முறிந்த பனை, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – 2011 ஏப்ரல்,  தமிழினப் படுகொலைகள் 1956 – 2008 , Palmyra fallen)

இவ்வாறிருக்க, ஐ.நா. வரையறையை மேலோட்டமாக  சுட்டிக்காட்டி நிழ்ந்தது இனப்படுகொலை அல்ல என நீங்கள்   நிறுவ முயல்வது சரிதானா? உண்மையில் உங்களது வாதம் ஐ.நா. வரையறைக்கு எதிரானதல்லவா?

2. இலங்கை மண்ணில் பிறந்து அந்த நாட்டை உருவாக்கிய அம்மக்களுக்கு குடியுரிமை மறுக்கபடவேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்றும் வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களின் பெருந்தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம்தான் பாராளுமன்றத்தில் அக்கோரிக்கையை முன்வைத்தார். அது இன ஒடுக்குமுறையேதான். ஆனால் அதைச் செய்தவர்கள் அங்குள்ள தமிழர்களும்தான்.

என்று சொல்லியிருக்கிறீர்கள். இது தவறான தகவல்.

இந்திய வம்சாவழி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தவர் ஜி.ஜி. பொன்னம்பலம் அல்ல. 1948-ல் இந்தச் சட்ட மசோதாவை, டி.ஸ். சேனநாயக்க தலைமையிலான யூ.ன்.பி. (ஐ.தே.க) அரசே பாராளுமன்றத்தில் முன்வைத்தது. முதலாவது மசோதாவை இடதுசாரிக்கட்சிகளும் ஜி.ஜி.பொன்னம்பலமும் அவர் தலைமை தாங்கிய தமிழ் காங்கிரசும் எதிர்த்தார்கள். இரண்டாவது தடவை இந்த மசோதா முன்மொழியப்பட்டபோது அப்போது யூ.ன்.பி. அரசில் அமைச்சராகிவிட்ட ஜி.ஜி.பொன்னம்பலம் மசோதாவை ஆதரித்தார். இத்தோடு ஈழத்தமிழ் அரசியலில் அவருக்கு வீழ்ச்சி ஆரம்பித்தது. அதன் பின்னால் அவரால் ஈழத் தமிழர்களிடம் அரசியல் ஆதரவை மீளப்பெறவே முடியவில்லை.

ஜி.ஜி.பொன்னம்பலம் அந்த மசோதாவை ஆதரித்ததால் அவரது கட்சியில் இயங்கிவந்த முன்னணித் தலைவர்களான எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,  கு.வன்னியசிங்கம், எம்.வி.நாகநாதன் போன்றவர்கள் உடனடியாகவே கட்சியைவிட்டு வெளியேறி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிற்கு மாற்றாகத் தமிழரசுக் கட்சியைத் தொடக்கினார்கள். இந்தக் கட்சிதான் அடுத்த சில தசாப்தங்களிற்கு ஈழத் தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரே கட்சியாக இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமையில்தான் இன்று தமிழ் மக்களிடம் பெரும்பான்மை அரசியல் ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கிக்கொண்டிருக்கிறது.

வரலாறு இப்படியிருக்க ‘பொன்னம்பலமே பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தார், இந்திய வம்சாவழித் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பியனுப்பபடவேண்டும் என்று வாதிட்டவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான்’ என்று நீங்கள் எழுத எப்படி நேர்ந்தது?

3. எழுபதுகளில் ஜனதா விமுதிப்பெருமுனே என்னும் இடதுசாரிக் கிளர்ச்சியமைப்பை முழுமையாகவே சிங்கள அரசு கொன்று அழித்தபோது சிங்கள அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தமிழ்க்கட்சிகள். இன்று இன அழித்தொழிப்புக்கு தாங்கள் அப்போதே ஆளானோம் என்று நம்மிடம் சொல்கிறார்கள்.

என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இதுவும் குழப்பமான கூற்றுத்தான். 1970 -ல் இலங்கையில் சுதந்திரக் கட்சி – இடதுசாரிகள் கூட்டாட்சி அமைந்தது. இந்த ஆட்சியிலேயே ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அழிக்கப்பட்டது. இந்தியா இராணுவமே நேரடியாக இலங்கையில் இறங்கி இந்த அழிப்பிற்கு இலங்கை அரசிற்கு துணைநின்றது. ஆனால் இந்தக் கூட்டாட்சி அரசு அமைந்ததிலிருந்தே அதைக் கடுமையாகத் தமிழ்க் கட்சிகள் எதிர்த்து நின்றன. தமிழர்களின் முக்கியமான மூன்று கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின.

ஜே.வி.பி. அழிக்கப்பட்டபோது தமிழ்க்கட்சிகள் இலங்கை அரசின் ஆணித்தரமான ஆதரவாளர்களாக இருந்தார்கள் என்று நீங்கள் சொல்வது எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது? அவ்வாறு ஆணித்தரமாக ஆதரித்த தமிழ் கட்சிகள் எவை?

4. மலையகத் தமிழர் சிங்களர் சூழ்ந்த பகுதிகளில் மட்டும்தான் வாழ்கிறார்கள். இன அழித்தொழிப்புக்கு அவர்கள் ஆளானார்களா என்ன?

என்று கேட்கிறீர்கள்.

இலங்கையில் நிகழ்ந்த நாடுதழுவிய எல்லா இன வன்செயல்களின் போதும் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் மலையகத் தமிழர்கள்தான். அவர்களில் கணிசமானோர் மலையகத்திலிருந்து அகதிகளாக 1970-களில் வன்னிக்குச் சென்று குடியேறினார்கள். இறுதி யுத்தத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களில் பெருந்தொகையினராக இந்த மக்கள் இருந்தார்கள். 1983 வன்செயல்களைத் தொடர்ந்து கணிசமானோர் நிரந்தரமாகவே தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார்கள். இவ்வாறு நிர்ப்பந்தித்து குடிபெயரச் செய்வது இன அழித்தொழிப்பின் ஒரு கூறில்லையா?

5. இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையென திருப்பித் திருப்பிச் சொல்பவர்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்தமிழரில் ஒருசாராரும் தமிழகத்தின் பிரிவினைபேசும் தமிழ்த் தேசியர்களும் மட்டுமே .

-என்கிறீர்கள்.

இன்று இலங்கையில் தமிழ் மக்களிடையே மிகப் பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் பெற்றிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் முன்வைப்பில் வடக்கு மாகாண சபையில் சென்ற வருடம் பெப்ரவரி 10ம் தேதி ‘இலங்கையில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை மீதான தீர்மானம்’ ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான டக்ளஸ் தேவானந்தா தலைமை தாங்கும் ஈ.பி.டி.பி. கட்சியும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தது. எனவே “நிகழ்ந்தது இனப்படுகொலை எனச் சொல்வது புலம் பெயர் தமிழரில் ஒருசாராரும் தமிழகத் தமிழ்த் தேசியர்களுமே” என நீங்கள் சொல்வது தவறாகாதா?

6. “சர்வதேசம் இதை இனப்படுகொலையென ஏற்றுக்கொள்ளாது”  எனத் திரும்பத் திரும்ப நீங்கள் நிறுவ முயல்கிறீர்கள். அதை நானும் மிகத் தெளிவாகவே அறிவேன். ஒரு சர்வதேச ஊடகத்தின் முன்னே நிகழ்ந்தது இனப்படுகொலை என நான் சொல்லும்போதே அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனத் தெரிந்தே சொல்கிறேன்.

இனப்படுகொலை விசாரணை மட்டுமல்ல, போர்க்குற்ற விசாரணைகள் கூட இலங்கை அரசுமீது நிகழாது என்பதையும் நானறிவேன். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்தியது போர்க்குற்றமே என நாங்கள் எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பச் சொன்னாலும் எந்த நாடும் எந்த சர்வதேச அமைப்பும் அதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

ஐ.நா. உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளும் தீவிரமான சாய்வுகளுடனேயே இயங்குகின்றன. அவை ஈராக்கிலும் லிபியாவிலும் பொஸ்னியாவிலும் காட்டும் அக்கறைக்கும் இலங்கை மீதும் மியன்மார் மீதும் காட்டும் பாராமுகத்திற்கும் வலுவான அரசியல் – பொருளியல் காரணிகளுள்ளன.

எனினும், திரும்பத் திரும்ப நீதி கேட்டு ‘நிகழ்ந்தது இனப்படுகொலை’ என நாங்கள் உலகை நோக்கிச் சொல்லவேண்டியவர்களாயிருக்கிறோம். இது நடந்து முடிந்த இனப்படுகொலைக்கான நீதி கோரிய குரல் மட்டுமல்ல. இனி இலங்கையில் இன்னொரு இனப்படுகொலை நிகழாதிருப்பதற்கான குரலும் கூட.

ஓர் இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட கதையை நான் எவ்வாறு சொல்லாமலிருக்க முடியும்? அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் எவ்வாறு முன்வைக்காமலிருக்க முடியும்? என்னைப் போன்றவர்களது குரல் நீங்கள் சொல்வது போன்று வெறும் உணர்சிவசப்பட்ட குரல் மட்டும்தானா? சென்ற ஆண்டு வடக்கு மாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை தீர்மானம்’ ஒரு பாதிக்கப்பட்ட சமூகத்தின் கூட்டுக் குரலில்லையா?!

அன்புடன்

– ஷோபாசக்தி

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.