பதிவுகள்
Typography

பாப்பரசரின் மியன்மார், பங்களாதேஷ் விஜயம்

பாப்பரசர் பிரான்ஸிஸ் அண்மையில் மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மியன்மாரில் சிறுபான்மையின முஸ்லீம்களான யோஹிங்கியர்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் மியன்மாருக்கு இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

கடந்த 8 வருடங்களில், மியன்மாரில் சிறுபான்மை இன முஸ்லீம்களான ரோஹிங்கியர்களை குறிவைத்து பௌத்த பேரினவாதக் குழுக்களின் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பல நூற்றுக்கணக்கான வீடுகள், கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், சுமார் 620,000 ரோகிங்கிய முஸ்லீம்கள், மியன்மாரின் ராகின் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஷின் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுபட்டுள்ள மியன்மாரில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தற்போதைய ஆங் சான் சூ கியின் அரசு,  மியன்மார் குறித்த தற்போதைய ஏனைய நாடுகளின் பார்வையை மாற்ற கடும் முயற்சி மேற்கொண்டு வருவதால், பாப்பரசர் பிரான்ஸிஸை நல்லபடி வரவேற்பது அவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

 இந்நிலையில் மியன்மாருக்குச் சென்றிருந்த பாப்பரசர், அங்கு நிகழ்த்திய உரையில் «மதவேறுபாடு என்பது, பிரிவினைவாதத்தையோ, ஐயப்பாடையோ ஏற்படுத்தும் ஒரு தளமாக இருக்கக் கூடாது. மாறாக ஒருமைப்பாடு, மன்னிப்பு, பொறுமை, தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பாண்டித்தியமாக இருக்க வேண்டும்» என தெரிவித்திருந்தார்.

மேலும் «மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மியன்மார் மக்களுக்காகவும் அரசு போராட வேண்டும்» என அவர் பொதுவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் «ரோஹிங்கியர்கள்» என பெயர் குறிப்பிட்டு அங்கு தற்போது நடைபெற்று வரும் இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தனது கண்டனப் பதிவை வெளிப்படையாக முன்வைக்காதது கடும் ஏமாற்றத்தை தருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டிருந்தனர்.

மறுபுறம், மியன்மாரில் வாழும் சிறுபான்மை இன கிறிஸ்தவர்களோ, பாப்பரசர் பொது உரையில் அவ்வாறு வெளிப்படையான கண்டனப் பதிவை முன்வைக்காதது ஒரு விதத்தில் நல்லதே. நாளை மியன்மாரின் பெரும்பான்மை பௌத்த மக்கள், நம்மீதும் தாக்குதல் நடத்தக் கூடும் என அச்சம் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் மியன்மார் விஜயத்தை முடித்துக் கொண்டு பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாப்பரசர் அங்கு மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்து அகதி தஞ்சம் புகுந்த பல நூற்றுக் கணக்கான ரோஹிங்கியர்களை சந்தித்ததுடன், «பிரிவினைவாதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் மியன்மாரில் ரோஹிங்கியர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு மன்னிப்பையும் கோரினார்».

அசின் விரது (Ashin Wirathu), யார் இவர் ?

மியன்மாரின் ரகின் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்து வரும் சிறுபான்மையின முஸ்லீம்களான ரோஹிங்கியர்கள் மீது, பௌத்த பெரும்பான்மையின மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? எங்கிருந்து, எப்போதிருந்து, இந்த இனச்சுத்திகரிப்பு தொடங்கியது? ஏன் தொடங்கியது? என்பதை அலசும் The Venerable W. எனும் ஆவணத் திரைப்படத்தை அண்மையில் பார்வையிடக் கிடைத்தது.

சுவிற்சர்லாந்து இயக்குனரான Barbet Schroeder இன் நெறியாள்கையில் உருவாகியுள்ள இத்திரைப்படம், ஆசின் விரது (Ashin Wirathu) க்கு மிக நெருக்கத்திலிருந்து படமாக்கப்பட்டுள்ளது.

மியன்மாரின்  சக்திவாய்ந்த பௌத்த பேரினவாத குழுவான தடைசெய்யப்பட்ட «969» இன் தலைவரான அசின் விரது அடிப்படையில் ஒரு பௌத்த துறவி. தேசியவாதி, எழுத்தாளர், போதகர், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்.  2014 இல் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  அவர் இலங்கையின், பௌத்த பிரிவினைவாதக் கட்சியினான  «பொது பல சேனாவுடன்» தனது  «969 இயக்கம்» கைகோர்த்து இயங்கும் என அறிவித்திருந்ததுடன்,  பொது பல சேனா கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த Great Sangha Conference எனும் மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே காலப்பகுதியில் இலங்கையில் பல கிராமஙக்ளில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள், இஸ்லாமியர்களின் கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தது  நினைவிருக்கலாம்.

மதத் தீவிரவாதம்

அண்மையில் நடிகர் கமல்ஹாசன், «இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது» என  தனது கட்டுரை ஒன்றில் தெரிவித்திருப்பார். «சமூகம் சமச்சீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர், இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழமைவாதத்தை சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீன தேன் தடவித்தர திணிக்க முயற்சி செய்கின்றனர்.

ஒரு சமுதாயமே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்துவரும் வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத் தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் துவங்கிவிட்டார்கள்» என அக்கட்டுரையில் அவர் சாடியிருப்பார்.

இந்தியாவின் தற்போதைய அரசியல், சமூக நிலைமைகளுக்கு, கமல்ஹாசனின் இக்கருத்துக்கள் எந்தளவு பொருந்துகிறதோ இல்லையோ, மியன்மாரின் தற்போதைய நிலைக்கு நன்றாகவே பொருந்துகிறது.

திரைப்படம் : The Venerable W. (மதிப்புக்குரிய வி*)

«The Venerable W» திரைப்படத்தை பார்த்து முடிக்கையில், «பௌத்த தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என்பதை இலங்கை மட்டுமல்ல, மியன்மாரும் நிரூபித்திருக்கிறது» என எண்ணத் தோன்றியது.

காவி உடையணிந்த பௌத்த துறவி «அசின் விரது» வையும் அவரை நம்பும், தொடரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பற்றியதே திரைப்படம். இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரக் கோட்பாடுகளுடையவரும், பௌத்த மதத்தின் வெறியருமான அசின் விரது, எப்படி பொது மேடைகளில் தனது தீவிரப் பிரச்சாரங்களை நடத்துகிறார். எப்படி சமூகவலைத்தளங்கள், டிவிடி குறுந்தட்டுக்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு அவசியத்தை பொதுமக்களிடையே பரவலடையச் செய்கிறார்.

அவர் எழுதிய நூல்கள், ஏனைய பௌத்த பீடங்களுடன் அவர் முரணடையும் விடயங்கள், சிறு பிள்ளைகள் முதல் இளைஞர்கள் வரை பௌத்த துறவறம் குறித்து அவர் நடத்தும் பள்ளிப் பாசறைகள், போதனைகள், அவரது 969 குழுவினரால் தூண்டப்படும் அப்பாவி பௌத்த பொதுமக்கள் எப்படி ரோஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் களமிறங்குகின்றனர், எப்படி ரோஹிங்கியர்களுடான வர்த்தக, பொருளாதார தொடர்பை புறக்கணிக்கின்றனர் என பல விடயங்களை அலசுகிறது இத்திரைப்படம்.

சவுதி அரேபியாவை பின்புலமாக கொண்டு பங்களாதேஷ் திட்டமிட்டு செய்யும் கிளர்ச்சியே, ரோஹிங்கிய இஸ்லாமியர்களின் மியன்மார் மீதான ஆதிக்கமும், இடப்பெயர்வும் என்பது அசின் விரதுவின் முக்கிய குற்றச் சாட்டு. மியன்மாரின் பௌத்த பாரம்பரிய பண்பாட்டை மெல்ல மெல்ல அழித்து, இஸ்லாமியக் குடியேற்றம், இனப்பெருக்கம் என்பவற்றை அதிகரித்து, முற்று முழுதாக மியன்மாரையும் இஸ்லாமிய நாடாக்குவதே அவர்கள் எண்ணம் என்பது அசின் விரதுவின் பிரச்சாரம்.

மியன்மாரின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய நாடாளுமன்றத் தலைவரான ஆங் சூ கி யி, பெரும்பாலும் மேற்குலக நாடுகளால் «அன்னை தெரேசா, அமைதியின் தலைவி» என கௌரவிக்கப்பட்டவர். அமைதிக்கான நோபல் பரிசையும் வென்றவர். ஆனால் மியன்மாரின் மற்றுமொரு தேசியவாதப் பிரதிநிதியாகவே அவரை தற்போது பார்க்க முடிவதாக புதிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரோஹிங்கியர்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக அவரது அரசும், காவல்துறையினரும் காட்டும் பாராமுக அலட்சியப் போக்கு, பௌத்த பேரினவாதிகளின் சுதந்திரமான அடாவடி நடவடிக்கைகளுக்கு மேலும் தீணி போடுகின்றன என்கிறது இவ்விமர்சனங்கள்.

The Venerable W திரைப்படம், அசின் விரதுவின் பிரத்தியேக செவ்வியுடன், அவருடைய கொள்கை வாதங்களை பற்றி அலசுகின்ற போதும், அதை நியாயப்படுத்தவோ, அல்லது விமர்சிக்கவோ இல்லை. மாறாக ஒவ்வொரு முறையும் அவர்கள் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் போதும், அதற்கான எதிர்வினைகள் என்ன என்பதனையும்,  வரலாற்று உதாரணங்களை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போது, அவற்றில் எந்தளவு உண்மை இல்லை என்பதனை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அசின் விரதுவும் அவரது பேரினவாத இயக்கமும், எந்தளவு தாங்கள் எடுத்துச் செல்லும் பிரச்சார நடவடிக்களையும், வன்முறைகளும் நியாயமானது என நம்புகின்றனர் என்பதனை படத்தை பார்க்கையில் உணர முடிந்தது.

இத்திரைப்படத்தின் திரையிடல் நிகழ்வுக்கு பின்னர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இதன் இயக்குனர் Barbret Shreoder இடம் எப்படி அசின் விரதுவை நெருங்கி இச்செவ்வியை உங்களால் மேற்கொள்ள முடிந்தது கேள்வி எழுப்பப்பட்டது. சுமார் 76 வயதான Barbret  Shreoder சொன்ன பதில், «பிரான்ஸில், மெரின் லெ பென்னின் தீவிர வலது சாரி தேசியவாதக் கட்சி, முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தருணம் அது. பிரான்ஸில் பொதுமக்களிடையே எப்படி  இஸ்லாம் மதத்தின் ஆபத்தை புரிய வைக்க முடியும், எப்படி பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதனை விளக்கவே இந்த ஆவணத்திரைப்படத்தை உருவாக்குவதாகவும், அதற்கு அசின் விரதுவின் அனுபவங்களும், உதவியும் தேவை எனவும் கூறியே அவரை நாடினேன்» என தெரிவித்தார்.

திரையுலகத்தால் எவ்வளவு தூரம் வரை, சாதுரியமாகச் சென்று, ஒரு சமூகச் சிக்கலை அணுக முடியும், அலச முடியும் என்பதனை அவரது பதில்களில் உணர முடிந்தது.

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

BLOG COMMENTS POWERED BY DISQUS