முற்றம்
Typography

'இஸ்லாமிய தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு எதிராக இந்துக்களிலும் தற்கொலை படை அமைக்கப்பட வேண்டும்' என அசாதாரணமாக கூறியதால், இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னரே பால் தாக்கரேவை எனக்கு தெரிந்திருந்தது.

 'ஹிட்லரை நான் தீவிரமாக பின்பற்றுகிறேன். ஹிட்லரின் தலைமைப்பண்புகள் பிரமிக்கவைக்கின்றன' எனக்கூறும் அரசியல் தலைவர்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறார்களா என தெரியவில்லை.

'முதலில் இந்தியன், அடுத்தே மராத்தியன், மும்பை அனைவருக்குமானது' என ஒரு முறை கூறியதற்கு,  'மராத்தியர்களின்  மனங்களிலிருந்து நீ விலக கடவாய்' என சச்சினுக்ககும் சாபமிட முனைந்தவர் பால் தக்கரே.

தீவிர இந்துத்வவாதி என்பதால் அவரை நீங்கள் நேசிக்கலாம், அல்லது வெறுக்கலாம். ஆனால் பால் தக்கரே பொய்யானவர் அல்ல. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்  அரசியல்வாதியல்ல.  மனதில் என்னபட்டாலும் சட்டென சொல்லிவிடுவார். தனக்கு சரி என்பது தான் சரி. அதை தான் சொல்வார். அதைத்தான் பின்பற்றுவார். இதனால்  தான் அவர் எந்தளவு நேசிக்கப்பட்டோரோ அந்தளவு வெறுக்கப்பட்டார். ஆனால் அதையெல்லாம் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.

கார்டூனிஸ்டாக இருந்து, தனக்கென தனியான பத்திரிகை ஆரம்பித்து, சிவசேனா கட்சியை நிறுவியது வரை, அவரது பிரதானமான கொள்கை, மும்பை, மகாராஷ்டிரா இரண்டும் மராத்தியர்களால் மராத்தியர்களுக்காக ஆளப்படவேண்டியவை என்பது தான். 60 களில் மும்பையில் இடதுசாரி கட்சிகளின் ஆளுமையிலிருந்த தொழிற்சங்கங்களை தனது வன்முறைப்பாணியிலான முயற்சிகளால் கட்டுக்குள் கொண்டு வந்ததும், மற்றொரு புறம் குஜராத்தியர்கள், மர்வாடியர்கள் மற்றும் தென்னிந்தியர்களின் மும்பை நோக்கிய 'குடிப்பெயர்வு' ஆதிக்கத்திற்கு எதிராக போராடத்தொடங்கியதும் பால் தக்கரேயின் சிவசேனா கட்சியை பெரிதும் பிரபலப்படுத்தியது.

மராத்தியர்களின் வேலை வாய்ப்புக்களை வேற்றினத்தவர்கள் தட்டிப்பறிப்பதை அனுமதிக்க முடியாது என 1966ம் ஆண்டு, தனது தீவிர பிரச்சாரங்களின் ஊடாக எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்கிய பால் தக்கரே அப்படித்தான் அரசியலில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டவர் என கூறுவதுண்டு.

இந்தியாவை கட்டுக்கோப்பாக வளப்படுத்த, ஒரு சக்திமிக்க ஆளுமையான இரும்புக்கரம் தேவை. இல்லையேல் பல விதிமுறைகளை நிறைவேற்ற முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தவர். பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிர மாநில ஆட்சியை 1995இல் கைப்பற்றிய போது அவரை 'Remote-control' என்றே அம்மக்கள் அழைத்தனர். காரணம் பால் தக்கரேவின் மறைமுக கட்டுக்குள் தான் அனைத்தும் இருந்தது.

இன்று சிவசேனாவின் பெரும்பாலான செயற்பாடுகள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவையாக தோற்றம் தருகின்றன.  ஆனால் நாம் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் அல்ல, இந்நாட்டு சட்டதிட்டங்களை மதித்து நடக்காது, வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களை தான் எதிர்க்கிறோம் என்றார் பால் தக்கரே. அதே நேரம் அவர் இந்து சமயத்தின் சாதிப்பிரிவுகளையும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்.

இருந்த போதும், அவரது கட்சியின் சில செயற்பாடுகள் மிரட்டல் அதிகார போக்கில் காட்சியளிக்கின்றன என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். ஆனால் யாரால் இவர்களை எதிர்க்க முடியும்? 'நீங்கள் எங்களுடன் மோதினால், நாங்கள் கலவரத்தை உண்டுபண்ணுவோம். மும்பையை முற்றாக முடக்கிவிடுவோம்' என கூறும் ஆள் பலம், அதிகார பலம் பால் தக்கரேவின் கட்சிக்கு இருக்கிறது. மும்பை போன்று கைத்தொழில் நகரமொன்று ஒரு நாள் முற்றாக இயக்கமின்றி இருந்தால் என்னவாகும் என்ற கவலை, பயம் யாருக்கு தான் வராது?

 இலங்கையில் வி.புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்கான நான் அவர்கள் குறித்து பெருமை அடைகிறேன் என பால் தக்கரே ஒருமுறை கூறியதும் சச்சையாகியிருந்தது. பால் தக்கரே எவ்வளவு பேரை, எவ்வளவு விதமாக விமர்சித்து பேசியிருந்தாலும், இதுவரை அவர் பொதத் தேர்தலில் நேரிடையாக போட்டியிட்டது இல்லை. இதுவரை சிறைச்சாலை கம்பிகளையும் எண்ணியதில்லை.

பால் தக்கரே அரசியலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பால் தக்கரேவின் மகன் உதவ் தக்கரே தற்போது சிவ சேனா இயங்கு நிலை கட்சித்தலைவராக இருக்கிறார். 'நீங்கள் எனக்கு வழங்கிய ஆதரவையும், கௌரவத்தையும் என் மகனுக்கும் கொடுக்க வேண்டும்' என்பது பால் தக்கரேவின் கோரிக்கை. ஆனால் அவரது உறவினர் ராஜ் தக்கரே சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்று தனியாக ஆரம்பித்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் மும்பையில் ஆதிக்கம் பெற்று வருகிறது. பால் தக்கரேவை நீங்கள் சினிமாவில் பார்க்க வேண்டுமெனில், அமிதாப் பச்சன் நடித்து அண்மையில் வெளிவந்த  Department ஹிந்தி திரைப்படத்தை பார்க்க வேண்டும். பால் தக்கரேவின் சாயலை அப்படியே வெளிப்படுத்தும் கச்சிதமான நிழல் உலக தாதாவாக அதில் அமிதாப்ஜி நடித்திருப்பார். 


நேற்று நவ.17ம் திகதி மாலை பால் தக்கரே தனது 86வது வயதில் மாரடைப்பால் உயிர் துறந்த செய்தி கேட்ட போது, பால் தக்கரேவின் சிம்மாசனத்தை கைப்பற்ற வேறு யாராலும் இந்த தசாப்தத்திற்குள் நெருங்க முடியுமா என்ற மனக்கேள்வியும் கேட்டுக்கொண்டிருந்தது. பால் தக்கரே மறைந்து விட்டார். ஆனால் அவரது புதிய அரசியல் பிராண்டு மறையவில்லை. அவருடைய கொள்கைகள் பெரும்பாலான நேரங்களில் தவறானதாக இருக்கும் போதும், அவரை வெறுப்பவர்களையும், அவர் மீது ஈர்க்கவைக்கும் திறன் பால் தக்கரேயின் வெளிப்படையான, நேரான பேச்சுக்கு இருந்திருக்கிறது. அவரது வம்சாவளியினரும் இதை கைக்கொள்வார்களா? நேர்மையாக இல்லையென்றாலும் குறைந்தது நேர் பட பேசுவார்களா?

தொடர்பு செய்தி : பால் தக்கரேயின் இறுதி யாத்திரை : மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது மும்பை

- 4தமிழ்மீடியாவுக்காக சரண்.ஜிவேஷ்முற்றத்தில் எமது வாசகர்களின் முன்னைய பதிவுகள்

 எமது முற்றம் பகுதிக்கு நீங்கள் புதியவரா? : இதை வாசிக்க

வருகைக்காகக் காத்திருக்கும் முற்றம்!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்