முற்றம்

'அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல. நான் எதைப் பிளான் பண்ணினாலும் அது ஒண்ணுமே சரியா ஆவுறதில்ல' - நண்பர்களிடம் விளையாட்டாக அவ்வப்போது சொல்வதுண்டு. 

"எப்போதும் பொசிட்டிவ்வாக திங்க் பண்ண வேணும், நெகடிவ்வா யோசிக்கிறதுதான் பெரிய பிரச்சினை" என யாராவது சொல்லும்போது கேட்க நல்லாயிருக்கும். ஆனால், 'அதெல்லாம் பழக்கமில்லை' என்பது மட்டும்தான் அதற்கான பதிலாக இருக்கும். அப்படி நினைப்பதற்கு ஏதாவது பொசிட்டாவ்வாக நடந்து தொலைத்திருக்க வேண்டுமல்லவா?

நாம் ஒன்றைப் பிளான் பண்ணி ஆரம்பிக்கும்போதே, எங்களுக்கே தெரியாம பயங்கர ட்விஸ்ட்டோட ஒரு கிளைமாக்ஸ் ஆப்பு ரெடியாகிடுவிடுகிறது! அது எப்பிடி? முதல் சீன் மட்டும் நாங்கள் எழுதி அப்பிடியே ஆரம்பிக்குது? பிறகு? ஸ்டார்ட்டிங் - கிளைமாக்ஸ் இந்த ரெண்டுக்கும் நடுவில இருக்கிற சீன்ஸ், ட்விஸ்டுகள், ஆக்க்ஷன்கள், டைமிங் இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறதிலையே! யார் இவ்வளவு கச்சிதமாக ஸ்க்ரீன் ப்ளே எழுதுவது? அதெப்பிடிடா நம் எல்லாருக்கும் ஒரே மாதிரியே நடந்து தொலைக்குது? - இந்த மாதிரி நண்பர்களிடையே கேட்டுக் கொள்வோம்.

நண்பர் ராஜனின் தன்னம்பிக்கை என்னை அடிக்கடி பிரமிக்க வைக்கும். எதற்கும் துவண்டு போகாத, விழும்போதெல்லாம் மீண்டும் அதீத தன்னம்பிக்கையோடு போராடும் உத்வேகத்தை அவரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் எஞ்சினியரிங் படித்துவிட்டு வந்தவர், ஏதோ ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பெற்றோரும், உற்றாரும் போற்றும் நல்லபிள்ளையாக வேலைக்குச் சென்றிருக்கலாம். பத்தோடு பதினொன்றாக, மன்னிக்கவும் நூறோடு நூற்றி ஒன்றாக ஆகாமல் சொந்தமாக சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் களமிறங்கினார். ADSL தொழில்நுட்பம் அறிமுகமாகாத அந்தக் காலத்தில் முதன்முறையாக வயர்லெஸ் இன்டர்நெட் என்பதை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, அதுவரை இல்லாதவாறு சில குறித்த பிரவுசிங் சென்டர்களில் வேகமாக இணைய சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடிந்தது.

2004ஆம் ஆண்டில் புதுவருடம் பிறப்பதற்கு இரண்டு நாட்களேயிருந்தன. ராஜனோடு, ரங்கா, மைந்தன், நான், எபி, ஜேப்பி, ஜனா எல்லோரும் அப்போது யாழ் தொழில்நுட்பப் பூங்கா இயங்கிவந்த கட்டடம் நோக்கிச் சென்றோம். கச்சேரிக்கு முன்னாள் யாழ் பழைய பூங்காவிற்கு அருகிலிருந்தது. அதன் அறுபதடி உயரத் தண்ணீர்த்தாங்கி உச்சி மீது இருபதடி உயர சிறிய டவர் அமைத்து, அதன் மீது ஏறி நின்றுகொண்டு' பனல் அண்டனாக்கள் பொருத்திய இன்னொரு இருபதடி பைப் ஒன்றை ஆளைத்தள்ளிவிடும் காற்றில் மேலே நின்று பொருத்தி வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தோம். வெற்றிக்களிப்போடு நீர்த்தாங்கி உச்சியிலிருந்து ஈர்க்குவாணம் கொளுத்திக் கொண்டாடிய புதுவருடத்துக்கு முன்னைய இரவு என்றும் மறக்க முடியாதது. ஓரிரு நாட்களில் தெரிந்தது இறக்குமதி செய்திருந்த இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றை மாற்றி அனுப்பியிருந்தார்கள். மீண்டும் கொள்வனவு செய்து, மீண்டும்...! எல்லாம் நல்லபடியாக முடிந்தது. யாழ்ப்பாணத்தின் மிக விரைவான இன்டர்நெட் சேவை உருவானது. சரியாகவே போய்க் கொண்டிருந்தது. 2006 இல A9 பதை மூடப்பட்டு, மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது.

அதுவரை பிரவுசிங் சென்டர்கள் இலாபகரமான தொழிலாக இருந்தது. இனியொரு யுத்தம் ஆரம்பிக்காது என்றே பலரும் நம்பியிருந்தார்கள். ராஜன் இணைய சேவையை விரிவுபடுத்தி, மேலும் முதலீடுகளை மேற்கொண்டிருந்தார். நம்பிக்கையுடன் அவர் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம் இப்போது பிரச்சினையாக வந்தது. இணைய சேவைக்காகப் பெற்றுக் கொண்ட ஓரிரு லட்ச முன்பணம், விலகிக் கொள்ளும்போது திருப்பிக்கொடுக்கப்படும் என்பதே அது. நாட்டின் சூழ்நில எதிர்பாராது மாறிவிட அனேகமாக சம்பந்தப்பட்ட எல்லோரும் கொழும்பில் வந்து நின்றுகொண்டு 'பணத்தைத் திருப்பிக் கொடு'. ஓரிரு லட்சம் பெரிதல்ல. ஒரே நேரத்தில் ஐம்பதுபேர் கேட்டால்? சிலர் ராஜனுக்கு கொடுக்கவேண்டிய பணத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்கள். நம் சக தமிழ் உறவுகளின் நேர்மையான இன்னொரு பக்கத்தையும், வியாபர புத்தி, புதிதாக வருபவனை முன்னேற தடுக்கும் வியாபார தந்திரங்கள் என ராஜன் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்!

கொழும்பில் வேலை செய்த நிறுவனத்தில் என்னுடைய ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டிருந்தது. அதே நிறுவனத்தின் புதிய வேலையைப் பொறுப்பெடுக்கச் சொன்னார்கள். அதே நேரத்தில இன்னொரு நிறுவனத்தில் இருந்தும் வேலை கிடைத்தது. அது ஓர் நல்ல வாய்ப்பு. வேலைக்குச் சேர இருவாரமிருந்தது, அடுத்தவாரமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். அதுவரைக்கும் எல்லாம் நல்லபடியாக நடந்தது. நான் ஒரு திட்டம் போட்டேன், 'நெடுநாட்களாகிவிட்டது, அதனால் இடையில ஒரு வாரம் யாழ்ப்பாணம் சென்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்'.

நான் யாழ் போய் இறங்கிய அன்றே A-9 வீதி மூடப்பட்டது. மூன்று மாதங்கள் கொழும்பு திரும்பி வரமுடியாமல் அங்கேயே சிக்கி, வேலையும் இல்லாமல், நொந்துபோய் கப்பலில் கொழும்பு வந்து சேர்ந்தேன். அங்கே சிக்கிக் கொண்ட காலத்தில் அடிக்கடி யோசித்துக் கொள்வேன். அதெப்பிடிறா சொல்லி வச்ச மாதிரி வந்து சிக்கினேன்? எனக்கு மட்டும் ஏனிப்பிடி? அதன்பிறகு எந்ததுன்பத்தையும் தாங்கும் சக்தி வந்துவிட்டது. எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை.

நண்பன் தர்ஷன் கொழும்பில நாங்கள் வேலை செய்த BPO நிறுவனத்தின் கிளையன்டிடமே வேலைக்குப் போனான், கனடாவுக்கு! என்மீது எப்போதும் அக்கறை கொண்ட அவன் போகும்போது சொன்னான், "மச்சான் அடுத்ததா நீ வர்றே...போனதும் நான் ட்ரை பண்றேன்.. நீயும் ட்ரை பண்ணு'. என் ராசி தெரிந்திருந்தாலும் அவன் அவ்வளவு நம்பிக்கையாகச் சொன்னதால் நானும் நேர்மறையாகச் சிந்தித்தேன். அவன் போய் நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். அமெரிக்காவில் ரிசர்சன் வந்துவிட்டது. அத்தோடு முடியவில்லை. எங்கள் கிளையண்ட்கள் ஓரிருவர் தவிர எல்லோரும் அமெரிக்கர்கள். அடுத்தவருடம் நிலைமை மோசமாகி, நிறுவனத்தின் குடைச்சல்களும் ஒரு காரணமாக நானும் வெள்ளவத்தையில் வெட்டியாகச் சுத்திக் கொண்டிருக்கும் அசம்பாவிதம் நேர்ந்தது. நினைத்திருக்கவில்லை, ஆனாலும் அலட்டிக் கொள்ளவில்லை.

ஒரு அசம்பாவிதத்தின் விளைவாகப் பல அசம்பாவிதங்கள் நிகழலாம். அப்படித்தான் சும்மா இருந்த பொழுதொன்றில் பள்ளி நாட்களில் தமிழில் உருப்படியாக ஒரு கட்டுரையே எழுதியறியாத நான் ஒரு வலைப்பூ(Blog) ஒன்றை ஆரம்பித்து எழுதத் தொடங்கினேன்.

தயா அண்ணன் கிளிநொச்சியிலிருந்து 96 ஆம் ஆண்டுக் கடைசியில் வவுனியா வந்திருந்தார். கல்வியியல் கல்லூரியில் கற்பதற்கான அனுமதி கிடைத்திருந்தது. அதைக்காரணமாகக் காட்டியே அலைந்து திரிந்து புலிகளிடமிருந்து பாஸ் எடுத்து அப்பா, அம்மாவுடன் வந்தவர் நேராக வேப்பம்குளம் தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். அப்போதைய வழக்கப்படி, வன்னியூடாக வரும் இளைஞர்கள், யுவதிகள் குடும்பத்திலிருந்து தனியாக ஓரிரு மாதங்கள் தனியாக தடுப்புமுகாமில் வைக்கப்பட்டு விசாரித்துப் பிறகுதான் வெளியில் விடுவார்கள்.

நேரம் மட்டும் நன்றாக அமைந்துவிட்டால் மற்றதெல்லாம் அமோகமாக நடக்கும் என்று அனுபவஸ்தர்கள் சொல்வார்களில்லையா? தயா அண்ணனுக்கும், அவரது நண்பருக்கும் அன்று நேரம் கைகூடி வந்திருந்தது. அனுமதி பெற்று எதிரிலிருந்த கடைக்குச் சென்ற இரண்டு பேரிடமும் அடையாள அட்டையை வாங்கிச் சென்றுவிட்டார் சி.ஐ.டி ஒருவர். அதனை மீளப் பெற்றுக் கொள்ள வவுனியா பண்டகசாலைக்கு வரச் சொல்லியிருந்தார். அது வவுனியா நூலகத்திற்கு அருகாமையில் பூங்காவீதியில் அமைந்திருந்தது. அது அவ்வளவு முக்கியமல்ல. அந்தச்சாலையோடு இணைந்திருந்தது எஸ்.டி.எஃப் என்கிற அதிரடிப் படையினரின் முகாம். அங்கேதான் வரச் சொல்லியிருந்தார்கள்.

அன்று மாலையே விட்டுவிட்டார்கள். உடனே அவ்வளவாக ஒன்றும் தெரியவில்லையாம். அல்லது மரத்துப் போய் விட்டிருக்கலாம். ஓரிரு வாரங்கள் சென்றிருக்கிறது, எழுந்து நல்லபடியாக நடமாட. வெளிக்காயங்கள் இல்லை. ஊமைக்குத்து என்பார்களே அப்படியிருக்கலாம். தொடர்ந்து ஆறுமாதங்கள் மலசலங்கழிக்கையில் பயங்கர வலி, இரத்தம் கலந்து போய்க் கொண்டிருந்ததாம். அடிக்கடி உடல்நலக் குறைவு. இடையில் கல்வியியற் கல்லூரியில் பதிவு செய்ய முடியவில்லை. இரண்டாம் முறை முயற்சித்தபோதும் மலேரியா வந்து தவறிப் போனது. வாழ்க்கையில் மாறி மாறி, துயரம் சுழற்றிச் சுழற்றி அடிக்குது என்பார்களே அப்படித்தான். இயலாத நிலையில் தந்தை. கடைசிமகனான தயா அண்ணன் படிப்பதற்குச் சாத்தியம் ஏதுமிருக்கவில்லை. தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றியாக வேண்டும். ஆட்டோ ஓடுவது, மேசன் வேலை, மணல் பறிப்பது எந்த வேலையாக இருந்தாலும் போய்விடுவாராம். அடுத்த வேளைச்சாப்பாட்டுக்கு உழைத்தேயாக வேண்டும் என்கிற சூழ்நிலையில் எந்த வேலைக்கும் தயாராகவே இருந்தேன் என்றார்.

யாழ்ப்பாணத்தில் மாட்டிக் கொண்டு நான் கவலைப்பட்ட நாட்களில் தயா அண்ணன் சொன்ன தன் அனுபவங்களில் ஒன்று. இதற்குப் பிறகும் நான் கவலைப்படுவேனா? அவர் கூறும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பான திரைக்கதைபோல ஏகப்பட்ட திருப்பங்களுடன் அமைந்திருக்கும். அப்போது அவர் அரசாங்க உத்தியோகத்தில் இணைந்திருந்தார். அது பிறகு இன்னொரு பெரிய சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லாத கதை. ஆச்சரியமாக இருக்கும் எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் இவ்வளவு அனுபவங்கள் கடந்து?

"எப்பிடிண்ணே? எப்பவாவது கவலைப்படிருக்கீங்களா? ஏன் எனக்கு இப்பிடியெல்லாம் நடக்குதுன்னு?"

"அந்த நேரங்கள்ல அதுக்கெல்லாம் நேரம் கிடைக்கிறேல்ல!"

எங்களால் செல்லமாக சிவம்பிள்ளை என அழைக்கப்படும் நண்பன் மைந்தன். சொந்தத்தொழிலில் உழைத்து முன்னேறிவிடும் பிரயாசையில் இருக்கும் நல்லவன். ஆனால் பாருங்கள், அவன் எந்த பிசினஸ் ஆரம்பித்தாலும் அவனுக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் அந்த 'லைனி'ல் இருக்கும் எல்லாருக்கும் சேர்த்து பிசினஸ் படுத்துடுது என்று அவனே சொன்னான். அவன் ஒரு நெட் கஃபே ஆரம்பித்தான். ஓரிரு மாதங்களிலேயே யாழ்ப்பாணத்தில் அநேகமான வீடுகளில் இணையம் பாவனைக்கு வந்துவிட்டது.

பல துறைகளில் 'பட்டு' நொந்துபோயிருந்த சமயத்தில் புதிதாக ஒரு பிசினஸ் பிளான்(?!) பற்றிச் சொன்னான். அதாவது,

இனி ஒரு பிசினஸ் யோசனை தோன்றும்பட்சத்தில், ஏற்கனவே அந்தத் தொழிலில இருக்கிறவர்களுடன் ஒரு பேச்சுவார்த்தை நடத்துவது. "இத பாருங்க நான் தொழில் தொடங்கினா எனக்கு மட்டுமில்ல நம்ம எல்லாருக்கும் சேர்த்து ஊத்திடும்.. அதனால எனக்கு ஒரு அமவுண்ட் செட்டில் பண்ணினா நான் தொழில் தொடங்க மாட்டேன். அது உங்க எல்லாருக்குமே நல்லது. என்ன சொல்றீங்க?"

பின்னர், சிவம்பிள்ளை இரண்டு டிப்பர்கள் வாங்கியிருந்தான். யுத்தத்தின் பின்னரான கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடைபெறுவதால், டிப்பரை வாடகைக்கு விட்டு உழைக்க முடியும் என்கிற யோசனையில் செகண்ட் ஹாண்ட் ஆக வாங்கியிருந்தான் எனக் கேள்விப்பட்டிருந்தேன். சிலமாதங்களின் பின்னர் வேறொரு நண்பனிடம் பேசும்போது, "சிவம்பிள்ளை கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துகுமிடையில் ஒரே ஓடித்திரிகிறான்" என்றான்.

"டிப்பர் எடுத்தது நல்லா ஓடுதுபோல" என்றேன்.

"டிப்பர் கிளிநொச்சில ஒரு கராஜில நிக்குது, இவன் பஸ்ஸில ஓடித்திரியிறான் அதைத்திருத்த" என்றான். "அது வாங்கின நாள்ல இருந்து வேலை வச்சுட்டே இருக்கு. போற வழில எங்கயாவது நிண்டிடும். ஏதோ வர விலைக்கு வித்தாதான் அவனுக்கு நிம்மதி" என்றான். பின்பு விற்றுவிட்டனாம்.

நண்பர்களின் சோகங்களுக்கு மருந்தாவது நகைச்சுவையுணர்வு மட்டுமே. யாரும் ஆறுதல் கோருவதோ, கூறுவதோ கிடையாது. அக்கறை என்பதுகூட கிண்டல்களும், கலாய்த்தல்களுமாகவே இருந்திருக்கின்றன எப்போதும். ஆக மிஞ்சிப்போனால் "டேய் இதெல்லாம் ஒரு பிரச்சினையா.. அவனுக்கு நடந்தது தெரியுமா?" என ஆரம்பித்து இன்னொருத்தன் சோக வரலாறு கூறப்படும். நாளை இவன் வரலாறு மற்றொருவனுக்குக் கூறப்படும்.

உதவி செய்யப் போய்ச் சிக்கலில் மாட்டுவது தனிரகம். அநியாயத்திற்கு நல்லவன் என்பார்களே, அப்படியொருத்தன் ஜேப்பி. உதவி என்று யார் கேட்டாலும் என்ன வேண்டுமானாலும் தன்னால் முடிந்தது, முடியாதது எல்லாம் செய்வான். இப்போது அப்படியிருக்க மாட்டான் என நம்புகிறேன். அவனது அனுபவங்கள் அப்படி!

ஒருமுறை அவசரமாக பக்கத்தில் எங்கோ போய்வரச் சைக்கிள் கேட்டிருக்கிறார் தெரிந்தவர் ஒருவர். அவனுடையதை நண்பன் கொண்டு சென்றிருக்க அண்ணனின் சைக்கிளைத் தூக்கிக் கொடுத்துவிட்டான். அவ்வளவுதான். சைக்கிள் கேட்டவன் திருட்டுப் பேர்வழி. அடுத்த ஓரிரு வாரங்கள் திருடன் ஊருக்குள் தெனாவெட்டாகத் திரிய, ஜேப்பி தன் அண்ணனுக்கு ஒழித்துத்திரிந்தது பெரும் சோக சரித்திரம்.

அவனுக்கு நிகழ்ந்த ஆகப்பெரிய சம்பவம் கொடுமையானது. யாரோ ஒருவர் அவசரமாக வட்டிக்குப் பணம் வேணுமென்று கேட்டதில் பெற்றுக் கொடுத்திருக்கிறான். வாங்கியவர் அடுத்தமாதமே தற்கொலை செய்துகொண்டாராம். ஜேப்பி? பத்து லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியிருந்தான். இனி யாருக்காவது உதவி செய்யப் போவானா?

அதுபோலத்தான் நண்பன் ஷைல். தன் நண்பர்களுக்காக உதவுவதில் முன்னிற்பான். அடிக்கடி யாராவது ஒரு நண்பன் பண விஷயத்தில் ஆப்பு வைத்துவிடுவான். சமீபத்தில் லண்டனிலிருந்து வந்தபோது வித்தியாசமான ஒரு அனுபவத்தைச் சொன்னான்.

"எங்கட ஸ்கூல் பெடியன்ரா எங்கட பட்ச் வேலையில்லாம இருக்கிறானெண்டு நான் வேலைசெய்யிற கம்பனில எடுத்துப் போட்டன்டா. பொஸ் என்னட்ட ஒண்டும் கேக்கிறதில்லடா. என்னில அவ்வளவு நம்பிக்கை. நானும் அப்பிடித்தான் நடந்துகொள்ளுறது. மூண்டு நாள் பெல்ஜியம் போயிருந்தன் கிளையன்ட் மீட்டிங். மூண்டு நாள்தான்டா அதுக்குள்ளே என்னைப் பற்றி என்னென்னமோ வத்தி வச்சிட்டான். என்னட்ட கேள்வி கேட்டான் பொஸ். நான் வெளில வந்துட்டன்... எங்கட பெடியன் நல்லா இருக்கட்டும்னு வேலைக்குச் சேர்த்தண்டா என்னடா பண்றது? அங்க இப்பிடித்தாண்டா" - சிரித்துக் கொண்டே சொன்னான். பண விஷயமாக சிலர் சுத்தியிருந்ததையும் யாருக்கோ நடந்ததுபோலச் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்தளவிற்குப் பழகிப்போயிருந்தது!

"அதென்னமோ தெரியலடா ரோட்ல சும்மா நடந்து போறவனுக்கும் நம்மளப் பாத்தா ஓடிவந்து முதுகில குத்திட்டுப் போகவேணும்னு இருக்குதுபோல" நான் நண்பனுக்குச் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. நொந்து போயிருக்கும்போது இயல்பாகவே 'பஞ்ச் டயலாக்ஸ்' எல்லாம் பறக்கும்.

"நாங்கெல்லாம் பிரச்சனையப் போர்வையாப் பொத்திட்டு தூங்குறவங்க... நாளுக்கு நாலு பிரச்சினையச் சந்திக்காட்டி நித்திரையே வருதில்ல".

ஞானிகள், துறவிகள் சொல்வது போல அது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வது எப்போதும் சாத்தியமில்லையே. புத்தி, மனம் இரண்டுமே ஒன்றாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். வாழ்க்கையில் நிறையவே அடிப்பட்ட பிறகு வேறு வழியில்லாமல் ஏற்படும் மனநிலை என்று அதனைக் கூறலாமா? நானும் நண்பர்களும் அவ்வப்போது சேர்ந்து எங்கள் அனுபவங்களை வைத்து நிறைய ஆராய்ச்சி(?!) செய்ததில் கிடைத்த முடிவுகள் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. முயற்சி எப்போதாவது திருவினையாக்கும், நம்ம உழைப்பு எப்படியும் யாருக்கோ உயர்வைத் தரும் என்பது போல இசகு பிசகாகவே இருந்தது.

என்னதான் நாங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும், அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது. சிலர் பார்வையில் அது கடவுள், சிலர் அதிருஷ்டம் என்பார்கள். சிலருக்கு அது தன்னம்பிக்கை. சிலர் அதை விதி என்பார்கள். அதைத்தான் 'நமக்குக் கிடைக்கணும்கிறது கிடைச்சே தீரும். கிடைக்காதது என்னதான் தலைகீழாக நின்றாலும் கிடைக்காது' என பஞ்ச டயலாக் அடித்து கிலியை ஏற்படுத்துவார்கள். சில வேலைகளில் அதுதான் உண்மையோ எனத் தோன்றவைக்கும். எல்லாப் பக்கத்திலிருந்தும் துயரம் சுழற்றிச் சுழற்றி அடிக்கும்போது எதைச் சொன்னாலும் நம்ப ஆரம்பித்துவிடுகிறது பலவீனமடைந்த மனம்.

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடையே இல்லை. பல நிகழ்வுகளுக்குத் தர்க்க ரீதியாக எந்த விளக்கமும் கிடைக்காது. சினிமா பார்த்துவிட்டு லொஜிக்கே இல்லையே என்போம். ஆனால் வாழ்க்கை? லொஜிக்கே இல்லாத அபத்த சினிமாவாகவே தோன்றுகிறது! நம்மைச் சுற்றி நடப்பது எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது எனில், அதுவே உண்மை எனும் பட்சத்தில், எல்லாமே மிகத் திருத்தமாகத் தயாரிக்கப்பட்ட டிசைன்ஸ் என்றால் நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது வேடிக்கை பார்ப்பதைத் தவிர?

பதில் நம்பிக்கை மட்டுமே! நம்பிக்கை கொண்டு விடாமுயற்சியுடன் போராடலாம் என்பது மட்டுமே. நண்பன் சொல்வான் "எதையும் முழுசா நம்பினா நடக்குது.. நடக்கும் சில நேரங்களில லேட் ஆகுது ரெண்டுவருஷம் தள்ளிப்போகுது ஆனா நடக்குது".

பள்ளி நாட்களில் சிறுவருக்கான பொது அறிவுப் போட்டியில் கலந்துகொண்டுவிட்டு வரும்போது ஓர் உயர்தர வகுப்பு அண்ணன் கேட்டார்.

"எப்பிடியடா?"

"நல்லாச் செய்யலன்னு நினைக்கிறேன்" - எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.

அவர் சிரித்துக் கொண்டே, "அதுக்கென்னடா வர்ற முறை அடிக்கலாம். எல்லாம் வெல்லலாம்!"

சாதாரண வார்த்தைதான். சொல்லும்போது, அந்தச்சிரிப்பும், அவர் உடல் மொழியும் இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது. எனக்கு மிக மிகப் பிடித்த வார்த்தையாகிப் போனது 'எல்லாம் வெல்லலாம்!'

உண்மையில் தோல்வியில் துவண்டு வீழ்ந்து கிடைக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு நம்பிக்கையும் சேர்ந்தே துளிர்க்கிறது. அது எங்களை அறியாமலே நிகழ்கிறது போலும். அதுவே நம்மைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

எதையும் பொசிட்டிவ்வாக எடுத்துக் கொள்வதில் நண்பன் சத்யனை யாரும் அடித்துக் கொள்ளவே முடியாது! இருந்தால் மனுஷன் அப்பிடி இருக்க வேண்டும்.

வெள்ளவத்தையில் ஒரு பிரபல சாப்பாட்டுக் கடை. நண்பர்கள் எல்லாரும் பால் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். வந்தது.

"டேஸ்ட் ஒரு மாதிரி இருக்கே" - நான்.

"அது... மைலோ போட்டிருக்கிறாங்க" - சத்யன்.

"நாங்க போடச் சொல்லலயே?"

"அவங்களா போட்டிருக்காங்க போல...நல்லதுதானே!" - சத்யன்.

பரிசாரகர் வந்தபோது, இது பற்றி ஒருத்தன் கேட்டான். அவர் அசடு வழிந்து கொண்டே,

"அது....வந்து... பால் கொஞ்சம் அடிப்பிடிச்சுட்டுது!"

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.