முற்றம்
Typography

காலண்டருக்கும் கண்டக்டருக்கும் முடிச்சு போட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது மீடியா. ரஜினியின் முந்தைய பிறந்த நாட்களில் எல்லாம் இப்படி ஒரு கொண்டாட்டம் நடந்ததில்லை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மத்தியில்.

ஆனால் 12-12-12 தேதியான இந்த தினத்தில் மட்டும் ரஜினி ரசிகர்களை விட அதிகமாக குதிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் இவர்கள். அதற்கு காரணம் நியூமராலஜி ஜோதிடர்கள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டிய இந்த கவர்ச்சியான தேதி மட்டும்தான்.

' ரசிகர்கள் ரஜினிக்காக ரத்தம் கொடுக்கலாம். ஆனால் டாக்டர்கள்தான் சிகிச்சை தர முடியும். சினிமா உலகின் டாக்டர்களாக இருக்க வேண்டிய மீடியா, தானும் ரசிகனாக மட்டுமே குறுகிப் போய்விட்டது சமூகத்துக்கு இன்னொரு இழப்பாகும் '. இந்த வார சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பிரபல எழுத்தாளர் ஞாநி எழுதிய கட்டுரையின் கடைசி வரிகள்தான் இவை. அந்த வரிகளில் பெரிய நியாயமும் இருக்கிறது. ஏனென்றால், ஆனந்த விகடன், குமுதம் மாதிரி முன்னணி இதழ்களில் கூட இதே 12 ந் தேதிக்கு முதல் நாளில் அவதரித்த புரட்சிக்கவி பாரதியார் பற்றி ஒரு வரி செய்தியில்லை. 'அந்த நதியே காஞ்சு போயிட்டா?...' என்பது மாதிரிதான் இந்த கூத்தெல்லாம்.

அதே நேரத்தில் பிறந்தநாள் நாயகன் ரஜினியின் சாதனைகளை வருஷக்கணக்கில் பேசிக் கொண்டிருக்கலாம். வாரக்கணக்கில் எழுதிக் கொண்டிருக்கலாம். தமிழ்சினிமாவின் வரலாற்றில் ஒரு புதிய நைல் நதியாக பாய்ந்து முப்பத்தாறு வருடங்கள் கழித்தும் அதே புத்துணர்ச்சியோடு இன்னும் ஓடிக் கொண்டிருப்பவரல்லவா ரஜினி?

'போலாம் ரைட்...' என்று ஒரு காலத்தில் பஸ்சில் நின்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிதான் இன்று தமிழ்சினிமாவின் வியாபார வளர்ச்சிக்கும் 'போலாம் ரைட்...' கொடுத்துக் கொண்டிருக்கிறார். ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் எந்திரன் மாதிரி 100 கோடியில் ஒரு படத்தை உருவாக்கியிருக்க முடியாது. அதன் விளிம்பு நசுங்காமல் விற்பனை செய்திருக்கவும் முடியாது. இது ஒரு சாதனை என்றால் ரஜினியே தன்னையறியாமல் செய்து வரும் இன்னொரு சாதனை என்ன?

தன் ரத்தத்தையே தமிழ்சினிமாவுக்கு பாலாக கொடுத்த நடிகர்கள் பலர் இருந்தாலும், அதையும் தாண்டி தன் ரத்தத்தை அமுதமாக ஊட்டியவர் ரஜினி. இவர் நடித்த படங்களை வாங்கி பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்த விநியோகஸ்தர்கள் இங்கு அதிகம். அவரது ஒவ்வொரு படமும் வியாபாரத்திற்கேற்ப விரிவான பட்ஜெட்டை உள்ளடக்கியது. இதன் காரணமாகவே எல்லா பிரிவுகளை சேர்ந்த சினிமா தொழிலாளர்களும் வளர்ந்தார்கள். வாழ்ந்தார்கள். இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு முன் நடித்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜியின் பாதிப்பில்லாமல் எப்படி நடிக்க முடியாதோ, அதைப்போலவே இனிவரும் சந்ததிகள் ரஜினியின் தாக்கம் இல்லாமல் நடிக்கவே முடியாது. அந்தளவுக்கு நடிப்பில் நெடுஞ்சாலை அமைத்தவர் ரஜினி. தான் சார்ந்த தொழிலில் தலைமை இடத்தை பல்லாண்டுகளாக தக்க வைத்துக் கொள்வதே பெரும் சவால்தான். அந்த சவாலை தனது சுண்டு விரல் நுனியால் சுமந்துவிட்டு போகிறவர் இவர்.

எம்ஜிஆருக்கு பிறகு ஒரு ஹீரோவுக்காக ரசிகர்கள் பால் காவடி எடுப்பதும், அவரது உடல் நலத்திற்காக தங்கள் வயிற்றை பட்டினி போட்டுக் கொள்வதும் ரஜினிக்காக மட்டுமே நடக்கிற அதிசயம். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனைதான் அவரை முழுசாக திருப்பிக் கொண்டு வந்தது என்பதை நாடே அறியும். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவு செய்ததை அயல்நாடுகள் கூட ஆச்சர்யத்தோடு கவனித்தன.

'என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய ரசிகர்களுக்கு...' என்று அவர் எந்த மேடையில் முழங்கினாலும், கைதட்டல் சப்தம் அடங்க வெகு நேரம் பிடிக்கிறது. ரஜினியை வணங்குகிற, பாராட்டுகிற, அன்பு காட்டுகிற, அணைத்துக் கொள்கிற அதே ரசிகர்களுக்கு நடுவேதான் சில வேலையற்ற விமர்சகர்களின் கேள்விகளும் ஒரு சின்ன பொட்டு வெடி சப்தத்தோடு ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவை ரஜினியின் காதுகளுக்கும் போகாது. ரசிகர்களின் கவனத்திற்கும் ஏறாது என்பதை தெரிந்தேதான் இப்படி விமர்சனம் செய்கிறார்கள் அத்தனை பேரும். இவர்கள் குசேலன் பட ஆர்.சுந்தர்ராஜன்களாகி 'டிம் லைட்' ஆசாமிகளாகி விடுவதிலும் ஒன்றும் ஆச்சர்யமில்லை.

ஆனால் மற்றவர்களின் கேள்விகள் ரஜினியை அடையாவிட்டாலும், தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய ரசிகர்களுக்கு அவர் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இதை அவரே உணர்ந்தும் இருப்பார்.

எந்த தமிழக முதல்வர்களின் மேடை கிடைத்தாலும் எதையாவது கேட்டு விட வேண்டும் என்ற வழக்கம் சினிமா பிரபலங்களுக்கு இருக்கிறது. அது தனக்கானதாக இருக்க வேண்டாம். தான் சார்ந்த தொழிலுக்கானதாக இருக்கலாம். அல்லது தன்னை வாழ வைத்த ரசிகர்களின் சந்ததிகளுக்காக இருக்கலாம். இசைஞானி இளையராஜா ஒரு முறை கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட திரைப்பட விழாவில் 'அரசு சார்பாக ஒரு இசை பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்' என்றார். அதே மேடையில் ராஜாவின் கோரிக்கை பற்றி பரிசீலிப்பதாகவும் கூறினார் கலைஞர். அது நடந்ததா, இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் நுழைய தேவையில்லை.

ரஜினி நினைத்தால் இதுபோல ஏராளமான வாய்ப்புகளை கேட்டுப் பெற்றிருக்கலாம். எதுவும் அவரது சொந்த விஷயங்களுக்கானதாக இருக்கப் போவதில்லை. ரஜினி கேட்டால் முடியாது என்று மறுக்கிற தலைவர்களும் இங்கு இருக்கப் போவதில்லை. ஆனால் ரஜினி ஒருமுறை கூட அப்படி ஏதேனும் கோரிக்கைகள் வைத்ததாக நினைவே இல்லை.

நேற்று வந்த நடிகர் சூர்யா கொஞ்சம் வளர்ந்ததும் செய்த முதல் வேலை, 'அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நிறுவி நகர முடியாத பள்ளிகளையும் அதன் தரத்தையும் ஓட வைத்ததுதான். பரோட்டா கடையில் வேலை பார்த்த சிறுவனை ஐ.ஏ.எஸ் ஆக்கிய அவரது முயற்சியை ரஜினி செய்திருந்தால், இன்று ஓராயிரம் ஐ.ஏ.எஸ்களும் ஐ.பி.எஸ்களும் உருவாகியிருப்பார்கள் நம் நாட்டில். ஆனால் ரஜினியின் மனைவி நடத்தும் 'தி ஆஸ்ரம்' பள்ளி ஏழைகளுக்கானதா என்ற கேள்வியை ஆர்.சுந்தர்ராஜன்களால்தான் எழுப்ப முடியும்.

எதையும் 'ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி' எடுத்துக் கொள்ளலாம். அது சொல்கிறவர்களின் தன்மையை பொறுத்தது. ரஜினி ஒரு சிட்டிகை போட்டால் போதும், ரசிகர்கள் அதை இடி முழக்கமாக்குவார்கள். இந்த பலம் ரஜினிக்கு இருக்கிற அளவுக்கு மற்ற நடிகர்களுக்கு இருக்கிறதா என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம், 'இல்லை' என்று!

எதை சொன்னாலும், எதை கேட்டாலும் அதை அரசியலாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது அவருக்கு. அரசியல் இல்லாமல் எதுவுமே நடக்காது என்பதை அறியாதவரா ரஜினி? இல்லையே! அப்படியிருந்தும் ஏனிந்த மவுனம்?

அவரது ரசிகர்கள்தான் ரஜினியின் இந்த மவுனத்திற்கு காரணம். இதென்ன விந்தை என்கிறீர்களா? அவர் கருத்து சொல்லும் போதெல்லாம் ஒரு களேபரம் எழுகிறது. காவிரி பிரச்சனை தீவிரமாக எழும்போது ஒருமுறை இப்படி கருத்து சொன்னார் ரஜினி. 'இரண்டு மாநிலத்திலும் வாழும் மக்களை நினைச்சு பார்க்கணும். தமிழர்கள் நிறைய பேர் கர்நாடகாவுல இருக்காங்க. அவங்களோட பாதுகாப்பு முக்கியம்' என்றார். அவ்வளவுதான்... இதில் இருக்கிற உண்மை பின்னுக்கு தள்ளப்பட்டு ரஜினியிடம் கடும் கோபம் காட்டினார்கள் சிலர்.

அவரது அன்பான, உயிரான ரசிகர்களே கூட சில ஊர்களில் மன்றங்களை கலைத்த கொடுமை நடந்தது. இதுபோல அவர் எது பேசினாலும் அதை எதிர்க்கவும் ஆதரிக்கவும் குழுக்கள் கிளம்பி விடுகின்றன. அதற்காக பேச வேண்டியதை பேசாமல் இருக்க முடியுமா? பேசிதானே ஆக வேண்டும்? ஆனால் அவசியமான தருணங்களில் கூட நேரங்களில் ரஜினியிடம் இருந்து கிடைப்பது மவுனம் மட்டுமே.

தமிழ்நாட்ல என்னை கன்னடன்னு சொல்றீங்க, கன்னடத்துல என்னை மதராஸின்னு சொல்றாங்க. நான் எங்கதான் போறது என்று ஒருமுறை ரஜினி கேட்டபோது 'தலைவா...' என்று அழுத விழிகள் ஒன்றா இரண்டா? லட்சமும் கோடியுமல்லவா? அந்த ரசிகர்களுக்காக ரஜினி கேட்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது இங்கு.

அதையெல்லாம் ஆர்ப்பாட்டமாக கூட கேட்க வேண்டாம். அறிக்கை மூலமும் கேட்க வேண்டாம். பதவி பலம் கொண்டவர்களின் வீட்டுக்கே போய் தோழமையாக கேட்கலாம். அது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று பூசிக் கூட மெழுகலாம். இப்படியெல்லாம் கேட்கவே நிறைய இருக்கிறதே இங்கு?

சென்னை தரமணியில் அமைக்கப்பட்ட திரைப்பட நகரத்தை மீண்டும் கேட்கலாம்.

கடந்த ஆட்சியில் திரைப்படத் துறையினருக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்ட வழி கேட்கலாம்.

சிறு பட தயாரிப்பாளர்களுக்கு அரசு கொடுக்கிற மானிய தொகையை இன்னும் சில லட்சங்கள் சேர்த்துக் கேட்கலாம்.

இடிக்கப்படும் தியேட்டர்களை காப்பாற்றலாம்.

இப்படி இன்னும் இன்னும் நிறைய கேட்கலாம். தான் சார்ந்த துறைக்கு ரஜினி செய்யும் இந்த பேருதவி, ஆட்சியாளர்களால் உடனே பரிசீலிக்கப்படும் என்பதில் ஐயமே இல்லை. ஏனென்றால் ரஜினி என்பவர் தி.மு.க அல்ல, அ.தி.மு.க அல்ல, ம.தி.மு.க அல்ல, தே.மு.தி.க அல்ல... கொடி வீசி பறக்கிற எந்த கட்சியை சார்ந்தவரும் அல்ல.

அப்படியென்றால் ரஜினி யார்?

அவர் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவுலகத்தின் கவுரவம். கம்பீரம்! கோடிக்கணக்கான ரசிகர்களின் கோமாதா !

4தமிழ்மீடியாவுக்காக : ஆர்.எஸ்.அந்தணன்

BLOG COMMENTS POWERED BY DISQUS