முற்றம்

பொது மக்கள் வாக்களிப்பு மூலம் சட்டங்களை இயற்றவும், நீக்கவும், மாற்றவும் கூடிய வகையிலான மக்கள் அதிகாரம் நிறைந்த அரசியலமைப்பினைக் கொண்டிருக்கும் நாடு சுவிற்சர்லாந்து. எதிர்வரும் மார்ச் 4ந் திகதி நடைபெறவுள்ள இவ்வாறான வாக்களிப்பு ஒன்று மிகமுக்கியமானதாக அமைகிறது. " No Billag" என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இவ் வாக்களிப்பின் மூலம், இதுவரையில் சுவிற்சர்லாந்தின் சுதந்திர ஊடகங்களாக இயங்கிய தேசிய தொலைக்காட்சி, மற்றும் வானொலிகள் மூடப்படலாம் எனும் அச்சநிலை தோன்றியுள்ளது. இவ் வாக்களிப்பில் " No" என வாக்களித்து சுவிற்சர்லாந்தின் சுதந்திரமான தேசிய ஊடகத்தன்மையினைக் பாதுகாக்க வேண்டியது மக்கள் கடமையாகின்றது.

ஏன் மக்கள் அவ்வாறு செய்ய வேண்டும்...?

சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் பெரும்பாக நிதியளிப்பின் மூலமும், விளம்பர வருவாய்களின் மூலமும், இயங்கிவரும் இந்த ஊடகங்கள், அரசியல் நிர்பத்தங்களற்று செயற்படுபவை. கருத்தியற் சுதந்திரத்தோடு, சுவிற்சர்லாந்தின் நான்கு தேசிய மொழிகளையும், அம் மொழிகள் பேசும் மக்களின் கலாச்சார தன்மைகளையும், வௌிப்படுத்திய ஊடகங்கள். இதில் மக்களுக்கும் முரண்கள் ஏதுமில்லை. ஆனால் இந்த ஊடகங்களுக்காக வசூலிக்கப்படும் வரிப் பணத்தில் பிரச்சனை ஆரம்பமாகிறது.

"Billag" எனும் நிறுவனத்தின் மூலம், அறவிடப்படும் வரித்தொகை சராசரியான மாத வருமானம் பெறும் மக்களுக்கு பெருஞ்சுமையாகத் தெரிகிறது. ஆனால் அவ்வாறு பெறப்படும் நிதி நடுவன் அரசூடாக இந்த ஊடகங்களுக்கு செல்வதையோ, அவ்வாறாறு பெறப்படும் நிதியத்தின் மூலமே அவை சுதந்திரமாக இயங்குகின்றன என்பதோ சராசரியான மக்கள் அறியவில்லை அல்லது கருத்திற் கொள்ளவில்லை. குறிப்பாக சுவிற்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் உட்பட பெரும்பாலான வெளிநாட்டவர்களும், இந்தக் கட்டணத்தை பெருஞ்சுமையாகவே கருதுகிறார்கள். வெளிநாட்டவர்கள் பலரும், தற்போதுள்ள தொலைத் தொடர்பு வளர்ச்சியின் மூலம், தமது தாயகம் சார்ந்த, மொழிசார்ந்த நிகழ்ச்சிகளைக் காணமுடிவதால், தேசிய ஊடகங்கள் குறித்து கவனம் கொள்வதில்லை. அதன் காரணமாக, இத் தனித்துவமும் முக்கியத்துவமும் உணரமுடிவதில்லை. அதேபோல் "Billag" நிறுவனம் இவ்வரியினை அறவிடுவதன் காரணமாக, அது தேவையற்ற நிதித் திரட்டல் அல்லது செலவீனம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் உண்டு.

சுவிற்சர்லாந்தின் தேசிய அளவில், நான்கு மொழிகளையும், வெவ்வேறான கலாச்சாரங்களையும், பிலதிபலிக்கும் வகையிலும், தனித்துவமான சுதந்திரக் கோட்பாட்டில், செய்திகளையும் நிகழ்ச்சிகளையும், உருவாக்குவது என்பதற்கான மனித உழைப்பினதும், ஏனைய வழங்கல்களினதும், தேவை அதிகமாகவுள்ள நாடு. அதேநேரம், தனிமனித வருமான செலவீன அடிப்படையில் இவற்றுக்கான பொருளாதார வளத்தின் தேவையும் அதிகமாகும். அந்தவகையிலான ஒப்பீட்டில் இதற்காக மக்களிடமிருந்து பெறப்படும் நிதி, ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவெனக் கொள்ளலாம். ஆனால் இது குறித்த புரிதல்கள் மக்கள் மத்தியில் சரியாக உணரப்படாத நிலையில், இதை முன்னிலைப்படுத்தும் கட்சிகளும், அவர்களின் பின்னால் மறைத்து நிற்கும் பெரு முதலாளித்துவ நிறுவனங்களும், மக்களின் அறியாமை உணர்வுநிலையை தாமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்நிதிச்சேர்க்கைக்கான எதிர்வினையைத் தொடங்கின. அதுவே " No Billag" வாக்களிப்பும், சட்டத்திருத்தமும்.

மார்ச் 4ந் திகதி பொது சன வாக்களிப்பில் இது வெற்றிபெறுமானால், சுவிற்சர்லாந்தின் தேசிய ஊடகங்களுக்கான பெருநிதி மூலம் இல்லாது போகும்.  இந் நிதிச்சேர்க்கையில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், மாற்று வழியினை ஏற்படுத்துவதற்கும் முடியாது போகும். அவ்வாறான நிலையில், சுதந்திரமான இவ்வூடகங்கள் முற்றாகச் செயலிழந்து போகவோ அல்லது தனியார் மயப்படவோ வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படுகையில், இவ் ஊடகங்களில் தொழில் புரியும் பல்வேறு தகைநிலை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உடனடியாக  வேலையிழக்க நேரிடுவதுடன், தேசிய ஊடகங்களின் தனித்துவமும், சுதந்திரமும் பறிபோகும் நிலையும் ஏற்படும். இது மற்றொருவகையில் வெளிநாட்டவர்களுக்கு பாதகமான நிலையினை எதிர்காலங்களில் தோற்றுவிக்கவும் கூடும். ஆதலால் மார் மாதம் 4ந் திகதி " No Billag" வாக்களிப்பில் " No" என வாக்களித்து சுவிற்சர்லாந்தின் சுதந்திரமான தேசிய ஊடகத்தன்மையினைக் பாதுகாக்க வேண்டியது சுவிற்சர்லாந்து மக்களின் முக்கிய  கடமையாகின்றது.

4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.