முற்றம்

'எனது 29வது வயதில், நோர்வே விமான நிலையத்தில் அகதியாக காலடி எடுத்து வைத்த தருணத்தில் ஒருவன் என்னை நிறவெறியால் தூற்றிய போது தான், எனது தோலின் நிறம் கறுப்பு என்பதை முதன் முறையாக நான் உணர்ந்தேன்' என புகழ்பெற்ற ஆபிரிக்க தன்னம்பிக்கை பேச்சாளர் 'பீட்சி பண்டா' ஒரு கருத்தரங்கில் கூறியிருப்பார்.

ஆனால் அதை மாற்றியும் யோசிக்கலாம். அண்மையில் வட இந்தியாவுக்கு சென்று வந்த ஐரோப்பியத் தோழி ஒருவர் நாக்பூர் அருகே தங்கியிருந்த கிராமம் ஒன்றில் அங்கிருக்கும் அனைத்து பெண்களும், சிறுமியர்களும் தனது தோலை தொட்டுத் தொட்டுப் பார்த்து பூரிப்படைந்ததாகவும், அப்போது தான் எவ்வளவு வெள்ளை நிறத்தவள் என்பதனை புரிந்து கொண்டதாகவும் கூறினாள்.

 மேற்குலக நாடுகளிலிருந்து பணி நிமித்தம், அல்லது சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களைத் தவிர, ஆட்சியாளர்களாக அல்லது அகதிகளாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு வந்து, நீண்ட நாட்களுக்கு வெள்ளையர்கள் தங்கி விடுவது தற்போது குறைவு. மொழி, கலாச்சாரம், சுற்றுச் சூழல் பிடித்துப் போய் எம்முடனேயே தங்கிவிடும் வெள்ளையர்களும் மிக அரிதாகவே இருக்கிறார்கள். இதனால் மேற்குலகத்தினரின் நடைமுறை வாழ்க்கை, மற்றும் அவை  தொடர்பிலான மாறுநிலை பற்றிய சமகாலப் பார்வை என்பன குறித்த மதிப்பீடுகளுக்கான வாய்ப்புக்கள் பெருமளவு இல்லையெனலாம்.

இத்தொடர் மேற்குலக நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் வாழ்க்கைமுறை, அவர்களது பண்பாடு, கலாச்சாரம், அவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர் என்பவை குறித்து அறியவும், அவற்றினை ஆசிய நாடுகளின் நடைமுறைகளுடன் ஒப்பு நோக்கவும் முயலும்.

அவ்வாறான ஒரு விரிந்த அல்லது திறந்த பார்வையாக வரும் இத் தொடரின் முதற் பார்வையில்...

 கான்சிட்டா வூர்ஸ்ட் ( Conchita Wurst ) - பாடகர்(கி)


கான்சிட்டா வூர்ஸ்ட் ஒரு ஆஸ்திரிய நாட்டுப் பாடகி. இம்முறை டென்மார்க் கொபன்ஹேகனில் நடந்த யூரோவிஷன் 2014 பாடல் போட்டியில் ஐரோப்பாவின் அனைத்து பாடகர்களையும் பின் தள்ளி முதல் பரிசை வென்றவர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு  இடையில் மிகச்சிறந்த பாடகரை தெரிவு செய்வது யூரோவிஷன் பாடல் போட்டி.  கான்சிட்டா வூர்ஸ்ட் இப்போட்டிக்காக ஆஸ்திரியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நான்காவது நாளில், இவருக்கு எதிராக அதே நாட்டில் தொடங்கப்பட்ட ஆண்டி வூர்ஸ்ட் பேஸ்புக் பக்கத்தை 30,000 பேர் லைக் செய்திருந்தார்கள்.  அதைத் தொடர்ந்து யூரோவிஷன் போட்டியை பெலாரஸிலும்,  ரஷ்யாவிலும், ஆர்மெனியாவிலும் ஒளிபரப்பக் கூடாது என பெட்டிஷன் வேறு கொடுத்தார்கள்.

குறைந்தது, வூர்ஸ்ட்டின் பாடும் காட்சியை மட்டும் நீக்கிவிட்டு ஒளிபரப்புங்கள் என  கெஞ்சினார்கள்.  இல்லையேல், யூரோ விஷன் நிகழ்ச்சி அருவருக்கத்தக்க ஆடவருக்கு இடையேயான உடலுறவின் படுக்கையறை போன்றதாகிவிடும் என தூற்றினார்கள். இத்தனை எதிர்ப்புக்கும் காரணம்,   கான்சிட்டா வூர்ஸ்ட் ஓர் ஆணாக இருந்து பெண்ணியல்புகளால் ஈர்க்கப்பட்டு அதையே தற்போது வெளிப்படுத்த விரும்புகிறவர். தமிழில் சொல்வதானால் திருநங்கை.

ஒரு அழகான பெண் தாடி வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்பது உலகம் மிக அரிதாக கற்பனை செய்து கொள்ளும் காட்சி. ஆனால்  'தாடி லேடி ' எனும் அடைமொழியோடு, அக்காட்சியை உலகம் இன்று அனுதினம் காண்கிறது. 1966ம் ஆண்டுக்கு பிறகு யூரோ விஷன்  போட்டியில் ஆஸ்திரியா பெற்றுக்கொண்ட முதலாவது வெற்றிக் கோப்பை, கான்சிட்டா வூர்ஸ்ட்  பெற்றுக் கொடுத்தது.

இறுதிப் போட்டியில் அவர் பாடிய பாடல் 'Rise Like A Phoenix' (பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுதல்) என்பதாகும். பிரபல பாப் பாடகி லேடி ககாவினால், அவருடைய இஸ்தான்புல், துருக்கி இசை நிகழ்ச்சிகளுக்கு கௌரவ பாடகியாக அழைக்கப்படும் அளவுக்கு கான்சிட்டா வுர்ஸ்ட்டின் மரியாதை இப்போது கூடியுள்ளது.

அவருடைய பெயரில் வரும் வூர்ஸ்ட் (Wurst) என்பது ஜேர்மனியின் பிரபல வாக்கியமொன்றில் இறுதியில் வரும் சொல்லாகும். 'எனக்கு எல்லாமே ஒன்றுதான்'  என்பது அவ்வாக்கியம். அவர் கூறுவதும் அது தான். தோற்றத்தை  வைத்து ஒருவரை கணக்கிடாதீர்கள். மற்றவர்களைப் போன்றே என்னையும் பாருங்கள் என்கிறார்.

கான்சிட்டா வுர்ஸ்ட் எந்த பாலினத்தைச் சேர்ந்தவர் என்பதை ஆராய்வதல்ல இப்பதிவின் நோக்கம். வித்தியாசமான பாலியல் நாட்டம் கொண்டவர்களை,  எமது நாடுகள் எப்படிப் பார்க்கின்றன. மேற்குலகம் எப்படி பார்க்கத் தொடங்கியிருக்கிறது என சிறியதொரு அறிமுகத்தை தருவதே இன்றைய பதிவின் நோக்கம்.

Lesbian, Gay, Bisexual, Transgender (LGBT Community) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவர்களை தூய தமிழில் வகைப்படுத்தினால் நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்கின்றனர்.

LGBT படிப்பு என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் பாடமாக தொடக்கப்பட்டுவிட்டது. இந்தியாவிலோ, இலங்கையிலோ அல்லது தென்கிழக்காசிய நாடுகளிலோ, இதைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை. மேலும் பெரும்பாலானோருக்கு திருனர், அல்லது திருநங்கைகளுக்கும் (Transgender), சமபாலீர்ப்பு (Gay, Lesbien) உடையோருக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியவதில்லை. இதனால் பாலின அகதிகள் பலர் இந்தியாவில் வாழ்கின்றனர். அதாவது இவர்கள் தனித்துவிடப்பட்டவர்களே!

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது. தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது. ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாடம் செத்துபிளைக்கின்றனர். உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு பற்றிய பொதுவான எமது அறிவின்மையே இதற்கு காரணம்.

பல்வேறு போராட்டங்களோடு தன் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டவராக அறியப்படும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா, தனது வாழ்க்கையினை மையமாக வைத்து எழுதிய  'நான் வித்யா ' புத்தகத்தில், இவ்வாறான தனது அனுபவங்களை துயர்மிகுந்த வரிகளில், தைரியமாகப் பதிவு செய்திருப்பதாக அறிகின்றேன். தமிழில் பால்புதுமையர் பற்றி ஸ்ருஷ்டியின் நிறுவனர் கோபி ஷங்கர் விரிவாக எ ழுதியுள்ளார் என கூடுதல் விளக்கம் தருகிறது விக்கிபீடியா.

சமபாலீர்ப்பு உடையவர்களுக்கு இந்தியச் சட்டம் சுதந்திரம் கொடுத்துள்ள இரண்டே இரண்டு நல்ல விடயங்கள் எவை தெரியுமா?

1. திருனர் (Transgender) கள் அரச அலுவலகங்களில் வேலை பார்க்கும் போது அவர்களுக்கு எதிரான பாரபட்சத்திலிருந்து பாதுகாத்தல்.

2. தனக்கு விருப்பமான பாலினத்திற்கு மாற சட்டரீதியிலான உரிமை. அதாவது ஒருவர் தான் ஆணா, பெண்ணா, அல்லது மூன்றாம் பாலினத்தவரா என்பதனை தானே தெரிவு செய்யும் உரிமை. இவ்விரண்டுக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளது.

ஆனால் இந்தியா சுதந்திரம் கொடுக்க மறுக்கும் பல விடயங்கள் இருக்கின்றன.

1.சமபாலினத்தவர்கள் பாலினச் சேர்க்கையில் ஈடுபடுவது,  
2.ஏனைய தொழில் நிலையங்களில் பாரபட்சத்திலிருந்து பாதுகாத்தல்,
3.ஏனைய பொது இடங்களில் பாரபட்சத்திலிருந்து பாதுகாத்தல்,  
4.ஓரினச் சேர்க்கை திருமணம் செய்தல்,  நாங்கள் ஓரினச் சேர்க்கை ஜோடியினர் தான்  என அடையாளப் படுத்திக் கொள்ளல்,
5.ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தைகளை தத்தெடுத்தல்,
6.இராணுவத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இணைந்து கொள்தல்,
7.ஆண் சமபாலீர்ப்பு இனத்தவர்கள் தமக்கான வணிக ரீதியிலான அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளல்,
8.பெண் சமபாலீர்ப்பு இனத்தவர்கள வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் ஈடுபட்டு குழந்தை பெறல்

ஒரு சில ஆபிரிக்க நாடுகளில் ஓரினச் சேர்க்கை விருப்பம் கொண்டவர்களுக்கு மரணதண்டனை வரை கொடுக்கப்படுகிறது. எமது பாலியல் ரீதியிலான தெரிவுகளை செய்ய சுதந்திரம் மறுக்கப்படுதலால் தான் நாம் நாட்டை விட்டு வெளியேறினோம் எனும் காரணத்தைக் கூறி ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் தற்போது அகதி அந்தஸ்து கோரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இம்முறை ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் திரைப்பட விழாவில் "Global Gay, le nouveau défi pour les droits humains" (சர்வதேச சமபாலீர்ப்பு ஆடவர்கள் : மனித உரிமைகளின் புதிய சவால்) எனும் திரைப்படம் பார்த்தேன்.  

அதில் நான் அறிந்து கொண்ட சில புள்ளிவிபரங்கள் இவை.  84 நாடுகளில் ஓரினச் சேர்க்கை குற்றமாக  சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 7 நாடுகள் மரணதண்டனை விதிக்கின்றன. அத்திரைப்படத்தில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு வாக்கியம் சொல்வார்.

'ஒரு சமபாலீர்ப்பு நபர் மீது நடத்தப்படும் தாக்குதல், இந்த பிரபஞ்ச மதிப்பின் (Universal Value) மீது நடத்தப்படும் தாக்குதல், அனைத்து மக்களும், நான் உட்பட உங்களைப் பாதுகாக்க முயற்சிப்போம்' என்பார்.
 
கான்சிட்டா வூர்ஸ்ட், யூரோ விஷன் இறுதிப் போட்டியில் பாடி முடித்த போது எனக்கும் அவ்வாறே தோன்றியது. ஏன் அந் நிகழ்ச்சியைப் பாரத்துக் கொண்டிருந்த பலருக்கும், பின்னர்  youtube வழியாகப் பார்திருக்கும், சுமார் 15 கோடிக்கும் அதிகமான மக்களில் பலருக்கும் அது தோன்றியிருக்கலாம். அவருடைய தோற்றம் எப்படிப் பட்டதாகவும் இருக்கட்டும். ஆனால் அவருடைய திறமைக்கு, அவருடைய பாலினத் தோற்றத்தினால் பாரபட்சம் பார்க்கப்படுமாயின் நிச்சயம் அவரைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

உலகத்தின்  மிகப்பிரமாண்டமான சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் அனைத்து ஐரோப்பிய நாடுகளின் மிகச்சிறந்த பாடகர்களையும் முறியடித்து வெற்றி பெற்றவர் இந்த கன்சிட்டா வூர்ஸ்ட். இதனால் தான் அவரை இப்போது இந்த உலகம் தூக்கிவைத்து கொண்டாடுகிறது. ஆனால் இவரும் தனது கல்லூரி வாழ்க்கையில் தனது பெண் பாலின ஈர்ப்பினால் சொல்லணாத் துயரங்களை அனுபவித்தவர் தான்.

இவருடைய திறமையும், பிரபல்யமும் தற்போது அவர் விரும்பிய உருவத்தில் சுதந்திரமாக வாழும் பாதுகாப்பை அவருக்கு பெற்றுக் கொடுத்திருப்பினும் அதை முழுமையெனச் சொல் முடியாது. இவருக்கு எந்தளவு ஆதரவு குவிகிறதோ அந்தளவு எதிர்ப்பும் வலுக்கிறது. கான்சிட்டாவின் கவர்ச்சி உடையும், பெண்ணியல் செயல்களும் 'இப்படியும் மனிதர்கள் உலகில் இருப்பார்களா?' என்றளவுக்கு ஒரு சிலர் காமெண்டுக்கள் அடிக்கிறார்கள்.

பொதுமைத் தன்மை மிகுந்த மேற்குலகிலேயே இவ்வாறு எதிர்ப்புக்கள் இருக்கின்றன என்றால் தெற்காசிய நாடுகளில் இவரைப் போன்றவர்களின் உணர்வுகள்  எப்படி எதிர் கொள்ளப்படும் ?   எனும் கேள்வி எழாமலில்லை.

இந்தியா முதலான ஆசிய நாடுகளிலும்  இவ்வாறானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடமும் எத்தனையோ மிக அபூர்வமான கலைத் திறன்கள் ஒழிந்து கிடக்கின்றன. எப்போது அவை வெளிப்படும். அப்படி வெளிப்படும் போது அதற்கான சுதந்திரம், அங்கீகாரம் கிடைக்குமா? என்ற கேள்விகளும் தொடர்ந்தெழுகின்றன.

இவ்வாறான கேள்விகளுக்கான விடைகாணலின் தொடக்கம்  கான்சிட்டா வூர்ஸ்ட் !

 

 - தொடரும்..

கான்சிட்டா வூர்ஸ்ட் யூரோ விஷன் இறுதிப் போட்டியில் பாடிய வெற்றிப் பாடல்:

 

- 4தமிழ்மீடியாவுக்காக : ஸாரா

நாம் காணும் மேற்குலகம் : புதிய பதிவுகள்

4தமிழ்மீடியா ஆசிரியர் குழுமத்தின்  இளையவர் ஸாரா.  வாசகர்கள் மனதில்  நம்பிக்கை வளர்த்தது போல்,  குழும உறுப்பினர்களின் வளர்ச்சி நிலையில் 4தமிழ்மீடியாவின் வளர்ச்சி  அடையாளம் எனச் சொல்லாம். 4தமிழ்மீடியாவின் பல்வேறு பகுதிகளில் இவரது எழுத்துக்கள் வந்திருக்கின்ற போதிலும், நாம் காணும் மேற்குலகம்  எனும், இத் தொடர் பத்தி, அவரது சிந்தனையையும், எழுத்தினையும், மேலும் செழுமையுற வெளிப்படுத்தும் களமாக அமையும் என  நம்புகின்றோம் - 4Tamilmedia Team

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.