முற்றம்

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மரணமானது கொடூரமானது என்பதில் யாருக்கும்

எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. டெல்லியில் மட்டும் அல்லாது தமிழகத்திலும் கூட மக்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்தார்கள். டெல்லியில் பாதிக்கப் பட்ட மாணவிக்கு நீதி கேட்டு நேற்று

முன்தினம் வரை கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. சென்னையிலும் நடிகர் அபாஸ், ரோகினி போன்றவர்கள் மெரீனா கடற்கரையில் ஊர்வலம் நடத்தினர்.

இந்த சமயத்தில்தான் நாம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் முன்வைக்க வேண்டியுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நீதி கேட்டு இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்ற அதே வேளையில் தூத்துக்குடி அருகே கிராமத்தில் பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு கிடந்தாள். அந்த சிறுமிக்கு நடைபெற்ற கொடுமை மீடியாக்களின் கவனத்தைப் பெறவில்லை. அவளுக்கு இழைக்கப்பட்ட துயரத்துக்கு நீதி கோரி பிரபலங்கள் குரல் கொடுக்கவில்லை. பிரபலங்கள் சிலரை தொடர்பு கொண்டு ஏன் இந்தப் பாராபட்சம் எனக் கேட்க முனைந்தபோது, அவர்கள் வெளியூர் சென்றுள்ளார்கள் எஎன உதவியாளர்கள் சொல்லிவிட்டார்கள்.

போராட்டத்திற்கான காரணங்கள் வேறுபடலாம், போராட்ட குணம் என்பது ஒன்றாகத்தானே இருக்கும். எனவே இயற்கை சார்ந்த விஷயங்கள் சீரழியாமல் இருக்க போராடும் குணம் கொண்ட போராட்டக்காரர்களில் ஒருவரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன் அவர்களிடம், ஒரே விஷயத்திற்கான போராட்டம், இவ்வாறு இடத்திற்கிடம் வெவ்வேறாக உள்ளதே, போராட்டம் என்பதில் கூடவா வேறுபாடு காண்பிப்பார்கள், தூத்துக்குடி மாணவிக்கு ஆதரவாக பிரபலங்கள் யாரும் போராடவில்லையே இது குறித்து நீங்களும் ஒரு போராட்டாகாரர் என்கிற முறையில் உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது;

. "இதற்கு மக்களையோ போராட்டக்காரர்களையோ குறை சொல்ல முடியாது. மீடியாக்கள்தான் காரணம். டெல்லி மாணவி பாதிக்கப் பட்ட விவகாரம் மிகக் கொடூரமானதுதான் இதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. தலைநகர் என்பதால் மீடியாக்கள் அதிக கவனம் செலுத்தின. தமிழகத்தில் என்றதும் மீடியாக்கள் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை

தலை நகரில்தான் இதுபோல கொடுமைகள் நடக்கிறது என்றில்லை, தமிழகத்தில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்ப்பது போல ஊடகங்கள் செயல்படவில்லை. அதனால் இங்கு போராடிய பிரபலங்கள் தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட பெண்ணுக்காக போராடவில்லை என்று சொல்லிவிட முடியாது. மெரீனாவில் நடத்திய போராட்டத்தை ஒட்டுமொத்த போராட்டக் குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.

நடிகை குஷ்பூவிடம் இது குறித்து கேட்டபோது, "டெல்லி மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி மட்டுமல்ல, தமிழகத்தில் நடக்கிற பாலியல் குற்றங்கள் பற்றியும் சிஎன்என்ஐபிஎன் தொலைக்காட்சியில், மிக விரிவாகவே பேசியுள்ளேன். பாலியல் வன்கொடுமைக்கு குரல் கொடுக்க, டெல்லி, தமிழகம் என்கிற பாகுபாடு எல்லாம் எனக்கு கிடையாது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒரு இடத்தில் நல்ல கருத்துக்களை பதிவு செய்துவிட வேண்டும் என்பதில் நான் எப்போதுமே மிக துடிப்பாக இருப்பேன்.

அன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசும்போது இதற்கான கடுமையான சட்ட திருத்தங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் அன்று பேசினேன். இப்போதும் அதையேதான் வலியுறுத்துகிறேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றால் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நிறம், இனம், சாதி, மொழி பேதம் கிடையாது. அப்படித்தான் தலைவர் கலைஞரும் போராடி வருகிறார். அவர் வழியில் செல்லும் நாங்களும் போராடி வருகிறோம்" என்று கூறுகிறார் குஷ்பூ

அதோடு இன்னொரு விஷயத்தையும் சொன்னார் குஷ்பூ. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்காக போராட்டம் நடத்திய போதே, தலைவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் என்னென்ன கொடுமைகள் நடக்கிறது என்பதைப் பட்டியல் போட்டு படித்தார். அதில் இந்த பாலியல் பலாத்கார கொடுமையும் இதனால் நடக்கும் கொலைப் பட்டியலையும் கூறியிருந்தாரே. என்றார்.

தூக்கு தண்டனைக்கு எதிரான ஆவணப்படம் எடுத்து இருக்கும் குறும்பட இயக்குனர் வெற்றிவேல் சந்திர சேகர், பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கான தணடனைகள் பற்றி, கூறுகையில், "முதலில் நாம் இந்தியர் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படும் சூழலில்தான் இருக்கிறோம். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என்பது போய், பெண்களுக்கு வயது வேறுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் தினம் தினம் ஒரு விதத்தில் அரங்கேறி வருகிறது.

இதற்கு தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கூறுவதாலும் அதிகப் பட்ச தண்டனையான மரண தண்டனைதான் அதற்குத் தீர்வு என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். நமது நாட்டில் மரணதண்டனை உண்டு, ஆனால் மரண தண்டனையே இல்லாத பல நாடுகள் உள்ளன. அங்கு இதுபோல வன்கொடுமைகள் அடிக்கடி அரங்கேறியதாகத் தெரியவில்லை.

இதுபோல பாலியல் பலாத்காரங்கள் அடிக்கடி நடைபெறுவதால் கற்காலத்துக்கே நாம் மீண்டும் சென்றுவிட்டது போன்ற உணர்வு வருகிறது என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கற்காலத்தில் இப்படிப்பட்ட வன்கொடுமைகள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை, நாம் அறியவில்லை. இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மரண தண்டனை கூடாது என்பதுதான் எனது வாதம்" என்கிறார் இவர்

பெரியார் திராவிடர் கழகம் சேர்ந்த கி.வீரமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட பள்ளி மாணவி புனிதாவுக்காக நடத்திய போராட்டத்தின் போது, பெண் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடத்திட்டத்தில் தைரியம துணிவு இவற்றோடு தற்காப்புக் கலையையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம்" என்று கூறியுள்ளார்.

திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் பாதிக்கப் பட்ட மாணவி புனிதாவுக்காக நடைபெற்ற போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசிய போது; "டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு நீதி கேட்டு, மக்கள் போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். இங்கு தலைவர் கலைஞரின் சார்பாக நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்து வைக்கிறோம். இனி மக்கள்தான் இதற்கு நீதி கேட்டு போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், "பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயப்படும் சூழல்தான் இன்று தமிழ்நாட்டில் நிலவிவருகிறது. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. புனிதாவுக்கு நேர்ந்த கொடுமை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் என்றும், தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கேட்க ஆளில்லை." என்றும் கூறியுள்ளார்.

பெயர் சொல்ல விரும்பாத மாணவி ஒருவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், "பெண்கள் நாகரீகம் என்கிற பெயரில் கவர்ச்சிகர ஆடைகள் அணிவதால், இப்படி பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். தூத்துக்குடி பள்ளி மாணவி நவ நாகரிக உடையில் கவர்ச்சிகரமாக இருந்தாரா? நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்று சொல்வது போல விட்டேத்தியான கருத்துக்களை சொல்வதை நிறுத்தி விட்டு, எங்களைப் போல மாணவிகளுக்கும், அப்பாவிப் பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்போடு செயல் படுங்கள்" என்று கொஞ்சம் கோபமாகவே குறிப்பிட்டார்.

மாணவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "நட்ட நடு ராத்திரியில் இளம்பெண் ஒருவர் என்றைக்கு தனியாக பயம் இன்றி சாலையில் நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று சொல்ல வேண்டும் என்ற வகையில் பார்த்தால் நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்றுதானே அர்த்தம்? நமது நாடு சுதந்திரநாடா என்கிற எனது கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள்" என்கிறார்.

பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு மாணவர் பேசுகையில், "மரண தண்டனை வேண்டாம் அதைவிட கொடுமையாக ஏதாவது ஒரு தண்டனையை, குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் வருவது போல கொடுங்கள். அப்போதுதான் இந்த பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வு காண முடியும். என்னைக் கேட்டால் பாலியல் பலாத்காரம் செய்தவன் இனி தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத அளவுக்கு அவனுக்கு அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும்" இவரின் கோபம் கூடுதலாகவே வெளிப்பட்டது

குடும்பப் பெண் தாமரை செல்வி இது பற்றிக் கருத்துக் கூறுகையில், "எத்தனை கனவுகளுடன் ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்க வைத்து இருப்பார்கள். சரி, நமது தூத்துக்குடி மாணவியையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஏழைப் பெற்றோராக இருந்தாலும் பெண்ணை படிக்க வைப்பதுதான் அவளது எதிர்காலத்துக்கு நல்லது என்றுதானே பள்ளிக்கு அனுப்புகிறார்கள். இப்படிப்பட்ட காமக் கொடூரங்களால் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு ஆபத்து என்றால், அப்படிப்பட்டவனை கடுமையாக தண்டிக்க வேண்டாமா?

என்னைப் பொருத்தவரை, மரண தண்டனையைவிட கொடுமையான் தண்டனையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவனது உடலில் மிகவும் உபயோகமாக இருக்கும் வலது கையை வெட்டுங்கள். அல்லது நடக்க கஷ்டப்படுவது போல ஒரு காலை வெட்டுங்கள். இது போதும் அவனுக்கு தினம் தினம் மரண தண்டனையை அனுபவிப்பான்." என்கிறார் இவர்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில், "பெண்கள் கவர்ச்சிகரமாக உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் குறையும். பெண்கள் இஸ்லாமியப் பெண்கள் போல பர்தா அணிந்து கொள்ளவேண்டும்" என்று கூறியுள்ள கருத்துக்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பல்வேறு கருத்துக்களுக்க மத்தியில் எழுத்தாளரும், சமூகவியல் ஆர்வலருமான அருந்ததிராய் இது தொடர்பில் பிரித்தானிய்த் தொலைக்காட்சியான சனல் 4 க்குத்தெரிவித்திருக்கும் கருத்து, வித்தியசமானது. " இவ்வாறன துயரமான சம்பவத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இச்சம்பவம் சமூகத்தில் வறிய நிலையிலுள்ள கிரிமினல்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது காரணம் என்றார். பாலியல் வன்புணர்சி என்பது இராணுவத்தாலும், போலிசாராலும், ஆதிக்க சாதியினராலும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் போது அடிமட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது எனக் கேள்வியெழுப்பியுள்ளார். "

கடந்த ஐந்து வருடங்களில் சண்டிகார் பகுதியின் பழங்குடிப் பெண்களில் ஐந்தாயிரம் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் ஊடகங்களுக்கு எட்டியதாகத் தெரியவில்லை. இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளத இந்தப் பகுதிகளின் கனிம வளங்களையும் பழங்குடி மக்களின் நிலங்களையும் பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டலுக்காக இந்திட அரச படைகள் அபகரிக்க ஆரம்பித்தது. கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு எல்லைப் பகுதிகளை நோக்கித் துரத்தப்பட்ட பல குடும்பங்களிலிருந்து நகர்ப் புறங்களில் வேலை தேடிச் சென்ற பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பெரும்பாலான பெண்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டோ அன்றி பாலியல் தொழிலாளர்களாகவோ மாறியிருக்கலாம் என சமூக சேவையாளர் அப்துல் கலாம் ஆசாட் தெரிவித்துள்ளார்.

கூடங்குளப் போராட்ட களப் பெண்கள் மீது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் வன்முறையில்லையா..? இந்தப் பெண்கள் இந்தியாவின் புதல்விகள் இல்லையா..? இவர்களுக்கான நீதியை யார் கோருவது..? ஊடக வெளிச்சம் படும் இடங்களில் மட்டும்தான் போராடா வருவார்களா பிரபலங்கள்..? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன....

-4தமிழ்மீடியாவிற்காக: எழில்செல்வி மற்றும் வேல்மாறன்

இப்பதிவுகளையும் வாசித்துச் செல்க :

 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.