முற்றம்

தமிழகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் விஸ்வரூபம் சினிமா மீதான தடை, திரையிடலில் தடை என்பன,

ஒரு சிறுபாண்மையினத்தின் மீதான வன்மத்தினை வலிந்து ஏற்படுத்தப் போகும் சூழ்நிலையை, வெகு இயல்பாக உருவாக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழகத்தில் சர்ச்சையினைத் தோற்றுவித்திருக்கும் இத் திரைப்படத்தை, தமிழகத்தில் 99% த்துக்கும் அதிகமானவர்கள் பார்க்காத சூழ்நிலையிலேயே இத்திரைப்படம் குறித்த கருத்துப் பரிமாறல்கள் நடந்து வருகின்றன.

படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் கமல்ஹாசனும், படத்தின் கருத்தியிலக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இஸ்லாமிய அமைப்புக்களும் என்ற வகையில் இருந்திருக்க வேண்டிய வாதங்கள், தற்போது கமல் Vs தமிழக அரசு என்ற நிலைக்கு மாறியிருக்கும் சூழலில், இதன் தாக்கங்களை எதிர்கொள்ளப் போகும் மக்களாக இருக்கப் போகின்றவர்கள், தமிழக சிறுபான்மை முஸ்லீம்களே என்பது வருத்தத்திற்குரியது.

இது தொடர்பாக விரிவாக நோக்கு முன் ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம். பிரான்சின் சுற்றுலா மையங்களில் ஒன்றான, நெப்போலியன் நினைவு சின்னம் என்றழைக்கப்படும் ஆர்க் த திரியோஃம்ப் (Arc de Triomphe) முன்பாக ஒரு பிற்பகலில் நின்றபோது, அங்கு ஒரு சிறப்பு இராணுவ அணிவகுப்பு ஒன்றிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்து. விசாரித்த போது, போரில் கொல்லப்பட்ட பிரான்சின் இராணுவ வீரர்களை நினைவிற்கான நாளதுவெனவும், அதற்கான மரியாதை அணிவகுப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிய வந்தது.

சிறிது நேரத்தில் சில சிறப்பு அழைப்பாளர்கள் அந்த அணிவகுப்பினைப் பார்வையிட அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் ஆசியர்கள் என்பதை, தோற்றமும் ஆடைகளும் அடையாளப்படுத்தின. அதிலும் குறிப்பாக பெண்களில் சுடிதார் ஆடைகள் அவர்களை வட இந்தியர்கள் என எண்ணிப்பார்க்கவும் செய்தது. சுற்றுலாப் பயணியாகா அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வந்திருந்த ஒரு இந்தியப் பெண்மணி என்னருகில் நின்று அவர்களைப் படம்பிடித்தவாறிருந்தார். "அவர்கள் நம்மவர் தானே..?" என என்னிடம் கேட்டார். நான் இருக்கலாம் எனத் தலையசைத்தேன். அவர்களை அவர் மேலும் சில புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்.

இன்னும் சிறிது நேரத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் அதிகாரிகளின் வரிசையில், சிறப்பு அழைப்பார்களாக சில ஆசிய இராணுவ அதிகாரிகள் வந்து நின்றார்கள். அவர்களுடைய உடைகளும், சின்னங்களும், அவர்களைப் பாகிஸ்தானியர்கள் என்பதை அடையாளப்படுத்தின. அருகில் நின்று படமெடுத்துக் கொண்டிருந்த பெண்மணி, அங்கு கடமையிலிருந்த பிரான்ஸ் காவலரிடம், விபரம் கேட்டார். அன்றைய இராணுவ அணிவகுப்பு மரியாதையில் சிறப்பழைப்பாளர்களாக, பாகிஸ்தானிய இராணுவப்படையதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் கலந்துகொண்டிருப்பதை அவர் மகிழ்ச்சியாகத் தெரியப்படுத்தினார். அவ்வளவுதான்; அதுவரையில் ஆர்வமாய் படமெடுத்துக் கொண்டிருந்த அந்த இந்தியப் பெண்மனி, 'இவர்களுக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது... 'என முணுமுணுத்தவாறே தான் எடுத்த படங்களை அழிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

பாகிஸ்தான் மீதான இந்த வெறுப்பு நிலை என்பது எவ்வாறு உருவானது என்பதெல்லலாம் ஆராய்வதற்காக இங்கு இதனைக் குறிப்பிடவில்லை. சராசரி மக்களின் மனநிலை எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே குறிப்பிடுகின்றோம். இந்த இந்திய மனநிலை தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவ்வாறு தோன்றிய காரணங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துமிருக்கலாம். ஆனால் சராசரியான மக்களின் மனங்களில், அவ்வளவு இலகுவாக அந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதில்லை. இந்த நிலையினை எப்பொழுதும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர், படைப்பாளிகள், சமூகஆர்வலர்கள். அவ்வகையான அக்கறையுடன் விஸ்வரூபத்தினை கமல் படைத்திருக்கினறாரா என்ற கேள்வி எழுகையில், அதனை மறுக்கும் வகையில், தங்கள் கருத்துக்களை தமிழக முஸ்லீம் அமைப்புக்களை விட மிகத் தெளிவாக முன் வைத்திருக்கின்றார்கள் 'விஸ்வரூபம்' பார்த்த இலங்கை முஸ்லிம் அமைப்பினர்.

விஸ்வரூபம் குறித்து, படம் பார்ப்பதற்கு முன் என்ன மனநிலை காணப்பட்டதோ, அந்த மனநிலை படம் பார்வையிட்டதன் பின்பு, முன்பிருந்ததை விட எதிர்ப்பு மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளதே தவிர, கிஞ்சிற்றும் தணிவடையச் செய்யவில்லை என்பதை அழுத்தமாய் பதிவு செய்வதாக தெரிவிக்கும் "இலங்கை முஸ்லிம் அமைப்பினர்", அதற்கான காரணங்களையும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆங்காங்கே அவ்வப்போது முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் சீண்டி சில திரைப்படங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மொத்தமாய் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை சமுதாய மனதில் விதைக்கும் திரைப்படமாகவே விஸ்வரூபத்தை அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, ஜிஹாத் மற்றும் இஸ்லாம் குறித்த தவறான புரிதலை மாற்றுமத அன்பர்கள் அகங்களில் தோற்றுவிக்க முனைந்திருப்பதோடு, முஸ்லிம் விரோத எதிர் மறை உணர்வை சமூக தளத்தில் விதைப்பதாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

விஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்? இத்திரைப்படத்தின் பெயர் பார்வைக்கு வரும் போது தமிழ் மரபுக்கு மாற்றமாக அரபு எழுத்தணி மரபை பிரதிபலிக்கும் விதமாய் இடமிருந்து வலமாக எழுதப்படுவதை அவதானிக்க முடிகிறது. இந்த ஆரம்பமே இத்திரைப்படம் இஸ்லாத்தைக் கருப்பொருளாகக் கொண்டே ஓடப்போகிறது என்பதனை சொல்லாமல் சொல்கிறது எனத் தொடங்கும் அவர்கள் குற்றச்சாட்டு, ஜிஹாத் என்ற அரபுச் சொல்லை வைத்து, இஸ்லாம் தான் தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டுகிறது என்ற போலித் தோற்றத்தை விதைப்பதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை படம் முழுவதும் அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, ‘நாம் அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்கள்’, 'நம்மைப் போன்ற முஜாஹிதீன்கள் கண்ணீர் சிந்தக் கூடாது. இரத்தம் தான் சிந்த வேண்டும்.’ என்ற வாசக அமைப்புகளும், தாக்குதல் நடாத்தும் செய்தி கிடைத்தவுடன் ‘இன்னஹ_ வக்துன் லித்தஹாபி இலல் ஜன்னஹ் - இதோ சுவர்க்கம் செல்வதற்கான நேரம் கணிந்து விட்டது’ என்பன போன்ற அரபுப் பிரயோகங்களும் ஜிஹாத் குறித்த தப்பான புரிதலை விதைக்கும் விதமாய் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் தங்கள் சிறார்களை வளர்க்கும் போது கூட பிஞ்சு உள்ளங்களில் தீவிரவாத உணர்வை ஊட்டியே வளர்க்கின்றனர் என்ற கருத்து அழுத்தமாய் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தையும் மருத்துவத்தையும் கற்பதை தடை செய்து விட்டு, ஆயுதக்கலையை கற்பதற்கு குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்ற காட்சி முஸ்லிம்கள் குறித்த தப்பபிப்ராயத்தை அதிகரிக்கவே உதவும்.

மன அமைதியையும், சாந்தத்தையும் பயிற்சியாய் தரும் தொழுகை இத்திரைப்படத்தில் இழிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தீவிர வாத தாக்குதல்களை நடாத்துவதற்கு முன்பாகவும் தொழுதுவிட்டுத் தான் அத்தாக்குதல்கள் நடாத்தப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழுகை என்ற முஸ்லிம்களின் கடமை தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது என்ற கருத்து சொல்லப்படுகிறது. அது மட்டுமன்றி, பள்ளிவாசல்கள் எனும் அபய பூமிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்துபவர்களை பயிற்றுவிக்கும் பங்கர்களாக தொழிற்படுவது போன்றும் காட்சியமைப்பு நகர்த்தப்படுகிறது.

இஸ்லாமியப் பெண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒழுக்கவாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஆடை முறையே ஹிஜாப் என அழைக்கப்படும். ஒழுக்கத்தை வளர்க்க உதவும் ஹிஜாபை மலினப்படுத்தும் விதமாய் தீவிரவாதிகள் பெண்களின் ஹிஜாப் ஆடையில் முகம் மறைத்துச் சென்று தற்கொலை தாக்குதல் நடத்தும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹிஜாப் என்பது தீவிரவாதத்திற்கு துணை போகும் ஆடை என்ற கருத்து திணிக்கப்படுகிறது.

இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் கர்ண கொடூரமானவை என்பது போல் சித்தரிக்கும் காட்சிகளும் உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவுக்கு ஒற்றனாய் திகழ்ந்த ஒருவன் பிடிப்பட்டவுடன் அவனை தூக்கில் போடும் காட்சியை குறிப்பிட முடியும். இதில் அவன் தூக்கில் தொங்கும் போது பின்னணியில் அதான் (பாங்கு சத்தம்) ஒலிப்பது போன்றும், ‘இது இவர்களின் கரங்கள் செய்த வினையே’ என்ற அர்த்தத்தை தரும் குர்ஆன் வசனமும் ஒலிபரப்பப்படுகிறது.

கைதிகளை பிடித்து வந்து கதறக்கதற கழுத்தை வெட்டும் காட்சி படமெடுக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கொண்டு, குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டு, லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு வாசகத்தை தாங்கிய பெனருக்கு முன்னிருந்த வண்ணம் இது நடைபெறுகிறது.

திரைப்படத்தின் வில்லனாக வருபவன் பெயர் முல்லா உமர் - இவன் இரண்டு வருடங்கள் தமிழகத்தின் கோவை மற்றும் மதுரைகளில் தங்கியதாகவும் தமிழ் ஜிஹாதி தான் தனக்குத் தேவையென்றும் கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் 'தமிழ் ஜிகாதி என்றால் விலையாக 5 லட்சம் அல்ல, 10 லட்சமே கொடுக்கலாம்” என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார். முஸ்லிம்கள் என்றால் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும் சொந்த மனைவியை தீவிரவாதத்தை நிகழ்த்துவதற்காக கூட்டிக் கொடுப்பவர்களாகவும் காட்டப்படுகின்றார்கள்.

ஆப்கானிஸ்தான், ஈராக், போன்ற நாடுகளில் முஸ்லிம் பெண்கள், சிறவர்கள் அனைவரையும் கொலை செய்த அமெரிக்க இராணுவத்தை பற்றி முல்லா உமர் என்ற தீவிரவாதிகளின் தலைவர் - அமெரிக்க இரானுவம் பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்யமாட்டார்கள் அதனால் பயப்படத் தேவையில்லை. என்று குறிப்பிட்டு அமெரிக்க இரானுவம் மனித நேயமுள்ள இரானுவம் என்ற காட்சி இடம் பெறுகின்றது.

முஸ்லிம்கள் தங்களது தீவிரவாத செயல்களுக்கான வருவாயை ஓபியம் என்ற போதைப் பொருளை விற்றுத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள். முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள். இதன் மூலம் தான் இவர்களுக்கு பொருளாதாரம் கிடைக்கின்றது என்று காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கூட்டுக்கழித்துப்பார்த்தால் அமெரிக்காவின் பணத்திற்கு அடிமைப்பட்டு கமல்ஹாஸன் நடித்துள்ள நாறிப்போன அமெரிக்காவின் வக்கிரக சிந்தனையின் வெளிப்பாடே ‘விஸ்வரூபம்'

எனக் குற்றம் சாட்டுகின்றன இலங்கை முஸ்லீம் அமைப்புக்கள்.

இவ்வாறு குற்றம் சாட்டும் முஸ்லீம்களின் நியாயத்திற்கு ஆப்கான் முஸ்லீம்கள் குறித்த கதை எவ்வாறு இந்திய முஸ்லீம்களைப் பாதிக்கும் எனும் கமலின் பதிலோ அல்லது என் சொத்து அடமானத்திலுள்ளது என்னும் கழிவிரக்கமோ பொருத்தமான பதிலாக அமையாது.

அதேவேளை, படத்தில் இஸ்லாமியத் தீவிரவாதம் தொடர்பாகக் காட்டப்படுவதாகச் சொல்லப்படும் வன்முறைக் காட்சிகளை விஸ்வரூபம் திரைப்படம்தான் வெளிப்படுத்துகிறது எனும் வாதமெல்லாம் ரொம்ப அதிகம். இஸ்லாமிய தீவிரவாத இணையத் தளங்களின் வீடியோக் காட்சிகளைப் பார்வையிட்டவர்கள் அத்தகைய வன்முறைக்காட்சிகளும், "அல்லாஹு அக்பர்" கோஷங்களும் இணைந்திருப்பதை அவதானித்தேயிருப்பர்.

இந்த விவகாரத்தில் இரு தரப்புக்களையும் சமன் செய்யவேண்டிய வகிபாகத்திலிருந்து, தமிழக அரசு தானே பிரதிவாதியாக மாறி வாதிடுவதும், தடைகளைத் தொடரப் போராடி வருவதும் நியாயமானதல்ல.  இவை, இத்திரைப்படம் வெளியிடப்படுவதனால், சமூகத்தில் ஏற்படக் கூடிய எதிர்விளைவுகள் என அரசு கருதுவதைவிட, பல மடங்கு அபாயகரமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக் கூடியவை. மற்றொன்று இவ் விகாரத்தில் காட்டப்படும் கால அவகாசம். தமிழகத்தின் சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு என்பதற்கும் மேலாக, ஒருவேளை  இவ்வாறானதொரு குற்றச்சாட்டின் மூலம், கமலுக்கு எதிராக எழக் கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து கமலைக் காப்பாற்றும் அக்கறையோடு தமிழக அரசு செயற்பட்டிருந்தாலும் கூட, இந்தத் தாமதம் தவிர்க்கபட வேண்டியதே. உண்மையான புரிதல்கள் மிக விரைவாகச் சகல தரப்புக்களிலும் எட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது எட்டப்பட வேண்டும்.

இவையிரண்டையும் விட மோசமான மற்றொரு நிலை, இவ் விகாரத்தில் அரசு தம் பக்கமிருக்கிறது என்ற எண்ணப்பாட்டில், இவ்விகாரம் தொடர்பாக தமிழக முஸ்லீம் அமைப்புக்கள் தெரிவித்து வரும் கருத்துக்கள், கமல் மீது அவர்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்களைத் தாங்களே தோற்றுவிப்பவர்களாக, ஷேம் சைட் கோல் போடக் கூடிய நிலை.

ஆக மொத்தத்தில் ஒரு சினிமாவை அரசியலாக்கி எல்லோரும் தவறிழைக்கின்றார்கள். 'வினவு ' தளக் கட்டுரை,  'விஸ்வரூபம் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்கிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயம். இது தொடருமெனில் இன்னுமொரு இயக்குனர் ஈராக்கில் படமெடுக்கின்றேன் எனப் புறப்படலாம். வெளிநாட்டில் பாடல்காட்சி என்பது போய், வெளிநாட்டில் சண்டைக்காட்சி என்ற புதிய புறப்பாடு தமிழ்சினிமாவில் தோன்றலாம்.

4தமிழ்மீடியாவிற்காக: வேல்மாறன்

நன்றிகள்: வாஞ்ஜுர்   

                வினவு

 

விஸ்வரூபம் குறித்த இப்பதிவுகளையும் வாசிக்க :

 

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.