முற்றம்
Typography

குறைந்த சனத்தொகை, கடும் குளிர், இறுகிய மனம், சூரியன் தலைகாட்ட பயம் கொள்ளும் நாடு, என்னை நாள் தோறும் கடும் காவல் தண்டனை பெற்றவராகவே கருதிக்கொள்ளத் தோன்றும்.

நான் செய்ய முனைந்த குற்றம் என்னவென்று பிந்திய நாட்களில் நன்றாகப் புரிந்து கொண்டேன், எனக்கு ஆயுள்தண்டனையை வழங்கியவர்கள் மனமுடைந்து தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்ய முயற்சிப்பதையும் நான் இப்போது காண்கிறேன்.

பனிப்புகார் மூடிய கட்டித்தொகுதியின் ஒரு நடைபாதையில் நான் நடந்து கொண்டிருக்கிறேன், ஒரு இளம் பெண் பிள்ளையை வண்டிலில் வைத்து தள்ளியபடி எதிர்திசையில் இருந்து வந்து கொண்டிருந்தார், நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம், அந்தப் பெண் லங்கத? என என்னைப் பார்த்து வினவுகிறார். ஆம் என்றுதான் பதிலளித்திருக்க வேண்டும். ஆனால் நான் சிங்களம் தெரியாது என பதில் அளிக்கிறேன்.

இந்தப் பெண் அந்தக் கேள்வியைச் சற்று உரத்த குரலில் கேட்டிருக்க வேண்டும், நானும் உரத்த கூறில் பதில் கூறியிருக்க வேண்டும் என்பதை, எங்கள் இருவரின் சம்பாசணையைக் கேட்ட ஒரு சுதேசகுடிமகன் கூர்ந்து பார்ப்பதில் உணரக்கூடியதாக இருந்தது. இவ்வாறு பார்க்கும் இவர் சிலவேளை ஒரு சமூகவியலாளராகவோ அல்லது மானிடவியலாளராவோ இருக்கலாம், கடையில், தெருவில், சாப்பிடும் இடங்களில், மற்றும் உல்லாசப்பயணியாக செல்லும் இடங்களில் தாம் பெற்றுக் கொள்ளும் அநுபவங்களையும் அவதானங்களையும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதிப் பட்டங்கள் பெறுபவராகவோ இருக்கலாம் அல்லது இலங்கையில் நிகழ்த்தப்பட்ட வெறியாட்டங்களைப் பத்திரிகைக்களில் வாசித்தவராக இருக்கலாம், இந்த இரு இன மக்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதில் அறியும் ஆர்வம் கொண்ட ஒரு சாதாரணநபராக கூட இருக்கலாம்.

' லங்கத..? ' அந்த இளம் பெண்ணின் கேள்வி என்னை சற்று அலைக்கழித்தது என்றே கூற வேண்டும். நான் ஏன் இப்படிப் பதில் கூறினேன் என யோசித்துப் பார்க்கிறேன், சிலவேளை இந்தப் பெண்ணுக்கு உதவிகள் ஏதாவது தேவைப்பட்டிருக்குமோ, சிங்களம் தெரியாது எனக்கூறாமல் ஆங்கிலத்தில் உதவி தேவையா எனக் கேட்டிருக்கலாமோ என யோசிக்கிறேன், நான் இப்படிப் பதிலளித்தது மனதைக் கொஞ்சம் நெடருடத்தான் செய்கிறது, தமிழ் பேசும் இலங்கையராக இருந்திருந்தால் ஒன்றில் யாழ்ப்பாணமோ..? அல்லது தமிழோ..? அல்லது இலங்கையா..? என்று கேட்டிருப்பார்கள் என்ற அநுமானத்தில் தான் அந்தப் பெண்ணின் ஒரு சொல்லில் அமைந்த கேள்வியைக் கொண்டு அவர் ஒரு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் என முடிவுக்கு வந்திருக்கிறேன், இதையிட்டு நான் வருந்திக் கொள்கிறேன்.

நான் பிறந்த நாடும் அதன் பெயரும் நான் சாகும் வரை என்னுள் எண்ணஅலைகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது. இந்த எண்ணஅலைகளுக்குள் மோதுண்டபடி நான் தரை கீழ் தொடர் ஊர்ந்தில் ஏறுகிறேன். உள்ளே நின்ற சனத்தொகைக் கண்டதும் சற்று பொறுத்திருந்து அடுத்ததை எடுத்திருக்கலாமோ என்று யோசித்தேன்.

இளம் பருவத்தினர் பாடசாலை முடிந்து வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் முன்பு போல பலத்த சத்ததுடன் கதைத்து கும்மாளம் போடுவது இப்போது குறைந்து விட்டது. இவர்கள் எல்லோருமே இயர் போனைச் காதுகளுக்குள் செருகிக் கொண்டவர்களாகவும், கைக்கணினியில் தம்மை புதைத்துக் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள். இளம் பெண் பருவத்தினர் பலரும் இயர் போனைக் காதுக்குள் செருகிக் கொண்டாலும் பலத்த சத்தமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் உரையாடல் பெரும்பாலும் வகுப்பில் நடந்த சம்பவமாக, வெள்ளிக்கிழமை பிற்பகல் செல்லவிருக்கும் ஒன்றுகூடல் பற்றியதாகவோ அல்லது இளம் பையன்கள் பற்றியதாக இருக்கும், இவர்களின் கூச்சலில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வயதானவர்களும், ஏன் செவிப்புலன் குறைந்தவர்களும் கூட காதுகளுக்குள் எதையாவது திணித்துக் கொள்கிறார்களோ எனச் சிலவேளைகளில் எண்ணத் தோன்றும்.

தரிப்புக்கள் பலவற்றைத் தாண்டிய பின் இருக்கை ஒன்று காலியாக நான் அதில் அமர்ந்து கொள்கிறேன். எனக்கு அருகாமையில் மறுபக்க நிரையில் புலம்பெயர்ந்தவர்களின் வாரிசுக்கள், இந்தியா, இலங்கையரின் அடுத்த சந்ததியினராக வெளித்தோற்றத்தில் காணப்படும் இளம் பெண்கள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் முகநூலில் இருக்கும் தமது ஆண் நண்பர்கள் பற்றிய உரையாடலில் ஈடுபட்டுள்ளனர், அவன் கால்பந்தாட்டத்தில், இந்த கிளப்புக்காக விளையாடுபவன் என்ற படி உரையாடல் தொடர்கிறது. திடீரென அவன் லங்கர் (இலங்கையர்) என அவர்களது உரையாடலில் ஒரு இளம் பெண் கூற, அது எனது சிந்தனையைத் தட்டுகிறது.

காலையில் நான் கடந்து சென்ற அந்த பெண்ணின் கேள்வி என்னிடம் மீண்டும் எழுகிறது, 'லங்கத..?' நான் வசிக்கும் நாட்டில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததியினர் இலங்கையரை லங்கர் என அழைக்கின்றனர். இந்தியர்களை இந்த நாட்டு மொழியில் இந்தர் என அழைப்பது போல இலங்கையரை லங்கர் என சொற்பாவனையில் அழைக்கின்றனர். இலங்கையின் பெயர் தொடர்பான இந்த இரு சொற்களும் என்னுள் மோதிக்கொள்ள, நினைவுகள் என்னை இலங்கையின் பெயர்மாற்ற வரலாற்றிக்கு இட்டுச் செல்கின்றது.

தேசிய சிறுபான்மை இனத்தின் போராட்டத்திற்கு வித்திட்ட காரணங்களில் ஒன்றாக சிறி எதிர்ப்பு போராட்டம் அமைந்திருந்தது. வாகனங்களில் சிறி என்ற குறியீட்டை தார்பூசி அழித்த காலங்களைம், கதைகளையும், இழப்புக்களையும் நான் இரை மீட்டிக் கொள்கிறேன்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயரை நன்கறியச் செய்த பெருமை இலங்கையின் தேசிய சிறுபான்மையினமான தமிழினத்திற்குரியது என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை, நன்கறியச் செய்தலில் பெரும்பான்மையின பேரினவாத அரசுகளும் கணிசமான பங்கை வகித்ததை குறிப்பிட மறுப்பது வரலாற்றுத் துரோகமாகிவிடும். 'அபே ரட்ட லங்காவ ' கோசத்திற்குள் இலங்கையில் வசிக்கும் எந்தவொரு சிறுபான்மைத் தேசிய இனமும் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும், இணைவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு மனங்கொள்ளவில்லை என்பதும் கூட வரலாற்றுண்மைகள்.

சிதறுகைச் தமிழ்சமூகம் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக அந்நிய சமூகங்களுக்கு தம்மைத் தகவமைத்துக் கொண்டு விட்டன. இவர்களின் இரண்டாம் தலைமுறையினருக்கு பூகோளத்தில் பெயர் சூட்டப்பட்ட பெரும்பாலான நாடுகள் பிறந்த நாடாகி விட்டன. இவர்கள் இருமொழியில் வல்லவர்களாகவும், பல்துறைகளில் விற்பனர்களாவும் வலம் வருகின்றனர். இவர்களும்தான் வருங்கால இலங்கையின் பெயரையும் கீர்த்தியையும் சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தப் போகிறவர்கள்.

'அபே ரட்ட லங்கா ' என்ற கோசத்துடன் சின்னஞ்சிறு தீவில் இனவாதம் கக்கியபடி சொந்த நாட்டில் அகதிகளை உருவாக்கியபடி, பேரினவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு வாழப்போகிறது. வரலாறு இவர்களை எவ்வாறு சித்தரிக்கும், ஒரு காலத்தில் அருகிவரும் மொழிகளை பாதுகாக்க முற்படும் மொழிவல்லுனர்கள் சிலவேளை சிங்கள மொழியில் ஆர்வப்பட்டு அதைக் காக்க முற்படலாம். ஒரு இனமோ, மொழியோ இறந்து போவதையிட்டு யாரும் எந்தவித மகிழ்ச்சியும் கொள்வதில்லை.

இலங்கையின் தேசிய சிறுபான்மையினங்கள் இலங்கையின் பெயரைச் சுமந்தபடி வலம் வருகின்றன, இளஞ்சந்ததி சிறிலங்கா என்ற பெயரை உச்சரிப்பது கூட இல்லை, லங்கர் என பிறர் கூறவும், தம்மை தமிழர் எனவும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். நாளடைவில் சிறி என்ற பெயர் நான் வசிக்கும் நாட்டில் பாவனையில் இல்லாமலும் போகலாம். இது போல பல்வேறு நாடுகளில் வசிக்கும் இளம்சந்ததி அங்குள்ள சுதேச மொழிக்கமைய பெயர்களை பாவனைப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு நாட்டின் பெருமையென்பது அங்குள்ள தேசிய சிறுபான்மையின் உரிமைகளை எவ்வாறு பேணிப் பாதுகாக்கிறது என்பதிலேயே தங்கியிருக்கிறது என சமூகவியலாளர்கள், மானிடவியலாளர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் கொள்வார்கள். இதனைக் கருத்திற் கொள்ளும் போது, இலங்கையில் பெரும்பான்மை இனம் சார்ந்த சமூகவியலாளர்கள் மற்றும் மானிடவியலாளர்கள் இல்லையோ என்ற கேள்வியும் என்னுள் எழும்புகிறது.

இவ்வாறெல்லாம் நான் என்னுள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, மீண்டும் நிர்வாணமாகி நிற்கிறது லங்கா. சிதறுகைச் சமூகத்தில் வாழும் பெரும்பான்மை இனத்தவர்களின் இந்த நாட்கள் எப்படி இருக்கும். மனிதநேயம் கொண்ட எந்த ஒருவரும் இந்த நாட்களை விரும்புவதற்கில்லை.

- மாதுமையாள்

BLOG COMMENTS POWERED BY DISQUS