முற்றம்
Typography

இன்று பெண்கள் தினம். இன்றைய பெண்களைப் பார்த்து, பெருமைப்படுவதா?  கவலைப்படுவதா? இல்லையெனில் பரிதாபப்படுவதா? என

பெண்ணாகிய எனக்குத் தெரியவில்லை. உலக வரலாற்றில் இதுவரை பெண்களின் சாதனைகள் பல உண்டு. ஒவ்வொன்றும் விலைமதிப்பற்ற முத்துக்கள்.

விஞ்ஞானரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக சொல்வது போல் பெண்ணால் வலியை அதிகமாக தாங்க முடியும்.  பெண்ணுக்கும் ஆண்களுக்கும் மாற்றங்கள் உண்டு. ஆனால் பருவ காலத்தில் பெண்ணுக்குத்தான் முதலாவதாக மாற்றங்கள் ஏற்படும்.

முதலாவது மாற்றத்தில் பெண் தாய்மையை அடைவதற்கான மாற்றம் சிறுவயதானாலும் இந்த முக்கியமான சமூக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள்.  அதற்காக தயாராகுறாள். தன் உடலில் புது உணர்வுகள். அதில் பல வலியைத்தருவதாகும்.  உடல் பலவீனத்தையும் தாங்குகின்றாள்.

அதை எதிர்கொள்வதற்கு அடிப்படை வசதிகளும் இல்லாத பெண்களும் உண்டு. அச்சந்தர்ப்பத்தில் சங்கடங்களையும் தாங்குகின்றாள்.  இதையும் தாண்டி சமூக சமய சார்ந்த சில சடங்குகளையும் எதிர்கொள்கிறாள். இச்சடங்குகளில் சிலருக்கு உடல் நிலை பாதிப்பும் ஏற்படுகின்றது.  ஆனாலும் இவையெல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கிறாள்.

இரண்டாவது மாற்றம் தாய்மையை முழுமையாக அடைவது.  இதில் தனக்குள் ஒரு உயிர் இருப்பதை உணர்வாள். அவளுக்குள்ளே அதை தாங்கிக்கொள்வாள். அதிலும் வலிகள், பொறுப்புணர்வு , அவளைக்கொல்லும். ஆனாலும் மீண்டும் உயிர்பிறப்பாள். சமூகத்திற்கும் வாழ்க்கைச் சக்கரத்திற்கும் முக்கிய பங்கை கொடுக்கிறாள்.

மூன்றாவது மாற்றம் பருவத்தையும் தாண்டி தாய்மையையும் தாண்டி முதுமைக்காலத்தில் தனக்குள் இருந்த சில உடல் பாகங்கள் செயல் இழப்பதை உணர்கிறாள்.  மறுபடியும் வலிகள் தன் வாழ்க்கைக்கு சில மாற்றங்களையும் அர்த்தங்களையும் கொடுத்த பாகங்கள் செயலிழப்பது கோமா நிலையில் இருக்குமொரு நோயாளியின் உணர்வு போல்தான்.

நாலாவது மாற்றம் கோமா நிலையினையும் வென்று மறுபடியும் உயிர்பெறும் நோயாளி போலவே செயல்லற்றுப்போன பாகங்களை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை இன்னொரு கண்ணோட்டத்தில் புதுமையாக வாழப் பழகுகின்றாள்.

இவ்வளவும் ஒருபெண்ணுக்கு சாதாரணமாகவே இருக்க கூடிய மாற்றங்கள். இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட விடயங்கள். இவை உங்களுக்கு பொது விடயமாக தெரிந்தாலும் தற்கால சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டியவையாகும்.  

இத்தோடு சமூகமும் கலாச்சாரமும்  பெண்ணுக்கு மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கும்.  அதையும் ஏற்றுக்கொள்கிறாள். இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் பலர்.  இவர்களைப்பற்றி பத்திரிகைகள், இணையத்தில், புத்தங்களிலும் வாசித்து அறிந்துகொள்ளலாம். அவர்களை போலில்லாவிட்டாலும் உங்கள் பக்கத்தில் இருகக்கூடிய எந்தவொரு பெண்ணும் சாதனை படைத்தவள் தான் ஏனென்றால் முன்புசொன்ன மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மறுபடியும் எந்தவொரு சூழ்நிலைகளுக்கும் தன்னை மாற்றிக்கொள்கின்றாள்.

ஒரு பெண் வெளிநாட்டில் வாழுகின்றாள். இரு பிள்ளைகள். ஒரு பிள்ளைக்கு மூன்று வயதும் மற்றைய பிள்ளைக்கு ஆறு வயதும் இருக்க இவள் காலையில் எழுந்து இருபிள்ளைகளையும் ஒவ்வொருவருக்குமான பள்ளிகளில் சேர்ப்பித்து ஒரு மணித்தியாலம் கார் பிரயாணம் செய்து நான்கு மணித்தியாலங்கள் வேலைபுரிந்து திரும்பவும் ஒரு மணித்தியாலங்கள் பிரயாணம் புரிந்து பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீடு சென்று வீட்டில் அவர்களுக்கும் கணவருக்கும் உரிய உணவுகளை தயார் செய்து கொடுத்துவிட்டு வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு சுமார் ஒரு நாளில் பதினாங்கு மணித்தியாலங்களாவது வேலை செய்துவிட்டு தூங்குகின்றாள்.

இவளும் விஞ்ஞான, சமூக , கலாச்சார ரீதியான கடமைகளும் செய்து தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக இம்மாற்றத்தையும் செய்துகொண்டிருக்கும் இச்சாதனைப் பெண்ணைப்பார்த்து பெருமை அடைவேன். ஆனால் இன்னும் பழமையான சமூக சாஸ்திர சம்பிரதாய சடங்குகளுக்குள் மூழ்கியிருக்கும் பெண்ணைப் பார்த்து கவலைப்படுவதா? பரிதாபப்படுவதா?

பெண்களே இன்னும் பல மாற்றங்களை எதிர்கொள்வோம் என கூறி அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.

- லாவ்யா

BLOG COMMENTS POWERED BY DISQUS