முற்றம்
Typography

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாய்தமிழ் பள்ளிகள் மூடு விழாவை நோக்கி போய்க் கொண்டு இருக்கின்றது.  காரணம் மக்களின் மனோபாவம் அந்த அளவுக்கு இருக்கின்றது. 

இனி நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால் ஆங்கிலம் ஒன்றே அருமருந்து என்பதை உறுதியாகவே நம்பத் தொடங்கி விட்டனர். தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூரில் இயங்கி வரும் தாய்த் தமிழ்பள்ளி தொடர்பாக ஜோதிஜி எழுதியுள்ள கட்டுரையொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

உலகெங்கம் வாழும் தமிழர்கள், தாய்த் தமிழகம் எனச் சொல்லிக் கொள்ளும் தமிழகத்தின் இன்றைய யதார்த்தம் மேற்கண்டவரிகளில் சொல்லப்பட்டவாறே உள்ளது. அந்நிய தேசங்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், அங்கெல்லாம் தங்கள் தலைமுறைக்குத் தமிழ்கற்பிக்க முயற்சிக்கையில், தாய் தமிழகத்தில் தமிழ் மொழிக் கல்வி மீதான ஈடுபாடு அருகிப் போவதென்பது வருத்தத்திற்குரியது.

உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு எனும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுரையும், அது பேசும் விடயமும் அவசியமானது. அதலால் அதனை இங்கே மீள்பதிவாகத் தருகின்றோம்.

 உங்களுக்கு மனமிருந்தால் "மார்க்கம்" உண்டு

இதைப்படிக்கப் போகும் நீங்கள் அடிப்படையில் தமிழ் வழிக் கல்வி மூலம் இந்த நிலைக்கு வளர்ந்து இருப்பீர்கள். தற்போது இருக்கும் உங்களின் பணி என்பது முழுக்க முழுக்க ஆங்கிலம் வழியாகவே இருக்கும்.

நிச்சயம் தங்களின் ஆங்கில அறிவே தங்களை இந்த நிலைக்கு உயர்த்திருக்கும்.  ஆனால் நிச்சயம் உங்கள் தாய்மொழி உங்கள் மனதளவில் மறக்காமல் இருப்பதால் வலைதள வாசிப்பென்பது இயல்பாக இருப்பதோடு பலராலும் வலைதளத்தில் எழுதவும் முடியுகின்றது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் உங்களால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள காரணமாக இருப்பதும் நமது தாய்மொழி தான் என்பதை உணர்ந்து இருப்பீர்கள் தானே?  என்னைப் போல உங்களைப் போல இன்னும் பலரும் இந்த தமிழ்மொழி மூலம் உலகளவில் உள்ள தமிழ்ர்களோடு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டா?  அடுத்து வரும் தலைமுறைகளும் இந்த மொழியை ருசிக்க ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் உண்டா?

நம் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ பேர்கள் தான் இந்த வலைதள அமைப்பை உருவாக்கினார்கள். திரட்டிகளின் வடிவத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இன்று நாம் இதை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.  அடிப்படைக் காரணம் அவரவர் கற்ற தமிழ் மொழி அறிவு.

குறைந்த பட்சம் நம் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை தமிழ் மொழி சார்ந்து அல்லது அந்த எண்ணத்தையாவது அவர்களுக்கு உணர்த்தி இருக்கின்றோமோ? என்பதை எப்பொழுதாவது உணர்ந்து இருப்பீர்களா?

ஆனால் இன்றைய வாழ்க்கையில் என் குழந்தைகள் என்னைப் போல மொழியறிவுக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பலரும் நிச்சயம் ஆங்கில கல்வி மூலமே வளர்த்துக் கொண்டிருக்ககூடும். ஆனால் இன்று பலரும் பள்ளியில் தமிழ்ப்பாடம் தேவையில்லை என்பதை கருத்தில் கொண்டு ஹிந்தி முதல் மற்ற பாடங்கள் வரைக்கும் கற்க வைத்து தமிழ் மொழியை மறந்து போகும் கொடுமையும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

காரணம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவ வேண்டிய ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கண்களை மூடிக் கொண்டு ஆங்கிலம் பக்கம் மக்களை தள்ளிக் கொண்டு இருப்பதால் இயல்பாகவே தமிழ்மொழியை அடிப்படையாக வைத்து பாடம் நடத்தும் அரசு பள்ளிகள் அனைத்தும் தரமற்றதாக மாறி மக்களை அந்த பக்கமே செல்லத் தேவையில்லை என்பதாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இன்று ஆங்கிலம் என்பது திடீர் பணக்காரர்களை உருவாக்கும் சிறந்த தொழில் வாய்ப்புக்கான காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இன்று இந்தியா முழுவதும் ஆங்கில வழி கல்விக்கூடங்கள் புற்றிசல் போல பெருகி விட்டது.  நாள்தோறும் புதிதாக முளைத்துக் கொண்டேயிருக்கின்றது.

ஆனாலும் சிலர் தன்னளவில் இந்த தமிழ்மொழிக்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சமர்ப்பித்து தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றர்.  நான் பார்த்தவரைக்கும் திருப்பூரில் திரு. தங்கராசு அவர்களும் இந்த பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தாய்த்தமிழ் பள்ளியின் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு எளிய கட்டணத்தில் தனது சேவையை செய்து கொண்டிருக்கின்றார். அவர் பள்ளியின் நிதிநிலை அறிக்கையை நீங்கள் படித்துப் பார்க்கும் போது நம்மைச்சுற்றிலும் இப்படியான மனிதர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களா? என்று எண்ணம் உங்களுக்குள் உருவாகக்கூடும்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நூற்றுக்கணக்கான தாய்தமிழ் பள்ளிகள் மூடு விழாவை நோக்கி போய்க் கொண்டு இருக்கின்றது.  காரணம் மக்களின் மனோபாவம் அந்த அளவுக்கு இருக்கின்றது.  இனி நமது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென்றால் ஆங்கிலம் ஒன்றே அருமருந்து என்பதை உறுதியாகவே நம்பத் தொடங்கி விட்டனர்.

என்னுடைய நோக்கம பல மொழிகள் கற்றுக் கொள்வது தவறல்ல.  குழந்தைகளின்  ஆங்கில வழிக்கல்வி தவறல்ல.  ஆனால் அடிப்படையில் நமது தாய்மொழி அறிவு குழந்தைகளுக்கு இல்லாதபட்சத்தில் எதிர்கால அவர்களின்  சமூக வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும்  காரணம் இன்று ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் அத்தனை மாணவர்களும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் போய் வாழத்தான் போகின்றார்கள் என்பது நிச்சயமல்ல.

இன்னமும் நமது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை கௌரவத்திற்காக ஒரு பட்டம் வாங்க வைக்க வேண்டும் என்று கருத்தில் கொண்டு தான் படிக்க வைக்கின்றார்கள். அதற்குப் பிறகு எப்போதும் போல தங்களது கடமையான திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற முற்றுப் புள்ளியில் கொண்டு போய் அவர்களை முடங்க வைத்து விடுகின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்தவர்களின் மொழி அறிவு என்பது சமூக வாழ்க்கையில் மிகவும் சவாலாக இருப்பதோடு தான் வாழ வேண்டிய வாழ்க்கையையும் மாற்றி விடுகின்றது.   உணர்பவர்கள் எத்தனை பேர்கள்.

எனது குழந்தைகளின் தமிழ் மொழி அறிவை மீட்டெடுக்க, வளர்க்க எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது. தற்போது தான் இயல்பான மற்றும் வெகுஜன பத்திரிக்கைகளை விரைவாக வாசிக்கும் அளவு வளர்ந்துள்ளார்கள். ஆனால் நம் பெற்றோர்கள் தொலைக்காட்சியின் உள்ளே தனது தலையை அடகு வைத்து விட்டதால் தங்களது வாரிசுகளுக்கு தேவைப்படும் இயல்பான பழக்க வழக்கங்களில் கூட கவனம் செலுத்துவதில்லை.

காரணம் தற்போதையை சமூகத்தில் எல்லாமே அந்தஸ்து சார்ந்ததாகவே பார்க்கப்படுவதால் அதுவே சரியான வாழ்க்கை என்று உணரப்படுகின்றது.

வாழ்க்கை என்பது வட்டமென்றால் நிச்சயம் ஒவ்வொன்றும் ஒரு சமயத்தில் முடித்து வைக்கப்படும்.  மாற்றம் உருவாகும் என்பதும் உண்மை தான்.

நாம் மாறத் தயாராக இருக்க வேண்டும் என்பதும் உண்மை தான்.  

திருப்பூரில் உள்ள தாய்த்தமிழ் பள்ளியின் நிதி நிலை அறிக்கை இங்கே வெளியிட்டுள்ளேன். சொடுக்கி படித்துப் பாருங்கள்.

நிச்சயம் உங்கள் மனதில் மார்க்கம் இருந்தால், உங்களால் உதவக்கூடிய வாய்பிருந்தால் திரு. தங்கராசு அவர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

சில உதவிகள் சிலருக்கு அப்போது மட்டும் தேவைப்படும்.

ஆனால் சிலருக்கும் நாம் செய்யும் உதவி என்பது சில தலைமுறைகளுக்கேச் சென்று சேர்ந்து விடும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

17,03,2013 ஞாயிறு அன்று மாலை திருப்பூர் தாய்த்தமிழ்பள்ளியின் ஆண்டு விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 4தமிழ்மீடியா வெளியீடாக வெளி வந்திருக்கும் ஜோதிஜியின் ' டாலர்நகரம் ' நூல்வெளியீடு கடந்த ஜனவரி மாதம் திருப்பூரில் நடைபெற்ற போது, இப்பள்ளியின் மழலையர்கள் நிகழ்த்திய கலைநிகழ்வுகள் பலரது விருப்புக்குரியதாக அமைந்திருந்தது. அதன் கானொளித் தொகுப்பினை இங்கே காணலாம்.

பள்ளியின் வலைதளம் 

பள்ளி குறித்து அறிய

பள்ளியின் நிதிநிலை அறிக்கை

தொடர்பு கொள்ள : கு. தங்கராசு அவர்கள் அலைபேசி எண் 984 39 440 44

திருப்பூரில் குழந்தைகள் திருவிழா

நன்றி: ஜோதிஜி தேவியர் இல்லம்

BLOG COMMENTS POWERED BY DISQUS