முற்றம்

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேசம் அறிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்குள் சர்வ தேச மக்களை உள்ளடக்க முடியாது.

அம் மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகார நலன்களுக்காக சிறிலங்கா அரசுக்குத் துணை போனார்கள், போகிறார்கள். இதனை மாற்றி அங்கு நடந்தது என்ன என்பதை உலக மக்கள் கண்டுனர என்ன செய்யலாம்..?

No Fire Zone : இலங்கையின் 2009 இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தும் கெலும் மெக்ரேயின் திரைப்படம்.Sri Lanka's Killing Field, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished ஆகியவற்றை அடுத்து கெலும் மெக்ரே உருவாக்கிய இலங்கை குறித்த மூன்றாவது ஆவணத்திரைப்படம் இதுவாகும்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர், மற்றும் ஜெனிவா சர்வதேச மனித உரிமைகள் திரைப்படவிழாவில் திரைக்கு வந்தது No Fire Zone. அதற்கு முன்னதாகவே காமன்வெல்த்திற்கான இங்கிலாந்தின் ஒன்றியம், மற்றும் இந்திய அரசியலாளர்களின் மத்தியில் இத்திரைப்படத்தை கொண்டு போயிருந்தார்கள் திரைப்பட குழுவினர்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் கொண்டுவந்த பிரேரணை வெற்றி பெற்றதற்கு இத்திரைப்படத்தின் திரையிடலும் ஒரு முக்கிய செல்வாக்கு செலுத்தியிருந்தது. அதோடு, இலங்கை ஆளும் அரசை பற்றிய தங்களது நிலைப்பாட்டை பலர் மாற்றிகொள்வதற்கும், 2009ம் ஆண்டு இலங்கையின் இறுதியுத்தத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதையும், பல பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் இது நாள் வரை தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு உருவானது.

இப்போது No Fire Zone திரைப்படத்தை உலகமெங்கும் திரையிடுவதற்கு கொண்டு செல்ல போகிறார்கள் கெலும் மெக்ரே குழுவினர். அடுத்த செவ்வாய்க்கிழமை ( மே.14) இத்திரைப்படம், புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் திரையிடப்படப்போகிறது. பின்னர் கெலும் மெக்ரே எதியோப்பியாவில் நடைபெறும் அதியாஸ் அபாபா திரைப்பட விழாவுக்கு இத்திரைப்படத்தை கொண்டு செல்கிறார்.

அதற்கடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும், ஸகண்டினேவிய, அமெரிக்க நாடுகளுக்கும் இத்திரைப்படம் கொண்டு செல்லப்படவிருக்கிறது. அத்தோடு இப்புதிய திரைப்படத்தின் முழுமையான பதிப்பை வேறு மொழிபெயர்ப்புக்களுடன், தொலைக்காட்சி சேனல்களுக்கும் வழங்கப்போகிறார்கள். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தொடருக்கு முன்னதாக தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவற்றில் இத்திரைப்படம் காட்சிப்படுத்த திரைப்பட குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக உலகில் உள்ள முக்கிய அரசியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதனை தெரிந்திருக்க வேண்டும் என்பது இவர்கள் இலக்கு. ஆக்லாந்திலிருந்து ஆர்ஜெண்டீனா வரை அரசியல் தலைவர்களிடமும், மாணவ குழுக்களிடமும் இத்திரைப்படத்தை கொண்டு செல்லுமாறு நாம் கோரப்படுகிறோம். உலகின் அனைத்து நாடுகளும் ஒருமுறையாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட நாங்கள் முயற்சிக்கிறோம்.

இலங்கையில் அதே ஆளும் அரசு தொடர்ந்து ஆட்சி செலுத்துகிறது. இறுதி யுத்தத்தில் நடந்ததாக வெளியிடப்பட்ட அனைத்து போர்க்குற்ற ஆதாரங்களையும் அலட்சியமாக மறுக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் தாம் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்கிறார்கள். இத்திரைப்படத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். வெறுமனே இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதனை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் அல்ல. சர்வதேச சமூகத்தையும், பார்வையாளர்களையும் தட்டி எழுப்புங்கள். எங்களுக்கு தேவை நீதி.

உங்கள் உதவியில்லாது இது நடைபெறவாய்ப்பில்லை. இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவுங்கள் என நீள்கிறது அவர்கள் கோரிக்கை. இதற்காக 200,000 யூரோ திட்டத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர். பிரபல Kickstarter இணையத்தளம் மூலம் அடுத்து வரும் ஒரு மாதத்திற்குள் 20,000 யூரோ நிதி திரட்டுவதற்கு அறிவித்தல் விடுத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 30ம் திகதி இந்த அறிவிப்பு Kickstarter தளத்தில் வெளியானது. 10 நாட்களுக்குள் குறித்த இலக்கை எட்டிவிட்ட போதும் தற்போது இதன் இரு மடங்கை 40,000 யூரோக்கள் எனும் புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். எதிர்வரும் மே 30ம் திகதி வரை நிதி திரட்டும் காலக்கெடு Kickstarter இணையத்தளத்தில் தொடரவுள்ளது.

எவ்வளவு நிதி திரட்டுகிறமோ, அந்தளவு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்கிறார்கள். இது தொடர்பான விபரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம்.

http://www.kickstarter.com/projects/599171067/no-fire-zone-impact-distribution?ref=card


இதனையும் பார்வையிடுக :

சுவிற்சர்லாந்திலிருந்து இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை தடுக்க நீங்கள் என்ன செய்ய முடியும்?

- சரண்

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.