முற்றம்
Typography

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார்  இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.

வடக்கிலிருந்து வெளிவந்த ஓவிய ஆசான்களில் இராசையாவின் இடத்தினை தற்போது வரையில் பிரதியிட யாருமில்லை.

இன்றைக்கும், யாழ். நுண்கலை பீடத்தில் வருகை தரு விரிவுரையாளராக ஓவியம் பயிலும் மாணவர்களுடன் கோடுகளினூடும், வண்ணங்களினூடும் மனங்களை ஆட்கொள்வது பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியைப் பிறப்பிறமாக கொண்ட ஓவியர் ஆசை இராசையா,  தற்போது நல்லூரை வசிப்பிடமாக கொண்டிருக்கிறார்.  அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.

ஓவியத்தின் மீது, பாரம்பரிய கலை வடிவங்களின் மீது அக்கறைகொண்டவர்களுக்கும் - ஒவியம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமையும் இந்த உரையாடலை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காகப் பதிவு செய்தவர் புருஜோத்தமன் தங்கமயில். உரையாடலில் பங்கு கொண்ட அனைவருக்குமான நன்றிகளுடன் - 4Tamilmedia Team

ஓவியர் ஆசை. இராசையா நேர்காணல் (பகுதி 1)


 காயத்திரி: உங்களின் அன்றாட வாழ்க்கை முறை எப்படிப்பட்டது?
 

இராசையா: இந்த உலகத்தில் தனியே வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எப்படி வாழவேண்டும் என்பதை நோக்கியதாக என்னுடைய வாழ்க்கை அமைந்திருக்கின்றது. மகளாக நீங்கள் எவ்வளவு காலம் என்னுடன் இருப்பீர்கள் என்று தெரியாது. என்னை புரிந்து கொள்ள முடியாத மக்கள் தான் என்னை சூழ அதிகமாக இருக்கின்றனர். ஆனபடியால் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்கையையே நான் உணருகிறேன். ஆனாலும், யோகாசனம், தியானம் உள்ளிட்டவைகளில் எனக்கிருக்கின்ற ஆர்வத்தினால் என்னை புதிப்பித்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றேன். உணவுப் பழக்கத்தைப் பொறுத்த வரையில் ‘பசிக்கும், ஆரோக்கியத்துக்கும் தான் உணவு. நோய்களையும், ஆரோக்கியமின்மையையும் உண்டுபண்ணுவதற்கு அல்ல.’ என்கிற அடிப்படையை உணர்ந்தவனாக மதியம்- இரவு  ஆகிய நேரங்களில் மாத்திரம் உணவை உட்கொண்டு வருகிறேன். இதுவே, என்னுடைய நீண்டகாலத்துப் பழக்கமாகவும் இருக்கின்றது.

காயத்திரி: நீங்கள் ஓவியத்துறைக்குள் எந்தத் தருணத்தில் நுழைந்தீர்கள்?

இராசையா: பாடசாலைக் கல்வி நிறைவடைந்த பின்னர் என்னுடைய தொழில்சார் துறையை தேர்ந்தெடுப்பது தொடர்பிலான பிரச்சினை வரும் பொழுது நான் ஓவியத்துறையில் தான் செல்ல வேண்டுமா அல்லது வேறு துறையில் செல்ல வேண்டுமா என்கிற குழப்ப நிலை ஏற்பட்டது. காரணம் என்னவெனில் சாதாரணதரப் பரீட்சையில் ஓவியத்துடன் மேலதிகமாக பநழஅநவசiஉயட அநஉhயniஉயட னுசயறiபெ என்ற பாடத்தினையும் நான் எடுத்திருந்தேன். குறித்த பாடத்தில் எனக்கு அதிவிசேட சித்தியும் கிடைத்தது. ஆனால், ஓவியத்தில் திறமைச்சித்தி மட்டுமே கிடைத்தது. இதனால், பலரும் என்னை வடிவமைப்பு கலையில் பயிலுமாறு கூறினார். ஆனாலும், ஒவியக் கலையின் மீது எனக்கு இருந்த ஆர்வமும், ஆசையும் அதன்பால் கொண்டு சென்றது. கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் ஓவியத்துறையில் பயில்வதற்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சையில் சித்திபெற்று அங்கு கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

காயத்திரி: கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்து அனுபவத்தையும், அந்தக்காலத்தில் உங்களுடைய ஓவியத் திறனை வளர்த்தெடுத்த காரணிகளையும் பற்றிக் கூறுங்கள்?

இராசையா: கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் கல்லூரியில் கற்றுக்கொண்டதை விட கொழும்பு கலாபவணத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஓவியங்களைப் பார்த்து கற்றுக்கொண்டது அதிகம். அதாவது, இலங்கையிலுள்ள முக்கியமான கலைஞர்களின் படைப்புக்கள் அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. கல்லூரி தவிர்ந்த நேரங்களின் நான் அதிகம் கழித்தது கலாபவனத்தில் தான். அங்கு இருக்கின்ற ஓவியங்களின் வகைகள் யாரால் வரையப்பட்டது என்பதை இன்று கூட என்னால் கூறமுடியும். அவ்வளவுக்கு அது எனக்குள் தாக்கம் செலுத்தியது. இன்றும் செலுத்துகிறது. எண்ணை வர்ண ஓவியமென்பதை நான் யாரிடமும் படிக்கவில்லை. நான் சுயமாகவே கற்றுக்கொண்டேன். அதில்தான் நான் இன்று அதிகப் பிரகாசிக்கக் கூடிய நிலையில் இருக்கின்றேன். காரணம் என்னவெனில் முன்னைய படைப்பாளிகளின் படைப்புக்களை நான் பார்த்து சுயமாகவே வரைய பழகிக்கொண்டேன். வர்ணக்கலவைகளை வாங்கி வாங்கி பல தருணங்களில் விணாகிப் போயிருக்கின்றன. ஆனால், நுண்கலைக் கல்லூரியில் நான் மூன்றாமாண்டு கல்வி பயின்றுகொண்டிருந்த தருணத்தில் அகில இலங்கை ரீதியில் ஓர் ஓவியப் போட்டியில் கலந்து கொண்டேன். அதில், என்னுடைய எண்ணை வர்ண ஓவியம் முதலாமிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. ஆனால், கைக்கெட்டியும் வாய்க்கெட்டவில்லை என்பது போல பரிசு சில காரணங்களினால் எனக்கு வழங்கப்படவில்லை. அதாவது நிலைக்குத்தாக வரையப்பட வேண்டும் என்கிற விதி இருந்தது. நான் கிடைப்பாங்காக என்னுடைய ஓவியத்தை வரைந்து விட்டேன். இதனாலேயே எனக்கு பரிசு வழங்கப்படவில்லை. ஆனாலும், குறித்த போட்டியின் நடுவர்கள் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து எனக்கு பரிசு வழங்கப்பட முடியாமைக்கான காரணத்தை கூறி, என்னுடைய ஓவியத்தின் நேர்த்தி குறித்து அதிக பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்கள். அத்துடன் 1969ஆம் ஆண்டு வெளியிட்ட கலண்டரில் என்னுடைய ஓவியத்தை பயன்படுத்தி எனக்கு உற்சாகமளித்தனர். அது என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த ஆளுமைக்கான அங்கீகாரமென்று நினைக்கிறேன். அது எனக்கு இன்றைக்கும் இனிமையான நினைவினையே வழங்கிச் செல்கின்றது.

காயத்திரி: உங்களுடைய துறையில் முதன்முதலாக நீங்கள் யாரை பார்த்து வியந்தீர்கள். அல்லது யாரை ஆதர்ச குருவாக ஏற்றுக்கொண்டீர்கள்? அது உங்களில் எவ்வளவு தாக்கம் செலுத்தியது.இராசையா: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஓவியம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் கொழும்பு கலாபவனம் எனக்கு வியப்பையும் ஓவியத்தின் உச்சங்களையும் அறிமுகப்படுத்தி வைத்தது. கலாபவனத்தில் காணப்பட்ட ஓவியங்களில் குறிப்பாக யே.வி.எப்.பெரேரா, யேமியூஸ், ஸ்ரான்லி அபெயசிங்க போன்றோர்களின் ஓவியத்தை இன்றும் என்னால் மறக்க முடியாது.  கொழும்பு நுண்கலைக் கல்லூரியின் அதிபராக ஸ்ரான்லி அபெயசிங்க அவர்கள் இருந்த காலத்தில் தான் நான் அங்கு கற்றுக்கொண்டேன். அதுதவிர அமரசேகரமுதலியார் என்கிற பெரிய ஆளுமைமிக்க ஓவியருடைய ஓவியங்கள் தான் என்னை முதன் முதலில் பாதித்தவை.

அத்துடன், ஐரோப்பிய கலைஞராக எம்ரான்டின் ஓவியங்களும் என்னை பாதித்தவை. அவரொரு மேதை. ஓவியத்தில் ஒளி- நிழலில் புதுமையைப் புகுத்தியவர். இருண்ட பகுதிகளுக்கு பின்னால் சில ஒளிகீற்றுக்களை வைத்து அற்புதமாக வரையும் கலையை அறிமுகப்படுத்தியவர். அவர் வரைந்த ஓவியமொன்று அண்மைக்காலத்தில் பல இலட்சங்களுக்கு ஏலம் போனது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து வந்த ஓவிய வரைதல் முறைக்கு அது முரணாக இருந்தது. பின்னரான  காலத்தில் அது அதிகம் வரவேற்பைப் பெற்றது. அதுபோல, புதிய முயற்சிகளை மேற்கெண்ட வண்கா என்கிற ஓவியருடைய ஓவியங்களில் ஒன்றுகூட அவருடைய வாழ்நாளில் விற்பனையாகவில்லை. ஆனால், அதற்கு பின்னரான காலங்களில் அவரின் ஓவியங்கள் உலகம்பூராகவும் வியப்புடன் பார்க்கப்பட்டதுடன், வரவேற்பையும் பெற்றன. அவரை ஓவியத்தின் கடலாகவே கருத முடிகின்றது. அத்துடன், அமரசேகர முதலியாரின் தாங்கங்களிலும் என்னுடைய ஓவியக்கலை அதிகளவில் வளர்ந்திருக்கின்றன. அவருடைய ஓவியமொன்று இன்றும் என்னிடம் இருக்கின்றது. பலர் அதனை பெரிய விலைக்கு கேட்டபோதும் நான் அதனை தரவில்லை. ஏனெனில், அவருடைய தனிப்பட்ட ஓவியமுறைமை என்னை இன்றைக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதுபோல, டீடிஎஸ் பெரேராவின் இன்னொரு பரிணாமம் எண்ணை வர்ணங்களை அதிகளவில் பாவிக்காமல் வரையும் ஒருவகையான முறைமை. அது, அழுத்தமாகவும், அற்புதமாகவும் இருக்கும். மற்றும் தெரணியகல என்றொரு ஓவியரினது படைப்புக்களும் என்னைக் கவர்ந்தது. நீர்- எண்ணை முறையில் அவரின் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். அதுபோல லங்கா திலக என்கிற ஓவியரின் ஓவியங்களும் என்னில் தாக்கம் செலுத்தியுள்ளன. நீர் வர்ணத்தை பாவிப்பதற்கும், எண்ணெய் வர்ணத்தை பாவிப்பதற்கும் தனித்தனியான முறைகள் இருக்கின்றன. அவை இரண்டையும் சரியாக அவர் செய்யக்கூடியவர்.

இவ்வாறான பலர் ஆரம்பத்தில் என்னில் தாக்கம் செலுத்தியுள்ளனர். அதனை நான் பின்பற்றியும் வந்திருக்கிறேன். ஓவியம் உள்ளிட்ட கலைகளின் தாக்கம் நிறைந்த கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் என்னில் நிறையவே பதிவுகளாகி ஆளுமை வளர்ச்சிக்கு உதவின.

காயத்திரி: உங்களுக்கு இலங்கையின் தபால் தலையை வரையக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவம் எப்படியென்று கூறுங்கள்?

இராசையா: அது என்னுடைய திறமைக்கு கிடைத்த வாய்ப்பு என்பது சரியானதே. ஆனாலும், அதைத் தாண்டி அதிஸ்டமும் என்பக்கம் இருந்திருக்கிறது. அதாவது கொழும்பு றோயல் கல்லூரியில் நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் அப்போது தபால் தந்தி அமைச்சராக இருந்தவரின் பிள்ளைகள் இருவர் (இரட்டையர்கள்) என்னுடைய மாணவர்களாக இருந்தனர். இருவரின் ஓவியங்களையும் அமைச்சர் பார்த்த சந்தர்ப்பமொன்றில் என்னுடைய ஓவியத்தையும் அவர் பார்த்து வைத்திருக்கின்றார். அந்தக் காலத்தில் சேர் பொன் இராமநாதன் அவர்களின் நினைவாக தபால் தலை வெளியிடப்பட இருந்தது. அந்த நிலையில், அமைச்சர் தன்னை வந்து சந்திக்குமாறு எனக்கு இரண்டு பிள்ளைகளினூடும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும், இதற்கு முன் அந்த இரண்டு பிள்ளைகளில் (மாணவர்களில்) ஒருவருக்கு வகுப்பறையில் நான் தண்டனை வழங்கியிருக்கிறேன். பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பில் ஆராய அமைச்சர் என்னை அழைக்கிறாரா என்று தயங்கினேன். ஆனாலும், ஒரு துணைக்கு என்னுடைய மாமனாரை அழைத்துக்கொண்டு அமைச்சரின் வீட்டுக்கு சென்றேன். அங்கு சென்றபோது எனக்கு இராஜ மரியாதை கிடைத்தது.

உரையாடல் தொடரும்...

4தமிழ்மீடியாவுக்காக : புருஜோத்தமன் தங்கமயில்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்