முற்றம்
Typography

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் 

இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.

வடக்கிலிருந்து வெளிவந்த ஓவிய ஆசான்களில் இராசையாவின் இடத்தினை தற்போது வரையில் பிரதியிட யாருமில்லை.

இன்றைக்கும், யாழ். நுண்கலை பீடத்தில் வருகை தரு விரிவுரையாளராக ஓவியம் பயிலும் மாணவர்களுடன் கோடுகளினூடும், வண்ணங்களினூடும் மனங்களை ஆட்கொள்வது பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியைப் பிறப்பிறமாக கொண்ட ஓவியர் ஆசை இராசையா,  தற்போது நல்லூரை வசிப்பிடமாக கொண்டிருக்கிறார்.  அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.

ஓவியத்தின் மீது, பாரம்பரிய கலை வடிவங்களின் மீது அக்கறைகொண்டவர்களுக்கும் - ஒவியம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமையும் இந்த உரையாடலை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காகப் பதிவு செய்தவர் புருஜோத்தமன் தங்கமயில். உரையாடலில் பங்கு கொண்ட அனைவருக்குமான நன்றிகளுடன் - 4Tamilmedia Team


ஓவியர் ஆசை. இராசையா நேர்காணல் பகுதி 2 (பகுதி 1)

காயத்திரி: நேரிலே பார்த்து பல ஓவியங்களை வரைந்திருக்கிறீர்கள். அதில் உங்களுடைய அனுபவங்கள் எப்படி?

இராசையா: நேரிலே பார்த்து வரைதல் என்பது மாதிரியை முன்னால் வைத்துவிட்டு பார்த்து வரைவதாகும். புகைப்படங்களிலுள்ளதை பார்த்து வரைவதல்ல. ஆனாலும், நான் என்னுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து வரைந்திருக்கின்றேன். அதுகூட தத்துரூபமாக வந்திருக்கின்றது. அத்துடன், புகைப்படங்களிலிருக்கின்றதையும் நியத்தில் இருப்பதாக கருதி வரைந்து பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றேன். அதுபோல, யாழ் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வித்தியானந்தன் அவர்களின் ஓவியத்தையும் புதிய பரிணாமத்தில் வரைந்திருக்கின்றேன். அதுபோல, யாழ் பல்கலைக் கழக இராசயபீடத்தில் தலைவராக இருந்த மகேஸ்வரன் அவர்களின் படத்தினையும் வரைந்திருக்கிறேன். அதுவும் சிறப்பாக வந்திருக்கிறது. அது மறக்க முடியாதது. நேரில் பார்த்து வரைதலை பலர் பெரிதாக மதிப்பதில்லை. ஆனால், அப்படியல்ல அதிலும் சிறப்பாக செய்ய முடியும்.

காயத்திரி: அண்மைக்காலமாக கிடைநிலையான ஓவியங்களையே அதிகமாக வரைந்து வருகிறீர்கள் அந்த அனுபவத்தைக் கூறுங்கள்.

இராசையா: கிடைநிலையிலான வரைதலில் என்னுடைய தனிப்பட்ட முறையிலான ஓவிய வரைதலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. வேகம் அதிகரித்து வருகின்றது. சுமார் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனை, ஓவியத்துறையில் இருக்கின்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். உருவப்படங்களை வரைவதைக் காட்டிலும் புதிய தொழிநுட்ப முறையினை அறிமுகப்படுத்துவதற்கு கிடைநிலை வரைதல் முறை அனுசரனையாக இருக்கின்றது. அது வெற்றியும் பெற்றிருக்கிறது. கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் என்னுடைய இரண்டு ஒவியங்கள் சுமார் ஆறு இலட்சத்துக்கு விற்பனையாகி இருக்கின்றன.

 காயத்திரி: நடனம்- சங்கீதம் உள்ளிட்ட இரண்டு கலையிலும் வர்ணம் என்கிற விடயமே அதி முக்கியமானது. இரு கலையிலும் ஒருவரின் திறமையை மதிப்பிடுவதற்கு வர்ணத்தினை ஆடவோ- பாடவோ சொல்லி அறிந்து கொள்ளமுடியும். அதுபோலவே, ஓவியத்துக்கு மிகவும் முக்கியமான விடயம் வர்ணம். ஆனாலும், அந்த அடிப்படை அறிவுகூட இல்லாத பலர் இன்று பாடசாலைகளில் பயில்விக்கின்றனர். இந்த நிலையில் வர்ணம் பற்றிய உங்களின் கருத்து.

இராசையா: ஓவியமும், நடனமும் கட்புலன் சார்ந்த கலைகள். கட்புலன் சார்ந்த கலைகளில் வர்ணம் கோலொச்சும். அதனை நிச்சயமாகத் தவிர்க்க முடியாது. ஆனால், இந்தியாவின் பிரபல ஓவியர் ஆதிமூலம் அவர்கள் கறுப்பு- வெள்ளை வர்ணத்தை மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். லைன்- மற்றும் வோஸ் வகையிலான ஓவியங்கள் அவருடையது. சில தனிப்பட்ட விருப்ப வெறுப்புக்களின் அடிப்படையில் அவை தாக்கம் செலுத்துகின்றன. ஆனாலும், வர்ணங்கள் என்பது ஓவியத்தில் என்றுமே பிரித்துப் பார்க்க முடியாதவை. அதாவது ஒவ்வொரு வர்ணத்திற்கும் குணாதிசயங்கள் இருக்கின்றன. இதன் மூலம், நாம் படைக்கின்ற ஓவியத்தில் குணாதிசயங்களைப் பேணுவதற்கு வர்ணங்கள் இன்றியமையாதனவாக இருக்கின்றன. குறிப்பாக இருண்ட வர்ணங்கள் ஒருவனுடைய துக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல சந்தோசமான நிலையை வெளிப்படுத்துவதற்கு மிகவும் ஒளிர்வு கூடிய வர்ணங்களைப் பாவிக்க முடியும். வர்ணங்களை தவிர்த்து விட்டு ஓவியத்தில் அதிகளவு பிரகாசிக்க முடியாது.

பாடசாலைகளில் பயில்விக்கின்ற ஆசிரியர்களின் அடிப்படை அறிவானது சிறந்த நிலையில் இருக்க வேண்டும். ஆனாலும், தற்போது அது பெரியளவில் இல்லை என்பதை மனவருத்தத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தொழில் வாய்ப்புக்காக மட்டும் ஓவியத்தை வரைந்து விட முடியாது. நாம் செய்கின்ற தொழிலில் மற்றவர்களை வளர்க்க விரும்பினால் அந்தத்துறையில் குறிப்பிட்டளவு அறிவுடன் இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது தவறாகப் போய்விடுகிறது. எந்தத்துறைக்கும் துறைசார் நிபுணர்களே உள்வாங்கப்படவேண்டும். இல்லாத நிலையில், அது வெறுமையாகப் போய்விடுகிறது.

காயத்திரி: ஓவியப் பாணிகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

இராசையா: ஓவியப்பாணி என்பது 14ஆம் நூற்றாண்டளவில் வந்த கேபேட்- ஜென் லொயன் கிறனைட் என்ற இரு சகோதரர்களின் முறைமை தாண்டிய ஓவிய வரலாறு. அதுபோல 15ஆம் நூற்றாண்டில் மைக்கல் ஏஞ்சலோ, லியணாடோ டாவின்சி, ரபேல் போன்ற ஓவியர்களின் மூலம் ஓவியத்தின் மறுமலர்ச்சி காலமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து றூபன், எல்கிரிக்கோ, வன்டைட், வெலஸ், வெம்ராற் போன்ற மாமேதைகளின் பங்களிப்புக்கு பிறகு, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அதாவது 1860ஆம் ஆண்டு பதிவொனிச் சூரிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைக் கொண்டு வந்தவர்களாக, மனிக், மொனி, வினோவா, திசாரா ஆகியோர்களைக் குறிப்பிடலாம். இந்த முறைமையைத் தொடர்ந்து, பல முறைமைகள் வந்திருக்கின்றன. இன்று வரை செல்வாக்குச் செலுத்தும் செரிலிசமும், அற்றாக்கும் கவனிக்கப்பட வேண்டியவை.

காயத்திரி: நீங்கள் கையாளும் ஓவியமுறைமைகள்

இராசையா: ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை என்னுடைய ஓவியம் வரையும் முறைமை மாற்றமடைந்து வந்திருப்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். மாற்றமடைந்ததிற்கான காரணம் நான் வேகமாக படத்தினை வரையவேண்டும் என்கிற உந்துதல். நான் வேகமாக ஓவியங்களை வரைவதற்காக தூரிகைகளை பாவிப்பதை விட ‘பலற்னைக்’கை பாவிக்க ஆரம்பித்தேன். சில ஓவியங்களை 90 வீதமான பகுதிகளையும் பலற்னைக் பாவித்து வரைந்திருக்கிறேன். ஆனாலும், மற்ற முறைகளிலும் வரைந்து வருகிறேன்.  அத்துடன், ‘வரையப்பட ஓவியமே’ அதிக தருணங்களில் எந்த முறைமையை கையாள வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன.

காயத்திரி: ஒவ்வொரு கலைஞருக்கும் தனித்துவம் அவசியம். அதாவது, யாழ்ப்பாணத்தில் நடனக் கலைஞராக இருக்கின்ற என்னால் புதிய விடயங்கள் பலவற்றை புகுத்தும் போது கலாசாரம் என்கிற பெயரினால் பல இடையூறுகள் அல்லது எதிர்ப்பை சந்தித்திருக்கின்றேன். ஓவியத்துறையில் நீங்கள் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பில் கூறு முடியுமா?

இராசையா: கலைத்துறையில் மாற்றம் என்பது முக்கியமானது. ‘மாற்றமாம் வையகம்’ என்று தமிழில் ஒரு கூற்று. மாற்றத்தை உள்வாங்காதவன் அல்லது மாற்றத்தை உண்டு பண்ண முடியாதவன் கலைஞராக கருதமுடியாது. ஒவ்வொரு கலைஞனும் கொண்டாடப்படுவது அவனுடைய தனித்திறமைகளினால் தான். ஏற்கனவே இருந்தவற்றை செய்யும் கலைஞர்களை பெரியளவில் யாரும் கொண்டாடுவதில்லை. எந்தக் கலையிலும், அதனைத் தாண்டியும் மாற்றம் முக்கியமானது. இசைத்துறையில் பாலமுரளி கிருஷ்ணாவும், ஏஆர்.ரஹ்மானும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு மாற்றத்தை உண்டுபண்ணி வெற்றி பெற்றவர்கள்தான். ஆனாலும், அடிப்படை கலைகளின் முறைமைகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். அதன்மூலமே சிதைவுகளின்றி ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டுவந்து வெற்றிபெற முடியும். கலைஞர்களின் புதிய முயற்சிகளை தடுத்து நிறுத்துவது கலை வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அவரவர் திறமைகளின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதும் தப்பில்லை. பாரம்பரியமாக வந்தவற்றை மீறுகின்றனர் என்கிற வாதம் பெரியளவில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், பாரம்பரியத்தின் உள்ளடக்கங்கள்கூட மாற்றத்தின் அடிப்படையிலேயே உருவானவை.


காயத்திரி: யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் தற்போது விரிவுரையாளராக பணியாற்றுகிறீர்கள். அந்த அனுபவங்களைப் பற்றி கூறுங்கள்?

இராசையா: இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுழைவதற்கு முன்னர் எந்தக் காலத்திலும் நான் விரும்பவில்லை. ஏனெனில் அங்குள்ள சூழ்நிலை எனக்கு பொருத்தமானதாக இல்லை. ஆனாலும், நுண்கலைப்பீடத்தின் ஒருங்கிணைப்பாளராக கலாநிதி சிவபுஸ்பராஜா அவர்கள் வந்தபின்னர், அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே அதற்குள் நான் நுழைந்தேன். மோதல்கள் உச்சம்பெற்றிருந்த காலத்தில் சுமார் 100 மாணவர்கள் உள்ள வகுப்புக்கு நான் ஓவியத்தை போதிக்க வேண்டி ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் குறித்த மாணவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பேசினேன். அப்போது, நான் குறிப்பிட்டேன். நாங்கள் வாழும் போது மற்றவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துமாறு கூறினேன். அதன் பின்னரான காலத்தில் மாணவர்கள் என்னுடன் ஒருங்கிணைந்து செயற்பட ஆரம்பித்தனர். ஆனாலும், சில தருணங்களில் எரிச்சலூட்டும் நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இன்றுவரை சுமூகமாக தொடர்கின்றது.

நான் மாணவர்களின் அடிப்படை அறிவை வளர்ப்பதிலும் அவர்களின் தனித்துவத்தைப் பேணுவதிலுமே கவனம் செலுத்துகின்றேன். மாணவர்களுடன் சேர்ந்து இயங்குவது புத்தூக்கம் அளிக்கும். அதுவே, அவர்களை இன்னும் வளர்க்க உதவும். மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவற்றைத் தாண்டி, ஓவியத்துறையில் இருக்கின்ற எங்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் போதியளவில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

காயத்திரி: கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற விருதுகள் தொடர்பில் என்ன கூறு விரும்புகிறீர்கள்?

இராசையா: ஒரு கலைஞன் தன்னுடைய துறையில் முழுமையாக சேவையாற்றியதற்காக விருதுகள் வழங்கப்படுவது வழங்கப்படுவதில்லை. மாறாக அவனுடைய தனிப்பட்ட ஆளுமையை இன்னும் இன்னும் வளர்ப்பதற்காகவே விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் பெற்றுக்கொள்வதை வைத்துக்கொண்டு தலைக்கனம் கொள்வது தேவையற்றது. ஆனாலும், விருதுகளைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எனக்கு ஐயம் இருந்தது. ஆனாலும், கலாபூசனம் விருது பெற்றபொழுது அதன் சமூக அங்கீராகத்தை உணர முடிந்தது. அடிப்படையில் கலைஞர்களை ஓய்ந்து விடாதீர்கள் என்பதை நினைவுறுத்துவதற்காகவே விருதுகள் வழங்கப்படுகின்றன என்று

 

உரையாடல் தொடரும்...

4தமிழ்மீடியாவுக்காக : புருஜோத்தமன் தங்கமயில்

BLOG COMMENTS POWERED BY DISQUS