முற்றம்

இப்படித்தான் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்கிறார்கள்.
இப்படித்தான்
இந்தி எதிர்ப்பு போரில் நடந்தது என்கிறார்கள்.
இதுதான் குஜராத் மாடல் என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில்
மக்கள் இவ்வாறுதான் கிடந்தார்கள் என்கிறார்கள். 

'திரும்பிப் போ' என்று சொன்னதற்கு
இதுதான் பதில் என்கிறார்கள்.

பயன்படுத்தப்பட்டது என்ன ரக துப்பாக்கி
என்பதைப்பற்றி விவாதங்கள் நடக்கின்றன.
மாணவி வெனிஷ்டா போலீசுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்
வாயில் சுடப்பட்டாள் என்கிறார்கள்.
இந்த அதிகாலையில்
நான் வாய்விட்டு அழுகிறேன்,
அனிதா இறந்த இரவிலும்
இப்படித்தான் அழுதேன்.

மக்கள் எவ்வளவு அப்பாவியாக
ஒரு பதாகையை கையில் ஏந்திக்கொண்டு
தெருவுக்கு வருகிறார்கள்.
நமது அரசாங்கம் நம் குரலை கேட்கும் என்று நம்புகிறார்கள்.
ஜனநாயகத்தில்
தாம்தான் எஜமானர்கள் என்று நம்புகிறார்கள்.
உலகமே பார்த்துக்கொண்டிருப்பதால்
நம்மை அடிக்கமாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.
அதிகாரம் ஒரு வஞ்சகமுள்ள மிருகம்
அது பொறுமையுடன் சந்தர்ப்பத்திற்காக
காத்திருக்கிறது,
அதை நீங்கள் வெல்ல முடியும் என
அது உங்களை நம்பவைக்கிறது.
படுகளங்களை நோக்கி
மக்கள் எந்த ஆயத்தமும் இல்லாமல் வருகிறார்கள்.
அரசாங்கம் ஒரு வேன் மேல் ஏறிக்கொண்டு
மஞ்சள் டீ ஷர்ட்டுடன் நிதானமாகச் சுடுகிறது.
இதற்கு முன் மக்கள் அதை
சினிமாவில்தான் கண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கி குண்டினால் செத்தால்
பத்து இலட்சம் தருகிறார்கள்.
இது நல்ல ஆஃபர் என்றே படுகிறது.
நிதிச்சுமையிலும் அரசாங்கம் இதுபோன்ற
நல்ல திட்டங்களை மக்களுக்காக
செயல்படுத்துகிறது.
நான் என்னைச் சுடுவதற்கு
பதினோரு இலட்சம் கேட்டு
இன்று பேரம் பேசுவேன்.
நாம் மனித உயிர்களின் மதிப்பை
கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
அதிகரிக்க வேண்டும்.

இந்த அதிகாலை வெளிச்சத்தில்
ரத்தத்தின் பிசுபிசுப்பு இருக்கிறது.
நீண்ட இரவு முழுக்க
நான் கொலைக்காட்சிகளை
சிந்தித்து முடித்துவிட்டேன்.
என்ன செய்யவேண்டும்?
வெற்று வார்த்தைக்கூட்டங்களை
உருவாக்க வேண்டும்.
தொலைக்காட்சி கேமிராகள் முன் வெடிக்கும்
என் கையாலாகாத கோபங்கள்.

வாருங்கள்
சதுக்கங்களில் கூடுவோம்,
சுடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
மரித்தவர்களுக்கு
மெழுகுவர்த்திகளை ஏந்துவோம்.
துண்டுப்பிரசுரங்களை கொடுப்போம்,
மே 22..நமக்கு நினைந்தல்களுக்கு
இன்னுமொரு புதிய தேதி கிடைத்துவிட்டது.
இன்னும் நிறைய தேதிகள்
நமக்கு கிடைக்கவிருக்கின்றன.
நாம் தெருநாய்களைப்போல
தொடர்ந்து வேட்டையாடப்படவேண்டும் என்பதுதான் திட்டம்,
'Operation tamil dogs' என அதற்கு
ரகசியமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

எனக்கு மூச்சுத்திணறுகிறது.
வெனிஷ்டாவின் தொண்டையில்
சுடப்பட்பட்ட தோட்டா
நம் குரல்வளைகளில் அடைத்துக்கொண்டிருக்கிறது.
பலமாக இருமுகிறேன்
நம்மால் அதை அவ்வளவு எளிதாக
துப்ப முடியுமா?

என்ன மயிருக்காக
நாம் இவ்வளவையும் சகித்துக்கொண்டிருக்கிறோம்?
என்ன மயிருக்காக
இவ்வளவு பொறுமையாக
இருக்கிறோம்?

23.5.2018
காலை 6.02
மனுஷ்ய புத்திரன்