முற்றம்

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

ஊரின் நடுவே கம்பமொன்றை நட்டு, அதிலே தன் தொப்பியை தக்க வைத்து, மக்கள் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும்; தவறுவோர் தண்டிக்கப்படுவார்கள் எனும் அவனது கட்டளைக்கு மக்கள் பணிந்து, தொப்பிக்கு வணக்கம் செய்தார்கள்.

காட்டில் வேட்டையாடிய வேட்டைப் பொருட்களை மக்கள் சந்தைக்கு விற்பதற்காக, தன் மகனுடன் வந்த வில்லாளி ஒருவன், வணக்கம் செலுத்தத் தவறினான். காவலர்கள் அவனைப்பிடித்து அதிகாரி முன்னிறுத்தித்தினர்.

வில்லாளியின் மகனை மரத்தில் பிடித்துக்கட்டி, அவன் தலைமேல் ஆப்பிள் பழமொன்றினை வைத்து, ஓரே அம்பில் ஆப்பிளை அடித்தால் விடுதலை, இல்லையேல் தண்டனை எனக் கூவினான். மகன் தந்தைக்குத் தைரியம் சொன்னான்.

பெல் எனும் பெயர்கொண்ட மைந்தனின் தலையிலிருந்த ஆப்பிளைக் குறி வைத்து, அம்பு தொடுத்தான் வில்லாளி தெல். வில்லிருந்து விடுபட்ட அம்பில் சிதறியது ஆப்பிள் மட்டுமல்ல, அதிகாரியின் அடக்குமுறையும், நயவஞ்சகமும். ஆர்பரித்தனர் சுற்றியிருந்த மக்கள்.

நய வஞ்சக அதிகாரியை அழித்து, அடிமைப்பட்டுக்கிடந்த தன்நிலத்து மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்த வில்லாளி வில்லியம் தெல்(Wilhelm Tell ), சுவிற்சர்லாந்தின் தேசிய வீரன்.

URI எனும் மலைப்பிரதேசத்தின் விடுதலை நாயகனான, அவனது சிலையினை சுவிற்சர்லாந்தின் பல இடங்களிலும் காண முடியும். ஐரோப்பாவின் முக்கிய வேகவீதியான A2 சாலையில், Gotthard Raststätte nord - Uri, நெடுஞ்சாலை சேவை ( Motorway Service Area ) தரிப்பிடத்தில் அமைந்துள்ள உணவு விடுதியில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள வில்லியம் தெல்லின் சிற்பத்தின் கீழ், ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ், இத்தாலி, மொழிகளில் அவனது கதை கேட்கும் வசதி செய்துள்ளார்கள்.

அடக்குமுறையை உடைத்தெறிந்த மண்ணின் மைந்தனது கதையினை, அடுத்த சந்ததிக்கும், அறியாதார்க்கும், கிடைக்கும் சந்தர்பங்களில், சொல்லிப் பெருமை கொள்கின்றார்கள்.

இன்று ஆகஸ்ட் 1; சுவிற்சர்லாந்தின் 711 தேசிய நாள்.