முற்றம்
Typography

நீங்கள் என்ன செய்யமுடியும்...?

உறவுகளின் கண் முன்னே கைதானவர் நாங்கள் -
காணமற்போவது கூடுமோ..?
கண்ணிருந்தும், காதிருந்தும்,
வாயிருந்தும் பேசாதிருப்பீரோ...?
நீதி கேட்காதிருப்பீரோ...? என்னும் வரிகளைப் பேசியவாறு முடிந்திருந்த வரிகளையும், வரிகளுக்கான வரைபுகளாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒவியங்களையும், பார்த்து முடிக்கையில் மனம் திக்கித்துப் போனது.

இந்து மகாசமூத்திரத்தின் குட்டித்தீவான இலங்கையில், உறவுகள் நட்புக்கள் முன் அரச படைகளால் கைதானவர்கள், காணமற்போன துயரம் குறித்துப் பேசியதற்குப் பொருத்தமாக "தேடல்" (Search )  தலைப்பிடப்பட்டிருந்த அக் கண்காட்சி இடம்பெற்றது சுவிற்சர்லாந்தின்  Lausanne Flon நகரில் அமைந்துள்ள Pole sûd பல்கலாச்சார மண்டபத்தில்.

ஓக்டோபர் 26ந் திகதி முதல் 29ந் திகதி வரை இடம்பெற்ற இவ் ஓவியக் கண்காட்சி, இலங்கையில் மனிதர்கள் காணமற் போதல் எனும் பயங்கரத்தையும், அதன் தொடர்விளைவான துயரத்தினையும், ஒரு கதை போல, பத்து பென்சில் ஒவியங்களை வைத்து, அழுத்தமாக  வெளிப்படுத்தியிருந்தார்கள் வேடன் படைப்பாய்வகத்தினர்.

பிரெஞ், மற்றும் தமிழ் மொழியிலான கருத்துக் குறிப்புகளோடு இடம்பெற்ற இக் கண்காட்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் பலரும், சிறந்த சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்தப்படும் அந்தக் குட்டித் தீவுக்குள் இவ்வளவு துயரங்களா..?  என வியந்து போனார்கள்.

இக் கொடுமைகளுக்காக நாங்கள்  இனி என்ன செய்ய முடியும்? எனக் கேட்போருக்கு அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரக் குழு விடுத்துள்ள அறிக்கையின் பின்வரும் வரிகள் மிக மிகப் பொருத்தமானவையாக அமைந்திருந்தன.

 " இலங்கை என்றதும் நீங்கள் பார்க்கும் விடயங்கள், இலங்கை ஒரு மிகச்சிறந்த தீவு. இயற்கை வளங்கள், உணவு வளங்கள் நிறைந்த நாடு. வருடந்தோறும் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் நாடு என்பதே.ஆனால் நீங்கள் பார்க்கத் தவறும் விடயங்கள், இலங்கையில் பல மக்கள் இன்னமும் ஒரு வித அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். சித்திரவதைகள், படுகொலைகள், இனப் பாகுபாடு, மனித உரிமை துஷ்பிரயோகங்கள், அரசாட்சியின் அதிகார துஷ்பிரயோகங்கள் என்பவற்றிற்கு நாளாந்தாம் சாட்சிகள் அதிகரித்து வருகின்றன.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுபவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுபவர்கள், காணாமல் போகச்செய்யப்படுபவர்கள் என்பவற்றிற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவது மிக அரிதாகவே நடைபெறுகிறது என்பவையாகும்.இவ்வாறான நிலையில் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கிய விடயமாக இருக்கக் கூடியது விழிப்புணர்வு ஏற்படுத்தல். உங்கள் நண்பர்களுக்கு மாத்திரமல்லாது இலங்கைக்கு சுற்றுலா செல்ல விரும்பும் எந்தவொரு நபர்களுக்கும் நீங்கள் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

சுற்றுலாத்துறை என்பது ஒரு நாட்டுக்கு நேர்மறையான பார்வையை கொடுக்கும் என்பது உண்மை தான். ஏற்கனவே பல்வேறு இன்னல்களினால் வேதனையில் இருக்கும் ஒரு நாட்டு மக்களுக்கு அதன் சுற்றுலாத்துறையையும் புறக்கணிக்க கூறுவது எமது  நோக்கமல்ல. 

உங்களது சுற்றுலா திட்டம், உள்நாட்டு சமூகத்தினருக்கு (கிராம மக்களுக்கு) நேரடியாக பயனளிக்க கூடியதாக இருக்க
வேண்டும். ஆனால், ஏற்கனவே மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கே இதுவரை அது லாபகரமாக  அமைந்திருக்கிறது.  இதனால் தான் விழிப்புணர்வுடன் கூடிய வகையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளுங்கள்.

இலங்கை அரசு காமன்வெல்த் மாநாட்டை இம்முறை எடுத்து நடத்துகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறும் இம் மாநாட்டை இலங்கை வெற்றிகரமாக நடத்தி முடித்தால் 2013-2015 காலப்பகுதிக்கு காமன்வெல்த் தலைமைப் பொறுப்பை இலங்கை பெற்றுக் கொள்ளும்.

அதாவது காமன்வெல்த்தில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளுக்கும் தலைமை தாங்கும் பொறுப்பு இலங்கைக்கு கிடைத்துவிடும்.  மனித உரிமை மீறல்களுடன் தீவிரமாக தொடர்பு படுத்தும் ஒரு நாட்டுக்கு 54 உலக நாடுகளுக்கான தலைமைப் பொறுப்பை கொடுப்பதற்கு நீங்களும்,  உங்கள் நாடும் ஒரு காரணமாகிவிடக்கூடும்.  "

இந்தக் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களையும், குறிப்புக்களையும் இணைத்து எமது செய்தியாளர் தொகுத்திருக்கும் காணொளியினைக் கீழே காணலாம்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள், இதற்காக நீங்கள் என்ன செய்ய முடியும்...?

- 4தமிழ்மீடியாவிற்காக: யுகபாலன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்