முற்றம்

செல்லம் கோபால கிருஷ்ணன் பிரபல சமையல் கலை நிபுணர். இவர் சமையல் கலையை பயிற்றுவிக்க ஆரம்பித்து 55 ஆண்டுகள் ஓடிவிட்டன.  தாய், மகள், பேத்தி என மூன்று தலைமுறைகளுக்கும் இவர் சமையல் கலை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் வசிக்கும் இவரது வீட்டில் எப்போதும் இளம் பெண்களின் கூட்டமாகவே இருக்கும். அதுவும் வட நாட்டு பெண்கள் கூட்டம்தான் அதிகம் இருக்கும். ஏன் இப்படி என்று செல்லம் அம்மாவிடம் கேட்டப்போது,

"வட நாட்டு  பெண்கள் என்னதான் படித்து இருந்தாலும், அவர்கள் வீட்டில்  சமையலுக்கு வேலையாட்கள் வைக்க மாட்டார்கள். வீட்டுக்கு வரும் மரும்கள்கள்தான் சமையல்  செய்ய வேண்டும். எடுபிடிக்கு வேண்டுமானால் வேலையாட்கள் வைத்துக் கொள்வார்கள்.


அதுவும் ஒவ்வொரு பெண்ணும் ஸ்வீட் செய்ய கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் உணவில் ஸ்வீட்டுக்கு அத்தனை முக்கியத்துவம். காலாகாலத்தில் திருமணம்  செய்து விடுவார்கள். திருமணத்துக்கு முன்னர், சமையல் வகுப்புக்கு கட்டாயம் அவர்கள் சென்றாக வேண்டும். அவர்கள் சமையல் முறைகளை அவர்கள் வீட்டிலேயே கற்றுக் கொண்டு  இருந்தாலும், வடநாட்டு ஸ்வீட் செய்து கொள்ள கட்டாயம் சமையல் வகுப்புக்கு அனுப்பி விடுவார்கள். நான் திருமணமான புதிதில் கொல்கத்தாவில் வசித்து  வந்ததால், வட நாட்டு இனிப்புக்கள் செய்வது, அவர்கள் சமையல் செய்வது என்று நன்றாக கற்றுக் கொண்டேன்.


55 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் எங்கள் வீட்டுக்கு நான் திரும்ப வந்தபோது, ஏன் நாம் சமையல் கலையை கற்றுக்  கொடுக்க கூடாது என்று தோன்றியது. அப்போது ஆரம்பிதத்துதான் இந்த சமையல் கலை வகுப்பு. கூடவே பல கைத்தொழில்களும் கற்றுக் கொள்வார்கள் வடநாட்டு பெண்கள்.

நமது தென் இந்திய பெண்களிடம்  இதற்கான ஆர்வங்கள் மிக மிக குறைவு. படிப்பு, நார்மல் சமையல், வேலை, குடும்பம் என்று இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது நமது தென்னிந்திய பெண்களின் வாழ்கை முறை. மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதிலும் வட இந்தியர்கள் மிக ஆர்வமுடன் இருப்பார்கள்.


முக்கிய வட நாட்டு  இனிப்புக்களை மட்டும்  கேட்டு கற்று கொள்ளும் மாணவிகளும் உண்டு.  இங்கு பார்க்கும் அத்தனை இனிப்புக்களும், செட்டிநாட்டு முறுக்கு அதிரசம் வகைகளும் எனது மாணவிகள் செய்தவைதான்.  அவர்கள் இந்த பலகாரங்களை என் ஒருத்திக்காக மட்டும் இங்கேயே கற்றுக் கொண்டு, செய்து கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள்." என்று  சொல்கிறார் செல்லம் கோபால கிருஷ்ணன்.

இவர் சொல்வதிலும் காரணம் இருக்கிறது. செல்லம் அம்மாவின் கணவர் இறந்து விட்டார். இவரது இரு மகள்களும் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டனர். இந்த சமையல் கலையை விட மனமின்றி, இந்த தொழிலை இந்த வயதிலும் கற்றுக் கொடுத்து வருகிறார் செல்லம்.


நமக்காக காஜூ  கத்லி எனப்படும் ஸ்வீட் எப்படி செய்வது என்று கற்றுத் தருகிறார் செல்லம்.

ஒரு பங்கு பாதாம் பருப்பின் பொடி என்றால், இரண்டு பங்கு சர்க்கரை எடுத்துக்  கொள்ளுங்கள்.வேண்டுமானால், ஏலக்காய் பொடித்து வைத்துக்  கொள்ளுங்கள். சூப்பர் மார்கெட்டுக்களில் கிடைக்கும் லிக்விட் குளுகோஸ் ஒரு டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.முதலில் சர்க்கரை ஒரு டம்ளர் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அரை டம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு, சர்க்கரைப் பாகு காய்ச்சுங்கள். சர்க்கரைப் பாகு கம்பி பதம் வரும்போது, அதாவது கம்பி பதம் என்றால், கரண்டியால் இப்படி எடுத்து விடும்போது, சொட்டு சொட்டாக பாத்திரத்தில் விழ வேண்டும். இதுதான் கம்பி பதம்.

அந்த சர்க்கரைப் பாகில், பொடித்து வைத்த பாதாம் பருப்பு பொடியைப் போட்டு, ஏலப் பொடியையும் போட்டு கிளற வேண்டும். பின்னர் லிக்விட் குளுகோஸை ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு கரைத்து பாகுப் பொருட்களுடன் சேர்த்து கிளற வேண்டும்.

திக்கான பதம் வந்தவுடன் தட்டில் கொட்டி, டைமண்ட் ஷேபில் கட் செய்து, கடைகளில் விற்கும் ஜிகினா பேப்பரில் ஒத்தி வைத்து எடுக்கவும்.

இதில்  குறிப்பாக பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரித்து, காய  வைத்து பின்னர் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்புக்கு பதிலாக முந்திரி பருப்பிலும் இந்த ஸ்வீட் செய்யலாம்.

அடுத்து ஜிகினா பேப்பரை கையில் பிரித்து எடுத்து ஒட்ட முடியாது. அப்படியே ஸ்வீட் மேல் ஒத்தி பின்னர் பேப்பரை மட்டும் எடுத்தால், ஜிகினா ஒட்டிக் கொண்டு பேப்பர் கையோடு வந்துவிடும்.

இதில் லிக்விட் குளுகோஸ் மிகவும் முக்கியம், காரணம் நீங்கள் காய்ச்சும் பாகு மிகவும் கெட்டிப் பட்டு, காஜு கத்லி இறுகி மைதா கேக் போல ஆகிவிடாமல், ஸ்மூத்தாக இருக்க இந்த லிக்விட் குளுகோஸ் உதவி செய்யும்.

இப்போது அனைவரும் நெய் சேர்த்துக் கொள்ள கூடாது, அதிகம்  உணவுகள் கூடாது என்று ஹெல்த் கான்ஷியசுடன் இருக்கும் பொது, நெய் சேர்க்காத, உடம்புக்கு நல்ல கொழுப்பை சேர்க்க கூடிய இந்த காஜு கத்லி  மிக நல்ல ஸ்வீட் என்கிறார் செல்லம்.

இவர் கூடுதலாக இன்னொரு விஷயமும் சொல்கிறார், சென்னையில் தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், வட மாநிலங்களில் இருந்து வரும் எராளமான இளைஞர்களும், என்னிடம் சமையல் கலை கட்டறுக் கொள்ள  வருகிறார்கள். அவர்கள் சென்று இங்கு வீடு எடுத்துக் கொண்டு, தாங்களே சமையல் செய்து சாப்பிட வேண்டும் என்று, சமையல் கற்றுக் கொள்கிறார்கள்.

இப்போது அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு, சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்று விட்டார்கள் என்று கூறுகிறார் செல்லம் கோபால கிருஷ்ணன்.


                                           4தமிழ்மீடியாவுக்காக படங்களும், கட்டுரையும் எழில்செல்வி