முற்றம்

கால நகர்வின் வேகத்தில் மறைந்து வரும் பழக்கங்களும் அதிகரிக்க, வாழ்வியலின் வழக்கங்கள் அருகி, இயல்பு வேகமாக மாறிவருகிறது.

ஒரு காலத்தில் அவசியமாகக் கருதப்பட்ட விடயங்கள், அல்லது விருப்பத்திற்குரிய விடயங்கள் இப்போ வேண்டத்தகாதன ஆகிவிட்டன. அடுத்த தலைமுறை அநேக விடயங்களைக் குறிப்புக்களின் பதிவுகளிலேயே வாசித்தறிய வேண்டியிருக்கும். இது இயல்புதானென ஏற்றுக் கொண்டாலும், இம் மாற்றத்தில் சில வாழ்வாதாரத் தொழில் முனைவுகள் முடங்கிப் போவதும், அதனை நம்பி இருக்கும் மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகிப் போவதும் வருத்ததிற்குரியது.

"ஆனந்தி"   சஞ்சிகையை ஐரோப்பிய அச்சுத்தரத்தில் வெளியிடத் தொழில் சார் முறையில் உதவிய அச்சக நண்பர்களை, கிறிஸ்மஸ் தினத்துக்கு முன்னதாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்லிவரச் சென்றிருந்தேன். வருட இறுதியில் பரபரப்பாக இருக்கும் அந்தப் பாரிய அச்சகம், ஆளரவமற்றுக் கிடந்தது. அங்குமிங்கம் வேகமாகச் சுழன்று திரியும், தொழிலாளர்கள் தொகை சரிபாதிக்கும் மேலாகக் குறைந்திருந்தது.

புதிய வடிவங்களிலும், வண்ணங்களிலும், நாட்குறிப்புக்களும், நாட்காட்டிகளுமாக நிறைந்திருக்கும் அந்தக் கூடம் வெறிச்சோடிப்போயிருந்தது. முதலாளியாகவும், தொழிலாளியாகவும், குடும்ப உறுப்பினர்களுடன் அந்தப் பதிப்பகத்தை நடத்திவரும் நண்பன், வேதனையின் ரேகைகளை அகத்தினுள் மறைத்து, முகம் சிரித்து வரவேற்றான்.

கைகுலுக்கிக் கட்டியணைத்தவனிடம் "என்னாச்சு...?"  என்றேன்.

"காலம் மாறிப் போச்சு... " என்றான்.

ஐரோப்பியப் பொருளாதார மந்த நிலைத் தொழில் முடக்கமாக இருக்குமெனும் என் எண்ணத்தினை மாற்றி, யோசிக்க வைத்தது அவன் பதில். யோசித்துப் பார்க்கின்றேன்..

இன்றைய உலகின் மகத்தான சாதனமாகிய இணையத்தின் வருகையில், வசதியில்; ஒரு காலம் அத்தியாவசிய தொடர்பாடல்களாக இருந்து வந்த தந்தியும், தபாலும்,  இருப்பழிந்து போகின. உறவுகளின் உணர்வுகளைப் பரிமாற்றி வந்த கடிதங்கள், இப்போது அதிகாரபூர்வச் செயற்பாடுகளின் அறிவிப்பாக மட்டும் ஆகிவருகிறது. பண்டிகைகளிலும், சிறப்புத் தினங்களிலும் வாழ்த்துக்களைப் பரிமாறி வந்த வாழ்த்து அட்டைகள் வழக்கொழிந்து போகின்றன. அதில் நம் வாழ்வழிந்து போகவில்லையா..?

பண்டிகைகள் நெருக்கும் வேளையில், விதம் விதமான வாழ்த்து அட்டைகளை வாங்குவதிலும், அனுப்புவதிலும், அவற்றைச் சேகரித்து மகிழ்வதிலுமாகத், திளைந்திருந்த பொழுதுகள் முன் எமக்கிருந்தன. அவ்வாறான பொழுதுகளில் அழகான வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்கு  வசதியில்லாத போதும், விதம் விதமாக அட்டைகளை செய்து மகிழும் மனதிருந்தது. பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் அதிலிருந்து ஆரம்பமாக, மனம் மலரும்...

இணையத்தின் எழுச்சியும், சமூகவலைத்தளங்களின் வருகையும், தொலைத் தொடர்பின் வசதியும், இந்த மனமலர்வின் அகவுணர்வை செயற்கையாக ஆக்கிவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு வாழ்த்து அட்டை தரும் அகமகிழ்வின் நிறைவை, ஒரு குறுஞ்செய்தியோ அல்லது சமூகவலைத்தளக் குறிப்போ தந்துவிடுவதில்லை என்றே கருதுகின்றேன்.

இணையம் அபகரித்துக் கொண்டவைகளில் என் பிரியத்திற்குரிய மற்றொன்று தினக்குறிப்பு. ஒரு காலத்தில் தொடர்ச்சியாகத் தினக்குறிப்பு எழுதிப் பின் அப் பழக்கம் விட்டுவிட்ட போதும், வருடத்தோறும் புதிய வடிவங்களில் நாட்குறிப்பு வாங்குவதும், ஒரு சில பக்கங்களில் சில குறிப்புக்களைக் குறித்துக் கொள்வது மட்டுமெனக் கழிந்த போதும் என் விருப்பச் சேகரிப்பில் ஒன்றியிருந்து. 95ம் ஆண்டிலிருந்தே இணைய இணைப்பினைப் பெற்றிருந்த போதும், தமிழ் ஒருங்குகுறி (unicode) எழுத்துருவும், வலைப்பதிவுகளும் அறிமுகமான பொழுதில்,  இணையத் தினக்குறிப்பு எனும் வலைப்பதிவுகளில் ஆர்வமாய் எழுத் தொடங்கிப் பின் அதுவும் விடுபட்டுப் போனது.

ஸ்மார்ட் போன்களின் வருகையும், இணைய வழங்கிகளின் தாராளமும், என்னைப் போல் பலரையும் பாதித்திருக்க வேண்டும்.  "காலம் மாறிப் போச்சு... "என்ற அச்சக நண்பனின் பதிலுக்குள் மறைந்திருந்த கவலைகளில் ஒன்று, இவ்வாண்டு தாங்கள் எந்தவொரு நிறுவனத்துக்கும் நாட்குறிப்பு அச்சிடவில்லை என்பது.

நிறுவனங்கள் இவ்வாறான பழக்கங்களை தங்கள் இலாபநட்டக் கணக்களினடிப்டையில் கைவிட்டுவிடலாம். ஆனால் தனிமனிதர்கள் இத்தகைய பழக்கங்களை வழக்கொழிப்பது, அகவுணர்வின் சமநிலையை, அன்பின் வெளிப்படுத்தலை, சக மனித நேசிப்பைக் குறைத்து விடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி வரவேற்புக்குரியது. எமது விருப்பத்திற்குரிய விடயங்களை, அவற்றுக்கான தொழிற்துறைகளை,  அது அழித்துச் சென்றாலும், அதிலிருந்து மீண்டுவிடும் திட உணர்வு நமக்கு வேண்டும்.

உதாரணத்துக்குச் சொல்வதாயின்,  ஐரோப்பாவின் ஆரம்பப் பாடசாலைகளிலும், ஆங்காங்கே சில குடும்பங்களிலும், இன்றளவும் சுயமாக வாழ்த்து அட்டை தயாரிப்பதுவும், அவற்றைப் பிரியத்திற்குரியவர்களுக்கு அனுப்பி வைப்பதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது நிச்சயமாக, சக மனித   நேசிப்பினதும், அகவுணர்வு வளர்சியினதும் நம்பிக்கை நடவடிக்கைகள். நாமும் பழகிக் கொள்ள வேண்டும்.

எண்ணிய கணமே, எண்ணங்களை எழுத்துகளாகவும், ஒவியங்களாகவும், இன்னோரன்ன கலைகளாகவும் வடிக்கத் தெரிந்தவர்கள் அத்தனை பேரும் பாக்கியவான்கள். அகவுணர்வின் ஆற்றுப்படுதலுக்காக வாரத்தில் ஒரு நாளேனும் அந்த வரமெனக்கு வாய்த்திட வேண்டுமென விரும்புகின்றேன்.

4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.