முற்றம்
Typography

கடுங் குளிர், பனிப்பொழிவு என்பவை கடந்து வீடு வந்து இணையம் தொடுகையில் இரண்டு உவப்பான செய்திகள் காத்திருந்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4தமிழ்மீடியா படைபாய்வகம் வெளியிட்ட  " திருப்பூர் ஜோதியின் - டாலர் நகரம் " இந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டுப் புத்தகங்களில் ஒன்றாக, விகடன் குழுமத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை ஜோதிஜி அறிவித்திருந்தார்.

பின் இணைப்பில் சென்று வாசித்த போது இப் புத்தகத்திற்கான தெரிவுக் குறிப்பில்,  ' தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது ' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் ஜோதிஜியின் முதற் பிரதியைப் பார்த்த போது என மனதில் தோன்றியதும், பின் பிரசுரத்திற்கான காரணங்களில் முக்கியமானதாகவுமிருந்த விடயம் உணரப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது.

ஜோதிஜிக்கு இது முதற் குழந்தை, 4தமிழ்மீடியா சார்பில் மருத்துவச்சியாக நான் பார்த்த முதற் பிரசவம்  " டாலர் நகரம் ". அதற்கான அங்கீகாரம் எங்கு, எப்போது, கிடைக்கும் போதும்,  ஈன்றபொழுதிலும் பெரிதுவக்கும் அன்னையாக நானும் உணர்வேன், உணர்கிறேன்.

டாலர்நகரம் பயணத்தில்..

முதற் பிரசவத்திற்காக இப்படி மனம் குதுகலிக்கையில், இவ்வாறான எத்தனையோ பிரசவங்களைத் தலைமுறையாகப் பார்த்து வரும், தாய் மருத்துவச்சி போன்ற,  மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களின் பதிப்புத்துறைச் சேவையினைப் பாராட்டி, தென்னிந்தியப் பத்திரிகையாளர் சங்கம், 10.1.14 சென்னைப் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவில் விருது வழங்கிப் பாராட்டுகிறது எனும் செய்தி அறிந்து மேலும் உவப்பானேன்.

1952ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில், தன் தந்தையாரிடம், அச்சுத்தொழில், புத்தகப் பதிப்புத் தொழில், புத்தக விற்பனைத் தொழில்
ஆகியவற்றில் பயிற்சி பெற்றுக் கொண்ட இவர், 1977 தொடக்கம் யாழ்ப்பாணத்திலும், 1980 தொடக்கம் சென்னையிலும்
புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டு இன்றுவரை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும், புத்தகப் பதிப்பாளனாக, விற்பனையாளனாகத் தொடர்கிறார்.

ஏலவே தமிழறிஞர் கிஆபெ விசுவநாதம் கையால், சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாளருக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது ,நீதிபதி இஸ்மயில் அவர்களிடமிருந்து சென்னைக் கம்பன் கழகத்தின் சிறந்த பதிப்பாளருக்கான மர்ரே ராசம் விருது, ஐயா பழ. நெடுமாறன் அவர்களிடமிருந்து  மதுரை திருவள்ளுவர் சங்கம் சிறந்த பதிப்பாளருக்கான விருது, குன்றக்குடி அடிகளாரிடமிருந்து, அறவாணன் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது, சிலம்பொலி செல்லப்பனாரிடமிருந்து மணிவாசகர் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது என்பற்றைப் பெற்றுக் கொண்ட பெரு மகனார். அவர்கள் சேவை பாராட்டப்படுவது மகிழ்வு தருகிறது.

அன்மையில் ஐயா அவர்கள் சுவிற்சர்லாந்து வந்திருந்த போது, www.thevaaram.org செயற் திட்டத்திற்காக, திருவாசகத்தைத் இத்தாலிய மொழியில்,  மொழிபெயர்க்கும் பணியினைப் பொறுப்பேற்று அவர்களுடைய தமிழ்ப்பணியில் இணைந்தது மகிழ்ச்சி. இந்தப் பணி ஆரம்பமாகித் தொடர்கிறது. விரைவில் இதன் பெறுபேற்றினைக் காணலாம். ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒன்று.

ஐரோப்பாவில் தற்போது கடுங் குளிராக இருந்த போதும், இம்முறை பனிப்பொழிவுடன் கூடிய வெள்ளை நத்தார் தினமாக இல்லலாததையிட்டு, ஐரோப்பியர்கள் பலருக்கும் மிகுந்த மனக் கவலை. அந்தக் கவலையே இல்லாது,  இருபது வருடமாக,  வெள்ளிப் பனிமலை மீதுலாவும் பாரதியின் அடிப்பொடியாக தொடரும் என் பயணங்கள்...

எனது முன் பனிக் காலங்கள்.

திருவெம்பாவை பூசையும்
திருப்பள்ளியெழுச்சிப் பஜனையுமாய்
சுகமான ஒரு முன்பனிக்காலம்
எழுபதுகளில் எனக்கிருந்தது.

பின்வந்த எண்பதுகளில்
காவலும் கடமையுமாய்
கடலிலும் கரையிலும்
என் முன்பனிக்காலம் கழிந்தது.

தொன்னூறுகளின் தொடக்கத்திலோ
நெஞ்சு கனக்கும் நினைவுகளோடு
வெண்பனியுறையும் துருவக்
கரையின் தெருக்களில் நான்..

நன்றி - ' திசை'

4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

BLOG COMMENTS POWERED BY DISQUS