முற்றம்
Typography

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

உலகம் உய்யவேண்டுமெனில் அமைதி நிலவ வேண்டுமெனும் கோட்பாட்டினடிப்படையில், உலக அமைதி நாளாக ஐக்கிய நாடுகள் சபை, பொதுச்சபையின் 1981 ஆண்டுப் பிரகடனத்துக்கு அமைவாக, 2002ம் ஆண்டிலிருந்து செப்டெம்பர் 21ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1981ல் இருந்து 2001வரை செப்டெம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்கிழமையில் கொண்டாடப்பட்டு வந்தது.

ஒருநாளைத் தீர்மானித்து அதனைக் கொண்டாடுவதால் மட்டும் குறித்த பயனை அடைந்துவிட முடியுமா? என்றால் நிச்சயம் இல்லை. கொண்டாட்ட நாட்கள் வெறும் அடையாளம் மட்டுமே. குறித்த எண்ணத்தில் வாழ்தல் என்பதை நடைமுறைப்படுதலே எண்ணத்தின் பயனை அடையும் வழியாகும்.

"மனிதக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் மாண்பையும், அவர்களது சமமான, அன்னியப்படுத்தப்பட முடியாத உரிமைகளையும் ஏற்றுப் பேணுதலே சுதந்திரம், நீதி, உலக அமைதி" என்பவற்றிற்கு அடிப்படையாகும் என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் சாற்றுரை. "உன்னைப் போல் பிறரையும் நேசி " என்பதுதான் உலக சமயங்கள் எல்லாம் கூறும் ஆன்மீக தத்துவார்த்த அடிப்படை.

இவைகள் வெறும் கோட்பாட்டு வாக்கியங்களாக மட்டும் விளங்குமிடத்து, உண்மையான உலக அமைதி சாத்தியப்படாது. சூழல் மாசுறுதல் குறித்துப் பேசும் உலகநாடுகள் பலவும், புதிய தொழில் அபிவிருத்தியின் பெயரால் மாசு நிரப்புதலும், போர்நிறுத்தம் பேசும் வல்லருசுகள், போர்த்தளவாட உற்பத்தி செய்தலும், உலக அமைதிக்கான எதிர்வினை. ஒவ்வொரு மனிதரும் சக மனிதரின் உணர்வினை மதிப்பதில் தொடங்கும் உலக அமைதிக்கான செயல்வினை.

இதையே சங்கப்புலவன் கணியன் பூங்குன்றனார் புறநானுற்றுப் பாடலிலே.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192) எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதலால் ஒவ்வொருவரும் உள்ளங்களை வெண்மை செய்வதனால் மட்டுமே உலகை அமைதி கொள்ளச் செய்ய முடியும். இது நாம் வாழும் உலகு. நம் எல்லோர்க்குமானது பூமி. அதை அமைதியுறவும், உயர்ச்சி பெறவும் செய்வது எமக்கான கடமை. அதை எம்மிலிருந்து தொடங்குவோம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS