முற்றம்

எங்கள் பள்ளிப் பருவம் 1986 முதல் 1996 வரையிலானது. எங்கள் நகரம் மிகச்சிறந்த பள்ளிகளை கொண்டது அவற்றில் பல 100 வருடங்களுக்கும் மேலாக இயங்குபவை. இந்தியாவின் மிகப்பழைய பள்ளிகளில் ஒன்றான தூய பேதுரு பள்ளி 210 வருடங்களாக அங்கே செயல்படுகிறது. ஆனாலும் பணக்காரர்களுக்கென பிரத்தியோகமான பள்ளி என்று ஒன்று அப்போது அங்கே இல்லை.

நகரத்தில் உள்ள எல்லா குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் எண்ணிக்கை அங்கிருந்தது. இன்னும் பலர் 40 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ள ஊர்களில் இருந்து வருவார்கள். இப்போது நிலைமை தலைகீழ்.

சமீபகால தரவுகளின்படி பெரும் எண்ணிக்கையிலான தமிழக மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தோராயமாக 3000 அரசுப்பள்ளிகள் இணைப்பு எனும் பெயரில் மூடப்பட்டிருக்கின்றன. தமிழக ஆரம்பப்பள்ளிகளில் சரிபாதி பள்ளிகள் இரண்டு அல்லது அதற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்டு இயங்குகின்றன. ஒரு துவக்கப்பள்ளி 3 ஏக்கர் இடத்தையாவது கொண்டிருக்க வேண்டும். அந்த அளவீட்டை வைத்தால் இன்று பல அரசுப்பள்ளிகள் இயங்க முடியாது. பயமுறுத்தும் நிலையில் சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்களை காண நீங்கள் இங்கே வெகுதூரம் பயணிக்கத் தேவைஇருக்காது.

சில நாட்களுக்கு முன்னால் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களை சந்தித்தேன். அவர்களால் செய்தித்தாளின் தலைப்புச்செய்தியைக்கூட படிக்க முடியவில்லை. இந்த சிக்கலை பரவலாக காண முடிவதாக பலரும் சொல்கிறார்கள். அரசுப்பள்ளிகளை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் பல திட்டங்கள் செயலாக்கம் பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது ஆரம்பக் கல்விக்கான முக்கியத்துவத்தை குறைப்பது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போதெல்லாம் துவக்கப்பள்ளி ஆசிரியருக்கான பணியிடங்கள் மிகக்குறைவாக நிரப்பப்படுகிறன. ஆரம்பப்பள்ளிகளில்தான் மாணவர்கள் மீது அதிக அளவுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தப்படவேண்டும். ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கையைப் பிடித்து எழுதக்கற்றுத்தர வேண்டியதில்லை. ஆனால் ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியருக்கு அந்த பொறுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு பள்ளியின் மீதும் கற்றலின் மீதும் ஆர்வம் வர ஆரம்பப்பள்ளியின் பங்கு கணிசமானது. இங்கே ஐந்து வகுப்புக்களையும் ஒரிரு ஆசிரியர்கள் கையாண்டால் அவர்களால் எப்படி ஒரு ஆக்கபூர்வமான வகுப்பறையை கட்டியமைக்க முடியும்? இது மறைமுகமாக இடை நிற்றலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை.

ஐந்தாம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சி பெறவைப்பது மாணவர் நலன் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல. அதன்மூலம் ஆசிரியர்களின் பொறுப்பை குறைத்து இந்த ஆசிரியர் பற்றாக்குறையை பெரிய பிரச்சினை ஆக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதாவது மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண் பெறாவிட்டால் அதற்கு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். இது இரண்டு பக்க விளைவுகளை உருவாக்கும். ஒன்று மோசமான ஆரம்பப்பள்ளித் தரம் காரணமாக வரும் மாணவர்கள் எல்லோரையும் தேற்ற ஆசிரியரால் முடியாது. ஆகவே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அரசால் முடியும். இதனை வைத்து அவர்களை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அல்லது தேற மாட்டார்கள் எனக் கருத்தும் மாணவர்களை ஆசிரியர்களே வெளியேற்ற முயற்சி செய்யலாம். மேலும் ஆசிரியர்களின் அதிகப்படியான அழுத்தம் காரணமாக மந்தமான குழந்தைகள் படிப்பைவிட்டு ஓடும் சூழல் உருவாகும்.

இந்த திட்டத்தின் நீட்சியாக தேர்வில் தோல்வியுறும் மாணவர்களை திறன் சார்ந்த பயிற்சிக்கு அனுப்பும் யோசனையை மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பரிந்துரைத்திருக்கிறது. 25% ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இப்போது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அப்படி சேர்க்கப்பட்ட ஒரு ஏழைக்குழந்தையையும் நான் பார்த்ததில்லை. ஆனாலும் அதில் பெரிய அளவுக்கு அரசுப்பணம் செலவாக இருக்கிறது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அதிகம் மேம்பட்டிருக்கக் காரணம் கல்வியும் வாசிப்பும் பெரும்பான்மை மக்களை சென்றடைந்ததுதான். இப்போது அரசுப்பள்ளிகள் கைவிடப்படுவதால் பெருந்தொகையான மக்களை நாம் கல்வி பெறுவதில் இருந்து விலக்கி வைக்கிறோம். ஒரு நாட்டிற்கு கிடைக்கவேண்டிய அறிவு வளம் பாதிக்கப்படுகிறது. காரணம் நாம் பெருந்தொகையான மாணவர்களை பள்ளிப்படிப்பு முடியும் முன்னே வெளியேற்றுகிறோம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரும்பான்மையான மக்கள் இப்படி கல்வியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால்தான் நம் நாடு இத்தனை பின்தங்கி இருந்தது. நாம் மீண்டும் அந்த சுழலுக்குள் சிக்குவோம்.

தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்திருக்கும் பல வசதியற்ற பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் ஒருவேளை அந்த சுமையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு ஒரே வாய்ப்பு அரசுப்பள்ளிகள். இவை ஒழிக்கப்பட்டால் அந்த வகை மாணவர்கள் கதி? பள்ளி கட்டணம் கட்ட இயலாமல் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர்கள் பற்றிய செய்தி ஆண்டுதோறும் செய்திகளில் இடம் பிடிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு இந்த செய்தியை விளங்கிக்கொள்ளவும்.

அரசுப்பள்ளிகளால் மட்டும் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாகின்றன. இவை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டால் தமிழ் நாட்டில் பெரும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களை ஏற்படுத்தும். அரசு மற்றும் தனியார் கூட்டணியில் பள்ளிகளை நடத்தும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கிறது. இப்படி பள்ளிகள் கைவிடப்பட்டால் அந்த இடங்களை சுலபமாக தனியாருக்கு தாரைவார்க்க முடியும். அரசுப்பேருந்துகள் இல்லாத நேரங்களில் தனியார் பேருந்துகள் இஷ்டத்துக்கு விலைவைத்து பயணச்சீட்டு விற்பதைப்போல பள்ளிகளும் விலை வைக்கும் சூழல் வரும். மலை கிராமங்களைப்போன்ற அணுக இயலாத இடங்களில் அரசு மட்டும்தான் பள்ளி நடத்த முடியும். அரசு இந்த வேலையை செய்யாவிட்டால் அந்த மக்கள் கல்வியின் நிழலைக்கூட தொட முடியாது.

இவையெல்லாம் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள்தான். ஆனால் இதில் இருக்கும் சமூகக் காரணிகள் இன்னும் அச்சுறுத்துபவை. பதின் பருவம் சாகசத்தில் நாட்டம் உள்ள காலம். அதில் நியாயங்களைவிட விருப்பங்களே முக்கியமானவை. பதின் பருவத்தவர்களிடம் நடத்தப்பட்ட மூளைச் செயல்பாடு பற்றிய ஆய்வில் அவர்களது உணர்வுகளை கையாளும் பகுதிகளே அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. மாறாக வளர்ந்தவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வு அவர்களை தங்கள் தர்கரீதியான சிந்தனைக்கான (logical thinking) பகுதிகளை பயன்படுத்துவது தெரிய வந்தது. ஆகவே வறுமையிலும் கல்வியின்மையிலும் உள்ள சிறார்களை மிக எளிதாக சமூகவிரோதிகளால் தங்கள் பக்கம் இழுக்க முடியும். உலக அளவில்கூட பெருமளவு குற்றவாளிகள் ஏழைகளாகவும் இடம் பெயர்ந்தவர்களாகவும் இருகிறார்கள்.

ஆய்வுகளின்படி 90 விழுக்காட்டிற்கும் மேலான பதின் வயது சிறார்கள் ஏதோ ஒரு வகையான குற்றம் அல்லது விதிமீறலில் ஈடுபடுகிறார்கள். நடுத்தர மற்றும் பணக்கார சிறார்களை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற அவர்களது குடும்பத்தால் முடியும். ஆனால் அந்த வாய்ப்பற்ற ஏழைகளின் பிள்ளைகள் சிக்கிக்கொள்கிறார்கள். சிறார் கூர்நோக்கு இல்லங்களில் கிட்டத்தட்ட 100 விழுக்காட்டினர் ஏழைகளாகவே இருப்பதன் காரணம் இதுதான். ஏழைகள் மட்டுமே இருப்பதால் அந்த கூர்நோக்கு இல்லங்கள் அக்கறையின்றி நடத்தப்பட்டு இன்னும் தீவிரமான குற்றவாளிகளை உருவாக்குகிறது. வெறும் ஒரு சதவிகிதம் சிறார்கள் இப்படி மாறினாலும் அதற்கு நாமெல்லோரும் பொறுப்பானவர்கள்கள்.

இன்னொரு ஆபத்தான விளைவு போதைப்பழக்கம். மிக இளம் வயதில் உதிரி வேலைக்கு செல்லும் சிறார்கள் போதைப்பழக்கங்களுக்கு ஆட்பட சாத்தியம் அதிகம். மத மற்றும் சாதி அடிப்படைவாத இயக்கங்களின் வலையில் விழும் சாத்தியம் பள்ளிக் கல்வி மறுக்கப்பட்டவர்களிடமும் படிப்பு வராது என முத்திரை குத்தப்பட்டவர்களிடமும் மிக அதிகம். இப்போது அந்த மாதிரி இயக்கங்களில் தீவிரமாக இயங்குபவர்கள் இந்த வகையிலானவர்களே.

அரசுப் பள்ளிகள் சிறிது சிறிதாக மூடப்படுவது என்பது வெறுமனே ஏழைகளுக்கான பிரச்சினை என நடுத்தரவர்கம் கருதிவிடமுடியாது. மேற்குறிப்பிட்ட சமூக பொருளாதார சிக்கல்கள் நம் எல்லோரையும் பாதிக்கும். நீங்கள் நன்றாக வண்டியோட்டினால் மட்டும் சாலையில் பாதுகாப்பாக பயணிக்க முடியாது. அது மற்றவர்களும் ஒழுங்காக வண்டியோட்டுவதையும் சார்ந்திருக்கிறது. அதுபோலவே அரசுப்பள்ளிகளை காப்பது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. அதிலிருந்து நழுவினால் நாம் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

- 4தமிழ்மீடியாவிற்காக : வில்லவன்

கட்டுரையாளரின் மேலும் சில கட்டுரைகள் :

பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.

பள்ளிக்கல்வி – தமிழகம் சிக்கிக்கொண்டிருக்கும் அபாயப்பொறி.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.