முற்றம்

ஒவ்வொரு 40 விநாடிகளிலும் உலகில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்ற புள்ளி விபரம் அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவ்வாறு இறந்து கொள்வோரின் விகிதாசாரத்தில் 15 தொடக்கம் 26 வயதிற்குள்ளானோரின் தொகை அதிகம் என்றறிந்தபோது அது பேரதிர்ச்சியாக இருந்தது.

நம்மில் அநேகமானோர் இவ்வாறான ஒரு இழப்பினை மிக நெருக்கமாகச் சந்திக்காத வரைக்கும், இதை ஒரு செய்தியாகவோ, தகவல் அறிக்கையாகவோ பார்த்துக் கடந்து செல்வோம். ஏன் இவ்வாறு நிகழ்கிறது எனச் சிந்திக்கத் தோன்றுவதில்லை.

ஒக்டோபர் 10 உலக மனநலநாள். இன்றைய நாளில் இவ்வாறான இழப்புக்கள் குறித்த சமூக அக்கறையினைக் கவனப்படுத்தும் விதமாக, " 40 seconds of action " 40 விநாடிகள் நடவடிக்கை ஒன்றை, உலகச் சுகாதார அமைப்பு, உலக மனநல வள அமைப்பு ஆகியன முன்னெடுத்திருக்கின்றன. இவ்வாறான இழப்புக்கள் ஏன் நிகழ்கின்றன. இளையவர்கள் மத்தியில் இந்த எண்ணங்கள் ஏன் அதிகம் எழுகின்றன ? எனும் கேள்விகளை நாம் ஒவ்வொருவரும் நம்முள் எழுப்பி ஆராயவேண்டிய காலத்தில் உள்ளோம். கவனத்திற் கொள்வோம்.

உள வளக் குறைபாடு, மனச்சிதைவு, தன்னம்பிக்கையினை குலைத்துவிடும். தன்னம்பிக்கையிழந்தவர்கள், தம்முள் தனிமைப்படுவதாக உணர்வார்கள். அதுவே உலக வாழ்வின் மீதான நம்பிக்கையற்ற தன்மையினை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அறிஞர்கள். உலக மனநல நாளாகிய இன்றைய நாளில் இது குறித்துக் கவனம் கொள்வதன் அவசியமும் இதுவே.

1992 ம் ஆண்டு முதல் உலக மனநல மையத்தின் (World Federation for Mental Health) முன்னெடுப்பில் உலக மனநல நாள் World Mental Health Day கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இந்த நாளில் இளவயதினரின் உளநலம் குறித்த சில விடயங்களைப் பார்ப்போம்.

தற்கொலை முயற்சிகளின் விகிதாசாரம் பெரும்பாலும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் நல்ல பல தொழில்நிலைகளிலும், வசதியான வாழ்நிலைகளிலும், உரியவர்கள் கூட உயிரழிந்து போகின்றார்கள். ஏன்..?

2017ம் ஆண்டு லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவில் டென்மார்க்கைச் சேர்ந்த இயக்குனர் Hlynur Pálmason அவர்களது இயக்கத்திலான Winter Brothers படம் பார்க்கக் கிடைத்தது. உண்மையில் இந்தப்படத்திற்கான சுவரொட்டியொன்றே இப்படத்தினைப் பார்க்கும் ஆர்வத்தினை முதலில் ஏற்படுத்தியது. இரு இளைஞர்களைச் சிதையில் கிடத்தியது போன்ற அப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் பலமானதென்றால், படம் பார்க்கையில் கேட்டுணர்ந்த ஒலித்தாக்கம் அதைவிடவும் மேலானது எனச் சொல்வது சராசரியான வார்த்தைகள்.

சுரங்கத் தொழில் ஒன்றில் வேலைசெய்யும் இரு சகோதரர்களின் மன உணர்வுகளும், வாழ்நிலைப் போக்குகளும் தான் திரைக்கதை. திரைப்படமாக பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சுரங்கம் குடைவதில் எழும் இரைச்சல், எதிரொலிகள் என்பன பார்வையாளர்களுக்கு எரிச்சல் தருவதாக இருந்து. அப்போதுதான் இவ்வாறான சூழலில் வேலை செய்யும் இளைஞர்கள் மனநிலையில் எவ்வாறு பாதிப்புறுவார்கள் என்பதை முதன் முதலாக யோசிக்க முடிந்தது.

இதுபோன்றே கணினித் துறையிலும், இலத்திரனியல் துறைகளிலும், கல்வி பயிலும் மாணவர்கள், பணியாளர்களான இளவயதினர் பலரும் பாதிப்படைகிறார்கள். இதனால் மெல்ல மெல்ல மன அழுத்தத்திற்கு உள்ளாகி மனமுடைந்து போகின்றார்கள். சிறந்தது எனத் தாம் கருதியது அவ்வாறில்லையென ஏமாற்றமடைகின்றார்கள். இத்தகைய ஏமாற்றங்கள், மனச் சிதைவுகள், அவர்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது. சமூகம், குடும்பம், என சகலவற்றிலிருந்தும் ஒடுங்கிப் போக முனைகிறார்கள். முடியாத சந்தர்பங்களில் வாழ்வினை முடித்துக் கொள்கின்றார்கள்.

சென்ற ஆண்டில் பார்க்கக் கிடைத்த La Caricia எனும் குறும்படத்தில், இளைய தலைமுறையின் இந்த மன அழுத்தம் தரும் தனிமை குறித்த காட்சிகளைக் காண முடிந்தது. இளையவர்களின் மனஅழுத்தமும், தனிமைபடுதலும், குறித்து பலமான யோசனைகளை எழுப்பியதும் எனலாம்.

இந்நிலையை மாற்றுவதற்காக என்ன செய்யலாம் ? பணிகளினாலோ, கற்றலினாலோ, மற்றைய காரணிகளினாலோ எழக் கூடிய மன அழுத்தங்களினால் பாதிப்புறக் கூடிய இளைஞர்கள், தனிமையுறா வண்ணம் கவனித்துக் கொள்ளுதலும், அரவணைத்து ஆறுதல் வழங்குதலும், அவர்களுக்கான அழுத்தங்களை கண்டறிந்து, தவிர்த்துக் கொள்ளலும் அவசியமாகும். தமிழ்ச்சமூகச் சூழலில் இவ்வாறான மனஅழுத்த நிலைகள், ஒப்பீட்டளவில் குறை விகிதாசாரமாக இருக்கலாம் ஆனால் முற்றாக இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது. ஆதலால் இவ்வாறான இழப்புக்களைத் தவிர்பதற்கான செல்முறைகளில் இணைந்து கொள்வதும், அறிந்து கொள்வதும் அவசியமாகின்றது. உள மன வளம் குறைந்தவர்களைக் கண்டறிவோம். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போம். உயிர்காப்போம் !

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

 

 

 

 

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.