முற்றம்

சென்ற வருடத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அந்தக் கானொலியைப் பார்க்க முடிந்தது. தெருவோரத்தில் ஒரு குட்டிப் பெண் வெகு இலாவகமாக வயலின் இசைத்த வண்ணமிருந்தாள். வயலினின் இசையும், அவளது வாசிப்பின் உடல்மொழியும், அபாரமாக இருந்தது.

யாரிவள்..? அப்போதிருந்த வேலைப்பளுவில் கேட்கத் தோன்றினாலும் தேட முடியவில்லை. நேற்று மறுபடியும் அவளது கானொலிப் பகிர்வொன்று கண்ணில்பட்டது. இம்முறை தேடினேன். யாரிவள்....?

கரோலினா புரோட்சென்கோ ( Karolina Protsenko Violin ). 2008 அக்டோபர் 3, ந் திகதி, உக்ரைனில் நிகாலே , எல்லா தம்பதிகளுக்கு முதல் பெண்ணாகப் பிறந்தவள். 2014ல் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தது. அங்கே தனது ஆறாவது வயதில் வயலின் இசைக்கத் தொடங்கினாள். வயலின் அவளை ஆகர்ஷித்துக் கொண்டது. 2017ல் தெருவோரக்கலைஞராக அறிமுகமாகிய கரோலினாவுக்கு இன்று உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், பல மில்லியன் இரசிகர்கள்.

இதுவரை மூன்று ஆல்பத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ள கரோலினா பல தொலைக்காட்சிகளிலும் இசைத்துள்ளாள். அதேபோல் பல பிரபலங்களின் பாராட்டினையும் பெற்றிருக்கின்றாள். யூடியூப் சேனல்கள் மூன்று உள்ளன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் எனச் சமூக வலைத்தளங்களிலும், பரவலான அறிமுகம் பெற்றிருக்கின்றாள் இந்த இளம் இசைமேதை. இவ்வளவு பிரபலம் பெற்றாலும், சாண்டா மோனிகா 3 வது தெருதான் தனக்குப் பிடித்தமான அரங்கம் என்கிறாள் கரோலினா.

தெருவில் இசைத்தாலும், சூழலின் எந்த நிலையும் பாதிக்காத அளவிற்கு வயலினோடு அவள் ஐக்கியமாகிவிடுவதும், பிரபலமான பாடல்களை இசைத்தாலும் தன் தனித்துவமான இசைக் கோப்புக்களைச் சேர்ப்பதும் அவளது சிறப்பெனலாம்.

சென்ற ஆண்டில் நாம் பார்த்த அவளது முதல் கானொளி.

நேற்றைய தினம் அவளது புதிய கானொளி.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்