முற்றம்

செல்போன்களும், தொலைத்தொடர்பு வசதிகளும் அதிகரித்துப் போனபின், முக்கியத்துவம் இழந்து, காணமற்போயுள்ளன இந்தத் தெருவோரத் தொலைபேசிகள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வாறு காணமற் போனவை பல. ஒடியாடி உழைத்துக் களைத்து, வாழ்வின் அந்திமத்தில் ஒதுக்கப்பட்ட மூத்தோர் போலக் காட்சி தரும் இவ்வாறான தொபேசிக் கூண்டுகளை இப்போது காண முடிவதில்லை.

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவிற்குச் சென்றிருந்த சமயம் படத்திலுள்ள இந்தத் தொலைபேசிக் கூண்டினைக் கண்டேன். ஆனால் அது இப்போது தொலைபேசிக் கூண்டு அல்ல, வீதியோர நூலகம். நேற்றைய தினம் தமிழக நண்பர் ஜோதிஜியுடன் பேசுகையில், தமிழக, ஐரோப்பிய நூல் வாசிப்பவர்களின் விகிதாசாரம் குறித்த உரையாடல் வந்த போது, இப் படம் நினைவுக்கு வந்தது.

இந்த வீதியோர நூலகத்தின் முக்கியமான விதி சொல்லும் வாசிப்பனுபவத்தைப் பெருக்க வேண்டும் எனும் அதன் நோக்கத்தை. அதன் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த முக்கிய விதி, இங்கிருக்கும் புத்தகங்களில் உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் எடுத்துச் செல்லாம். ஆனால் அதற்காக நீங்கள் மற்றுமொரு புத்தகத்தை அங்கே வைக்க வேண்டும். இதே தன்மையிலான வீதியோர நூலகங்கள் ஐரோப்பாவில் வேறிடங்களிலும் இருப்பதாக அறிந்துள்ளேன். ஒரு வாசிப்புப் பிரியனான எனக்கு பெரும் மன நிறைவினையும், மகிழ்ச்சியையும் தரும் செயல். இந்தப் படம் குறித்து இன்னுமொரு அனுபவம் சொல்லலாம். இக் கூண்டுகள் மட்டும் பேசும் சக்தி கொண்டவையென்றால், அதற்குள் உள்ள புத்தகங்கள் சொல்வதைவிடவும் அதிகம் கதைகள் சொல்லவும் கூடும்.

80களின் பிற்பகுதியில் ஐரோப்பாவிற்கு அகதிகளாக வந்த நம்மவர்கள் அனைவருக்குமான முதல் அறிமுகமும், தொடர் உறவுப் பாலமுகாக இருந்தவை இந்தத் தொலைபேசிக் கூண்டுகள். எல்லைகள் தாண்டிய பின் தஞ்சங் கோரத் தொடங்குவதிலிருந்து, ஊரோடு உறவு கொண்டாட இருந்த வழித்துணை இந்த தொலைபேசிகள். ஆனால் வீட்டினைப்பாக இருக்கும் தொலைபேசிகளை விடவும், வீதியோரத் தொலைபேசிகளுக்கான கட்டணம் சற்று அதிகம் சுவிற்சர்லாந்தில். வார இறுதிகளில் இந்த வீதியோரக் கூண்டுகள் நிரம்பி வழியும்.

சமூக உதவிக்காகக் கிடைக்கும் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து, ஆளரவம் இல்லாத ஒரு தொலைபேசிக் கூண்டைக் கண்டுபிடித்து, அதிலிருந்து அழைப்பு எடுத்து, வீட்டுக்காறரை கூப்பிடச் சொல்வதில் அரைவாசிச் சேமிப்பு அழிந்துவிடும். அதற்குப் பின்னால், அந்தக் கூண்டுக் அடுத்த அரைமணிநேரத்தில் யாரும் வந்து விடக் கூடாது எனப் பிரார்த்தனை செய்து, அதுவும் நிறைவேறினால் பேசலாம்.

ஒரு நாணயக்குற்றியைப் போட்டு அழைப்பு எடுக்கும் போது ஒரு தடவையில் தொடர்பு கிடைத்தால் பெரும் அதிஷ்டம். இல்லையென்றால் போட்ட பணம் முழுவதையும் இழக்க வேண்டி வரும். அதற்காக சிறு தொகைக்கான குற்றியை முதலில் போட்டு அழைப்பு எடுத்தால், இணைப்புக் கிடைத்ததும், பேசுவதற்கான கட்டண இருப்பு வேகமாக் குறைந்து, இணைப்புத் துண்டித்துப் போகும். இதையெல்லாம் கவனித்து இணைப்புக் கிடைத்ததும் பெரிய குற்றியைப் போட்டால், சிலவேளை அதனைத் தொலைபேசி உள்வாங்காது போகும்.

இவ்வளவையும் வெற்றிகரமாகக் கடந்து இணைப்பினை எடுத்தால், எதிர் முனையில் அம்மாவே, அல்லது மனைவியோ குரல் கேட்ட மாத்திரத்தில் அழத் தொடங்குவார்கள். அவர்களின் அழுயொடே இருப்பு முடிவதற்கான தொலைபேசியின் எச்சிரிக்கை ஒலியும் இணைந்து கேட்கும். அவர்களின் அழுகையைத் தேற்றி ஆறுதல் சொல்லி முடிக்க, " சாப்பிட்டாச்சோ....? " என்று விசும்பலோடு அவர்கள் கேட்கும்போதோ?, எப்ப அப்பா வருவீங்க? எனப் பிள்ளை கேட்கும் போதோ, கட்டண இருப்பு முடிந்ததென்று துண்டித்துக் கொள்ளும் தொலைபேசி.

பனித்திருக்கும் கண்களைத் துடைத்தவாறு வெளியேற, அடுத்த வாரத்திற்கான காத்திருப்பும், சேகரிப்பும், மறுபடியும் புதிதாய் தொடங்கும்.......

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.