முற்றம்
Typography

இன்று தொடங்கிவிட்டது 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி. புத்தக வாசகர்களுக்கு மட்டும் அல்லாது, திரைப்பட ஆர்வலர்கள், குறும்பட இயக்குநர்கள், ஆவணப்பட இயக்குநர்கள் ஆகியோருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள் உண்டு.

இதுதொடர்பாக சென்னை புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் கூறுகையில்,“இந்தப் புத்தகக் காட்சியில் குறும்படம் மற்றும் சமூக நலன் சார்ந்த ஆவணப் படங்களை திரையிட தனி அரங்கு, ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெறும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.வார நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி செயல்படும். அண்மைக் காலமாக அச்சுப் புத்தகங்களின் விற்பனை குறைந்து வருகிறது. அதை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். சென்னையில் அனைத்து பதிப்பக நூல்களும் கிடைக்கும் வகையில் நிரந்தர புத்தகப் பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கை. அதனைச் செயல்படுத்த அரசு ஒத்துழைக்க வேண்டும். அதற்கான இடத்தை விரைவில் உறுதி செய்வதாக அரசு கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” குறிப்பிடுகின்றார்கள்.
சரி; இவை தவிர்த்து, சென்னை புத்தகக் கண்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

புத்தகக்காட்சி வளாகத்தில் பிரம்மாண்டமான திருவள்ளுவர் மணற்சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. ஒடிஸாவைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக் இதை வடிவமைத்திருக்கிறார். மேலும், பல மொழிகளில் வெளிவந்துள்ள திருக்குறளின் அட்டைப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘கீழடி - ஈரடி’ எனும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் இது நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கே 24 மொழிகளில் கீழடி அகல்வாய்வு அறிக்கையின் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ளலாம். இது தமிழர்கள் வீடுகளில் இருக்க வேண்டிய வேதமாக வருங்காலம் கருதும்.

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி பத்து தினங்களும் நடக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனுமதிக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் புத்தகக்காட்சியைக் கண்டுகளிக்கலாம்.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் - பதிப்பாளர்களின் இணைப்புப் பாலமாக ‘எழுத்தாளர் முற்றம்’ நிகழ்வு ஒவ்வொரு நாள் மாலையும் நடைபெறும். 25-க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கேற்கிறார்கள். புத்தகக்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் வாசகர்களுடன் முன்னணி எழுத்தாளர்கள் உரையாடவிருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில், அவர்களுக்கென சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. புதிய புத்தகங்கள் குறித்த தகவல்களும், நூல் குறித்த குறிப்புகளும், அரங்கு விவரங்களும் பபாசியின் முகநூல்பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

போதுமான அளவில் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 108 ஆம்புலன்ஸ் ஒன்றும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருப்பார்கள். வாசகர்களுக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கைபேசிகளுக்கான இலவச பேட்டரி ரீசார்ஜ் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ரூபாய் நூறுக்கு சீசன் டிக்கெட் வாங்கினால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அல்லது நண்பர்கள் நான்கு பேர் எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்லலாம். நந்தனம் பிரதான சாலையிலிருந்து புத்தகக்காட்சிக்கு வருவதற்காக மூத்த குடிமக்களுக்கு பேட்டரி வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS