முற்றம்

முரசொலி கிண்டல் விவகாரம் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. கலைஞர் மு.கருணாநிதியில் இதழியல் ஆற்றல் குறித்தும், அவர் எத்தனை சிறந்த பத்திரிகையாளர் என்பது பற்றியும் பலர் பக்கம் பக்கமாக பதிவுகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். எனும் பத்திரிகையாளர் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் இருப்பதாலும், அதனை அவரது 103 வது பிறந்த தினமாகிய இன்றைய நாளில் நினைவு கொள்வது சிறப்பு என்பதாலும், அதை பகிர்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கலைஞர் அளவுக்கு இல்லாவிட்டாலும் தானும் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பதை எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் நிரூபித்திருக்கிறார். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தார். ‘சமநீதி’ என்ற பத்திரிகையின் உரிமையை வாங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். ‘அண்ணா’ என்ற பெயரில் நாளிதழ் ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் எம்.ஜி.ஆர். இருந்தார்.

சிறுவயதில் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார். ஆனால், அது நிறைவேறவில்லை. ‘சமநீதி’ பத்திரிகையில் ‘என் காதலி’ என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார். பிறகு, அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதனால், அவர் எழுதிய தொடரும் நின்றுவிட்டது. இதைப் பற்றி பின்னர் எம்.ஜி.ஆர்., ‘‘நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அது ஈடேறவில்லை. அதேபோல, ‘என் காதலி’ தொடரை எழுதி முடிக்கும் எண்ணமும் ஈடேறவில்லை’’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக, வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்திய அனுபவங்களை ‘பொம்மை’ பத்திரிகையில் ‘திரைக் கடலோடி திரைப்படம் எடுத்தோம்’ என்ற பெயரில் தொடர் கட்டுரையாக எம்.ஜி.ஆர். எழுதி வந்தார். அந்தத் தொடரை ஒவ்வொரு வாரமும் அவரே கைப்பட எழுதி பத்திரிகைக்கு கொடுத்து வந்தார். அந்தத் தொடர் வந்து கொண்டிருந்த போது, காஷ்மீரில் ‘இதய வீணை’ படப்பிடிப்பு. அப்போது, ‘பொம்மை’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சாரதியும் உடன் சென்றிருந்தார். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து, தான் தங்கியிருந்த ‘ஓபராய் பேலஸ்’ ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். திரும்பினார். அவரிடம் அடுத்துவரும் ‘பொம்மை’ இதழுக்கான கட்டுரை குறித்து அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சாரதி நினைவுபடுத்தினார்.

அந்த சமயத்தில், அடுத்த நாள் படப் பிடிப்பு குறித்து ஆலோசிக்க இயக்குநர் பஞ்சு, வசனகர்த்தா சொர்ணம், தயாரிப்பாளர்களில் ஒருவரான வித்வான் லட்சுமணன் ஆகியோர் எம்.ஜி.ஆரை சந்திக்க வந்தனர். அவர்களோடு எம்.ஜி.ஆர். பேசி முடிக்கவே இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அன்று அவரது கட்டுரையை வாங்கி காலையில் அனுப்பாவிட்டால் அடுத்து வரும் ‘பொம்மை’ இதழில் அது இடம்பெற முடியாது. தர்மசங்கடத்துடன் இருந்த சாரதியைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘என்ன யோசிக்கிறீர்கள்? வாருங்கள், முதலில் சாப்பிடுவோம்’’ என்று சாப்பிட அழைத்துச் சென்றார்.

சாப்பிட்டு முடித்து இரவு 11 மணிக்கு மேல் துளிகூட களைப்போ, சலிப்போ இன்றி, அடுத்து வரவேண்டிய இதழுக்கான தொடரை எம்.ஜி.ஆர். எழுதினார். எப்போதும் பச்சை மையில்தான் அவர் எழுதுவார். ‘தாயே துணை’ என்று முதல் பக்கத்தின் மேலே எழுதிவிட்டு கட்டுரையை எந்தவித தங்கு தடையுமின்றி, அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிக் கொடுத்தார். அப் போது மணி இரவு ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அதிகாலையில் அவர் படப்பிடிப்புக்கு கிளம்பியாக வேண்டும். எழுதி முடித்து சாரதி கையில் கட்டுரையைக் கொடுத்து, ‘‘இனிமேல் நிம்மதியாக தூங்குவீர்கள் இல்லையா?’’ என்று சிரித்தபடியே எம்.ஜி.ஆர். விடை கொடுத்தபோது, பிரமித்துப் போனார் சாரதி!

பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார்.

‘‘பத்திரிகையாளர்கள் தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக இருப்பவர்கள். இது கலை உலகுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறைக்கும் பொருந்தும். இதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்’’… இந்த வாசகங்கள் எம்.ஜி.ஆர். கூறியவை. முன்பு செயல்பட்டு வந்த தென்னிந்திய சினிமாப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில், ‘மாதம்தோறும் ஒரு கலைஞர் சந்திப்பு’ என்ற நிகழ்ச்சிக்காக எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டு, அதில் அவர் கலந்து கொண்டபோது தெரிவித்த கருத்து இது.

பெரும்பாலான பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் நேரடியாகவே எம்.ஜி.ஆர். அறிவார். அதிகாலையில் ராமாவரம் தோட்டத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால், ‘‘நான் ராமச்சந்திரன் பேசுறேன்’’ என்று எந்தவித பந்தாவும் இல்லாமல் பல நேரங்களில் அவரே பேசுவார். முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கேட்டால், சுருக்கமாக இருந்தால் தொலைபேசியிலேயே பதில் சொல்வார். விரிவாக பேச வேண்டும் என்றால் ‘‘நேரில் வாருங்கள்’’ என்று அழைத்து விளக்கம் அளிப்பார்.

தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் பத்திரிகையாளர்களிடமும் எம்.ஜி.ஆர். கோபம் கொண்டதில்லை. ‘‘அவர்கள் கருத்தை வெளியிடும் உரிமை அவர்களுக்கு உள்ளது’’ என்று கூறியவர்.

- 4தமிழ்மீடியாவிற்காக : மாதுமை

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'