முற்றம்

தமிழ் சினிமாவில் 80-களுக்கு முன்பு வரையிலான அம்மா பாடல்களை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஆனால் இளையராஜா இசையமைத்து அவரது குரலில் வெளிவந்த அம்மா பாடல்கள் சாகா வரம்பெற்றவை. தனது இசையில் பிறரையும் அம்மா பாடல் பாட வைத்திருக்கிறார் ராஜா.

அம்மா பாடல் என்றாலே நமக்கெல்லாம் உடனே ஞாபகம் வருவது, மன்னன் படத்தில் வரும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடல். ரஜினியின் பிள்ளை முகத்திற்கு இசைஞானி மெட்டு கொடுக்க, "பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?" என்று தாய்க்கு ஈடு ஏதும் இல்லை என கவிஞர் வாலி சொல்லியிருப்பார். ஜேசுதாஸ் பாடிய ‘அப்பாடலுக்கு ரஜினி தன் தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார். அந்த வயதில் ஒரு தாய்க்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினால் அந்தத் தாயின் நிலைமை என்ன ஆகும் என யோசித்ததே இல்லை, ஒருவேளை அவருக்கு ஜன்னிகூடக் கண்டுவிடலாம். இப்படியான மிகைப்படுத்தல்கள் இல்லாமல் உறவையும் அதன் வலுவையும் காட்ட முடியாதா என்ன? ஆனால் ரஜினுக்கும் ராமராஜனுக்கும் ராஜ்கிரணுக்கும் அதிக அம்மா பாடல்களை இசையமைத்திருக்கிறார் ராஜா.

உழைப்பாளி படத்தில் வரும் "அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நானும் நீயும் என்றும் ஓருயிரே" என்ற பாடலும் வாலியின் வைர வரிகளில் அம்மா புகழ் பாடும் அற்புதப் பாடல். அதேபோல், தளபதி படத்தில் முக்கிய திருப்புமுனையாக வரும் அம்மா பாடல் தான் ”சின்னத்தாயவள் தந்த ராசாவே”. கூட்ஸ் வண்டியின் சத்தத்தோடு தொடங்கும் அந்த பாடல் என்றும் பசுமை ரகம். இளையராஜாவும், வாலியும் இணைந்து கொடுத்த பொக்கிஷம் அது.

ராஜாவின் அம்மா பாடல்களைக் கடந்து பார்த்தால் பல இசையமைப்பாளர்கள் அம்மா பாடல்களுக்காக உருகி இருக்கிறார்கள்.

“காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா" என்ற பாடல் நியூ படத்தில் இடம் பெற்றிருக்கும். ஏ.ஆர்.ரகுமானின் மெட்டு உடலுக்கு, கவிஞர் வாலி வரி கொடுத்து உயிர் கொடுத்திருப்பார். மை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே! உனதன்பு பார்த்த பின்பு அதை விட வானம் பூமி யாவும் சிறியது..தாயின் அன்புக்கு முன்பு வானமும் பூமியும் சிறியது" என அடர்த்தியான வரிகளை உள்ளடக்கி இருக்கும் அந்த பாடல். அதேபோல வியாபாரி படத்தில், "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா?" என்ற பாடல் உலகில் மதிப்பற்ற ஒரு உறவு அம்மாவின் உறவு என மனம் அழுந்த சொல்லும் "பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா..பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா" என்ற வரிகள், நாம் அனைவரும் அன்னையிடத்தில் உணர்ந்த ஒரு விஷயம் என்பதை உணர வைக்கும். அது தான் அந்த பாடல் நம்மை ஆட்கொண்டதற்கான காரணம்.

திருப்புமுனை திரைப்படத்தில் "அம்மான்னா சும்மா இல்லடா" என்று தொடங்கும் பாடலை சோக கீதத்தில் உருவாக்கி இருப்பார் இளையராஜா. "பெத்தவளை மறந்தா அவன் செத்தவனே தாண்டா" என அழுத்தமான வரியை புகுத்தி இருப்பார் இளையராஜா. ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் ”அம்மன் கோவில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோவிலம்மா” என்ற பாடலும் இளையராஜாவின் சிறந்த அம்மா பாடல்களின் பட்டியலில் இடம்பிடித்துவிடும். அஜித்துக்கும் சில அம்மா பாடல்கள் வெற்றிபெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று, வரலாறு படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வரும் ”தீயில் விழுந்த தேனா?” என்ற பாடல். அது, தாயை காக்க வேண்டிய மகனின் பார்வையில் இருந்து உருவாகி இருக்கும். அதில் “எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு! உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?” என வைரமுத்து சிலாகித்து எழுதியிருப்பார்.

கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களிலும் சிறந்த அம்மா பாடல்கள் வந்திருக்கின்றன. தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் வரும் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" என்ற பாடல் வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. தாயின் உழைப்பை, தியாகத்தை, அன்பை வெளிக்காட்டும் இந்த பாடலில் வரும். “சொந்தம் நூறு சொந்தம் இருக்குது.. பெத்த தாயி போல ஒண்ணு நெலைக்குதா..சாமி நூறு சாமி ..இருக்குது அட.. தாயி ரெண்டு தாய் இருக்குதா?” என்ற வரிகளே அந்த பாடலின் தரத்துக்கு சான்று.தர்மதுரை படத்தில் வரும் “போய் வாடா....... என் பொலி காட்டு ராசா” என்ற பாடல், மகனுக்கு தாய் கொடுக்கும் ஊக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் வைரமுத்து எழுதி இருப்பார். “வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விரிக்கும் வல்லவனே நீ நடந்தா…புல்லுவெளி நெல்லு விளையும்” என்ற வரிகளில் தாய்மை கசிந்து நிற்கும்.

எம். குமரன் படத்தில் வரும் “நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே” பாடல் , “வேருக்கு நீரை விட்டாய்.. நீராய் கண்ணீரை விட்டாய் பூவாச்சு என் தோட்டமே” என்ற வரிகளில் அந்த பாடலின் ஜீவன் இருக்கும். “புது விடியல் வேண்டும் எனக்கு எந்த நாளும் நீதான் கிழக்கு” என்று அந்த பாடல் முடியும் போது நம் தாயின் முகம் நம் கண்முன்னே நிச்சயம் வந்து போகும். அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்த ராம் படத்தில் வரும் ”ஆராரிராரோ நான் இங்கு பாட” என்ற பாடல் இனிமையின் உச்சம். வரிகளைக் கடந்த மெட்டின் உச்சம்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் கதையின் போக்கையே மாற்றக்கூடிய கட்டத்தில் வரும் ”அம்மா அம்மா நீ எங்க அம்மா” பாடலை நடிகர் தனுஷ் எழுதியிருப்பார். “ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே” என்ற வரிகள் நமக்கெல்லாம் ஊக்கம் தருபவை. அதேபோல் விஜய் ஆண்டனி, இசை நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?’ என்ற பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தற்போது இந்தப் பட்டியலில் சேர வந்துள்ளது மிஷ்கின் இயக்கத்தில் இசைஞானி இசையில் உருவாகியிருக்கும் ‘சைக்கோ’ படத்தில் இடம்பெற்றிருக்கும் “தாய் மடியில் நான் தலையை சாய்கிறேன்” என்ற அம்மா பாடல். உருக்கமான வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை பிரபல பாடகர் கைலாஷ் கெர் பாடியுள்ளார். சினிமா இருக்கும்வரை அம்மா பாடல்கள் இருக்கும்.


- 4தமிழ் மீடியாவுக்காக:  மாதுமை

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'