முற்றம்
Typography

கர்னாடக சங்கீதத்தை சபாக்களில் இருந்து ஏழை மக்கள் வாழும் குடிசைப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று சொன்ன புரட்சிப் பாடகர் டி எம் கிருஷ்ணா. அதற்காகவே அவர் உயர் சாதியினரால் விலக்கி வைக்கப்பட்டவர்.

அவர் தற்போது எழுதி வெளியிட்டிருக்கும் புதிய நூல் Sebastian & Sons! இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று எனலாம். முதலில் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதித்த கலாஷேத்ரா நிறுவனம், பின்னர், கடைசி நேரத்தில் நடத்த விடாமல் தனது அரங்கத்தில் இடமில்லை என்று கூறி ரத்து செய்தது. ஆனாலும், இந்து ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், சசிகுமார் ஆகியோரின் இடுக்கண் களைந்த நட்பினால் குறிப்பிட்ட அதே நாளில் மாலை நேரத்தில் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் அரங்கு கொள்ளாத கூட்டமாக அற்புதமாக நடைபெற்றது புத்தக வெளியீட்டு நிகழ்வு.

Sebastian & Sonsமிருதங்கம் தயாரிப்பவர்கள் குறித்த புத்தகம் மட்டுமல்ல, ஒரு கலையின் உன்னதம் அதற்கான கருவியை உருவாக்குபவர்களுக்கு ஏனோ வாய்ப்பதில்லை என்ற மையக் கேள்வியை அதில் எழுப்புகிறார் டி எம் கிருஷ்ணா.

நூலைப் பெற்றுக் கொண்டு ராஜ் மோகன் காந்தி, தொல் திருமாவளவன் ஆற்றிய அருமையான உரைகள் அற்புதம். நூல் வெளியீட்டு நேரத்தில் மிருதங்கம் தயாரிக்கும் கலைஞர்கள் அத்தனை பேரும் உடன் இருக்க மேடைக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டது. அறிவுத் தளத்தில் மட்டுமல்ல, சாதி, வர்ணம் குறித்த தத்துவார்த்த தளத்தில் மட்டும் கூட அல்ல, சமத்துவம் - சுதந்திரம் - ஜனநாயகம் என்ற அடிப்படை கோட்பாடுகளின் மையப் புள்ளியில் ஓர் உணர்வு பூர்வமான சங்கமமாகவும் சுடர் விட்டது நிகழ்வு.

இந்த நூல் முக்கியமானது மட்டுமல்ல, ஒரு புதிய பாதை சமைத்திருப்பதும் ஆகும் என்றார் ராஜ் மோகன். “வெவ்வேறு தத்துவப் பார்வை கொண்ட காந்தி, அம்பேத்கர், பெரியார், சுபாஷ் போஸ் ஆகியோரை ஒரே தளத்தில் நிறுத்திப் பார்க்கும் வாய்ப்பை, ' அவர்கள் ' (இன்றைய ஆட்சியாளர்கள்) நமக்கு ஏற்படுத்தி உதவியுள்ளனர். ஏனெனில், சுதந்திரத்தை, ஜனநாயகத்தை, சமத்துவத்தை விரும்புவோர் என்ற வகையில் அது கிருஷ்ணா, ராஜ் மோகன், திருமாவளவன் எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது. கிருஷ்ணா செயற்கரிய செய்துகொண்டே தமது எளிமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது சிறப்பு. அது அப்படியே தொடர வாழ்த்துகள்... ” என்றார் அவர்

திருமாவளவன் பேசுகையில் “ நால்வர்ணம் நானே படைத்தேன் என்று கீதையில் சொன்னார் கிருஷ்ணா. இந்த டி.எம்.கிருஷ்ணா ,அதை மறுக்கிற தோழராக இருக்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே நமது வள்ளுவன் மொழி. மனித குலத்தின் ஆதி இசைக் கருவி பறை தான். மிருதங்கம் கூட தொல் கருவி தான். அதுவும் பறை. இசை பற்றி எழுதியவர், இசைக் கருவி பற்றி எழுத வில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு இதை எழுதினேன் என்று தன்னுரையில் எழுதியிருக்கிறார் தோழர் கிருஷ்ணா. அவரது உழைப்பை, உணர்வுகளை வாழ்த்துகிறேன்” என்றார்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்