முற்றம்

வெள்ளிக்கிழமையும் 13ந் திகதியும் இனைந்து வரும் நாட்களை அபசகுனப் பயத்துடனேயே கழிக்கும் பழக்கமுடைய  பலர் மிகுந்த நாடு இத்தாலி. ஆனால் அடுத்து வரும் நாட்களில் அச்சத்தினைத் தரும் வெள்ளிக்கிழமையாக சென்ற பெப்ரவரி 21ந் திகதியை எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள் இத்தாலி மக்கள்.

அன்றுதான் கோவிட் - 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், இத்தாலியின் வட பிராந்திய லொம்பார்டியா பகுதியில் உள்ள கொடோனோ நகரில் முதலாவது உயிரிழப்பு நிகழ்ந்தது. அன்றைய நாளிலேயே வெனிஸ் பகுதியிலும் மற்றுமொரு உயிழப்பு நிகழ, கோரோனா வைரசின் அச்சமும், அபாயமும், குறித்த உணர்வுகளாலும், செயல்களாலும் பரபரக்கத் தொடங்கியது இத்தாலி.

இது ஆரம்பமாகிய இரண்டாவது வாரம் இது. நேற்று வியாழக்கிழமை மாலை வரையில், இத்தாலியில் கோரொனா வைரஸ் தாக்கத்தின் இறப்பு எண்ணிக்கை 148 ஐ எட்டியுள்ளது. 3,858 உறுதிப்படுத்தப்பட்ட வைரஸ் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆசியாவுக்கு வெளியே ஐரோப்பாவில் அதி கூடிய வைரஸ் பாதிப்பினைக் கொண்ட நாடாகவும், உலகளாவிய ரீதியில் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள மூன்றாவது நாடாகவும் இத்தாலி கவனம் பெறுகிறது.

இத்தாலியில் இவ்வளவு அதிகமான இழப்புக்கள், அதிகமான வைரஸ் தொற்றுக்கள் ஏன் ?

உற்பத்தித் திறனும், உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த ஒரு ஐரோப்பிய நாட்டில் ஏன் இந்த நிலை ? இந்தக் கேள்விக்கான பதில்கள் அரசியல், சமூகம் சார்ந்து வெவ்வேறானவையாக இருக்கலாம். ஆனால் மனித நேயம் குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு.

இந்த இருவாரங்களில், இறந்தவர்கள் 148 , ஆனால் இந்த அபாயத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் 414. இந்த வைரஸ் தொற்று தீவிரம் கொள்ளத் தொடங்கிய நாட்களிலேயே இத்தாலியின் பிரதமர் கியூசெப் கோன்டே ஒரு முக்கியமான தகவலை வேண்டுகோளாக வைத்தார். " 7 மில்லியன் முதியவர்கள் கொண்ட நாடு இத்தாலி என்பதனைக் கருத்திற் கொண்டால், கோரோனா பாதிப்பில் பலியானோரின் விகிதாசாரம் எவ்வளவு குறைவானது என்பது புரியும். ஆதலால் முதியவர்களைப் பாதுகாப்பதில் கவனங்கொள்வோம்" என அவர் சொன்ன வார்த்தைகளுக்குள் மறைந்திருப்பது இத்தாலியர்களின் மரபார்ந்த மான்பு ஒன்று என்பது மறுப்பதற்கில்லை.

நாகரீக வாழ்வு மிகுந்த ஐரோப்பாவில், இன்றும் குடும்ப முதியவர்களை, கூடவே வைத்துப் பராமரிக்கும் பண்பு ஏனைய நாடுகளை விட இத்தாலியர்களிடம் மிகுதியாகவுள்ளது. ஏனைய சமூகங்கள் முதியவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகையில், அவர்களை வீடுகளில் வைத்துப் பராமரிக்கும் இத்தாலியர்கள் பலர் உள்ளனர். அதேபோல் முதியவர்களுக்கான மருத்துவம் உள்பட வசதிகள் பலவற்றை இலவசமாக வழங்கி வருவது இத்தாலிய அரசு.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், ஜேர்மனுக்கு அடுத்து சராசரியான வாழ்நிலை வயது அதிகமுடையவர்கள் இத்தாலியர்கள். 2018 ம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி 22.6 சதவிகிதம் முதியவர்கள் வாழும் நாடு இத்தாலி. ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றைய உறுப்பு நாடுகளை விட மிக உயர்ந்த சதவீதம் இது.

இப்போது இத்தாலியின் பாதிக்கப்பட்ட 20 பிராந்தியங்களில், லோம்பார்டியா, வெனெட்டோ, எமிலியா-ரோமானா, உட்பட மேலும் சில பகுதிகளில் நிகழ்ந்துள்ள உயிரிழப்புக்கள் பலியானவர்கள் பெரும்பாலும் வயதான முதியவர்கள் மற்றும் பிற நோய்களினால் பீடிக்கபட்டிருந்தவர்கள், கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எ;னபுது முக்கியமானதும் கவனிக்கத் தக்கதுமாகும்.

இத்தாலியில் தற்போது அனைத்துப் பள்ளிகள், மற்றும் கலாசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இளையவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றாது, அவர்களைப் பாதிக்காது என்றால், ஏன் பள்ளிகளை மூடவேண்டும் எனும் கேள்வி ஒன்று செய்தியாளர்கள் மநாட்டில் முன்வைக்கப்படுகிறது. அதற்கு இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவன அதிகாரிகள் " இந்த நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் ஒரு பெரிய தொற்றுநோயைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இளைஞர்களிடையே நோய்த்தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகத் தோன்றினாலும், பள்ளி குழந்தைகள் தங்கள் வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்றுநோய்களை மிக எளிதாக அனுப்பக்கூடும் என்ற கவலைகள் உள்ளன, இதுபோன்ற நெருக்கமான குடும்ப உறவுகளைக் கொண்ட ஒரு நாட்டில், இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை அவசியமானதாகிறது" எனப் பதில் தருகின்றார்கள்.

இத்தாலியில் ஒரு வயதான மக்கள் தொகை உள்ளது, உண்மையில் சீன மக்களை விட மிகவும் பழமையான சமூகம். இது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அரசும் அதிகாரிகளும் அக்கறை கொண்டுள்ளார்கள். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டினுள்ளேயே இருக்கவும், அவர்களது சமூக தொடர்புகளை மட்டுப்படுத்தவும் இத்தாலிய சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர். சுகாதார நிலைமைகள் மற்றும் சுவாச நோய் உள்ள எவருக்கும் இதே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கோரோனா வைரஸ் தாக்கத்திலான இறப்பு விகிதம் உண்மையில் உலக சராசரியை விட அதிகமாக உள்ளதா ?

உலகளாவிய புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இத்தாலியில் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை உள்ளது என்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் அது எவ்வளவு உண்மை ?

கொரோனா வைரஸிற்கான உலகளாவிய இறப்பு விகிதம் உலக சுகாதார அமைப்பால் மதிப்பிடப்பட்டு வருகையில், இத்தாலியின் தற்போது 3.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகிதாசாரம் வரும் நாட்களில் மாறுபடவும் கூடும்.  வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் லேசான நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறார்கள், 14 சதவீதம் பேருக்கு நிமோனியா போன்ற கடுமையான நோய்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ள விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவும் கடந்து போகும் எனும் மனநிலை வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள்.

இத்தாலியின் வைரஸ் தொற்று ஆரம்பமாகிய லொம்பார்டியாப் பகுதியிலுள்ள கோடோனோ, "இத்தாலியின் வுஹான்" என்று அழைக்கப்படுகிறது. முற்றிலும் முடக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில், இரயில்கள் நிற்காது, தெருக்களும் காலியாக உள்ளன. இரண்டுவாரங்களாக, 50,000 மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அப்பகுயில் இருந்து "குட் மார்னிங், கோடோனோ!" எனும் ஒரு உற்சாகக் குரல் எழுந்திருக்கிறது. பினோ பகானி எனும் தொகுப்பாளர், லோம்பார்டியாவின் சிவப்பு மண்டல பகுதிக்குள் இருந்து தனது நேரடி ஒலி, ஒளிபரப்பினைத் தொடங்குகியுள்ளார்.

முடக்கப்பட்ட பத்து நகரங்களின் ஒன்றிலிருந்து ஒரு முதியவர் உற்சாகமா பகானியைத் தொடர்பு கொள்கின்றார். "எங்கள் சிறுவயது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிடுவதற்காக,  நாங்கள் எங்கள் வீடுகளில் காத்திருக்கிறோம். இந்த கனவு முடிந்ததும், நாங்கள் சந்திப்போம், நாங்கள் விருந்து வைப்போம் என்பதை அறிவோம். நாங்கள் அதை விட்டுவிட மாட்டோம். " என நம்பிக்கையுடன் பேசுகின்றார்.

"றேடியோ  சோனா  ரோசா " என்ற பெயரில், ஒரு நாளைக்கு இரண்டு முறை, அரசாங்கத்தின் அன்மைய தகவல்களுடன், கடைகள் மற்றும் தபால் நிலையங்களுக்கான திறப்பு நேரங்கள் மற்றும் மருத்துவ வார்டுகளுக்கான நேரங்கள் என்பன பகிரப்படுகின்றன. சேனலின் பேஸ்புக் பக்கத்தில் சுமார் 1,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர், அவர்கள் வீட்டிலேயே தங்களை மகிழ்விப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதால் பாராட்டுச் செய்திகளை அனுப்புகிறார்கள் "

"மக்கள் பேச வேண்டும் மற்றும் தகவல்களை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வயதானவர்கள், மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் தனிமையாக உணர்வார்கள். அப்போது நாம் அவர்களோடு இருக்க வேண்டும் " என்கிறார் தொகுப்பாளர் பாகனி.

அவர் மேலும் சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட்டார். "ஒரு வயதான பெண்மணி சில நாட்களுக்கு முன்பு எங்களை அழைத்தார், அவளுடைய வெப்பநிலையை எடுக்க ஒரு தெர்மோ மீட்டர் இல்லை என்று கூறினார்," சில நிமிடங்களில், "ரேடியோ சோனா ரோசா" சிவில் பாதுகாப்பின் உள்ளூர் கிளைக்கு இந்தத் தகவலை வழங்க, அந்த பெண்ணுக்கு வெப்பமானி கிடைக்கிறது.

"தனிமைப்படுத்தல் எப்போது முடிவடையும் என்று எங்களுக்குத் தெரியாது. ஒரு பெரிய மர்மம் நிறைந்த வேளை. இதற்கான தீர்வு இது அல்ல, ஆனால் இந்த நேரத்தில் கிடைக்கும் சிறந்த ஒன்று. " என்று சொல்லிச் சிரிக்கும் தொகுப்பாளர் பினோ பகானிக்கு வயது 82.

இதை அறிந்ததும், எனக்குத் தெரிந்த ஒரு இத்தாலிய நண்பரைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தேன். கடற்கரைப்பகுதியொன்றில் தன் தாயினைப் பராமரித்தவாறு நலமாக இருப்பதாக அவர் சொன்னார். சொன்னவருக்கு வயது எழுபது, அவரது தாயருக்கு வயது 95.

இன்று இன்னும் சிலருடன் பேச வேண்டும் .......


- 4தமிழ்மீடியாவிற்காக : கிளேர் ஸ்பீக்கின் தகவல்களுடன் மலைநாடான்.

படங்கள்: நன்றி EPA, REUTERS

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.