முற்றம்

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் நான் வசிக்கும் தென் மாநிலம் இத்தாலி மொழிபேசும் மாநிலம். சுவிற்சர்லாந்திலுள்ள பலரும், அதனை இத்தாலியின் பிராந்தியமாகவே பார்க்கும் அபத்தமான பழக்கம் இப்போதும் உண்டு. 90களின் தொடக்கத்தலிருந்து அம் மாநிலத்தில் வாழ்கின்றேன். இத்தாலிய மொழி மற்றும் கலை கலாச்சாரங்கள் பற்றிய புரிதல் வந்தபோது, இத்தாலி மீதான ஈர்ப்பு வந்தது.

இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக ஊழல்கள் எனக்கு ஒருபோதும் பிடிக்காது. ஆனால் அங்கு உறைந்திருக்கும் ஆன்மீகமும், நிறைந்திருக்கும் கலைகளுக்குமாக அந்த மண்ணை ஆயிரம் முறை தொட்டு வணங்குவேன் என எப்போதும் நண்பர்களிடம் சொல்லுவதுண்டு. அதே கோட்பாடுதான் இத்தாலி மீதான என் பிரியம். கலைகளின் மீதான ஈர்ப்புடையவர்களுக்கு, ஐரோப்பாவில் பிரான்சும், இத்தாலியும் எப்போதும் விருப்பத்துக்குரியவைதான்.

கலையும், புராதனமும், உறைந்து கிடக்கும் தேசம் அது. ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைவிட பொருளாதார வளம் குறைந்த நாடாகத்தான் எல்லோருக்கும் தெரியும். இந்தியா ஏழைநாடல்ல, ஏழைகள் வாழும் நாடு என்பது போன்றுதான் இத்தாலியின் பொருள்வளம் பெருமுதலாளிகளிடம் முடங்கிக் கிடக்கிறது. எது எப்படியாயினும் மக்கள் எப்போதும் கொண்டாட்ட மனநிலையில் வாழப் பழகியவர்கள்.

சுவிற்சர்லாந்துக்கு வந்த பத்து ஆண்டுகளின் பின்னர்தான் பக்கத்திலிருக்கும் இத்தாலிக்குச் செல்ல முடிந்தது. இத்தாலியின் பெரும்பாலான பிரதேசங்களிலும் பயணித்திருக்கின்றேன். எல்லாப்பிரதேசங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஈழத்தின் கிழக்கு மாகாண மக்களிடம் காணும் விருந்தோம்பல் சிறப்பை இத்தாலியில் வாழும் தமிழர்களிடம் காணலாம். ஏறக்குறைய இத்தாலியர்களைப் போலவே கொண்டாட்ட மனநிலை வாய்க்கப் பெற்றவர்கள்.

90களில் எனக்குப் பிடித்தமான ஒரு கலைஞனாக இத்தாலியின் லுச்சியானோ பவரொத்தி இருந்தான். ஒபரா இசைகுறித்த பரிச்சயம் ஏதும் எனக்கு இல்லாத போதும், பவரொத்தியை ஏனோ பிடித்துப் போயிற்று. ஒருவேளை, தமிழ்திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற தோற்றம் மற்றும் அரங்காற்றுகைப் பாணி என்பனவற்றால் வந்திருக்கலாம்.

நீண்டகாலமாக பவெறொத்தியை நினைக்காதிருந்த போது, அன்மையில் இத்தாலிக்கு அவசர உதவிக்கு வந்த சீன மருத்துவர்குழு ஒன்று பவொறொத்தியின் பாடல் வரிகள் ஒன்றின் பதாகையோடு வந்திருந்தது.

அந்தப் பாடல்;

Nessun dorma! Nessun dorma!
யாரும் துங்காதீர்கள்! யாரும் துங்காதீர்கள்!
Tu pure, oh Principessa
இளவரசி நீயும் கூட
Nella tua fredda stanza
குளிர்மையான உன் அறையில் இருந்து
Guardi le stelle che tremano
D'amore e di speranza
காதலினாலும் நம்பிக்கையினாலும் தளர்திருக்கும் நட்சத்திரங்களை பார்க்கிறாய்
Ma il mio mistero è chiuso in me
ஆனால் எனது ரகசியம் என்னுள் மூடி இருக்கும்
Il nome mio nessun saprà
எனது பெயரை யாரும் அறியார்
No, no, sulla tua bocca lo dirò
Quando la luce splenderà
Ed il mio bacio scioglierà
வெளிச்சம் தோன்றி எனது முத்தத்தை கரைய செய்யும் போது உன் வாயில் அதை சொல்வேன்.
Il silenzio che ti fa mia
மௌனத்தில் நீ என்னவளாகின்றாய்.

பாவரொத்தியின் பிரபலமான பாடல்களில் ஒன்று. அரங்கில் இதனை அவர் பாடுகையில் பல்லாயிரக் கணக்கானோர் பரவசமடைவார்கள். அதேபோல் உத்வேகம் தரும் பாடலொன்று புதிதாகப் பிறந்திருக்கிறது.

இத்தாலியை இருள் சூழ்ந்திருக்கும் தருணத்தில், அந்த மண்ணின் கலைஞர்களால் ஆர்பரித்து எழும் வகையான பாடல் ஒன்று நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. அதுதான் " Rinascerò, rinascerai "

இத்தாலியின் லொம்பார்டியாவிலுள்ள பேர்கமோ பிராந்தியத்தில்தான் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புக்கள். அந்த இழப்புக்களின் வேதனையில், அழுகையில், பிறந்திருக்கிறது இந்தப்பாடல். 1944 மே 1ல் பெர்கமோவில் பிறந்த ராபி ஃபாச்சினெட்டி (Roby Facchinetti), பிரபலமான இத்தாலிய பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் சிறந்த பியானோக் கலைஞர். அவரது இசையமைப்பில் பல்வேறு கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ளது இப்பாடல். வலேரியா கபோனெத்தோ டெல்லேயானியின் (Valeria Caponnetto Delleani ) அற்புதமான குரலில், அழுகையும் நம்பிக்கையும் சேர்ந்து ஒலிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவசரநிலைக்கு ஆதரவாக பிறந்திருக்கிறது இப் பாடல், குறிப்பாக கோவிட் -19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெர்காமோ நகரத்திற்கு, இப்பாடலின் பதிவிறக்கங்கள், பதிப்புரிமை மற்றும் தலையங்க உரிமைகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் முற்றிலும் நன்கொடையாகும். பெர்கமோவில் உள்ள போப் ஜியோவானி XXIII மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக அந்த நன்கொடை வழங்கப்படும் என அறிவிக்கபட்டிருக்கிறது.

பெர்காமோவில் உள்ள போப் ஜியோவானி XXIII மருத்துவமனையின் நடப்புக் கணக்கில் நேரடியான நன்கொடைகளை வழங்கவும் முடியும் - IBAN: IT75Z0569611100000008001X73 (வழங்குபவர்கள், தங்கள் பெயர் மற்றும் வரி இலக்கம் என்பவற்றுடன், Rinascerò, rinascerai திட்டத்திற்கான நன்கொடை என்னும் விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பாடலைத் தோற்றுவித்த இசையமைப்பாளர் ரொபி பச்சினெத்தி பாடல் பிறந்த கதை கூறுகையில்; தொலைக்காட்சியில் என் சக குடிமக்களின் சடலங்களை ஏந்திய இராணுவ லாரிகளின் அணிவகுப்பைப் பார்த்த பிறகு, நான் உணர்ச்சிவசப்பட்டேன், அழுகையும் கோபமும், ஆற்றாமையும், என்னை பியானோவிற்கு கொண்டு வந்தன, சில நிமிடங்களில் இசை பிறந்தது. கூடவே "நான் மறுபிறவி எடுப்பேன், நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" என்ற தலைப்பும் பிறந்தது.

இது ஒரு உத்வேகம் மற்றும் உடனடி தேவை, நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன், குறிப்பாக மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட எனது நகரத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் ஸ்டெபனோவை அழைத்தேன், இந்த திட்டத்தில் என்னை ஆதரிக்கும்படி கேட்டு, பாடல் எழுதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். நான் உணர்ந்ததை முழுமையாக வெளிப்படுத்துகிறது அவரது வரிகள்.

இசைக்கும் சொற்களுக்கும் இடையில் ஒரு சரியான பொருத்தம். எங்களையும் அவர்களது குடும்பத்தினரையும் விட்டு வெளியேறியவர்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு இது. மற்றவர்களின் நன்மைக்காக இடைவிடாமல் உழைக்கும் இந்த நாட்களின் கதாநாயகர்கள் கதாநாயகிகளான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களும், விட்டுக் கொடுக்காத நகரத்துக்கான பிரார்த்தனையாகவும் இந்தப் பாடல்.

பாடல் வரிகளை எழுதிய ஸ்டீபனோ தொடர்கையில், சிலநாட்களின் முன்பு ராபி என்னை கண்ணீருடன் உடைத்த குரலில் அழைத்தார். ஒரு மூச்சுக்கும் மௌனத்திற்கும் இடையில் அவர் தான் கண்ட சோகமானகாட்சி பற்றி என்னிடம் சொன்னார். அரை மணி நேரம் கழித்து, அவரது இசைக்கு மிகவும் பொருத்தமான சொற்களைத் தேடிக்கொண்டிருந்தேன் அவரது இசை, வலி ​​வார்த்தைகள், நம்பிக்கை, மீட்பின் வார்த்தைகள். பெர்கமோ எனும் காயமடைந்த எங்கள் நகரத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பாடலுக்காக, "நான் மறுபிறவி எடுப்பேன், நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள். எல்லாம் முடிந்ததும், நட்சத்திரங்களைப் பார்க்கத் திரும்புவார்" என வரிகளைத் தொடுத்தேன் என்கிறார்.

பாடலின் இறுதிகாட்சியில் பெர்காமோவின் அடையாளங்களில் ஒன்றான செங்கற்களால் கட்டப்பெற்ற Torre dei venti Bergamo கோபுரத்தைக் காண்கையில் கண்கள் கலங்கிற்று. எத்தனை தடவைகள் அதன் அடிவாரத்தில் பயணித்திருப்பேன். ஆனாலும் துயரம் சுமந்த காட்சிகள் களைந்து, உத்வேகம் தரும் காட்சிக் கலவையும், உற்சாகம் தரும் குரலும்,  மீண்டும் பயனிக்கும் நம்பிக்கை வளர்க்கிறது.

அந்தக் கலைஞர்களுடன் சேர்ந்து நானும் சொல்வேன் பேர்கமோ எழுந்து வா ! வெகு சீக்கிரமே எழுந்து வா !!

 இப் பதிவினை நாம் எழுதும் போது,  youtube ல் அப்பாடல் வெளியாகிய 18 மணித்தியாலங்களுள், ஒன்றரை மில்லியன் மக்கள் பார்த்த அந்தப் பாடலை நீங்களும் பாருங்கள், பகிருங்கள். அந்தக் கலைஞர்களின் நோக்கம் நிறைவேறட்டும்.

- 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.