முற்றம்

"தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித்

துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக்

கிழப்பருவம் எய்தி,கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை

மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’ 

இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 95 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வாழ வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான். 

அந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம். அந்த நாட்களினைப்  பற்றிய நிகழ்வுகளை பாரதிப் பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய  ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை படித்து அறியுங்கள்.

யானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான்.  1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.

சில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்சூரியனின் பூத உடல் எரிகாடு சென்றது !

1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: “அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி  ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள்.

முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்”

நெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்.

“கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க 

விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – 

என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் 

பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார். 

பாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர்.  பாரதியின் மரணச்  செய்தியைப் பொழுது விடிந்ததும்  நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப்  புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர்.

பாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவிபுரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத்  திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.  பாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு  முன்னர் நண்பர் சுரேந்திரநாத்  ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” –இவ்வாறு நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார்.

 பாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் 

இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?” என்று மறுத்துவிட்டார்.  

முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத்  தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர். 

தென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!

 

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.