முற்றம்

அறிவழகன் 65 வயது முதியவர். 60 வயது நிறைந்த தனது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இந்த ஏழைத் தம்பதியைப் பற்றித்தான் கோரோனாவை மறந்து தற்போது தமிழகமே பேசிக்கொண்டிருக்கிறது.

அப்படி என்ன செய்துவிட்டார் அறிவழகன்? ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் தன் மனைவிக்கு வலியால் துடிக்க, அதைக் காணச் சகிக்காமல் அவருக்கு சிகிச்சை அளிக்க, கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு 140 கிலோமீட்டர் தூரம் அவரை சைக்கிள் வைத்தே மிதித்துச் சென்றுள்ளார்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், தன் மனைவிக்கு நோய் முற்றிய நிலையில் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே பரிசோதித்த டாக்டர்கள். “அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அப்போதுதான் உயிர் பிழைத்து சில காலம் வாழ்வார் அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுங்கள். இங்கே ஆம்புலன்ஸ் வசதி இல்லை” என்று கைவிரித்துவிட்டனர்.

அப்போது, ஊரடங்குச் சட்டத்தால் ஸ்தம்பித்துபோன மாநிலத்தில் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை. ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார். தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்… எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா.. நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா.. வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது… பொலீஸார் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என ஆள் அரவமற்றுக் கிடந்த பல பெரிய ஊர்களைக் கடந்து 140 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் சைக்கிள் மிதித்து, அதிகாலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு மனைவியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட டாக்டர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.

உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த டாக்டர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று அறிவழகனிடம் டாக்டர்கள் கேட்க, “எம்பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

கரோனா என்ன, அந்த காலனே வந்து நின்றாலும் அறிவழகன் போன்ற ஷாஜகான்களை தடுத்து நிறுத்திவிடமுடியுமா ?

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.