முற்றம்

தமிழ் நாட்டார் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவை மெல்ல மெல்ல அருகிவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சரசந்தாங்கல் என்ற கிராமத்தில் கூத்துக்கலை வடிவத்தில் ஒன்றான கட்டைக்கூத்து கலைக்கு உயிர்கொடுத்து காப்பாற்றி வருகிறார் ஒருவர்.

மேலும் அடுத்த தலைமுறைக்கும் இந்தக் கலையைக் கொண்டுசேர்ப்பதை முழுநேரப் பணியாக செய்து வருகிறார். அவர், பொ.ராஜகோபால். அவரது தலைமையில் செயல்படும் புஞ்சரசந்தாங்கல் கட்டைக்கூத்து குருகுலம் தான் இந்தக் கலைப் பணியைச் செவ்வவே செய்து வருகிறது.

கட்டைக்கூத்து நிபுணரான ராஜகோபால் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்போடு கட்டைக்கூத்தும், பாடுவதற்கான பயிற்சியும், இசையும் கற்றுத் தரப்படுகிறது. தமிழ் நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்களில் ஒன்றான கட்டைக்கூத்தில் இசை, வசனம், நடனம், ஒப்பனை, உடையலங்காரம் எனப் பல்வேறு நாடகக் கூறுகளும் பின்னிப்பிணைந்திருக்கும். மகாபாரதத்தின் நிகழ்வுகளை ஒட்டி அமைக்கப்படும் கட்டைக்கூத்தில் பேரரசர்களும், முனிவர்களும், கடவுளர்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வலிமைபெற்ற கலை வடிவம் இது. கட்டைக்கூத்தின் பாரம்பரிய வடிவத்தின் எல்லைகளைத் தாண்டி, இக்குருகுலத்தின் கூத்துக் கலைஞர்கள் சில பழைய கூத்துக்களை புதுப்பொலிவூட்டி பயின்று, நடித்து, இயக்கி வருகின்றனர்.

கட்டைக்கூத்து குருகுலம் என்னும் அமைப்பின் கீழ், ஆறு வயதிலிருந்து சிறுவர் சிறுமியர் இங்கு அமைந்திருக்கும் பள்ளியில் முழுமையான கல்வியோடு கூத்துப் பயிற்சியும் பெற்று வருகின்றனர். இந்தக் குருகுலத்தில் பயிலும் மாணவ மாணவியர் பெரும்பாலும் சமுதாயத்தில் பின்தங்கிய வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியமாக ஆடப்பட்டுவரும் கட்டைக்கூத்தில் பெண்கள் இடம்பெற மாட்டார்கள். ஆனால் இந்தக் குருகுலத்தின் மற்றுமொரு தனித்தன்மை, பெண்களையும் கட்டைக்கூத்தில் பங்கேற்க வைத்திருப்பதுதான். இக்குருகுலத்தின் சமீபத்திய தயாரிப்பு ‘மாயக் குதிரை’ என்ற கட்டைகூத்து நாடகம்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் அக்கா மண்டோதரியும் தம்பி தாண்டவராயனும் அவர்களுக்குள் எழும் சிறுசிறு சண்டைகளுக்குப் பின், சமாதானமாகி மரங்கள் சூழ்ந்த பகுதியில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றனர். அங்கே விநோதமான மொழி பேசும் வேற்றுக் கிரக வாசிகள் இருவரைச் சந்திக்கின்றனர். அவர்களின் செய்கைகளைக் கொண்டு, அவர்களால் பறப்பதற்கு சக்தி இல்லாமல் போய்விட்டதை உணர்கிறார்கள். அவர்களுக்கு மீண்டும் சக்தி கிடைப்பதற்கு அந்தக் குழந்தைகள் தங்களின் குரங்கு நண்பனான ஆதியின் உதவியை நாடுகின்றனர். ஆதி, அவர்களை பரந்தாமன் எனும் ஆமை, மகாபூதம், மருத்துவர் என்று ஒவ்வொருவரிடமும் அழைத்துப் போகிறது. அந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு சக்தி கிடைத்ததா, அவர்களின் உலகத்துக்கு போகமுடிந்ததா? என்பதை பரபரப்பான காட்சிகளில் காட்சிப்படுத்தியது ராஜகோபாலின் எழுத்து, இயக்கத்தில் உருவான `மாயக்குதிரை’.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இணைப்பை பொருத்தமான வசனங்களின்மூலமே பார்வையாளருக்கு உணர்த்திய நேர்த்தி, வசன உச்சரிப்பு, உடல் மொழி, உடையலங்காரம் (ஹன்னா டி புருய்ன்), `மாயாபுரி’யின் சிறப்புக் கலை வடிவம், அரங்க நிர்மாணம் எல்லாவற்றிலும் அந்தச் சிறுவர்களின் பங்களிப்பு, வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக மகாபூதமாக தோன்றிய சிறுவன் அர்ஜுன் நடிப்பில் ஒரு குட்டி பூதமாக அசத்தினான். மொத்தத்தில் மாயக்குதிரை கட்டைக்கூத்து, குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியதில் ஆச்சரியமில்லை; பெரியவர்களையும் குழந்தைகளாக்கியதுதான் ஆச்சரியம் !

- 4தமிழ்மீடியாவிற்காக:மாதுமை

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.