முற்றம்
Typography

அமைதியின் உறைவிடத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். இப்பூவுலகு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோர்க்கும் விருப்பமுண்டு. ஆனால் அந்த ஆனந்தத்தின் மூலமாக இருக்க வேண்டிய அமைதியைக் கலைப்பதற்கான காரியங்களை, நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ செய்த வண்ணமே இருக்கின்றோம்.

போரில்லாத உலகு அமைதி காணும் என்பது நம் எல்லோர்க்கும் தெரிந்ததுதான்.  ஆனால் போர்க் கருவிகளின் உற்பத்தி  நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணமே வாழ்கின்றோம். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா. சார்பில் செப்டம்பர் 21-ம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1981-இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்த உலக அமைதி தினம்,  2002-ஆம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் செப்டம்பர் 21-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

அனைத்து நாடுகளும், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்துகிறது. மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, பொருளாதாரமும் வீழ்ச்சியடையும்.  உலகில் அமைதி குலையும்.

அமைதி நிலைக்க என்ன செய்யலாம். அதனை எங்கள் இல்லங்களிலிருந்து தொடங்கலாம்.  பின் அதனை நம் இல்லங்களுக்கு வெளியே நாம் சார்ந்த செயற்பாடுகளுக்கு விரிவுபடுத்தலாம். எல்லாப் பிரச்சனைகளையையும் வன்மையாக அன்றி மென்மையாக அணுகலாம். பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளலாம். அவை அமைதிக்கானவையாக இருக்க வேண்டுமென்பது முக்கியமானது. அதை இதுவரை தொடங்காவிடின் இன்றிலிருந்து தொடங்கலாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS