முற்றம்

எம்.ஜி.ஆர் சுடப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது உங்களுக்கு தெரியும். மருத்துவமனையில் இருந்தபடியே, அவர் தேர்தலில் போட்டியிட்டும் வெற்றி பெற்றதும் வரலாறு. ஆனால், இந்த பதிவு எம்.ஜி.ஆர் பற்றியது அல்ல; ஜான் லெனான் பற்றியது.

லென்னான் யார் என நீங்கள் கேட்கலாம் என்பதால் தான் எம்.ஜி.ஆர் ஒப்பீடு. எம்.ஜி.ஆர் போல, லெனானும் சுடப்பட்டார் என்பது மட்டும் அல்ல, தமிழக மக்களிடையே எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கும், தாக்கமும் போல, இசைப்பிரியர்கள் மத்தியில் லெனானுக்கு அப்படி ஒரு செல்வாக்கு இருந்தது.

.லென்னான் பற்றி இன்னும் கூட சொல்லலாம், ஆனால் தேவையில்லை. ஏனெனில் இந்த பதிவு லெனான் பற்றியதும் அல்ல: உண்மையில், இந்த பதிவு ஜிம்மி பிரெஸ்லின் பற்றியது. யார் இந்த பிரெஸ்லின் என்று குழம்ப வேண்டும். புகழ் பெற்ற அமெரிக்க பத்திரிகையாளர் அவர். அதைவிட முக்கியமாக, பத்தியாளர்.

அவர் எழுதிய சாகாவரம் பெற்ற ஒரு பத்தி பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஒரு பானைக்கு ஒரு சோறு போல, ஒரு பத்தி. ஜான் லெனான் பற்றி அவர் எழுதியது.

இந்த இடத்தில் மீண்டும் லெனானை வர்ணிக்க வேண்டியிருக்கிறது. நவீன கால எம்.கே.டி என்று அவரை சொல்லலாம் அல்லது பாப் இசையின் பிஷ்மில்லா கான் எனலாம். ஒரு தலைமுறை அவரது இசையை கேட்டு தான் வளர்ந்தது. அந்த தலைமுறைக்கு அவரது இசைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பீட்டில்ஸ் தலைமுறை என்று பெயர் கொண்ட தலைமுறை.

அவர்கள் வந்த வேகம் தான் என்ன, வளர்ந்த வேகம் தான் என்ன, வீழ்ந்த வேகம் தான் என்ன” என பீட்டில்ஸ் இசைக்குழு பற்றிய ஒரு வர்ணனை இங்கே நினைவுக்கு வருகிறது.

லெனான் பற்றியும், அவர் அங்கம் வகித்த பீட்டில்ஸ் குழு பற்றியும் பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படி செய்யாமல் லெனானை இரத்தமும் சதையுமாக உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வித்தை எனக்கு கைவரவில்லை. ஆனால், பிரெஸ்லினுக்கு அது சாத்தியமானது என்பதை உணர்த்தவே இந்த பதிவு.

லெனான் மறைவு தொடர்பாக அவர் எழுதிய பத்தியே இதற்கு சான்று. லென்னான் சுடப்பட்டு இறந்தார். அமெரிக்காவே அப்போது அழுது புலம்பியது. அதன் துப்பாக்கி கலாச்சாரத்தால் அதிர்ந்தது. அப்போதைய பரபரப்பையும், ஆற்றாமையையும் வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.

இதற்கு மத்தியில், ஆர்பாட்டம் இல்லாமல் பிரெஸ்லின் தான் பத்தி எழுதி வந்த நியூயார்க் டெய்லி நியூஸ் நாளிதழுக்கு பத்தி எழுதினார்.

மக்கள் கொண்டாடிய ஒரு பிரபல பாடகர் சுடப்பட்டு இறந்துவிட்டார் என்றால் தலைப்பிலேயே அலறல் கேட்க வேண்டாமா? ஆரம்ப வரிகளிலேயே அவரது அருமை பெருமைகளை சுட்டிக்காட்டி இழப்பின் வேதனையை புரிய வைக்கும் படபடப்பு வார்த்தைகள் வந்து விழ வேண்டமா?

பிரெஸ்லின் அப்படி எல்லாம் எழுதவில்லை. ஆற அமர ஏதோ இசைக்கச்சேரிக்கு செல்வது போல, யாரோ ஒருவரது இளமை காலத்தை லேசாக வர்ணித்து, பெண்களை கவர்வதற்காக அவர் தலைமுடியை பெரிதாக வளர்த்துக்கொண்டதை விவரிக்கிறார். காரில் பீட்டில்ஸ் பாடல்களை கேட்டதாக சொல்கிறார்.

அதன் பிறகு அந்த யாரோ ஒருவர், டோனி போல்மா எனும் காவலர் என்பதை உணர்த்தி, முந்தைய தின இரவு, ’

ஒரு மேற்கு எழுபத்தி இரண்டாவது தெருவில் ஒரு மனிதர் சுடப்பட்டார்’ என ரேடியோவில் வந்த தகவலை கேட்டு, போல்மா தனது சகாவுடன் சம்பவ இடத்தை நோக்கி விரைந்ததை விவரிக்கிறார்.

இன்னமும் கூட அவரது எழுத்தில் விறுவிறுப்பு இல்லை. சம்பவ இடத்திற்கு சென்றதும் போல்மா, எங்கு சுடப்பட்டார் என கேட்கிறார். முதுகில் என அங்கிருக்கும் காவலர் ஒருவர் பதில் அளிக்கிறார்.

அதன் பிறகு, போல்மா, சுடப்பட்டவர் இருக்கும் இடத்திற்கு சென்று, அந்த உடலை பிரட்டிப்போடுகிறார். வாயில் இருந்து இரத்தம் கொப்பளிக்கும் நிலையில், அந்த மனிதரை, சகாவுடன் சேர்ந்து தூங்கிச்செல்கிறார். காவல்துறை வாகனம் காத்திருக்கிறது.

ஜிம் மோரன் எனும் காவலர் அந்த வாகனத்தில் இருக்கிறார். பீட்டில்ஸ் குழுவினரின் ஓட்டலுக்கு காவல் இருந்ததையும், அங்கு இளம் பெண்களின் கூட்டம் அலைமோதியதையும் மோரன் நினைத்துப்பார்க்கிறார்.

அந்த வாகனம் விரைந்து செல்லும் போது, சாலையில் கூடிய மக்கள், அது ஜான் லெனான் என கூவுகின்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் போது, வெளியே அவசர பிரிவு சிகிச்சை வல்லுனர்கள் தயாராக இருக்கின்றனர். குண்டடிபப்ட்ட மனிதர் உடனே உள்ளே படுக்கை அமைப்பில் கொண்டு செல்லப்படுகிறார்.

அங்கு மீண்டும் ஒருவர், ஜான் லெனான் என்கிறார். காவலர் மோரன் ஆம் என்கிறார்.

இப்போது படிப்பவர்களுக்கு பரபரப்பும், படபடப்பும் அதிகரித்திருக்கும்.

ஆம், சுடப்பட்ட அந்த யாரோ மனிதர் வேறு யாருமல்ல பிரபல பாடகர் ஜான் லெனான். வெறும் பிரபலம் அல்ல மக்கள் கொண்டாடி மகிழந்த பாடகர்.

வாசித்துக்கொண்டிருப்பவர்களின் வேதனையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பிரெஸ்லின் தனது பத்தியை இவ்வாறு முடிக்கிறார்.

”டோனி போல்மா சாத்தியம் இல்லை என தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். மோரன் தனது தலையை குலுக்கி கொள்கிறார். பீட்டில்சின் பெரிய பாடல் மெட்டு அனைத்தையும் அறிந்த தனது இரு குழந்தைகளை அவர் நினைத்துப்பார்க்கிறார். ஜிம் மோரன் மற்றும் டோனி போல்மா, இப்போது வயதாகி, கேளிக்கை இல்லாத உலகில் காவலர்களாக இருப்பவர்கள், அவசர சிகிச்சை அறையில் நின்று கொண்டிருக்க, யார் இசையை அவர்கள் அறிந்து இருந்தனரோ, யார் இசையை இந்த புவி அறிந்து இருந்ததோ, அந்த ஜான் லெனான், நியூயார்க் விதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த இன்னொரு மனிதரானார்.”

இதைப்படித்து முடிக்கும் போது ஒரு மனித உயிரின் இழப்பின் வலியை நிச்சயம் உணர்ந்திருக்க முடியும். அதிலும் இசைப்பிரியர்கள், பீட்டில்ஸ் மோகத்தில் வளர்ந்த தலைமுறையினருக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்திருக்கும்.

இந்த பத்தியின் சோகத்தை மீறி, அட பிரெஸ்லின் எத்தனை அழகாக எத்தனை அற்புதமாக எழுதியிருக்கிறார் என வியக்காமல் இருக்க முடியவில்லை.

பத்தி என்பதே தனிப்பட்ட பார்வையும், கருத்தும் கொண்டது எனும் போது, இசைப்பிரியர்கள் அந்தரங்கத்தில் சென்று கலக்கும் வகையில் இந்த பத்தியை பிரெஸ்லின் எழுதியிருப்பதை உணரலாம்.

சுடப்பட்டது லெனான் எனும் அதிர்ச்சி தகவலை முதலில் சொல்லாமல், அந்த செய்தியின் தீவிரத்தை மறைமுகமாக உணர்த்தும் வகையில், பீட்டில்ஸ் மற்றும் லெனான் இசையின் தாக்கம் பற்றிய காவலர்களின் தனிப்பட்ட குறிப்புகளின் ஊடே நடந்த்த சம்பவத்தை விவரித்து ஒரு மாபெரும் இசை மேதை அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்திற்கு பலியாக புள்ளிவிவரமான சோகத்தை பதிவு செய்கிறார்.

ஒரு பத்தி எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கான வலுவான உதாரணம். பத்தி எழுத்து கலையை பழக விரும்புகிறவர்கள் தவறாமல் பிரெஸ்லின் எழுத்துகளை வாசிக்க வேண்டும்.

அமெரிக்காவில் எழுதப்பட்ட அருமையான பத்தி கட்டுரைகளை தொகுத்து வழங்கும் டெட்லைன் ஆர்டிஸ்ட்ஸ் புத்தகத்திற்கான இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இந்த தளத்தில் படித்துப்பார்த்த பத்திகளில், மேலே விவரித்த ஜான் லெனான் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான பத்தி அசர வைத்ததால், கவுரவ விரிவுரையாளராக நான் வகுப்பு எடுக்கும் டிஜிட்டல் இதழியல் மாணவர்களுக்கு பயனுள்ள அறிமுகமாக இருக்கும் எனும் எண்ணத்தில், இந்த பதிவை எழுதியுள்ளேன் எனக்குறிப்பிடுகின்றார், இந்தப்பத்தியினை எழுதியுள்ள சிம்மன்.

தொழில் நுட்பம் குறித்த பதிவுகளையும், இணைய இணைப்புக்களையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பகிர்ந்துள்ளோம். இது போன்ற பல புதிய விடயங்களைத் தெரிந்து கொள்ள ஆர்வமாயின் அவரது இணையமலரில் இணைந்து கொள்ளலாம்.

நன்றி: சிம்மன் - இணையமலர்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன்  கூறினாள்.

சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.