இசையரசர் மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவின் " தங்கரதம் வந்தது.. " பாடல் என் அம்மாவின் விருப்பத்துக்குரிய பாடல். அவர் இந்தப் பாடலைப் பாடியவாறே தன் வேலைகளில் மூழ்கிப் போவார்.
சிறு வயதிலேயே அப்பாடலைக் கேட்டிருந்ததாலும், அம்மாவின் விருப்பத் தேர்வென்பதாலும், அப் பாடல் மீது கொள்ளைப் பிரியம். சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற பாலமுரளி கிருஷ்ணாவின் இசைக் கச்சேரியில் இந்தப் பாடலை நேரடியாக அவர் பாடிக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் கச்சேரி நிறைவுக்கு வந்துவிட்டதால் எமது நேயர் விருப்பம் நிறைவேறவில்லை.
QFR தொடரில், இந்தப் பாடலை அஷ்வத்தும் அறிமுகப் பாடகியாக மானஸியும் பாடிய போது, அத்துனை அழகாயிருந்தது. அதற்குப் பின் மானஸி தற்போதைய "சூப்பர் சிங்கர் " தொடரில் போட்டியாளராக வந்த போது, அவரது பாடல் தெரிவுகளும், அதற்கான அவரது பயிற்சியும், ஆற்றுகையும் கவனிக்க முடிந்தது.
இதன் பின்னதாக 'youtube' தளத்தில் அவரது பாடல் பதிவுகளைக் கண்டபோது, அவரது உழைப்பும், அதற்கான அனுசரணையும் கண்டு வியக்கத் தோன்றியது. அவ்வாறான அவரது பாடல் பதிவுகளில் இரண்டு மிக முக்கியமானவை எனக் கருதுகின்றோம். அதில் முதலாவது மானஸியின் தந்தையுடன் இணைந்து பாடிய A.R ரகுமான் பாடல்களின் தொகுப்பு. அதிலே மானஸியைத் தாண்டியும் நம்மை அசத்துபவராக தந்தை கண்ணனைக் குறிப்பிடலாம்.
தமிழ் திரையிசைத்துறையின் நைட்டிங்கேல்ஸ் என பெண்கள்தினச் சிறப்புத் தொகுப்பாக வெளியிட்டுள்ள பதிவில், எம். எஸ் சுப்புலட்சுமி அம்மா தொடங்கி ஸ்வேதா மோகன் வரையிலான மூன்று தலைமுறைப் பாடகிகளது பாடல்களை மானஸி பாடும் விதமும், அதற்கான காட்சிப்படுத்தலும் அபாரமாக இருந்தது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயின்று வரும் அவரது அக்கறை மிகுந்த உழைப்பு, ஒருநாள் உச்சம் தொடும் என்பதற்கான கட்டியங் கூறலாக அப் பாடல்பதிவுகள் அமைந்துள்ளன. அவற்றின் பதிவுகளின் இணைப்புக்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள்.
- மலைநாடான்.
Enjoy, எஞ்சாமி... !
சொன்னது நீதானா..பாடுவது இலக்சுமி தானா..?
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்